privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !

சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !

-

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நாட்டையே நிலைகுலையச் செய்துள்ள மோடி அரசு, இந்த சந்தடி சாக்கில், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கப் போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்கும் பார்ப்பன நரித்தனத்துடன் இந்தச் சூழலில் அமுல்படுத்த இருக்கிறது.

சேலம் உருக்காலையை விழுங்குவதற்கான பெரும் போட்டியில் இருக்கும் ஜிண்டால் (Jintal Steel) ஸ்டீல் நிறுவனம் சேலம் உருக்காலையை பெறப்போகும் நிறுவனம் என ஏறத்தாழ முடிவாகிவிட்டது. ஏற்கனவே, சேலத்தில் உள்ள கஞ்சமலையின் வடக்குப்பகுதியில் 638 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க ஜிண்டால் சவுத்வெஸ்ட் (JSW) நிறுவனத்துக்கு உரிமை அளித்துவிட்டது தமிழக அரசு. திருவண்ணாமலையிலும் 35 மில்லியன் டன் இரும்புத்தாது வெட்டிக்கொள்ள ஜிண்டாலுக்கு உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் வட தமிழகத்தின் முதன்மையான இரு மாவட்டங்களின் மக்களின் வாழ்வாதரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் பெருமிதம் சேலம் உருக்காலை!

salem-steel-plant
சேலம் உருக்காலை

சேலம் உருக்காலை 1970 ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய அரசின் மகா ரத்தினங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எனப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். நமது நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல், நமது ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவையான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ரூ.136 கோடி முதலீட்டில் 32,000 டன் உற்பத்தி திறனுடன் துவங்கப்பட்ட இந்த மகாரத்தினத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 8,000 கோடி ரூபாயாகும். உண்மையான இதன் மதிப்பு இந்த உத்தேச மதிப்பைவிட பல மடங்குகள் அதிகமாகும். இன்றைய இதன் உற்பத்தி திறன் 6 லட்சம் டன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில் 12 முன்னணி நிறுவனங்களில் சேலம்  உருக்காலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலையில் 2,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 5,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

உலக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தியில் சேலம் உருக்காலையின் பங்கு:

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடாகவும் இரண்டாவது அதிகமாக ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது. 2007-08 ஆண்டில் உற்பத்தி 20 லட்சம் டன். இன்று சில ஆண்டுகளாக 33 லட்சம் டன். இது உலக உற்பத்தியில் 7%. உள்நாட்டு சந்தை 17 லட்சம் டன் (Steelworld Oct 2014). இந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் பல வகைகள் உள்ளன. இதில் சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது. குறிப்பாக, விண்வெளி, அணு உலை, நாணயங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு இது முக்கியத்துவமுடையதாக உள்ளது.

உலக அளவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாடு தனிநபருக்கு 5 கிகி. ஆனால் இந்தியாவில் 2 கிகி ஆக உள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகள் தற்போதைய நிலையில் இருந்து ஆண்டுக்கு 8-9% அளவுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டை உயர்த்தக் கோரிவருகின்றனர்.

Jintal-3
சேலத்தில் கிடைக்கின்ற இரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தான் மிகவும் தரமானதாகவும் சிறப்பானதாகவும் விளங்குகிறது

அதாவது, ஸ்மார்ட் சிட்டிகள், துருப்பிடிக்காத இரயில் பெட்டிகள், பேருந்து-இரயில் நிலையங்களில் கூரைகள், கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள் போன்ற பல வடிவங்களில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பயன்படுத்துவதை உயர்த்த அரசு வகுத்துள்ள பல திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கோரிவருகின்றனர். அதனால், உலக அளவில் இந்திய சந்தை என்பது பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டதாக உள்ளது. இந்த உள்கட்டமைப்பு ‘வளர்ச்சி’த் திட்டங்கள் நாட்டில் 10% பேர் மட்டும் பயனடையும் வகையில் இருந்தாலும், இதனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SAIL-க்கு (குறிப்பாக, சேலம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுக்கு) நல்ல எதிர்காலமும் வளர்ச்சிக்கான அடிப்படையும் உள்ளது. ஆனால், அரசோ எதிர்திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த எதிர்காலத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கிறது.

