privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்செல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் - சிறப்புக் கட்டுரை

செல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் – சிறப்புக் கட்டுரை

-

கோபால்ட் : தீங்கிழைக்கும் கெட்ட ஆவி !

ப்போது தான் பிறந்த எனது குழந்தையைப் பார்த்து நான் பயந்து விட்டேன். மருத்துவர்களே கூட எனது குழந்தையைப் பார்க்க பயந்தார்கள்..” ஐமென்ராஸின் குரல் மெல்லிய நடுக்கத்தோடு ஒலிக்கிறது. ஐமென்ராஸ் காங்கோ நாட்டின் தெற்குப் பகுதி நகரமான லுமூம்பாஷியை அடுத்துள்ள லூயிஸ்விஷி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிறந்த குழந்தையை ஒரு புதிரான நோய் தாக்கியிருந்தது.

ஹோலோப்ரோசென்சிபாலி (Holoprosencephaly) என்பது தான் அந்த புதிரான நோயின் பெயர். கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் – குறிப்பாக உலோகக் கழிவுகளால் மாசுபட்ட சூழலில் – பிறக்கும் குழந்தைகளை இந்நோய் தாக்குவதாக மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. ஐமென்ராஸ் பிரசவித்த குழந்தையை இந்த நோய் தான் தாக்கியிருந்தது.

Holoprosencephaly
ஹோலோப்ரோசென்சிபாலி மாதிரிப்படம்

ஹோலோப்ரோசென்சிபாலி நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளின் முகம் அரூபமாகி விடும். கண், காது, மூக்கு, தலை, உடல் என உடலின் உறுப்புகள் எதையும் இனம்பிரித்துக் காட்ட முடியாதபடிக்கு – பிறந்தது ஆணா பெண்ணா என்று கூட பிரித்தறிய முடியாதபடிக்கு – வெறும் சதைப் பிண்டமாகவே அந்தப் புதிய உயிர் ஜனிக்கும். ஜனித்துச் சில மணி நேரங்களிலோ நாட்களிலோ இறந்தும் விடும்.

லுமும்பாஷி மட்டுமின்றி கோபால்ட் சுரங்கங்கள் நிறைந்த தெற்கு காங்கோவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வினோதமான பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு, கான்சர் போன்ற நோய்கள் பெரியவர்களைத் தாக்குகின்றன என்றால் ஒரு பாவமும் அறியாத பிறந்த குழந்தைகளையோ மருத்துவ அறிவியல் முன்பின் கேள்விப்பட்டிராத நோய்கள் தாக்குகின்றன.

தெற்கு காங்கோவில் பிறக்கும் குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் இன்னொன்று மெர்மெய்ட் சிண்ட்ரோம் (Mermaind Syndrome) – பிறந்த குழந்தையின் வயிற்றுப் பகுதிக்குக் கீழே உள்ள பிறப்புறுப்பு, கால்கள் என அனைத்தும் மொத்தமாக ஒரு தசைப் பிண்டமாக (கடற்கண்ணியின் உடலைப் போல்) தோற்றமளிக்கும்.

லுமும்பாஷி ஒரு சுரங்க நகரம். சுரங்கம் என்றால் நவீன தொழிற்துறை சாதனங்கள் கொண்டு அகழ்ந்தெடுக்கம் சுரங்கங்கள் அல்ல – மன்வெட்டி போன்ற கைக்கருவிகளைக் கொண்டு சுயேச்சையான தனிமனிதர்கள் தங்களது சொந்தமுறையில் தோண்டும் சுரங்கங்கள் (Artisan Mines). அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த வரைபடமோ, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தோண்டும் பாதையோ வரையறுக்கப்பட்டிருக்காது. குத்துமதிப்பாக பூமியைத் தோண்டிச் செல்லும் போது, எதிர்பார்த்த கணிமங்கள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

ஒரு நாட்டின் இயற்கை வளங்களைக் கொண்டு அந்நாட்டின் செல்வத்தை மதிப்பிடுவதாக இருந்தால், இன்றைய தேதியில் சுமார் 15 ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு கண்டறியப்பட்ட தாதுப் பொருட்களும், இயற்கை வளங்களும் கொண்ட காங்கோ தான் பணக்கார தேசம். ஆனால், வளங்களின் மீது அந்த மக்களுக்கோ அரசுக்கோ உரிமை ஏதுமின்றி மொத்த நாடும் அந்நியர்களிடம் அடமானம் வைக்கப்பட்டிருப்பதால் காங்கோ இன்றைக்கு வறிய நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது.

