privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு ஆணாக நான் ஹிட்லரை ஆதரிக்கலாமா ?

ஒரு ஆணாக நான் ஹிட்லரை ஆதரிக்கலாமா ?

-

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக கடுமையாகவோ இல்லை கடுமையற்றோ எதிர்க்கும் சிலரும் “ஒரு பெண்ணாக” நான் அவரை ஆதரிக்கிறேன் என்பார்கள். இத்தகைய அபத்தமான வாக்கியத்தின் பொருளை அழகாக கூர்மையாக விமரிசிக்கிறது இப்பதிவு. ஃபேஸ்புக்கில் எழுதியவர்  Valan Antony.  அவருக்கு எமது நன்றி!

– வினவு

ரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன், ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ, அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.

இதில் அரசியல் அறியாத பெண்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல என்பது தான் வேதனை.

இங்குள்ள அனைத்து அல்லது பெரும்பாலான பெண்கள் ஜெயலலிதாவை தங்கள் ஆதர்ஷ நாயகியாக, அல்லது தாங்கள் விரும்பும் அவதார மனிதராக, மிகச் சிறந்த தைரியசாலியாக, நிர்வாகியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக முன் நிறுத்துது என்பது அவர்களின் அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்பதையும் தாண்டி,ஜெயலலிதாவின் இத்தனை ஆண்டு அராஜகத்தையும் ஆதரிக்க ஒரே பாலினமாக இருந்தால் போதும் என்ற இவர்களின் அபத்தமான வாதங்கள் கடுப்பை தான் நமக்கு தருகிறது.

ஜெயலலிதாவின் அரசியலை துளி கூட விரும்பாதவன். அவர் பெண் என்பதற்காகவே அவரை வெறுக்கும் அளவுக்கு பாலின வெறுப்போ ஆணாதிக்க சிந்தனையோ கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா ஒரு சாபக்கேடு என்ற கருத்தில் இன்று வரை மாற்றம் இல்லை.

jaya1வயதில் சிறியவர்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை கட்டாயம் காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லி அவமரியாதை செய்வது தான் ஆளுமைத் திறனா?

குடும்பம் இல்லாத ஒரு பெண். எவ்வளவு எளிமையாக வாழ்ந்து இருக்கலாம், இந்த அளவுக்கு கடுமையான ஊழல் சிக்கல்களில் மாட்டி, அவஸ்தை படுவது தான் சிறந்த நிர்வாகமா?

காவல்துறையில் எண்ணற்ற போலி என்கவுண்டர்கள், அப்பாவி மக்கள் மீதான அராஜக தாக்குதல்கள், ஏன் இன்னும் சொல்லப் போனால் பார்வை அற்றவர்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்களை காலால் எட்டி உதைத்து வெளியே அனுப்பும் மனிதாபிமானமற்ற காவல்துறையை பாராட்டுவது தான் ஆளுமைத் திறனா?

எத்தனையோ போராட்டங்கள் மதுவுக்கு எதிராக இந்த தமிழ்நாட்டில். ஆனால் அத்தனை போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு அடித்து விரட்டி ஓட விட்டது தான் நல்ல ஆட்சியாளர் என்பதன் அடையாளமா?

அணு உலைக்கு எதிரான மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து, அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கான பொய் வழக்குகளைப் போட்டதோடு, உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட, வழக்குகளை வாபஸ் பெற மாட்டேன் என்று சாமானிய மக்களை இன்று வரை வருத்தி எடுப்பவர் தான் சிறந்த ஆட்சியாளரா?

போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அலட்சியமாய் பேசியதோடு, பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், புலிகளால் உயிருக்கு ஆபத்து என்றும், விடுதலைப் புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக இருந்து, ஒரு விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப் படுத்தியவரும் தான் சிறந்த நிர்வாகியா?

சக தலைவர்களை மிகவும் கொச்சையாக அவர் பேசும் வார்த்தைகள், கேலிகள், ஏளனங்கள், புளி மூட்டை, சக்கர நாற்காலி, போன்ற பேச்சுக்கள் எல்லாம் அகங்காரத்தின் உச்சகட்டம்.