சீன இரும்பை தடுக்கவும் கள்ளச் சந்தையை ஒழிக்கவும் வக்கற்ற மோடி அரசு!

அண்மை காலமாக பொத்துறை இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. சீன இரும்பு இறக்குமதியும் கள்ளச்சந்தையும் இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தாலும் சொந்த நாட்டு தேவை, ஏற்கனவே செய்துவரும் ஏற்றுமதி போக 5 கோடி டன் இரும்பை உபரியாக வைத்துள்ளது. அதனால், மலிவான விலையில் சீன இரும்புப் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சீனாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க இறக்குமதி வரியை 7.5%லிருந்து 15%ஆக உயர்த்து போன்ற பல கோரிக்கைகளை வைத்துள்ளன இந்தியாவின் இரும்புப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள். சீன எதிர்ப்புப் பேசியே ஆட்சியைத் தக்கவைத்துவரும் மோடி அரசோ, இதனை செய்வதற்கு துப்பில்லை.

பொதுத்துறை சேர்ந்த உருக்காலைகள் நட்டத்தில் இயங்குவதற்கு மற்றொரு காரணம் கள்ளச்சந்தை வியாபாரம். இந்திய தொழில்முறை ஒழுங்கு ஆணையத்தின் (Competition Commission Of India) விதிகளின் படி ஒரு டன் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பொருட்களின் விலை ரூ.90,000க்கு குறைவாக விற்கக்கூடாது. ஆனால், கள்ளச்சந்தையில் ரூ.70,000-க்கு கூட விற்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் தரமான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஒரு டன்னுக்கு 1.35 லட்சத்திலிருந்து 1.65 லட்சம் ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனம் என்பதால் அதனால் விதிகளின்படி நேர்மையாகத்தான் விற்பனையைச் செய்ய முடியும். ஆனால், டன்னுக்கு இருபதாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து பலரும் சேலம் உருக்காலையிடம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. முக்கியமாக இதனால் ஒட்டுமொத்த இரும்பு உற்பத்தித் துறைக்கே நெருக்கடி இருந்தாலும் பொதுத்துறைகள் தான் வேகமாக நட்டமடைகின்றன. இது, தனியார்மயமாக்கத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இதனால், மோடி அரசு கள்ளச் சந்தையையும் தடுக்கவில்லை அல்லது மோடி அரசுக்கு கள்ளச் சந்தையை தடுக்க வக்கில்லை.

நட்டம்: தனியார்மயமாக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி!

Jintal-1சேலம் உருக்காலை மிக லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, 2003 முதல் 2010 வரை சராசரியாக ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் லாபமீட்டி வந்தது.

2010-ம் ஆண்டில் புதிய எஃகு உற்பத்தி கூடம் அமைக்க ரூ.2,000 கோடி கடன் வாங்கியது. அதற்கு வட்டி மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.650 கோடி ரூபாய் கட்டியுள்ளது. மல்லையா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் வட்டியைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றி வரும் இந்த காலத்தில், பொதுத்துறை நிறுவமனாக இருப்பதால்தான் இந்த வட்டித்தொகையைக் கட்டியுள்ளது.

இப்படி சிறப்பாக இலாப மீட்டிய இவ்வாலையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்ட பின்னர், பல சதிச்செயல்கள் மூலம் நட்டக் கணக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேலத்தில் இயங்கி வந்த உருக்காலையின் மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. இதனால் விற்பனைத் துறை முற்றிலும் முடங்கிப்போனது. இதன் வாடிக்கையாளர் நிறுவனங்களின் எண்ணிக்கை 70-லிருந்து படிப்படியாக குறைந்து வெறும் 9 நிறுவனங்கள் என்ற அளவிற்கு சரிந்தது. ஆக, நூறு கோடி லாபமீட்டிய ஆலை ரூ.450 கோடி நட்டத்தில் இயங்குகிறது.

