privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்

காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்

-

“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மதுரையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையுரையில் பேசியதாவது

madurai-pp-conference-on-water-bodies-protection-03
தோழர் குருசாமி

“பல ஆண்டுகளாகவே கர்நாடகாவிடம் கேட்டு கேட்டுதான் தமிழகம் தண்ணீர் பெற்று வந்துள்ளது. ஆனால் கன்னட இனவெறியர்கள் தமிழகம் அவர்களிடம் மிரட்டி பெறுவதாகவே இனவெறியை தூண்டுகிறார்கள்.

ஆனால் இங்கு நிலைமை சென்ற 1 மாத காலமாக அ.தி.மு.க.வை தவிர ஏறக்குறையாக அனைத்து கட்சிகளும் போராடி வரும் சூழ்நிலையில் அங்கு இனவெறியை திட்டமிட்டு தூண்டுகின்ற பா.ஜ.க.வும் அனைவரிடமும் கைகோர்த்து கொண்டு இங்கு போராடுவதை போல் காட்டிக்கொள்கிறது. ஆகையால் இங்கு இந்த போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது, இதில் யார் நண்பர், யார் எதிரி என்று எப்படி இனம் காணுவது? எப்படி பிரித்து அறிவது?

தாலி கட்டியதற்காகவே ஒரு பெண் தன் கணவர் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் அடங்கிபோக வேண்டும் என்று கூறும் ஆணாதிக்க சிந்தனை போல் தேசிய ஒருமைப்பாடு தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லும் மத்திய அரசு போடும் கூப்பாட்டை எப்படி பார்ப்பது”

தோழர் கிட்டுராஜா, தந்தை பெரியார் திராவிடக் கழகம்

தோழர் கிட்டுராஜா
தோழர் கிட்டுராஜா

“இந்த இந்திய அரசு ஒரு ஆரிய பார்ப்பன அரசு, வெள்ளைக்காரன் காலத்தில் 450 டி.எம்.சி தண்ணீர் பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. சுதந்திரத்திற்கு பின்பு 1972-ல் இருந்து 1992 வரை போராடி உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 205 டி.எம்.சி கிடைக்க உத்தரவிட்டது. மறுபடியும் 2007ல் இறுதி தீர்ப்பாக 192 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு தரவேண்டும் என உத்தரவிட்டது.

தமிழகம் எப்போதுமே ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராகவே வந்துள்ளது. 47-க்குப் பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போதுகூட தமிழகத்திடம் ஓரவஞ்சனையோடு தான் நடந்துள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காடுகளின் பரப்பளவோடு தமிழகத்தின் காடுகள் குறைவாகவே பகிரப்பட்டன. ஆறுகளின் பரப்பளவும் அவ்வாறே சூழ்ச்சியோடு பகிரப்பட்டது. எல்லா காலங்களிலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று தான் தன் நிலை எடுத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நாம் சாதி, மதம் கட்சிகள் கடந்து ஒரு அணியில் நின்று போராட வேண்டும். இந்த முயற்சியை யார் செய்தாலும் அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் துணைநிற்கும். அப்படியொரு வாய்ப்பை வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்புக்கு என்றைக்கும் நாங்கள் துணை நிற்போம்” என்று கூறி முடித்தார்.

தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்

madurai-pp-conference-on-water-bodies-protection-01
தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்.

“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரம் முன்வைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களிடம் இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றனஅப்படி நீர்நிலைகளை மக்கள் பராமரித்தபோது அவை சீராக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று ஆற்றுமணல் கொள்ளை காடுகளை அழித்தல் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என அனைத்தையும் அரசோ(அ) அரசின் துணையோடு பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனால் மேலும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் வற்றி வருகிறது. சில வருடங்களில் தண்ணீர் மிகபெரிய அச்சுறுத்தலாக மாறபோகிறது. தங்கம் காணாமல் போனது என்று இல்லாமல் 2 குடம் தண்ணீர் காணவில்லை என்றுதான் காவல் நிலையத்திற்கு புகார் வரப்போகிறது. இந்நிலையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் அதிகாரம் இன்று துவக்கி வைத்துள்ளது. அதில் எந்தச் சூழலிலும் வி.சி.க மக்கள் அதிகாரத்தோடு துணை நிற்கும்.”