கத்தரி வெயில் கொளுத்தும் மே மாதத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அப்பாவி ஏழை எளிய மக்களை காசு கொடுத்து கூட்டி வந்து மதிய வெயிலில் நிற்க வைத்து, பல பேரின் மரணத்துக்கு காரணமாய் இருந்ததோடு, அந்த மரணங்களை மூடி மறைப்பது தான் சிறந்த நிர்வாகமா?

சென்னை பெருவெள்ளத்தின் போது, பொது மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீதான ஸ்டிக்கர் ஒட்டும் கேவலம் எல்லாம் நிர்வாகத் திறனா?

பாலின பாகுபாட்டைக் கடந்து சாமானிய மக்கள் மன நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள்.

*இப்படி ஜெயலலிதாவின் மோசமான அரசியலை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. ஆனால் அவரது மோசமான அரசியலை பேசுவது இந்த நேரத்தில் பொருத்தமாகவோ, மனிதாபிமானமாகவோ இருக்காது என்பதற்காக தான் அமைதியாக கடந்து செல்கிறோம்.*

*அவரது மோசமான, அபத்தமான அரசியலையும் தாண்டி தான், அவர் மீதான அனுதாபங்கள் இந்த நேரத்தில் இருக்க வேண்டுமே ஒழிய, அதற்காக அவரது தவறுகள் அனைத்தையும் புனிதப் படுத்தும் வேலை உங்களுக்கு தேவை அற்றது.*

அவர் சிறந்த நிர்வாகி, பெரிய மக்கள் சேவகி, மக்களுக்காகவே வாழ்பவர் போன்ற உங்கள் பசப்பு வார்த்தைகளை ஒதுக்கி வையுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள்.

ஒரு சக மனிதனாக அவர் குணம் அடைய நீங்கள் பிரார்த்திப்பது சரி, வருத்தம் தெரிவிப்பது சரி. அதற்காக அவரை ஒரு அன்னைத் தெரசாவாக, அன்னி பெசன்ட் அம்மையாராக, வாழும் மகாத்மாவாக, மனிதருள் மாணிக்கமாக முன்னிறுத்தி, கூலிக்கு மாரடிக்கும் அதிமுக அடிமைகள் போல காட்டிக் கொள்ளாதீர்கள்.

எல்லாவற்றையும் விட, அவர் ஒரு பெண் என்பதாலேயே அவர் ஆகச் சிறந்தவர் என்ற உங்களின் விளங்காத வியாக்கியானத்தை தவிருங்கள்.

மனிதாபிமானம் வேறு, ஒருவரது தவறுகளை முற்றிலும் மறைத்து அவரை புனிதப்படுத்துதல் என்பது வேறு.

____________________

– Valan Antony. 

  1. //போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அலட்சியமாய் பேசியதோடு, பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், புலிகளால் உயிருக்கு ஆபத்து என்றும், விடுதலைப் புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக இருந்து, ஒரு விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப் படுத்தியவரும் தான் சிறந்த நிர்வாகியா?………..//

    இதை எல்லாம் அவர் முன்பு சொல்லி இருக்கலாம்.. ஆனால், அதே ஜெயலலிதா தான். இலங்கை அரசிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்த பட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார். மேலும் நால்வரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததும் அவரே.

    //சக தலைவர்களை மிகவும் கொச்சையாக அவர் பேசும் வார்த்தைகள், கேலிகள், ஏளனங்கள், புளி மூட்டை, சக்கர நாற்காலி, போன்ற பேச்சுக்கள் எல்லாம் அகங்காரத்தின் உச்சகட்டம்.//

    இதை அவர் கற்றுக் கொண்டதே, தி.மு.க விடம் இருந்து தான்.. ஜெயலலிதாவை நோக்கி அவர்கள் பேசாத பேச்சு கிடையாது.

    யாரும் அவரை இங்கு புனித படுத்தவில்லை. அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் செய்த அனைத்து அராஜகங்களுக்கும் அவர் மட்டும் தான் காரணமா?

