privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமதுரை - திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

மதுரை – திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

-

ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் நூற்றாண்டு விழா – மதுரை

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகமெங்கும் நடைபெற்ற நவம்பர் 07 இரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மதுரை ஒத்தக்கடையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் விழா ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து மக்கள் அதிகமாக கூடியிருக்கும் சாலையில் நின்று பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி, மார்க்சிய ஆசான்களின் உருவப்பதாகைகளுடன் செங்கொடிகள் தாங்கி, அங்கு கூடி நின்ற தொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பெரியோர்களிடம் பிரசுரம் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும், தோழர்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மக்களிடையே பு.ஜ.தொ.மு-வின் தோழர் பிச்சை நவம்பர் புரட்சியின் மகத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.

IMG_6322
அங்கிருந்து சுமார் 1கி.மீ தூரம் உள்ள அரங்கக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேனர் பிடித்து, முழக்கங்கள் எழுப்பி, செங்கொடிகளுடன் ஊர்வலமாக தோழர்கள் நடந்து சென்றனர்.

ஊர்வல வழியில் சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளில் தோழர்களின் குழந்தைகள் இனிப்புகள் வழங்கியும், பிரசுரம் கொடுத்தும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டே வந்தனர். சில தொழிலாளர்கள் குழந்தைகளின் கரங்களைப் பற்றி வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்.

தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட  கூட்டத்தை பு.மா.இ.மு-வின் தோழர் இராஜ்குமார் தலைமை தாங்கி நடத்தி பேசியதாவது, மார்க்ஸ் பிறந்த இருநூறாமாண்டு, இரஷ்ய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு, சீனப் பண்பாட்டுப் புரட்சியின் அரை நூற்றாண்டு, நக்சல்பாரி எழுச்சியின் அரை நூற்றாண்டு ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக இவ்வாண்டு சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பாட்டாளி வர்க்க உணர்வை வளர்ப்பது, கட்சியை நோக்கி உழைக்கும் மக்களை அணி திரளச் செய்வது, அமைப்பாக்குவது, அதற்குத் தடையாக உள்ள பண்புகளைத் தூக்கியெறிவது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் சிறந்த மாணவர்களாக நாம் மாறுவதற்காக நடத்தப்படுவது தான் இவ்வரங்கக் கூட்டத்தின் நோக்கம் என்று தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர் சங்கையா “மார்க்ஸ் மார்க்ஸியம் படைத்தார்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். மார்க்ஸ் இல்லை என்றால் புரட்சி இல்லை. மார்க்ஸ் இல்லையென்றால் மக்களுக்கு விடுதலை இல்லை. அத்தகைய மார்க்ஸியம் ஜெர்மன் தத்துவ ஞானத்திலிருந்து இயங்கியியலையும், இங்கிலாந்து  பொருளாதாரத்திலிருந்து உபரி மதிப்பையும், பிரெஞ்சு சோசலிசத்திலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், மார்க்ஸ் கண்டறிந்தார். இதில் மார்க்ஸினுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு, போராட்டம் ஆகியவற்றை எடுத்துக்கூறி எழுச்சிமிக்க உரையாற்றினார்.

“சீனக் கலாச்சாரப்புரட்சியும், இந்திய கலாச்சாரச் சூழலும்” என்ற தலைப்பில் ம.உ.பா மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன்  உரையாற்றினார். சீனாவில் கட்சியிலும் அரசிலும் ஊடுருவியிருந்த முதலாளித்துவப் பாதையாளர்களை, அதிகார வர்க்கத்தினரை அம்பலப்படுத்திக் களையெடுக்கும் விதமாக நடத்தப்பட்ட கலாச்சாரப் புரட்சியைப் பற்றியும், அதற்கு மக்களை அறைகூவி அழைத்த மாவோ-வைப் பற்றியும் விளக்கிப் பேசினார். மேலும் இந்தியச் சூழலைப் பற்றிப் பேசும் போது சமூகத்தில் உள்ள காரியவாதம், பிழைப்பு வாதம்,  ஆகியவற்றை விளக்கினார்.

