privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !

நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !

-

ரு மோடி வித்தைக்காரனைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தின் மனநிலை என்ன? “”பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவான்” என்ற நம்பிக்கை கொஞ்சம், ”விடமாட்டான்” என்ற அவநம்பிக்கை கொஞ்சம், ”கலைந்து போனால் ரத்தம் கக்கி செத்துவிடுவாய்” என்ற மிரட்டல் காரணமாக அச்சம் கொஞ்சம், அறிவு பூர்வமான சிந்தனை என்பது மட்டும் பூச்சியம் – இதுதான் அந்தக் கூட்டத்தின் மனநிலை. செல்லாத நோட்டு அறிவிப்பு விசயத்தில் நாட்டுமக்கள் ஏறத்தாழ இந்த மனநிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

black money surgical operation_cartoon
கோப்புப் படம்

நவம்பர் 8 முதல் இதுவரை 50 க்கும் மேற்பட்ட திடீர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எந்தவித முன்யோசனையும் இல்லாமலும், தான்தோன்றித்தனமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிவிப்புகளே போதுமானவை. இருப்பினும் ஒரு முட்டாளின் உளறலுக்குப் பொழிப்புரை எழுதி, அவனைக் கவிஞன் ஆக்கிய புலவர் பெருமக்களைப் போல, கிரிமினல்தனமும் முட்டாள்தனமும் சரிவிகிதத்தில் கலந்த மோடி அரசின் இந்த நடவடிக்கையைத் “திட்டமிட்ட காய்நகர்த்தல்” என்றும், கருப்புப் பண முதலைகளைத் திணறடிக்கும் நடவடிக்கை என்றும் கொண்டாடுகின்றனர் பா.ஜ.க.வின் ஊடக கூஜாக்கள்.

மோடியின் சார்பாகப் பேசுபவர்களின் வாத முறையைக் கவனித்துப் பாருங்கள். “மோடியின் 8-ஆம் தேதி அறிவிப்பு பற்றி எங்களுக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதும் உங்களுக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. ஆனால், அவர் ஒரு திட்டத்தோடு செயல்படுகிறார். நம்புங்கள். நல்ல காலம் வருகிறது” என்கிறார்கள் மோடியின் ஆதரவாளர்கள். மோடியின் திட்டம்தான் என்ன?

2.5 இலட்சத்துக்கு மேல் கணக்கில் காட்டாத பணம் இருந்தால், அதற்கு 200% அபராதம் விதிக்கப்படும் – இது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு வந்ததற்கு மறுநாள் வந்த அறிவிப்பு. “கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் வழக்கமாக கட்டவேண்டிய 30% க்கு மேல் 20% கட்டிவிட்டால் போதும், எப்படி சம்பாதித்த பணம் என்ற கேள்வியே கேட்க மாட்டோம்” என்பது தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தம். அதாவது, “கருப்பு பணத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்று தேசவிரோத சக்திகளோடு டீல் பேசியிருக்கிறார் மோடி. அடுத்த சில நாட்களிலேயே, “ஜன் தன் திட்டத்தில் ஏழைகளின் பெயரில் பணம் போட்டால் உள்ளே தள்ளிவிடுவேன்” என்று உதார் விடுகிறார்.

puthiya-jananayagam-december-2016-bமோடியின் இந்த கேலிக்குரிய நாடகத்தை, மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. வாக்களித்தபடி வேலைவாய்ப்பையோ, தொழில் வளர்ச்சியையோ உருவாக்க முடியாமல் தோற்றுப்போன மோடி, கருப்புப் பணம் என்ற மாயமானின் பின்னால் மக்களை ஓடவிட்டிருக்கிறார். வேலைவாய்ப்பைக் குறைப்பதும், சிறு தொழில்களை அழிப்பதும், பண முதலைகளின் கையில் மென்மேலும் செல்வம் குவியுமாறு செய்வதும், ஏழைகளைப் பரம ஏழைகளாக்குவதும் எந்தக் கொள்கையோ – அதுதான் கருப்புப் பணத்தையும் உருவாக்குகிறது. அந்தக் கொள்கைதான் மோடியின் கொள்கை. சாதாரண மக்களைக் கழுத்தைப் பிடித்து வங்கிக்கும், பிளாஸ்டிக் அட்டைக்கும், கைபேசி வழியான பரிவர்த்தனைக்கும் தள்ளுவதன் மூலம், அவர்களுடைய பணத்தையும், தொழிலையும், எதிர்காலத்தையும் அம்பானி, அதானி முதலிய தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறார் மோடி.

இந்த உண்மை புரியாத காரணத்தினால், ஊமைக் குமுறலுடன் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் மக்கள். கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க