    • ///அவர் செய்த அனைத்து அராஜகங்களுக்கும் அவர் மட்டும் தான் காரணமா?///

      இல்லை, அவருக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்களும் தான் காரணம். சரியா ?

    • //*
      இதை எல்லாம் அவர் முன்பு சொல்லி இருக்கலாம்.. ஆனால், அதே ஜெயலலிதா தான். இலங்கை அரசிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்த பட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார். மேலும் நால்வரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததும் அவரே.
      *//

      2008 டிசம்பரில் போர் என்றால் மக்க்ள சாகத்தான் செய்வார்கள்.

      2009 மார்ச்சில் ஈழ ஆதரவு

      2009 ஏபரலில் பிரபாகரன் எதிரி

      2009 மே 19இல் – இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்ததின்படி தீர்வு என ராஜபக்சேவுக்கு வேண்டுகோள்

      2011 ஆகஸ்டில் போர் குற்ற விசாரணை

      2001 ஆகஸ்ட் 17 மூவரை தூக்கிலிட ஆயத்தம் செய்தது, மனிலாவில் இருந்து தூக்கு கயிறு, தூக்கிலிட ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஆள் பிடித்தது, வேலூர் சிறையில் கூடுதல் 2 தூக்கு மேடை கட்ட ஏற்பாடு

      2011 ஆகஸ்ட் 28 – செங்கொடி மரணத்தை இழிவு செய்து திமிராக பேசி விட்டு, அடுத்த நாள் துக்கிற்கு எதிராக தீர்மானம்

      2011 அக்டோபர் 28இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரை தூக்கிலிடுவதில் ஆட்சேபம் இல்லை என மனு தாக்கல்

      2014 செப்டம்பரில் ஊழலுக்கு தண்டனை வாங்க சென்ற போது விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து என கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல்

      இப்படி குரூரமாக பொய்யை மட்டுமே ஆயுதமாக கொண்டு அதிகாரம் செய்தவரை பெண் என்பதால் ஆதரிப்பது, குரூரமாக தன்மைகளை ரசித்து மகிழ்வதே ஆகும்.

    • யாரும் அவரை இங்கு புனித படுத்தவில்லை. அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் செய்த அனைத்து அராஜகங்களுக்கும் அவர் மட்டும் தான் காரணமா?

      அக்கா ரபேக்கா மேரியயும் அதுல சேத்துக்கலாமாம்

  2. இறந்து போனவரை இகழ்க்கூடாது என்பதுதான் பண்பாடு ! சரி ! ஆனால் ஏற்கெனவே முன்வைத்த விமரிசனம் அப்படியே தானே இருக்கும்! அம்மாவின் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறலாம், அவர் தப்பி தxஅறி செய்த ஒரு சிலநல்ல விஷயங்களை குறிப்பிட்டு! ஆனால் மோடியை ஆதரிக்கும் ஊடகங்கள் அவரை தெய்வமாகவே, அதிலும் பாரததாயின் தவபுதல்வியாகவே உயர்த்தும் செயலுக்கு பின்னணி என்ன? சமீப காலத்தில் அம்மாவின் வழிகாட்டுதலுக்கு எதிராகவே தமிழக அரசு செயல்பட்டதும், மத்திய அரசு தமிழக எதிர்ப்பை காவேரி விஷயத்தில் அலட்சிய படுத்திய செயலும் அம்மாவிற்கு பெருமை செர்க்கவில்லையே! ஒன்று மட்டும்நிச்சயம்! தி மு க வின் எதிரி மட்டுமல்ல அம்மா, மோடியின் பிரதமர் பதவிக்கும் போட்டியிட்டவர்தான்! அம்மாவின் மறைவிற்கும், அதே சமயத்தில், அதே அப்பொல்லொவில் அவரது ஆஸ்தான ஆலோசகர் மறைவிற்கும் தொடர்பிருக்காது எனநம்புவோமாக!