IMG_6299மேலும், இரஷ்ய சீனப் புரட்சிகள் அர்ப்பணிப்பு, தியாகம், சுய விமர்சனப் பார்வை ஆகிய பண்புகளால் தான் புரட்சி நடந்தேறியது. நாமும் அத்தகையப் பண்புகளை வரித்துக் கொள்ள வேண்டும் என்று உரையை முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர், தோழர் லயனல் அந்தோனிராஜ் ‘‘நக்சல்பாரி எழுச்சி இந்தியப் புரட்சியின் விடிவெள்ளி” என்ற தலைப்பில் உரையாற்றும் போது, சி.பி.எம் கட்சியிலிருந்த டார்ஜிலிங் மாவட்டக் கமிட்டித் தோழர்கள் திட்டமிட்டு தெராய் பிராந்தியத்தில் விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் எழுச்சியை உருவாக்கினார்கள். அந்த எழுச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட ஒரு புரட்சிக் கட்சியின் தோற்றமும், இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதும், அரசின் அடக்குமுறை பற்றியும் விளக்கிப் பேசினார்.

அதற்கடுத்தபடியாக ‘‘இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவோம், மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி பேசியதாவது, இந்துமத வெறியர்களின் கொள்கை பயங்கரவாதம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் யார் ஆதிக்கப் பிரிவினராக இருக்கிறார்களோ அவர்களோடு இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளூர் ஆதிக்க சாதியினர் முதல் அமெரிக்க ட்ரம்ப் வரை இந்துமத வெறியர்களின் இயற்கையான கூட்டாளியாக இருப்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

பரவிவரும் ஆர்.எஸ்.எஸ். அபாயத்தை முறியடிப்பதற்கு எந்த அநீதியையும் உணர்ச்சியற்ற முறையில் அங்கீகரித்துப் பழக்கப்பட்ட பண்புகளில் வீழ்த்த முடியாது. மாறாக ஜனநாயக உணர்வும், மக்கள்  மீதான பற்றும் உயிர்த்துடிப்புள்ள செயல்பாடுகளும் தான் இந்துமத வெறியர்களை வீழ்த்தும் என்று அறைகூவி அழைத்தார்.

ம.க.இ.க, மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் தன்னுடைய இறுதியுரையில், கற்பனாவாத சோசலிஸ்டுகளை கணக்குத் தீர்த்து விஞ்ஞான சோசலிசத்தை நிறுவிய மார்க்சின் பணியைப் பற்றியையும், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்ப வாதிகளால் முன்னிறுத்தப்பட்ட தொளதொளப்பான கட்சி அமைப்பு முறைக்கு மாறாக, எஃகுறுதி மிக்க பாட்டாளி வர்க்கக் கட்சியை கட்டுவதற்கான லெனின் வகுத்த ஸ்தாபனக் கோட்டுபாடுகளைப் பற்றியும் எடுத்துக் கூறி எழுச்சிமிக்க உரையாற்றினார்.

சிறப்புரைகளுக்கு மத்தியில் புமாஇமு தோழர் தனசேகர் ‘புரட்சியில் இளைஞர்கள்’, அதே போல் மகஇக, தோழர் சினேகா ‘லெனின் இளமைக்காலம்’, புஜதொமு-வின் தோழர் முருகேசன் ‘மாவோவின் இளமைக்காலம்’, மக்கள் அதிகாரத்தின் தோழர் மலை, ‘சோசலிச இரஷ்யாவில் மக்கள் அதிகாரத்தை எவ்வாறு நிறுவினார்கள்’, உசிலை பகுதி விவிமு அமைப்பாளர் தோழர் போஸ் ‘இரஷ்ய – இந்திய விவசாய நிலைமைகளைப்பற்றி’, மக்கள் அதிகாரம் தோழர் இராஜா, ‘தெலுங்கானா எழுச்சியில் பெண்களின் பங்கு’, ஆகிய தலைப்புகளில் புதிய இளந்தோழர்கள் உரையாற்றினார்கள்.