விற்பனை மையத்தை கொல்கத்தாவுக்கு மாற்றியதால் மார்கெட்டிங் செய்ய முடியாமல் போகும் என்பது அரசுக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும். தலைமையகத்தை வேறு தூரமான மாநிலங்களுக்கு மாற்றி நிர்வாகத்தை முடக்கி சீர்குலைப்பதை ஆளுகின்ற பா.ஜ.க அரசு ஒரு புதிய தந்திரமாக கடைபிடிக்கிறது.

இதற்கு மற்றொரு உதாரணம், சென்னை கிண்டியில் இயங்கி வரும் சிப்பெட் (மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனத்தின் தலைமையகத்தை உப்புக்குபெறாத காரணத்தைச் சொல்லி டெல்லிக்கு மாற்ற மோடி அரசு முயற்சித்தது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்புக்குபின் அம்முடிவைக் கைவிட்டது. ஆகையால், தனியார்மயமாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காகவே நட்டமாக்கும் சதியை திட்டமிட்டு செய்துவருகிறது, மோடி அரசு.

நட்டமடையும் நிறுவனமா, சேலம் உருக்காலை?

slideநட்டமடைந்து வருவதால்தான் தனியார்மயமாக்குவதாக மோடி அரசு சொல்வது அப்பட்டமான பொய். சேலம் உருக்காலை கடந்த ஐந்து வருடங்களாகத்தான் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், 1997-ம் ஆண்டு முதலே ஆலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்து வந்துள்ளது. இந்த நட்டமும் கூட அரசு திட்டமிட்டே உருவாக்கியதுதான்.

சேலம் உருக்காலையில் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும் கூட ஐந்து வருடமாக தொடர்ந்து  நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறது. சேலம் உருக்காலையின் மொத்த நட்டம் ரூ.348 கோடிகளாகும். அது செயில் நிறுவனத்தின் மொத்தக்கடனான ரூ.4,137 கோடியில் வெறும் 8% மட்டுமே. ஆக, இந்த நட்டம் என்பது ஒரு வார்த்தை ஜாலமே தவிர தொழில்முறையில் ஈடு செய்ய இயலாத வீழ்ச்சியோ முடக்கமோ அல்ல.

நமது நாட்டின் நாணய அச்சடிப்புக்கு தேவையான ஸ்டீல் தகடுகளை சேலம் உருக்காலைதான் உற்பத்தி செய்து அளித்து வந்தது. காங்கிரசின் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நாணயத்துக்கு 10,000 டன் அளவு இங்கேயே உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கூட இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள ராயல் மிண்ட் எனும் நிறுவனத்திடம் ஸ்டீல் தகடுகளுக்கு ஆர்டர் அளித்தது. பின்னாளில் அந்த நிறுவனம் காலதாமதமாக சப்ளை செய்து அரசுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, நமது நாட்டில் உற்பத்தியாகும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலை அரசின் துறைகளுக்கு கூட பயன்படுத்தாமல் நமது நாட்டின் தேவையில் 55%ஐ சீனாவிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது அரசு.

இப்படிப்பட்ட பல கழுத்தறுப்புகளுக்கு மத்தியிலும் 2010-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் லாபத்தில் இயங்கியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“நட்டத்தில்” இயங்கும் கம்பெனியை வாங்க கார்ப்பரேட்டுகள் துடிப்பது ஏன்?

நட்டமாகும் கம்பெனியை வாங்க ஏன் ஜிண்டால் துடியாய் துடிக்கிறது? கார்ப்பரேட் முதலாளிகள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை. இதற்கான காரணம் ஒன்றும் புரிந்து கொள்ள கடினமானதல்ல. இந்த நட்டக்கணக்கு என்பதே தனியார்மயமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி என்பதால், சொல்லப்படும் இந்தக் காரணங்களை நீக்கும் போது அபரிமிதமான இலாபத்தை கார்ப்பரேட் கம்பெனிகளால் குவிக்க முடியும். மேலும், ஒரு பொதுத்துறை நிறுவனம் என்கின்ற முறையில் மேற்கொண்டுவரும் குறைந்தபட்ச தொழிலாளர் பாதுகாப்பு – சமூகப் பங்களிப்பு எதையும் இந்தக் கார்ப்பரேட் கம்பெனிகள் செய்யப் போவதில்லை என்பதால் மேலும் பல கோடி இலாபமீட்ட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளை கவர்ந்திழுப்பது சேலம் உருக்காலையின் சொத்துக்கள். நிலம் மட்டும் சுமார் 24,000 ஏக்கர். இவையன்றி உள்கட்டமைப்பு, இயந்திரம், நிர்வாகம் போன்றவை. கஞ்சமலையின் தாதுவளம். கஞ்சமலையின் இரும்புத்தாது 30% முதல் 45% இரும்புச்செறிவு மிக்கது.

