privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?

பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?

-

“சிலவற்றை அடைய, சிலவற்றை இழந்து தான் ஆக வேண்டும்” என்கிறார் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி. வங்கிகள் முன்பும், ஏ.டி.எம் இயந்திரங்கள் முன்பும் வரிசையில் நிற்கும் மக்கள் இறந்து போவதைக் குறித்து கேள்வியெழுப்பிய போது, “ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே தண்டவாளங்களில் 3500 பேர் சாகிறார்கள். ஐந்து லட்சம் மக்கள் சாலை விபத்தில் சாகிறார்கள். இன்னும் நிறைய பேர் தீவிரவாத தாக்குதல்களிலும் வேறு காரணங்களாலும் இறந்து போகிறார்கள். எவரும் இதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், “128 கோடி மக்களில் 25 பேர் தானே இறந்துள்ளனர்” என்று கொக்கரித்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் வரிசைகட்டி நிற்பவர்கள் எல்லாம் ‘அசுர சக்திகள்’ எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மக்களைப் போல் மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற கருப்புப் பண முதலையான பாபா ராம்தேவ், எதிர்கட்சிகள் திட்டமிட்டு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னும், வங்கிகளின் முன்னும் மக்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

atm-crowd chennaiதங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக தாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எடுக்க வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் முன் நிற்கும் மக்களை கருப்புப் பணத்தை மாற்ற வந்தவர்கள் என இழிவு படுத்துகிறார் பிரதமர் மோடி. ஜப்பான் சுற்றுப் பயணத்தின் போது இது குறித்து உரையாற்றிய மோடி, “காங்கிரசு 25 பைசா நாணயங்களைச் செல்லாது என்று அறிவித்த போது நாங்கள் ஏதாவது கேட்டோமா?” என சில்லறைத்தனமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். மேலும், தனது அறிவிப்பு வெளியானதற்கு மறுநாள் திருமணம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தவர்கள் திகைத்துப் போய் விட்டார்களாக்கும் என்று தனது கைகளால் சைகை செய்து நீட்டி முழக்கிய போது ஜப்பானின் கோபே நகரில் அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்த இந்தியர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.

மோடி அறிவித்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை துன்பமாகத் துவங்கி மெல்ல மெல்ல வரலாறு காணாத பொருளாதாரப் பேரிடரை நோக்கி முன்னேறி வருகின்றது. கருப்புப் பொருளாதாரத்தின் இயக்கம் மற்றும் அதன் விளை பொருளான கருப்புப் பணத்துக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள பொருளாதார மேதமை கூட அவசியமில்லை – ரஜினி துவங்கி கவுதம் அதானி வரை யாரெல்லாம் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார்கள் என்பதைக் கவனித்தாலே விளங்கும். என்றாலும் இந்நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்து விடுவதாகச் சவடால் அடித்து வரும் பாரதிய ஜனதா கும்பல், மக்களின் வாழ்க்கையை மீளாத துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு என்பதே மோசடி என்பது ஒருபுறமிருக்க, இந்த நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் படும் துன்ப துயரங்களும் அதைக் குறித்து இந்துத்துவ கும்பலுக்கு இருக்கும் அலட்சியமும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு ஆபாசத்தின் எல்லைகளைத் தாண்டியுள்ளது. பணம் எடுக்கச் சென்று அதிர்ச்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுவரை 50-ஐத் தொட்டுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியானவுடன் கருப்புப் பண பேர்வழிகள் அனைவரும் மாற்று உடை கூட இல்லாமல், சோற்றுக்கும் வழியின்றி வங்கிகளின் முன் பராரிகளாக நிற்கப் போகிறார்கள் எனக் கனவு கண்ட நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த கணிசமானவர்கள், பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆனால், அவர்களது இன்பக் கிளுகிளுப்பு ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மோடியின் அறிவிப்பு வெளியாகி ஒருவாரம் கழித்த நிலையிலும் இன்னமும் புழக்கத்திற்கு வரவில்லை. சுழற்சியில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு மட்டும் சுமார் 84%. 10, 20, 50 மற்றும் 100 ரூபாய்த் தாள்கள் மீதமுள்ள 16 சதவீத மதிப்புள்ளவைகள். இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் கூட சில்லறையாக மாற்ற முடியாமல் எதார்த்தத்தில் செல்லாக்காசாகி உள்ளது. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 மற்றும் 500 ரூபாய்த் தாள்களைக் கையாள்வதற்கு ஏதுவாக வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை சீரமைக்க வேண்டிய பணியும் முழுமையாக நிறைவேறவில்லை – அவ்வாறு ஏ.டி.எம் இயந்திரங்களை முழுமையாக மறுசீரமைக்க சுமார் 30லிருந்து 60 நாட்களாகும் என பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Modi Checkmate
கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு என மீம் போட்டு பீற்றினர் மோடி விசுவாசிகள்

இதற்கிடையே பழைய நோட்டுக்களை மாற்றிக் கொண்டவர்களில் பலரும் தங்களது அத்தியாவசிய செலவுகளைக் கூட சுருக்கிக் கொண்டு கையிலிருக்கும் 100 ரூபாய்த் தாள்களை சேமிக்கத் துவங்கியுள்ளனர். இந்தப் போக்கின் விளைவாக 100 ரூபாய்த் தாள்களின் சுழற்சியும் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. வங்கிகளில் நேரடியாகச் சென்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ஏற்கனவே நிர்ணயித்திருந்த 4,500 ரூபாய் என்கிற வரம்பை 2,000 ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ள அரசு, ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணம் மாற்றுவதைத் தடுக்க விரலில் அழியாத அடையாள மை வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. மக்கள் நியாயமாக உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு நெட்டித் தள்ளியிருக்கும் மோடி, இன்னொரு பக்கம் வங்கிகளில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவையாக உள்ள முதலாளிகளின் கடன்களை வாராக் கடனாக அறிவித்து கைகழுவியுள்ளது.