தோழர்களின் குழந்தைகள், மாணவர்கள் புரட்சிகரப் பாடல்கள் பாடி, கவிதைகள் வாசித்தார்கள். இவ்விழாவின் துவக்கத்தில் ‘‘ஸ்டாலின் சகாப்தம்’’ ஆவணப்படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மதிய உணவு இடைவேளையில் மாட்டுக்கறி விருந்து அளிக்கப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக தோழர் சேகர் நன்றியுரை கூறினார். அனைத்துலக கீதம் பாடிய பின், தியாகிகளுக்கு வீரவணக்கம் கூறி முடித்தவுடன் தோழர்கள் அரங்கை விட்டு வெளியே வந்து, இரஷ்ய புரட்சியின் நாளை  மகிழ்விக்கும் விதமாக வானவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

***

திருச்சி நவம்பர் 7 புரட்சி தின விழா

வம்பர் 7 புரட்சி தின விழாவை முன்னிட்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சங்க கொடியேற்று விழாவும் எமது சங்கத்தின் முதல் தலைவருமான தோழர் சேக் இமாம் அவர்களின் படத்திறப்பு விழாவும் திருச்சி குட்செட்டில் விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி
கொடியேற்று விழாவிற்கு தோழர் முத்துக்கருப்பன் அவர்கள் தலைமை ஏற்றார்.

கொடியேற்று விழாவிற்கு தோழர் முத்துக்கருப்பன் அவர்கள் தலைமை ஏற்றார். சங்கத்தின் கொடி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ராஜா அவர் பேசும் போது “நவம்பர் 7 புரட்சியின் மகத்தான நூற்றாண்டு மற்றும் சீனாவின் கலாச்சார புரட்சிக்கு 50 ஆம் ஆண்டும் நக்சல்பாரி இயக்கத்தின் 50 ஆம் ஆண்டின் சிறப்போடு நமது புரட்சிகர சங்கத்தை குட்செட்டில், தொழிலாளர்களின் உரிமையை காக்க 2006 ஆண்டு மே மாதம் துவங்கி 10 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளதையும் சங்கத்தின் முதல் தலைவர் தோழர் சேக் இமாம் மேஸ்திரியின் பங்களிப்பை மறக்கமுடியாது. கடந்த ஆண்டு 30.10.2015ல் நம்மிடமிருந்து இயற்கை பறித்துக்கொண்டது 47 தொழிலாளர்களுக்காக மட்டும் சிந்திக்காமல் அனைத்து குட்செட் தொழிலாளர்களின் உரிமையை காக்கவும் தேர்தல் அரசியல் களத்தையும் தாண்டி தியாகப்பூர்வமான நேர்மையான ஒரு சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து துவங்க உறுதுணையாகவும் முதல் தலைவராகவும் விளங்கினார்” என்றார்.

மேலும் ”இரயில்வே பொதுத்துறையின் கீழ் இயங்கும் 13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்ல, சேலம் உருக்காலை, பி.எச்.இ.எல் போன்ற நவரத்தினக் கம்பெனிகளை தனியார் மயமாக்கும் மத்திய மோடி சர்க்காரின் சதியை முறியடிப்போம் !” என்றார். காவிரி நீரில் நம் உரிமையை மறுத்து தஞ்சையை பாலைவனமாக்கி விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய பின் எப்படி நமக்கு நெல், உரம் சரக்குகள் இங்கே வரும் மதுரை விவசாயகுளத்தில் நீதிமன்றம், நீர்நிலைகள் சுருட்டிய கல்லூரிகள் அவர்களின் பக்கபலமான அரசுகளை தூக்கியெரிய வேண்டுமானால் நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி என்றார்.

அவரை தொடர்ந்து சிறப்புரையாற்றிய ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் நவம்பர் புரட்சியையும் ரசிய சோசலிசத்தின் சாதனைகளையும் அழகாக விளக்கினார். செஞ்சீனத்தின் 50 ஆண்டை கலாச்சார புரட்சியில் மாவோஆற்றிய பங்கோடு போங்காட்டம் காட்டும் அம்மா ஆட்சியை நகைச்சுவையுடன் ஒப்பிட்டார். சாராயம் விற்கும் சர்க்காரை தண்டிக்க வேண்டாமா ? என தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பினார். நக்சல்பாரி அரசியலையும், தேர்தல் சூதாட்டங்களில் பங்கேற்காத புரட்சிகர சங்கங்களும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள்தான் டாஸ்மாக்கடைகளை அப்புறப்படுத்தியதையும் பல இடங்களில் மூடியதையும் குறிப்பிட்டார். பெண்கள், இளைஞர்களின் இணைந்து இப்படிபட்ட விழாக்களை நடப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மார்க்கத்தை கடந்து மார்க்சிய பற்றோடும் மனிதநேயத்தோடும் பணியாற்றிய குட்செட் மேஸ்திரி தோழர் இமாம் மறைவு பெரும் இழப்பு என்பதை நினைவுகூர்ந்தும் பேசினார். இறுதியாக மக்களுக்கு இனிப்பு வழங்கி வெடி வெடித்து மகிழ்ந்தனர். இறுதியாக சங்கத்தின் தலைவர் தோழர் குத்புதீன் நன்றியுரை கூறினார். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் கூடிநின்று பேச்சை கவனித்தனர்.