2010-ம் ஆண்டில் தான் ரூ.2,000 கோடி கடன் வாங்கப்பட்டு ஆலையில் தாதுவிலிருந்து இரும்பு பிரித்தெடுக்கும் புதிய (Steel Smelting Shop) யூனிட்டும், ஸ்டீலை கடினப்படுத்துதல் மற்றும் வேதியல்முறை தரப்படுத்தும் யூனிட்டும் (Annealing & Pikling Plant) அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு கிடைக்கும்.

சாஜன் ஜிண்டால்
சாஜன் ஜிண்டால்

இதுமட்டுமல்ல, சேலம் உருக்காலையை இந்தக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது சொந்தப் பணத்தைக் கொண்டா வாங்கப் போகிறார்கள்? பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கித்தான் வாங்கப் போகிறார்கள். கிட்டத்தட்ட பூஜ்ஜிய முதலீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மக்களின் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு போய்விடும்.

இந்தியாவில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் தரமான பொருட்களுக்குப் பேர் போன சேலம் உருக்காலையை வாங்குவதன் மூலம் ஜிண்டால் இரும்பு உற்பத்தியில் தனிப்பெரும் ஆதிக்கம் புரியும் நிறுவமனாக மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்திய அரசு செய்ய இருக்கும் ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்கு தேவையான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலை சப்ளை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் நிர்மாணத்தில் ஆதிக்கம் செய்ய முடியும் என்பதுதான் முக்கியக் காரணம்.

அனைத்தும் கார்ப்பரேட்மயம்!

தனது இரத்தம், நரம்பு, மூளை என அனைத்திலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைத்தனத்தில் ஊறிப்போயுள்ள மோடியும் அவரது அரசும் நட்டத்தில் இயங்குவதால்தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கிறோம் எனக்கூறும் வாதமே மோசடியானது, அயோக்கியத்தனமானது.