தோழர் பேரறிவாளன், தமிழ் புலிகள் பொது செயலாளர்

madurai-pp-conference-on-water-bodies-protection-08
தோழர் பேரறிவாளன்

“நீர்நிலைகள் மீதான அதிகாரம் மட்டும் இல்லை அனைத்து விதமான அதிகாரங்களும் மக்களுக்கு புறக்கணிக்கப்படுகிறது. நம் தமிழக முதல்வர் அப்பல்லோவில் இன்று உள்ளதால் அதன் கட்சிக்காரர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் மருத்துவமனையின் முன்பு பூஜை நடத்திக் கொண்டுள்ளனர். வெள்ளைக்காரன் காலத்தில் பொருளாதார சமத்துவத்திற்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இல்லை. அதேபோல் நீர் நிலைகளும் ஆதிக்க சக்திகாரர்களின் கையில்தான் உள்ளது. அவற்றிற்கெதிராக போராடி அனைத்து அதிகாரமும் மக்களுக்கே வழங்க வேண்டும். அதில் நாங்கள் எப்பவுமே மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு துணையாக இருப்போம்”

எஸ்.மகபூப் ஜான்
எஸ்.மகபூப் ஜான்

எஸ்.மகபூப் ஜான், மாநில இணைப்பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி

72-ல் நடந்த காவேரி பிரச்சனையில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் மாட்டிக்கொண்டு காடுகளில் வழியே தப்பி வந்ததையும் ஒவ்வொரு முறை ஏற்படும் இந்த கலவரத்தில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை தன் நேரடியான அனுபவத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். “எங்கள் தலைவர் வைகோவாகட்டும், ம.தி.மு.க தொண்டகர்களாகட்டும் மக்கள் பிரச்சனை எங்கும் நாங்கள் முதலில் நிற்போம் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த மக்கள் அதிகாரம் எடுத்துள்ள இந்த போராட்டத்தில் நாங்கள் என்றைக்கும் துணை நிற்போம்” என்று கூறினார்.

தோழர் விஜயராஜன், CPM மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழர் விஜயராஜன்
தோழர் விஜயராஜன்

“தமிழ்நாட்டின் இயற்கை வடிவமைப்பு இயல்பாகவே நீர் வேண்டி மற்ற மாநிலங்களை நம்பி உள்ளோம். தனியார் மயம் தாராள மயம் உருவாக்கிய சிக்கலில் இன்று அனைத்து துறைகளும் வேலை இழந்து மாநிலம் விட்டு மாநிலம் பல்வேறு இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். தமிழகத்திலும் வேறு மாநிலத்து இளைஞர்களும் வந்து தங்கி வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த நீர்ப்பரச்சனையில் ஏதோ கர்நாடகம், தமிழகம் தான் பிரச்சனை என்பது போல் இதை எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒன்று பட்டு போராடி நாம் சாதிக்க வேண்டும். அதை மக்கள் அதிகாரம் இன்று துவங்கியுள்ளதை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சியில் நானும் நான் சார்ந்துள்ள சி.பி.எம் கட்சியும் துணை நிற்போம்.”

தோழர் கணேசன், பு.மா.இ.மு ( மாநில ஒருங்கிணைப்பாளர்)

madurai-pp-conference-on-water-bodies-protection-07
தோழர் கணேசன்

“வான் பொய்த்தாலும் தான் பொய்யா காவிரி என்பது பொன்மொழி. ஆனால் அந்த காவிரியின் நிலை தணிகைச் செல்வன் என்று கவிஞர் தனது கவிதையில் ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளார், ‘காவிரியில் பயணம் செய்ய இப்போது ஓடம் தேவையில்லை ஓட்டகம் ஒன்றே போதும்.” தமிழகத்தின் 19 மாவட்ட மக்களுடைய நீராதாரமான குடிநீரான காவிரியின் நிலை ஏறக்குறைய 25 லட்சம் ஏக்கர் விவசாயிகளுடைய காவிரியின் நிலை, ராஜஸ்தான் பாலைவனத்தை போல மோசமான நிலையில் இருப்பதைத்தான் அந்த கவிதை குறிப்பிடுகிறது.

1991-ல் 192 டி.எம்.சி தண்ணீர் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி அதற்கு முன்னதாக இருந்த இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி தண்ணீரென்பதை அதற்கு மேலாக கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில்192 டி.எம்.சி தான் என்று இறுதி தீர்ப்பு வழங்கி காவிரிநதி நீர் நடுவர் மன்றம் கூறி பிரச்சனையை முடித்து வைத்தது.