பிணத்தைச் சுற்றும் வல்லூறுகளைப் போல் காங்கோவின் இயற்கை வளங்களைச் சூறையாட ஏகாதிபத்திய நாடுகள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக அந்நாட்டைத் தமது பிடியில் வைத்துள்ளன. வரைமுறையற்ற சுரண்டலுக்குத் தோதான கங்காணிகளே போதும் என மேற்கத்திய ஜனநாயக காவலர்கள் தீர்மானித்து விட்டபடியால், காங்கோவில் ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதெல்லாம் பெயரளவுக்குத் தான். அந்நாட்டின் பல்வேறு பிராந்தியங்கள் யுத்தபிரபுக்களின் தலைமையிலான ஆயுதக் குழுக்களால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன.

காங்கோ : ஒரு சுருக்கமான வரலாறு.

நவீன தொழிற்துறைப் புரட்சிக்கு முன்னதாகவே ஐரோப்பியர்கள் ஆப்ரிக்க கண்டத்தில் நுழைந்து விட்டனர். துவக்கத்தில் அவர்களுக்கு இயற்கை வளங்களை ஆப்ரிகாவின் விட மனித வளமே நாவில் எச்சிலூற வைத்தது. 1480ல் போர்ச்சுகீசியர்கள் காங்கோவில் கால் பதித்தனர். தங்கம் வெள்ளி வைரம் மற்றும் அரிய வகை அலங்காரக் கற்கள் என அள்ள அள்ளக் குறையாத இயற்கைச் செல்வங்கள், அவற்றை இயற்கைக்கு பாதிப்பேற்படுத்தாத வண்ணம் மேலாண்மை செய்த உள்ளூர் அரசு, உழைக்கச் சலிக்காத மனித வளம் என அந்த நாடு ஐரோப்பிய காலனியவாதிகளின் கண்களில் பொன் முட்டையிடும் வாத்தாகவே தெரிந்தது.

குறிப்பாக இலகுவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகாத வலுவான மரபணு பாரம்பரியம் கொண்ட கருப்பின மக்கள் ஐரோப்பியர்களின் கண்களுக்கு சிறந்த அடிமைகளாகத் தெரிந்தனர். தங்களை இருகரம் நீட்டி அன்போடு வரவேற்ற காங்கோலியர்களை வஞ்சகமாக வீழ்த்திய போர்ச்சுகீசிய காலனியவாதிகள், அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டனர். காடுகளில் திரியும் மிருகங்களை பொறிவைத்துப் பிடிக்கும் அதே வழிமுறைகளில் கருப்பின மக்களைப் பிடித்து கூண்டுகளில் அடைத்து கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்தனர்.

“ஆதித் திரட்சி” என்று மார்க்ஸ் குறிப்பிட்ட இந்த காட்டுமிராண்டித்தனங்களின் வழியாகத் தான் பிற்காலத்தில் ஏற்பட்ட தொழிற்துறைப் புரட்சிக்கான மூலதனத்தை ஐரோப்பிய முதலாளிகள் திரட்டினர். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு நாகரீகம் குறித்தும் ஜனநாயகம் குறித்தும் வகுப்பெடுக்கும் மேற்கத்திய கனவான்களின் கொழுப்புக்கு அடிப்படை ஆப்ரிகாவில் அவர்கள் தின்று தீர்த்த மனித உயிர்கள் தாம்.

congo mapபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி மலிவான இயற்கை வளங்களைக் கோரிய போது ஐரோப்பியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த காலனிய நாடுகளில் தீராத வெறியோடு கனிம வளங்களைத் தேடியலைந்தனர். அந்த வகையில் ஆப்ரிக்க வளங்கள் முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளாக இருந்த ஆப்ரிக்க தேசங்களை வளங்களுக்காக கசக்கிப் பிழிந்தனர்.