  1. மத்திய அரசு நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டும் விற்பனை செய்வதில்லை. லாபகரமாக இயங்கும் நிறுவனங்களின் பங்குகளையும்தான் விற்கிறது அல்லது விற்க தயாராய் இருக்கிறது. லாபத்தில் இயங்கும் நெய்வேலி என்.எல்.சி.-யின் பத்து சதவீத பங்குகளை மத்திய அரசு விற்றது அதனடிப்படையில்தான். மிக லாபகரமாக இயங்கும் எல்.ஐ.சி.-யின் பங்குகளைக்கூட விற்பனை செய்யப்போவதாக மோடி அரசு பேசி வருகிறது.
  2. அரசு தொழில்களை நடத்தக்கூடாது / எந்தவித சேவையையும் (கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்கல் போன்றவை) வழங்கக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணையும் அதுவே.
  3. அரசால் நடத்த முடியாத அல்லது நட்டமடையும் நிறுவனங்களை தனியாருக்கு விற்ற பின்பு மட்டும் லாபகரமாக இயங்குகின்றன. இது எப்படி சாத்தியமாகியது? திறன் மிகுந்த ஆட்சியாளர்களாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு தொழில் நிறுவனத்தைக்கூட நடத்தக் கூட திறமையற்றவர்கள், வக்கற்றவர்கள் என்பது அவர்கள் செயலின் மூலம் அவர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை.
  4. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது அல்லது தனியார்மயமாக்குவதன் வாயிலாக திரட்டப்படுவதாக கூறப்படும் நிதியின் அளவு சொற்பமே.
  5. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்று திரட்டப்படும் சில நூறு கோடிகள் நிதியின் மூலம் அப்படி என்ன வசதிகளை நாட்டில் மேம்படுத்திவிட்டதாக அரசு கூறுகிறது? எடுத்துக்காட்டாக என்.எல்.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து தமிழக அரசே அந்த பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்றதன் மூலமாக கிடைத்த 500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு என்ன செய்தது?
  6. “அரசுக்கு கடுமையான நிதிச்சுமை, நிதிப்பற்றாக்குறை. எனவே, பொதுத்துறைகளை விற்று நிதி திரட்டுகிறோம்” என சொல்கின்றது அரசு. ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் வசூலிக்காமல் விட்டுவைத்துள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பல துறைகளில் வரிச்சலுகை அளித்துள்ளது; விதித்த வரிப் பணத்தையும் தள்ளுபடி செய்தும் வந்துள்ளது. இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 35 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளின் கடனை வாராக்கடனாக விட்டுவைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் போது, எப்படி கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் இவ்வாறு செய்ய முடிகிறது? ஆகையால், நிதிச்சுமையால் பொதுத்துறைகளை விற்பதாக சொல்வது அப்பட்டமான பொய்.
  7. சில எம்.எல்.ஏ., எம்.பி.களின் ஊழல் கணக்கே பல ஆயிரம் கோடிகள் என்று அம்பலமாகி வருகின்றன. கருப்புப் பணம் என்ற வகையில் குவிந்துள்ள தொகை பல லட்சம் கோடிகளாக உள்ளன. அவற்றுடன் சேலம் உருக்காலையின் நட்டத் தொகை என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் அது ஒரு பொருட்டே அல்ல. அதனால், பொதுத்துறை நட்டத்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நெருக்கடி என்பது மோசடி.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து நட்டமாகி நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, அதனை ஈடுகட்ட பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, அந்த வருவாயைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுத்து… இதுதான் அரசின் கொள்கையும் செயல்பாடும். இதற்காக சொல்லப்படும் காரணங்கள் தான் நட்டம், நிதி தட்டுப்பாடு போன்றவை.

அழிக்கப்பட இருக்கும் கஞ்சமலை ! சூறையாடப்பட இருக்கும் இயற்கைவளம் ! நாசமாகப் போகிறது சேலம் மக்களின் வாழ்க்கை !

சேலம் கஞ்சமலை
சேலம் கஞ்சமலை

விலைமதிக்க முடியாத இரும்புத்தாது இருக்கும் கஞ்சமலை என்பது இன்று நேற்றல்ல, வரலாற்றில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களால் புகழ்பெற்றது. பல சித்தர்களால் பாடப்பெற்றது. இயற்கை மூலிகைகளில் பிறப்பிடமாகத் திகழ்வது. திருவண்ணாமலையில் கவுத்தி வேடியப்பன் மலையைப் போல அது சிறப்பு மிக்கது. அம்மலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரமானது. ஆனால், இந்த மலையடிவாரத்தைத்தான் ஜிண்டால் ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து ஒரு லட்சம் டன் இரும்புத்தாதை வெட்டியெடுக்கப் போகிறது. சுமார் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த மலை முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் சேலம்-வீரபாண்டி-தாரமங்களம்-இளம்பிள்ளை ஆகிய சிறு நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள், மக்களின் சுற்றுச்சூழல் அழிக்கப்படும். பருவ காற்றின் பலன்கள் குறைந்துவிடும். இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட்டு அதன் கழிவுகள் பல லட்சம் டன் அளவில் சுற்றியுள்ள கிராமங்களில் கொட்டப்படும். சுற்றுச்சூழல் நாசமாக்கப்பட்டு மக்கள் வாழ வகையற்றதாக்கப்படும். பாலைவனமாக்கப்படும்.