sheik-imam (3)
தோழர் சேக் இமாம் அவர்களின் படத்திறப்பு விழா

அதனை தொடர்ந்து குட்செட் உள்ளே மறைந்த தோழர் சேக் இமாம் அவர்களின் படத்திறப்பு விழா சங்கத்தின் செயலாளர் தோழர் இரத்தினம் தலைமையில் நடைபெற்றது. குட்செட் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் சங்கத்தின் தலைவர் திரு.தங்கராசு அவர்கள் படத்தை திறந்துவைத்து நினைவுரையாற்றினார். ஒரு நல்ல மனிதனை உங்கள் சங்கம் மட்டுமல்ல நாங்களும் இழந்துவிட்டோம். இதுவரை இப்படி படத்திறப்பு நிகழ்வுகளை நான் கண்டதில்லை. அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை கண்டு என்மனம் நெகிழ்கிறது என்றார். ஒப்பந்ததாரர் ஜோசப் அவர்கள் எல்லேருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையும் 30 ஆண்டுகாலத்திற்கு மேல் கடும் உழைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியில்லாமல் ஒப்படைக்கவேண்டும் என்ற அவரின் என்னத்தை புகழ்ந்து பேசினார்.

அவரை தொடர்ந்து ஒப்பந்ததாரர் சுரேஷ் அவர்கள் (ஐயர்) பேசும் போது பிறப்பால் இசுலாமியராக வேறுபடுத்தி பார்த்தது கிடையாது என் தந்தை இங்கே வேலை செய்த காலத்திலிருந்தே பாசத்துடன் பழகியவர், என்னை தூக்கி வளர்த்த தந்தை என்று உருக்கத்துடன் கூறினார். அவரை தொடர்ந்து பலரும் பேசினர் இறுதியாக சங்கத்தின் சிறப்புத்தலைவர் தோழர் ராஜா, தோழரின் எளிமையையும் அமைப்பு முடிவுதான் என்முடிவு என பலநேரங்களில் இமாம் பேசியதையும் தொழிலாளியின் வியர்வை காயும் முன் கூலியை ஒப்படைப்பதென்ற குரானின் சொல்லுக்கு நேர்மையாக நடந்ததையும் சிஐடியுவிலிருந்து பிரிந்து தொழிலாளர்கள் சங்கம் கட்டுவதற்கு அடித்தளமாக நின்றவர் சகவர்க்கத்தின் துயரத்தை கண்டு பொருக்காத அவரின் எண்ணம்தான் நம்மை இணைத்தது என்றார். அவரை தொடர்ந்து தோழர் கோவன் மற்றும் பலர் பேசினர். இறுதியாக தோழரின் மகனும் சங்கத்தின் தலைவருமான குத்புதீன் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் பல தொழிலாளர்களும், சங்கத் தோழர்களும் வந்திருந்து சிறப்பித்தனர், இதுவரை குட்செட்டின் உள்ளே மைக்செட், பந்தல், நிகழ்ச்சிகள் எதையும் அனுமதிக்காத நிலையை மாற்றி இதற்கு முன் இறந்த மேஸ்திரிகளுக்கு பிற சங்கங்கள் யாரும் படத்திறப்பு, நினைவு கூறுவது இல்லாத சூழலில் தோழர் சேக் இமாம் அவர்கள் படத்திறப்பும், ஒப்பந்ததார்கள், குடும்பத்தினர் கலந்துகொண்ட இந்நிகழ்வு மறைந்த தோழருக்கு உண்மையான மரியாதை நிகழ்வு என்றனர். அமைப்பின் மீதான மதிப்பையும் உயர்த்தியிருக்கிறது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க