privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

-

ப்போது என் மகளுக்கு
எட்டு வயது
அக்கம் பக்கத்தில்
தீபாவளி பரபரப்பு.

குடும்பம்
கொண்டாடவில்லை என்றாலும்
தெருவே தீபாவளியை
மகள் கண்ணில் காட்டியது.

ஏம்ப்பா….
நம்ம வீட்ல
இதெல்லாம் இல்ல – என
புதுத்துணி, பலகாரம்
பூவாணம் பார்த்து
கேட்டாள் மகள்

naraஎதுவோ..
மனிதனுக்கு ஒரு கொண்டாட்டம் !
என ஊரே திளைக்கையில்
கருத்தியல் கனத்தை
குருத்து தாங்குமோ?
அச்சத்தோடு,
”கொண்டாட்டம் கூடாதென்பதல்ல
இது அவமானம்….” என
ஆரம்பித்தேன் காரணத்தை.

”வேற இருக்கட்டும்
வெடியாவது கிடையாதா?” என
வேண்டினாள் மகள்.
முடியாத கருத்தை
முகை அவிழ்க்கும் இயல்பாய்
கதையாகத் தொடர்ந்தேன்….

நரகாசுரனை கொன்றதற்கு
தீபாவளி – என
ஊர்க்காரணம் சொன்னவுடன்,
”அப்ப அவன் கெட்டவனா?
அடுத்த கேள்வியோடு
ஆவலாய் அருகே வந்தாள்.

நடந்தது இதுதான்,
அசுரர்களின் காட்டுக்குள்
ஆரியப் பார்ப்பனர்கள்
அத்து மீறி நுழைந்தார்கள்.

சுரா எனும் சாராயத்தை
ஊர் கெடுக்க கலந்தார்கள்.

அசுரர்களின்
ஆடு, மாடுகளை
அடித்து யாகத்தில் எரித்தார்கள்
அடுத்தவன் உழைப்பில்
திருடித் தின்றார்கள்.

தேவர்களின் தீய செயலை
எதிர்த்துக் கேட்டான் நரகாசுரன்
எங்களுக்கா தொல்லை தருகிறாய் ?
என
விஷ்ணுவை விட்டு கொன்றார்கள் !
இதுதான்
கதைக்கு பின்னால் உள்ள
கள வரலாறு!

இன்னும் புரியும்படி
சொல்கிறேன்,
எங்கிருந்தோ வந்து
ஊரில் ஒரு
சாராயக்கடையை திறக்கிறான்
நான் எதிர்த்துக் கேட்டால்
நரகாசுரன்,

நம்ப ஊர் ஆத்துல ஒருவன்
மணலைத் திருடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்,

படிக்குற
உன் பள்ளிக் கூடத்தை
ஒருவன் மூடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வந்து
நாம இருக்கும்
இடத்தை ஒருவன் பறிக்கிறான்
எதிர்த்துக்கேட்டால்
நான் நரகாசுரன்.

இதுக்காகவெல்லாம்
அப்பாவை
ஒருவன் கொலை செய்தால்
கொண்டாடுவாயா?

கேட்ட மாத்திரத்தில்
கண்களை உருட்டி
கைவிரல் ஆட்டி
”ஊம்…
தொலச்சி புடுவேன்!” – என
மகள் வெடித்த
வெடிப்பு இருக்கிறதே
அந்த வீரியத்தை
பட்டாசு எதிலும்
பார்க்க முடியாது.

குழந்தைக்கு உணர்த்துவது
சிரமம் என நினைத்திருந்தேன்
பிற்பாடுதான் புரிந்தது
பெரியவர்களுக்கு
புரிய வைப்பதுதான்
பெரும்பாடு.

இன்று
வளர்ந்துவிட்ட மகளிடம்
மீண்டும் தொடர்ந்தேன்.

”பூர்வகுடி மக்களை
இன்று
காட்டை விட்டு துரத்துவது
வேதாந்தா கம்பெனி,

பூர்வகுடி திராவிடர் வளத்தை
அன்று
ஆட்டையப் போட்டது
வேதக் கம்பெனி.

அரசாங்க மொழியில் சொன்னால்,
நரகாசுரன்
அந்தக் கால நக்சலைட்!”

மகள்
வெடித்துச் சிரித்தாள்
பூவாணம் தோற்றது
புது அர்த்தம் பொலிந்தது.

– துரை. சண்முகம்.