ஆனால் உண்மை என்ன? அங்கு கர்நாடகம் கொதித்து எழுகிறது. கர்நாடகத்தில் மிகப்பொரிய வன்முறை வெறியாட்டம் தமிழர்களுக்கு எதிராக ஒரு சிறுபான்மையினரான தமிழகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக (அ) சிறுபான்மையினராக வாழக்கூடிய அந்தப் பகுதியில் கன்னட இன வெறியாளர்கள் மிகப்பெரிய வெறியாட்டத்தை நடத்தினார்கள்.

madurai-pp-conference-on-water-bodies-protection-10அதற்குப் பிறகு உச்சநீதிமன்றம் பல முறை தமிழக மேல்முறையீடு கர்நாடக மேல்முறையீடு என்று இப்படியும் அப்படியுமாக சென்று  இறுதியாக அதில் சொல்லப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஒருங்காற்றுக் குழு இரண்டையும் சேர்த்து அமைக்கலாம் என்று பலமுறை வாய்தாவிற்கு சென்று வந்துவிட்டோம். இறுதியாக தமிழகம் எதிர்பார்த்து ஏங்கிக்கிடக்கும் காவிரி நீர் எப்போது வரும்? எப்படி வரும்? தஞ்சாவூருக்கு வருமா? டெல்டாவுடைய கடைமடை பகுதிக்கு வருமா? வந்து சேர வாய்ப்பு இருக்கிறதா? குறுவை சாகுபடி போய்விட்டது. அடுத்து சம்பா காத்திருக்கிறது. விவசாயம் செய்ய முடியுமா விளைச்சல் வீட்டிற்கு வருமா என்று எதிர்பார்த்து விவசாயிகளின் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாக உச்சநீதிமன்றம் கருதிவிட்டது.

3-ம் தேதியே கர்நாடக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெளிவாக சொல்லி விட்டது. காவிரி நடுவர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் இனி கனவிலும் இல்லை என்று நாங்கள் கூறவில்லை, மத்திய அரசு தெளிவாக அறிவித்து விட்டது. அதில் 108 சட்ட சிக்கல் இருக்கிறது. அதனை சரிகட்டி வருவதற்குள் தமிழகம் பிணக்காடாக மாறிவிடும். மேலும் அதற்கு உத்தரவாதமும் இல்லை. அப்படி அமைப்பதென்றால் 2005-ல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். அதில் என்ன பிரச்சனை?

56 அங்குலம் மார்பளவு கொண்ட தேசிய நாயகன் மோடிக்கு இது சாதாரண பிரச்சனைதானே, காங்கிரஸ்தான் சரியில்லை என்று பிரச்சாரம் செய்யும் பி.ஜே.பி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியதுதானே, ஆனால் அப்படி செய்ய மாட்டோம் என காங்கிரஸைப் போல தடுமாறாமல் தெள்ளத் தெளிவாக மத்திய பி.ஜே.பி அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதிச் சான்று வழங்கியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் வைத்துதான் தீர்க்க முடியும், எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க நீ யார்? என்று கேட்கும் வகையில் தெள்ளத் தொளிவாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க முடியாது என்று ஆளும் மத்திய பி.ஜே.பி அரசு கூறிவிட்டது.

madurai-pp-conference-on-water-bodies-protection-11இதற்குப் பிறகு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்போம் என்று கூறுவது பி.ஜே.பி அரசின் நாடகத்தை தெளிவாக புரிய வைப்பதாக உள்ளது. நம்மால் கூட இவ்வளவு அருமையாக மக்களுக்கு பி.ஜே.பி.யை பற்றி விளக்கியிருக்க முடியாது. இந்த 1 ½ மாத கால போராட்டத்தில் பி.ஜே.பி தனிமைப்பட்டு நிற்கிறது. ஆனால் அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதற்குள் நாள் செல்ல வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுப்பதாக கூறி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதாக மோடி அரசு நாடகமாடி வருகிறது. ஆனால் முதலில் மோடி அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை  பரிசீலிக்கத்தான் எத்தனித்தது. இதுவரை பாகிஸ்தானுடன் நடந்த எந்த போரின்போதும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பரிசீனை செய்ததில்லை. இந்த சிந்து நதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதன் மூலம் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்து விடலாம் என்று மோடி அரசு வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ஆலோசகர். ‘உலகில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையேயான நீர் ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக ஒரு அரசு மீறுமானால் அது போர்க்குற்றத்திற்கு சமம். எனவே, சிந்து நதி ஒப்பந்தத்தை மீறினால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நினைவுபடுத்திவிட்டார். ஆனால் மத்திய அரசிற்கு அதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேசிய ஒருமைப்பாடு என்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது, நாட்டின் தேசிய வெறியை தூண்டிவிடுவது என்பதுதான்.  ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துக்கள், முழக்கங்கள் யாவும் தேசத்திற்கு எதிரானவை என்பது  மட்டுமே அவர்கள் கொள்கை.

