privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஇந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !

இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !

-

த்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் பிஸ்ரக். இக்கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இக்கிராமத்தில் கோவிலில் நிறுவி வழிபடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலையை சேதப்படுத்திய இந்துமத வெறியர்கள் கோவிலையும் தாக்கியுள்ளனர்.

பார்ப்பனிய செல்வாக்குள்ள வடமாநிலங்களில் நவராத்திரி தசரா திருவிழாவில் இராவணன் உருவப்பொம்மைகளை எரித்து இராவணனின் சாவை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இக்கிராமத்தில் நவராத்திரி நாட்களை துக்க தினமாக கடைபிடிக்கிறார்கள். மேலும் தசரா அன்று இராவணனுக்காக யாக குண்டம் வளர்த்து வழிபடுகிறார்கள். இக்கிராமத்தின் பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நடக்கும் இவ்வழிபாட்டிற்காக ஆண்டு தோறும் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கோவில் மட்டுமல்லால் அப்பகுதியின் பல கோவில்களில் நவராத்திரிக்கு பதிலாக இராவணன் யாகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் நவரத்திரி கொண்டாடினால் ராவணனின் கோபத்திற்கு தாங்கள் ஆளாக நேரிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்

இக்கிராமத்தில் சமீபத்தில் இராவணனுக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி(09-08-2016) அன்று சிலை மற்றும் பிரகாரம் நிறுவுவதற்கான வேலைகள் முடிந்து சிலை நிறுவப்படவிருந்தன. இச்சமயத்தில் மற்ற பகுதிகளை சேர்ந்த இந்து மத வெறியர்கள் இராவண சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழாவின் இரண்டு நாட்களுக்கு முன்னர் 9-08-2016 அன்று வெளியூரிலிருந்து ஐந்து கார்களில் வந்த இந்துமத வெறியர்கள் கோவில் முன் தகராறு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் நிறுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலைகளை உடைத்துள்ளனர். பின்னர் தங்கள் கையிலிருந்த துப்பாக்கிகளை காட்டி இராவண சிலை நிறுவினால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேற்கண்ட சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்துள்ள கிராமமக்கள் பசுப்பாதுகாப்பு குழுக்களை சேர்ந்தவர்களும், பிற கோவில்களின் தலைவர்களும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தாங்கள் வழிபடும் இராவணனை கொடூரமானவராக காட்ட முயலுவது துரதிர்ஷ்டம் வரபோவதற்கான அறிகுறி என்றும் அப்பகுதி மக்கள் கவலைப்படுகின்றனர். ஒருவகையில் இந்தியாவில் நடக்கும் பா.ஜ.க ஆட்சி கொண்டு வந்திருக்கும் கேடுகாலத்தை மக்களின் இந்த நம்பிக்கை கவித்துவமாக சுட்டிக் காட்டுகிறது போலும்.

இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளை(11-10-2016) தசாரா நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் இக்கிராமத்தினர் இராவணனுக்காக வழிபாடு செய்ய தயாராகி வருகிறார்கள். இது குறித்து ஸ்ரீ பாபா மோகன் ராம் கோவில் அர்ச்சகர் அகிலேஷ் சாஸ்திரி கூறுகையில் “முந்தைய ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் இராவணனுக்கான பூஜைகள் நடக்கும் என்று என்னிடம் மக்கள் கூறியிருக்கிறார்கள். இராவணன் சிலை நிறுவமுடியாவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும்” என்கிறார்.

இந்து மத வெறியர்களின் அச்சுறுத்தலுக்காக இக்கிராம மக்கள் பணியவில்லை. இக்கிராம தலைவர் அஜய் பாடி கூறிகையில் “ எங்கள் வழக்கமான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. கிராமத்தில் கண்காணிப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்த உள்ளோம். எவன் எங்களை தடுக்க வருகிறான் என்று பார்ப்போம்”. “உடைக்கப்பட்ட இராவண சிலைகளுக்கு பதிலாக மாற்று சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.சிலை கிடைக்கப்பெற இரண்டு மாதங்கள் ஆகும். அது வந்ததும் முன்னர் எந்த இடத்தில் நிறுவப்பட இருந்ததோ அதே இடத்தில் நிறுவுவோம்” என்று ஆணித்தரமாக கூறுகிறார். மேலும் இராவண சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காசிபார் பகுதி கோவிலை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகிறார் கிராம தலைவர் பாடி.