உலகின் இரண்டாவது பெரிய ஜீவநதியால் வளப்படுத்தப்பட்ட காங்கோ பூமியின் கீழ் செம்பு, தங்கம், கோபால்ட், யுரோனியம், கோல்டன் மற்றும் கச்சா எண்ணை புதைந்து கிடப்பதை அறிந்த ஐரோப்பியர்கள் அந்த நிலத்தைக் கட்டுப்படுத்த தங்களுக்குள் கழுத்தறுப்புப் போர்களைத் துவங்கினர். இறுதியில் முதலாளித்துவ நாடுகள் தங்களது இராணுவ மற்றும் போர் வெற்றிகளின் பலாபலன்களுக்கேற்ப ஆப்ரிக்க கண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளைக் கிழித்த போது காங்கோ பெல்ஜியத்தின் கைகளில் விழுந்தது.

அது இயந்திர வாகனங்களின் சக்கரங்களுக்கு ரப்பர் டயர் கண்டுபிடிக்கப்பட்ட சமயம். காங்கோவின் காடுகளில் செழித்து வளர்ந்திருந்த ரப்பர் மரங்களும், அப்பாவிக் காங்கோலியர்களுக்கும் பெல்ஜியத்தின் பிடியில் விழுந்தது. பெல்ஜிய படைகள் அணியணியாக கிளம்பிச் சென்று கூட்டம்கூட்டமாக காங்கோலிய மக்களை பிடித்து வருவார்கள். அவர்களில் பெண்களைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு ஆண்களை வனாந்திரப் பகுதிகளுக்கு விரட்டியடிப்பார்கள். ஒவ்வொரு ஆணும் பல நாட்கள் ஊணுறக்கமின்றி காடுகளில் சுற்றித் திரிந்து, தலை கொள்ளாத ரப்பர் கோந்துகளைச் சேகரித்து திரும்பினால் சில மணிநேரங்களுக்கு தங்களது மனைவிமார்களைப் பார்க்க முடியும்.

“காங்கோ ரப்பர்” என்பது மேட்டுக்குடி ஐரோப்பியர்களுடைய அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெல்ஜிய முதலாளிகள் அடிமைகளின் இரத்தக் கண்ணீரைத் தொட்டு பணக்கட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை கருப்பர்களை நேரடியாக வதைத்து வந்த பெல்ஜிய காலனியவாதிகள், அதன் பின், காங்கோலியர்களிலேயே கருங்காலிகளைக் கண்டறிந்து அவர்களின் தலைமையில் ஆயுதக் குழுக்களை ஏற்படுத்தினர். 1960ம் ஆண்டு வரை உள்ளூர் மக்களைக் கொண்டே எந்தச் சிக்கலுமின்றி பெல்ஜியத்தின்  சுரண்டல் தொடர்ந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிச முகாம் உலகெங்கும் செல்வாக்குப் பெற்றதை அடுத்து காலனிய நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் வேகமெடுத்தன. காங்கோவில் பாட்ரீஸ் லுமும்பாவின் தலைமையில் தேசிய விடுதலை இயக்கம் தீர்மானகரமாக முன்னேறி வந்தது. இறுதியில் 1960 ஜூன் 30ம் தேதி பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றது காங்கோ. சுதந்திரம் பெற்ற போது மொத்தமிருந்த ஐயாயிரம் அரசுப்பணியிடங்களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே காங்கோலியர்கள் இருந்தனர்.

patrice_lumumbaவிடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாட்ரீஸ் லுமும்பா, அந்த சமயத்தில் உலகு தழுவிய அளவில் சமூக ஏகாதிபத்தியமான சோவியத்துக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பணிப்போரில் எந்த அணியிலும் சேராத அணிசேராக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகவே அறிவித்தார். அதே நேரம் சொந்த நாட்டில் ஐரோப்பிய சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்டும் திட்டங்களையும் அறிவித்தார்.