அந்த அமைப்பைச் சேர்ந்த ஏதோ ஒரு கடைக்கோடி தொண்டன் இறந்தாலும் (சமீபத்தில், கோயம்புத்தூரில் சசிக்குமார் இறந்தது போல) சங் பரிவார அமைப்புகளின் இந்து இனவெறியை கிளப்புவதுபோல் இந்துத் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், என்று துக்ளக், சோ போன்றவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றனர். சிந்து நதி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் மீதான நிலைப்பாடுதான் மத்திய அரசிற்கு தமிழகத்தின் மீதும் இருக்கிறது. 1 ½ மாதங்களுகுக்கு முன்பு 65 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வரவேண்டியிருந்தது.  இந்த ஆண்டு நமக்கு சேரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீர்ல் 35 டி.எம்.சி தண்ணீர்தான் வந்துள்ளது. மீதி 65 டி.எம்.சி நீரில் 20 டி.எம்.சி நீரையாவது கொடு என்று உச்சநீதி மன்றம் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது. அந்தக் கட்டாயத்தின் பேரில் கர்நாடக அரசு 20 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடுகிறது. அதற்குள் பெங்களுரு, மைசூர் போன்ற நகரங்களில் பா.ஜ.க காலிகள் ஒரு வெறியாட்டத்தை நிகழ்த்தினர்.

கர்நாடக வாழ் தமிழர்கள் பாகிஸ்தானியர்களா? அல்லது முஸ்லீமா? அப்போது அந்த கலகக்காரர்களுடன் ஒரு பெண் கைது செய்யப்படுகிறார். அவர், தனக்கு 100 ரூபாயும் பிரியாணியும் வாங்கித்தருவதாக கூறிதான் பா.ஜ.க.காரர்கள் அழைத்தார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலை பா.ஜ. அமைப்பினர்தான் நடத்தவேண்டும், என்பதல்ல.  நாடு முழுவதும் 200-துணை அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறான்.  கட்டுவிரியன் போட்ட குட்டிகள் போல அனைத்திலும் விஷம் நிரம்பியிருக்கும்.  தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது.

ஈழத்தில் போர்க்காலத்தில் ஈழத்தமிழர்கள் தவித்ததுபோல் கர்நாடகத்தில் தமிழர்கள் அகதிகளாக தவிக்கிறார்கள்.  மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.  கர்நாடக பி.ஜே.பி.யின் கர்நாடக மாநில தலைவர் ஜெகதீஷ் ஷட்டர், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை மோடி காப்பாற்றிவிட்டார் என்று பேசுகிறார். வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் மற்றும் சட்ட அமைச்சர் சதாநந்த கௌடா ஆகியோர் காங்கிரசுடன் சேர்ந்து பேசி தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீர்மானத்தை முன்கூட்டியே நிறைவேற்றிவிட்டார்கள். அதனால்தான் அணையை திறந்தவுடன் அங்கே வன்முறை வெறியாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், என்த ஒரு கர்நாடக மக்களோ, விவசாயிகளோ பேராடவில்லை. பா.ஜ. மற்றும் இதர இனவெறி கும்பல்கள்தான் போராடியிருக்கின்றனர்.

1991-ம் ஆண்டு தண்ணீருக்கு வழியில்லாமல் டெல்டாவைச் சேர்ந்த மக்கள் எலிக்கறியைத் தின்ற போது இந்த பார்ப்பன ஜெயலலிதா அரசு இரங்கவில்லை, இப்போது காவிரி பிரச்சனையில் மட்டும் தனது பார்ப்பன பற்றை வெளிப்படுத்துகிறது. காவேரி, 40 லட்சம் விவசாயிகளின் பிரச்சனை. தமிழக அரசு இதற்காக துரும்பைக்கூட அசைக்கத் தயாராக இல்லை, ஆனால் தமிழன் அங்கே செத்து மடிந்துகொண்டிருக்கிறான். எனவே பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க-விற்கும் பெரிய வேறுபாடில்லை, அது ஏ-டீம், இது பி-டீம்.

சுப்பிரமணிய சுவாமி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தச் சொல்கிறார்.  இன்னும் 1 வாரத்தில், மோடி ஜெயலலிதாவை சந்திக்க விருப்பதாக சொல்கின்றனர். எனவே சுப்பிரமணியின் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுதான் சுப்பிரமணிய சாமியின் பேச்சு.  அவர்களுடைய அஜெந்தாவிலே, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளதாக்கைப் போன்றது இந்தியாவின் கர்நாடகா, பெங்களுர் போன்ற பகுதிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவை காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது ஆபத்தானது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.  மேலும் சில முக்கியமான கருத்துக்களைக் கூறி எனது உரையை முடிக்கிறேன்.