இந்து மத வெறியர்களால் சேதமாக்கப்பட்ட இராவணை சிலை இருந்த இடம்
இந்து மத வெறியர்களால் சேதமாக்கப்பட்ட இராவணை சிலை இருந்த இடம்

கான்பூர் அருகிலுள்ள ஒரு கோவிலிலும் “ ஜெய் லங்கேஷ், லங்காபதி நரேஷ் கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் தசாரா என்று இராமனுக்கு பதிலாக இராவணனை வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது. இதே போல மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலங்களின் வசிக்கும் அசுர் என்ற பழங்குடி இன மக்கள் நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை துக்க தினமாக அனுசரிக்கிறார்கள். துர்காவின் 9 நாள் போர் என்ற புராணகதைகள் அவர்கள் ஏற்பதில்லை. தங்கள் மன்னர் மகிஷாசுரன் சதி செய்து வீரமரணமடைந்ததாக கருதுகிறார்கள்.

அப்பழங்குடி பிரிவைச்சேர்ந்த சுஷ்மா அசுர் என்ற பெண் தங்கள் வரலாறை ஆவணப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறார். அவர் கூறுகையில் “ராவணனும் மகிஷாசுரனும் எங்கள் முன்னோர்கள். அவர்களை சதி செய்து கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடுவது தொடரக்கூடாது. இந்திய புராண பழங்கதைகளை ஆவணப்படுத்தியதில் ஆதிக்க சாதியினர் கை மேலோங்கியிருந்தது. அதனால் பழங்குடிகளின் பக்கசார்பிலான கதைகள் புறக்கணிக்கப்படுகின்றன.” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதுகிறோம். அசுர் பழங்குடியினர் தங்கள் பண்பாட்டின்படி மகிஷாசுரனுக்கு வீர வணக்க நாள் நிகழ்வுகள் கடைபிடிப்பதையும் இந்துமத வெறியினர் எதிர்க்கிறார்கள். தங்கள் பக்க புராணகதைகளை வெளியில் பிரச்சாரம் செய்யவும் பழங்குடிகளை தடை செய்கிறார்கள் இந்துமத வெறியர்கள். ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியினரின் பக்க சார்பிலான துண்டறிக்கைகளை வெளியிட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் பேசினார் ஸ்மிருதி இராணி.

ஐதராபாத், ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியின் கதைப்படி விழா எடுப்பதை தடுத்து அசுரர் தினம் கொண்டாடுவதை எதிர்த்து பிரச்சனை செய்கிறது நிர்வாகமும் ஏ.பி.வி.பி கும்பலும். ஆரிய பார்ப்பனர்களின் ஒற்றை கலாச்சாரத்தையே இந்திய பாரதீய கலாச்சாரமாகவும் பிற திராவிட, பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை நைச்சியமாகவும், பலாத்காரமாகவும் அழிக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்கிறது பார்ப்பனியம். தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டு மகிஷாசுரன், இராவணன் கொல்லப்பட்ட புராணகதைகளின் நாட்களை கொண்டாடுபவர்கள் மேற்கண்ட கிராமமக்கள் மற்றும் பழங்குடியின மக்களிடமிருந்து கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. இந்தியாவை ஆரிய பார்ப்பன் சமஸ்கிருதமயாக்கும் பா.ஜ.கவின் அரசியலை முறியடிக்க இதுபோன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை வரித்துக்கொள்வது தேவையாக இருக்கிறது.

– அமலன்

(மேலும் படிக்க)