பெல்ஜியத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும், காங்கோ ராணுவத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பெல்ஜிய அதிகாரிகளே விடுதலைக்குப் பின்னும் நீடித்து வந்தனர். இது தவிற உள்ளூர் அளவிலும் பல்வேறு கருங்காலி ஆயுதக்குழுக்களை பெல்ஜியம் பராமறித்து வந்தது. இவர்களைக் கொண்டு கணிம வளங்கள் மிகுந்த கடாங்கா பகுதியை தனி நாடாக பிரித்து தங்களது பொம்மை ஆட்சியை நிறுவ மேற்கத்திய நாடுகள் முயன்றன.

வேறு வழியில்லாத நிலையில், இராணுவ உதவிகளைக் கோரி சோவியத்தை நாடினார் பாட்ரீஸ் லுமூம்பா. மொத்த நாடும் அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடும் குழுக்களின் நாய்ச் சண்டையில் ஆழ்ந்திருந்த வேளையில் , இராணுவத்தில் இருந்த தங்களது கைக்கூலியான ஜோசப் மோபுடுவைக் கொண்டு ஒரு திடீர் சதிப்புரட்சியை அரங்கேற்றின மேற்கத்திய நாடுகள். பாட்ரீஸ் லுமூம்பா 1960 செப்டெம்பரில் கைது செய்யப்பட்டு பின் 1961 ஜனவரி 17 / 18 தேதிகளில் கொடூரமான முறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.

இன்றைய தேதிவரை தீராத உள்நாட்டுப் போர்களின் பிடியில் காங்கோ சிக்க வைக்கப்பட்டுள்ளது. மொத்த நாடும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. காங்கோவின் இயற்கை வளங்களைச் சுரண்ட வரும் பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் யுத்த பிரபுக்களுடைய கூட்டணி பலாபலன்களை கணக்கிட்டே தங்களது கிளைகளைத் துவங்குகின்றன.

coltan mineகாங்கோவில் உள்ள பல சுரங்கங்கள் சட்டவிரோத மாபியாக்கள் மற்றும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், அங்கே தொழிலாளர் உரிமை, பாதுகாப்பான வேலைச் சூழல், வேலை செய்வதற்கான வயது வரம்பு, வேலை உத்திரவாதம், குறைந்தபட்ச கூலி, மருத்துவ வசதிகள் என எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

திடீரென கிராமங்களுக்குப் படையெடுக்கும் ஆயுதக் கும்பல்கள், சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசமின்றி மக்களை மந்தைகளைப் போல் ஓட்டி வருவார்கள். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்படும் மக்களைக் கொண்டு அந்த ஆயுதக் குழுவின் கட்டுபாட்டிலிருக்கும் சுரங்கம் சில ஆண்டுகளுக்குச் செயல்படும். ஆயுதக் குழுக்களுக்கிடையே நடக்கும் சண்டைகளின் வெற்றி தோல்விகளுக்கேற்ப சுரங்கங்களின் உரிமையும் அடிமைகளின் உரிமையும் கைமாறும்.

இந்த முறையிலான “உற்பத்தியின்” விளைவாக கிடைக்கும் மலிவான கச்சாப் பொருட்களுக்காக முதலாளித்துவ நாடுகள் காங்கோவின் அரசியல் நிலைமை குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் அவ்வப்போது தங்கள் முதலாளிகள் சம்பாதிக்கும் “இரத்தப் பணம்” குறித்து சம்பிரதாயமான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதும், அந்த எதிர்ப்பின் தன்மைக்கேற்ப சில வெற்று உத்திரவாதங்களையோ வெத்து வேட்டு விதிமுறைகளையோ அந்நாடுகள் அறிவிக்கும்.

ஆனால், இவை எதுவும் காங்கோவில் வழிந்தோடு இரத்த வெள்ளத்திற்கு அணை போடுவதாக இல்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் காங்கோவில் மாத்திரம் சுமார் ஐந்து லட்சம் பேர் வரை ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். பல பத்து லட்சம் மக்கள் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் விளைந்த நோய்களுக்கு பலியாகியுள்ளனர். பல பத்து லட்சம் மக்கள் அடிமைகளாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் நமக்கு என்ன பங்கிருக்கிறது?