மீத்தேன் திட்டம், கெயில்திட்டம், நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் மற்றும் அணுமின் நிலையத் திட்டம் போன்றவற்றை வேண்டாம் என்ற போதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது மோடி அரசு. அதற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ராஜதுரோக வழக்கு பதிவு செய்துள்ளது இந்த அரசு. இருப்பினும் இந்த டெல்டாமாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர். எனவே, டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் விடாமல் காவிரி பிரச்சனையை 2 வருடங்களுக்கு நீட்டித்தால் அந்த நிலங்கள் தரிசாகிவிடும். பிறகு இயல்பாகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்ற உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது. அடுத்த முக்கியமான பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்தே விட்டாலும் கடைமடைப்பகுதி வரை நீர் செல்லும் அளவிற்கு தமிழகத்தில் காவிரி ஆற்றின் நிலை இல்லை. 30 அடி ஆழத்திற்கும் கீழ் மணற்கொள்ளை நடத்தப்பட்டிருக்கிறது, சில இடங்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. அதையும் மீறி தண்ணீர் வந்தால் விளைவித்த நெல்லுக்கு விலையில்லை. கரும்புக்கு பல கோடி கடன் பாக்கி என்ற நிலையில் தண்ணீர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்ற மனநிலையே விவசாயிகளிடையே நிலவுகிறது.

இவ்வாறு வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் 905 மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதாக உள்ளது. வளர்ச்சி என்றால் இது யாருக்கான வளர்ச்சி? மதுரையில் கூட ஏரிகளை ஆக்கிரமித்துத்தான் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. அத்தகைய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா? மதுரை மாநகராட்சி அலுவலகமும் ஒரு ஏரியில்தான் அமைந்துள்ளது. அங்கு சென்று புகாரளிக்க முடியுமா? இப்படி எல்லாவற்றையும் ஆக்கிரமித்து நிற்கும் இந்த அரசு அதிகாரம் தோற்றுப்போய்விட்டது. தோற்றுப்போனவர்களிடம் நீதி கிடைக்காது.  நம் நீர் நிலைகளைப் பாதுகாக்க நம் கையில் அதிகாரம் இல்லாமல் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு கெஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? இந்தப் பிரச்சனையில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் அதிகாரம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் இணைந்து கொண்டு அனைத்து கட்சிகளும் மக்கள் அதிகாரத்தை நிறுவவதற்கு துணை நிற்போம்.  குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி என்றென்றும் களத்தில் நிற்கும் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

மாநில செயற்குழு உறுப்பினர் மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் கதிரவன்

madurai-pp-conference-on-water-bodies-protection-06
தோழர் கதிரவன்

“கடந்த 20-ம் தேதி சுப்ரீம் கோட் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதில் அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ இது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்கு அதிகாரம் இல்லை இதில் சட்ட சிக்கல் உள்ளது என கர்நாடக முதல்வர் சீத்தராமையா எதை சொன்னாரோ அதையே மோடி அரசும் சொல்கிறது. எப்போதுமே தமிழ் இனம் சார்ந்த பிரச்சனைக்கு மத்திய அரசு எதிராகவே செயல்பட்டு உள்ளதை பல ஆதாரங்களோடு விளக்கிய அவர் மேலும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சாதி ஆதிக்க சக்திகளிடம் தான் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளது அதை அவர்களிடமே கோரி எப்படி பெறமுடியும் என கேள்வி எழுப்பினார். ஆகையால் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மீதான அதிகாரத்தை நிலைநிறுத்துவது தான் ஒரே தீர்வு அதைத்தான் மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்துகிறது. அதற்கு என்றைக்கும் ம.க.இ.க களத்தில் நிற்கும்”

மதுரையில் போலிசின் நெருக்கடியில் பல இடங்களில் நமக்கு அரங்குகள் கிடைக்கவில்லை. பின்பு மாட்டுத் தாவணியில் செய்தியாளர்கள் அரங்கம் நமக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர். 100 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் அமர முடியாது என்பதால் காணொளி மூலம் வெளியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்களை வெளியில் அமர வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இறுதி நிகழ்ச்சியாக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவடைந்தது.

செய்தி
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
தொடர்புக்கு – 9894312290

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க