இதற்கிடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய்த் தாள்கள் சாயம் போவதும் தெரிய வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய நிதித் துறைச் செயலாளர் சக்திகந்ததாஸ், சாயம் போனால் கள்ள நோட்டுக்கள் என்றும் சாயம் போகாவிட்டால் நல்ல நோட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி உடனேயே கள்ள நோட்டுக்களை வெளியாகிவிட்டதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ என்னமோ! துவக்கத்தில் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர், கையில் காசின்றிக் குடல் காய்ந்து போன நிலையில் அரசின் கோமாளித்தனங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் துவங்கியதை அடுத்து நொந்து போயுள்ளார்கள். பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் பிரிவில் சுமார் 25 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders).

தினசரி 14,000 கோடிகள் புரளும் சிறு வர்த்தகச் சந்தையில் சுமார் 40 சதவீதம் வர்த்தகர்களுக்கிடையிலான பரிவர்த்தனையாகவும், 60 சதவீதம் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையாகவும் உள்ளது. மோடியின் அறிவிப்பிற்குப் பின் வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், பணத் தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தனது வாக்கு வங்கியில் கணிசமான சதவீதம் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் ஆத்திரம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை உணர்ந்த மோடி, கோவாவில் (ஜப்பானில் இருந்து திரும்பிய பின்) உரையாற்றும் போது இந்நடவடிக்கயின் விளைவாக தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் பின் வாங்கப் போவதில்லை என்றும், நாட்டு நலனுக்காக மக்கள் மேலும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

மோடி பேசிய போது தெறித்த எச்சில் காய்வதற்குள் கர்நாடக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி தனது மகளுக்கு 500 கோடியில் கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளார்.

janardhan wedding 3
500 கோடி செலவில் ஜனார்தன் ரெட்டி வீட்டு ஆடம்பரத் திருமணம்

“அது தான் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 22 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோமே? மடியில் கனமில்லாதவர்கள் தங்களது பணத்தை வங்கியில் கொண்டு போய் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே? நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நாளுக்கு எத்தனை ஆயிரங்கள் செலவாகி விடப்போகிறது? நாங்கள் தான் ஏ.டி.எம்மில் நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் எடுக்க வகை செய்யப்பட்டுள்ளதே?” என்றெல்லாம் எகத்தாளமாய்க் கொக்கரிக்கின்றனர் இணைய இந்துத்துவ பீரங்கிகள்.

ஆனால், மொத்த இந்தியர்களில் 74 சதவீதம் பேரே கல்வியறிவு பெற்றவர்களாகவும் – அதிலும் வெறும் 40 சதவீதம் பேரே ஒரு படிவத்தைப் படித்துப் புரிந்து கொண்டு அதை நிரப்பும் அளவுக்கு கல்வியறிவு கொண்டவர்கள் என்பதைக் குறித்து இந்த இணைய மொண்ணைகள் வாய் திறப்பதில்லை. மேலும், கிராமப்புற மக்களில் வெறும் 6 சதவீதம் பேருக்குத் தான் ஏ.டி.எம் இயந்திரங்களை இயக்கும் அறிவு உள்ளது எனத் தெரிவிக்கிறது People research on India’s consumer economy (PRICE) என்ற நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. மேலும், ஊரகப் பகுதிகளில் போதுமான அளவுக்கு வங்கி வலைப்பின்னல் இல்லாத நிலையில், விவசாயிகளும் கிராமப் புற மக்களும் அடைந்துள்ள துயரங்களைச் சொல்லி மாளாது.

பொதுவாகவே இந்துத்துவ பாசிஸ்டுகள் பிறருக்கு துன்பம் வரவழைத்து அதிலிருந்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் என்பது நமக்குத் தெரியும் – தற்போது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் பிறரின் துயரங்களில் மகிழ்ச்சி காணும் ஷாதென்ஃபராய்தெ (Schadenfreude) என்கிற மனநோயால் பீடிக்கப்பட்டவர்களைப் போல் மக்கள் மேல் ஒவ்வொரு நாளும் விதவிதமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். வரலாற்று காணாத வக்கிரங்களை மக்கள் மேல் காவி கும்பல் ஏவி விட்டுள்ள நிலையில், “எல்லையிலே இராணுவ வீரன் நிற்கையிலே.. ஏ.டி.எம் முன் வரிசையில் நிற்க உங்களுக்கு என்ன கேடு?” என்பது போன்ற ஆபாச நகைச்சுவைகளை உற்பத்தி செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

– முகில்