உலகின் மொத்த கோபால்ட் உற்பத்தியில் சுமார் 45 சதவீதம் காங்கோவில் இருந்து வருகிறது. இதில் ஆகப் பெரும்பான்மை கையால் தோண்டப்படும் சுரங்கங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இராண்டாயிரமாவது ஆண்டில் சுமார் 2,698 டன்களாக இருந்த கோபால்டின் தேவை, 2015ல் 32,657 டன்களாக உயர்ந்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் கோபால்டின் தேவை சுமார் 75000 டன்களைக் கடக்கும் என்கிறது அவிசென்னி எனர்ஜி என்ற ஆய்வு மையம்.

கையால் தோண்டப்படும் சுரங்கம் எங்கே இருக்கும்? அது எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். வீட்டின் புழக்கடையில், ஊரின் மைதானத்தில், ரயில் பாதையின் கீழே, என லுமும்பாஷியின் பூமியை எங்கே குடைந்தாலும் அந்த மண்ணிலும், பாறைத் துணுக்குகளிலும் கோபால்ட் தாது படிந்து கிடக்கிறது.

வேறு வருமான வாய்ப்பு ஏதுமில்லாத மக்கள் மண்வெட்டி போன்ற சாதாரண கைக்கருவிகள் கொண்டு தங்களுக்குத் தெரிந்த இடங்களில் பூமியைத் தோண்டிச் செல்கின்றனர். சுமார் மூன்றடி விட்டத்தில் தோண்டப்படும் இந்த சுரங்கங்கள் பூமிக்கடியில் பல மைல்களுக்கு (எலி வளைகளைப் போல்) நீளும். முன்பின் தெரியாத நம்மைப் போன்றவர்கள் உள்ளே நுழைந்தால் திக்கு திசை தெரியாமல் உள்ளேயே அலைந்து திரிந்து மரணிக்க வேண்டியிருக்கும்.

இந்த சுரங்கத்தினுள் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் மண்கொத்திகளோடு நுழைகின்றனர் மக்கள். வெளிச்சத்திற்காக முன் நெற்றியில் பொருத்தப்பட்ட ஒரு சிறு விளக்கு தவிற கையுறைகளோ காலுறைகளோ ஏதுமில்லை. ஒரு நாளைக்குப் பத்திலிருந்து பண்ணிரண்டு மணிநேரங்கள் வேலை செய்து தோண்டி எடுத்த தாது படர்ந்த மண்ணைத் தலைச் சுமையாக வெளியே கொண்டு வருகின்றனர்.

Open mineசுரங்கத்தினுள் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் ஏற்படலாம். திடீரென மீத்தேன் வாயு கசியலாம், நீரோட்டம் குறுக்கிட்டு தண்ணீர் பீய்ச்சியடித்து மொத்த சுரங்கத்தையும் மூழ்கடிக்கலாம். பூமியினுள் பல நூறு அடியாழத்தில் மண்ணைக் குடைந்து கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு என்ன நேர்ந்ததெனத் தெரிந்தோ தெரியாமலோ மரித்துப் போகலாம். அவ்வாறு காங்கோவில் புதைந்து போனவர்களின் எண்ணிக்கை கூட அந்த அரசாங்கத்திடம் இல்லை – ஒருவேளை அப்படி ஒரு கணக்கெடுப்பு நடந்தால் அது தங்கள் நாட்டைச் சுரண்டும் ஆண்டைகளின் மனசாட்சியை அசைத்துப் பார்த்து விடுமென்ற அச்சத்தில் சுரங்க மரணங்களை காங்கோலிய கைக்கூலி அரசு கணக்கிடுவது கூட இல்லை.

இவ்வாறாக சுரங்கத்தில் கைகளால் சேகரிக்கப்படும் தாது மண்ணை அருகில் உள்ள ஓடைகளில் மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கழுவிச் சுத்தம் செய்கின்றனர். பின்னர் எஞ்சியதை மூட்டைகளாக கட்டி அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கே இடைத்தரகர்களால் தாது மண் தரம் பிரிக்கப்பட்டு மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சம் ஆயிரம் காங்கோலிய பிராங்குகள் (1 அமெரிக்க டாலர்) கொடுக்கப்படுகிறது.