  3. அம்மாவை ஜெயிலில் போட்டு அவருக்கு இன்னும் ஒரு 20 வருடம் கழித்து வர வேண்டிய சாவை இப்போதே தேடித் தந்து புண்ணியம் கட்டிக் கொண்ட குன்ஹாவைத் தான் சொல்லவேண்டும்! பாவம் அவருக்கு அப்போது அது தெரிந்திருக்க வில்லை! அம்மா செய்தது ஊழல் தான் என்றாலும் அவரைப் போன்ற மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவரை ஜெயிலில் அடைக்காமல் வேறு ஏதேனும் ஒரு தண்டனை கொடுத்திருக்கலாம்! நம்ம நீதித்துறை வெச்சாக் குடுமி அடிச்சா மொட்டை என்று இருப்பதும்கூட இப்படிப் பட்ட நிகழ்வுகளுக்குக் காரண கர்த்தா! அம்மா இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கேனும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கலாம் தான்! செயல்களில் ஒரு முதிர்ச்சியும் தென் பட்ட மாதிரி தெரிந்தது! தமிழ் மக்களுக்கு எப்போதுமே நல்லது நடக்காது…

    ஆனால், ஒரு தலைவனை மட்டுமே நம்பி ஒரு சமூகம் எப்போதும் முன்னேற்றமடைய முடியாது!_________

    • //*
      அம்மாவை ஜெயிலில் போட்டு அவருக்கு இன்னும் ஒரு 20 வருடம் கழித்து வர வேண்டிய சாவை இப்போதே தேடித் தந்து புண்ணியம் கட்டிக் கொண்ட குன்ஹாவைத் தான் சொல்லவேண்டும்!…. அம்மா செய்தது ஊழல் தான் என்றாலும் அவரைப் போன்ற மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவரை ஜெயிலில் அடைக்காமல் வேறு ஏதேனும் ஒரு தண்டனை கொடுத்திருக்கலாம்!…
      *//

      இப்படி ஒரு அபத்தமான ஒரு கருத்தை பதிவு செய்ய இன்னும் ஆட்கள் இருக்கிரார்கள் எனபது மிகவும் வேதனை தருகிறது… ஆனால் பரவாயில்லை…நீங்கள் யார் என்பதை சரியாக காட்டீவிட்டீர்கள்… அதாவது, இப்படி சொன்னதன் மூலம்…
      //*
      இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கேனும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கலாம் தான்…
      *//

  4. இன்னும் அம்மாவுக்கு தனிநீதி கேத , இந்த மனுநீதியாளர்களைத்தவிர யாருக்கு மனம் வரும்? அன்று ‘னேருவின் மகளே வா!நிலையான ஆட்சியை தா” என்று எமெர்ஜென்சி கொடுமைகளுக்கு ஆளான பின்னரும் அறைகூவல் விடுத்து அகில இந்திய அரசியலில்நுழைந்த தி மு க வை விமரிசித்த கும்பல், இன்று வக்கிர புத்தி கொண்ட அம்மையாருக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?நாளை கருணானிதி மறைந்தாலும் இந்த அக்கிரகார கும்பல் இப்படி பேசுமா? விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதா பார்ப்பனீயம்?

  5. “பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், புலிகளால் உயிருக்கு ஆபத்து என்றும், விடுதலைப் புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக இருந்து, ஒரு விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப் படுத்தியவரும் தான் சிறந்த நிர்வாகியா?”.

    // இதே வினவு இணையதளத்தில் சில வருடங்களுக்கு முன்னால் “பிரபாகரன் எம்.ஜி.ஆர் போல அட்டைக்கத்தி வீசினார்” என்று எழுதி புலிகள் இயக்கத்தைக் கொச்சைப் படுத்தியிருந்தார்கள். —————

    ஜெயாவாவது மக்களின் நெருக்கடியில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள். நடந்தது இனப்படுகொலை என சட்டசபையில் தீர்மானம் இயற்றினார்.

    __________ மகஇகவுக்கு இப்போது என்ன புலிகளின் விடுதலைப் போராட்டம் மீது அவ்வளவு கரிசனம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க