இடைத்தரகர்களிடமிருந்து “ஹுவாயு கோபால்ட்” போன்ற சீன அல்லது ஐரோப்பிய கோபால்ட் நிறுவனங்களுக்கு இந்த கச்சாப் பொருள் கைமாறுகிறது. உள்ளூர் கோபால்ட் நிறுவனங்களின் ஆலைகளில் சுத்திகரிக்கப்படும் கோபால்ட், பின் சீனா, ஜப்பான், ஐரோப்பா அல்லது தென் கொரியாவில் உள்ள லித்தியம்-அயான் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செல்கிறது.

இன்றைய தேதியில் உலகில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் – அயான் மின்கலன்களில் (பேட்டரி) பயன்படுத்தப்படும் கோபால்ட்டில் ஏறக்குறைய சரிபாதி காங்கோவைப் பூர்வீகமாக கொண்டது தான். இந்தக் கட்டுரையை மடிக்கணிணியிலோ, நுண்ணறிபேசியிலோ (Smart Phone) நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தால் – உங்கள் கைப்பேசி அல்லது கணிணியில் காங்கோவின் ரத்தம் உறைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நுண்ணறிபேசிகளின் காலமாக உள்ளது. உண்ணும் உணவைத் தருவிக்க ஒரு செயலி, உறங்குவதை நினைவூட்ட ஒரு செயலி, விளையாடுவதற்கு செயலிகள், திரைப்படம் பார்க்க, பாடல் கேட்க என கேளிக்கைகளுக்குத் தனித்தனிச் செயலிகள், உரையாடுவதற்கும், சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் செயலிகள் – என இளைஞர்களின் வாழ்க்கையை நுண்ணறிபேசிகள் ஆக்கிரமித்து வருகின்றன.

நுண்ணறிபேசிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆற்றல்கூடிய மின்கலன்கள் தேவை. அதுவும் விலை மலிவாகத் தேவை. மின்கலன்களின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க கோபால்டின் அளவும் கூடும். நுண்ணறிபேசிகளின் பிரகாசத்தின் பின் காங்கோவின் எங்கோ ஒரு மூலையில் உள்ள இரத்தக்கறை படிந்த இருண்ட சுரங்கம் ஒன்றுள்ளது. அந்தச் சுரங்கத்தினுள் முகமறியாத ஒரு மனிதன் தனது உயிரையும், தங்கள் மக்களின் ஆரோக்கியத்தையும், அந்த நாட்டின் எதிர்காலத்தையும் பணயம் வைத்து இறங்கும் மனிதனே இந்த நூற்றாண்டின் மகத்தான தொழில்நுட்ப சாதனை உள்ளங்கையினுள் அடங்க காரணமாயிருக்கிறான்.

கோபால்ட் மட்டுமின்றி நவீன உலகின் மின்னணு நுகர்பொருட்கள் பலவற்றில் பயன்படுத்தப்படும் மூலக் கூறுகளும், அடிப்படைக் கணிமங்களும் இதே போன்ற வழிமுறைகளில் நம்மிடம் வந்து சேர்பவை தாம். நவீன விஞ்ஞான சாதனங்கள் அனைத்தும் முதலாளித்துவத்தின் சாதனைகள் எனக் கருதுவோர் அதன் பின் பரிதவிக்கும் நாடுகளின், மக்களின் உயிர்களைப் பற்றி சிந்திப்பார்களா?

ஜெர்மானிய மொழியில் கோபால்ட் என்ற சொல்லுக்கு “தீங்கிழைக்கும் கெட்ட ஆவி” என்ற ஒரு பொருளுண்டு. பதினேழாம் நூற்றாண்டின் சுரங்கத் தொழிலாளர்கள் கோபால்ட் சுரங்கங்களில் நிகழும் விபத்துகளுக்கு கெட்ட ஆவியே காரணமெனக் கருதியே இந்தப் பெயரைச் சூட்டினார்களாம். உண்மையில் மரணத்தைப் பரிசளிக்கும் அந்தக் கெட்ட ஆவி கோபால்ட் அல்ல – முதலாளித்துவமே.

– முகில்

மேலும் படிக்க :