இது நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவின் ஒரு பகுதி. நாட்டின் 10% பேர் மட்டுமே உள்ள மேட்டுக்குடி பணக்காரர்கள் வாழ்வதற்காக ஒட்டுமொத்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இது கொடுமை! இது அநீதி! தாதுமணல் கொள்ளையால் கடலோர மாவட்ட மக்கள் தங்களது வாழ்வை இழந்துள்ளனர்; ஆற்று மணல் கொள்ளையால் பல ஆறுகள் வறண்டுபோய் குடிநீருக்காக தமிழகமே தவிக்கிறது; கிரானைட் கொள்ளையால் மதுரை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் இயற்கை சூழலே அழிக்கப்பட்டு காட்டு யானைகள் நகரங்களைத் தாக்கி வருகின்றன. ஆகையால், இயற்கையை அழிக்கும் இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களை நாம் விரட்டியடிக்காமல் நமது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.

அடிமைத்தனமா, சுதந்திரமா?

ஒரு பொதுத்துறை நிறுவனம்; ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தில் நிற்கும் நிறுவனம்; மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் உயர்ந்த நிறுவனம்; தமிழகத்தின் பெருமிதத்தின் அடையாளம் போன்ற காரணங்களுக்காக சேலம் உருக்காலை தனியார்மயமாவதை எதிர்ப்பதைத் தாண்டி மற்றொரு காரணமும் இருக்கிறது.

பொதுத்துறை தனியாரமயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்த்தல், ஸ்மார்ட் சிட்டி என்ற பல்வேறு பெயர்களில் இந்த நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாடுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ‘விலை’ கொடுத்து வாங்கியவன் என்ற வகையில் கார்ப்பரேட் முதலாளிகள், இந்தச் சொத்துகள் மீது ஆளும் உரிமையைப் பெற்றுவிடுகிறார்கள். அதனால், பஸ்தர் காடுகளின் பழங்குடிகளும், சென்னையில் வாழும் சேரி வாழ் மக்களும், கவுத்தி வேடியப்பன் மலையைச் சார்ந்து வாழும் மக்களும், தாதுவளம் மிக்க சேலத்து மக்களும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்களில் உள்ள மக்களும், மீத்தேன் திட்டம் கொண்டுவரப்படும் தஞ்சை டெல்டாவைச் சேர்ந்த மக்களும் மண்ணின் மக்கள் என்ற உரிமையை இழந்துவிடுகிறார்கள்.

வெள்ளையர்களிடம் வாங்கிய கடனுக்காக சில பாளையங்களில் வரிவசூலித்துக் கொள்ளும் உரிமையை வெள்ளையருக்கு விற்றான், ஆர்க்காடு நவாப். அதன் மூலம் கலெக்டர்களை வைத்து ஆளும் உரிமையாகவே அதனை வரித்துக் கொண்டானர் வெள்ளையர்கள். மண்ணின் மைந்தர்களாக கோடான கோடி உழைக்கும் மக்களை அடிமைகள் என்றனர். அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையே அடிமையாக்கினர். அது கடந்த கால  வரலாறு மட்டுமல்ல. தனியார்மயம் என்ற போர்வையில் நடப்பதும் அதுதான்.

அன்று வெள்ளையர்கள் இருந்த இடத்தில் இன்று கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகள்; அன்று, நவாப் இருந்த இடத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ்.-மோடி கும்பல்; அன்றும் இன்றும் உழைக்கும் மக்கள் அதே இடத்தில் தான் இருக்கிறோம். நமது பிரச்சனை நமது வாழ்வாதாரம் நிலைக்குமா நிலைக்காதா என்பது மட்டுமல்ல, நமது உரிமை நிலைக்குமா நிலைக்காதா என்பதும்தான்.

மீண்டும் வெள்ளையர்கள் ஆட்சியைப் போன்ற ஒரு அடிமை நிலைக்கு நாம் தள்ளப்படாமல் தடுக்க வேண்டுமெனில், விடுதலை உணர்வுடன் போராட வேண்டும். அதன் மூலம்தான் சேலம் உருக்காலை தனியார்மயமாவதைத் தடுக்க முடியும்; கஞ்ச மலையை மீட்கமுடியும். அதன் மூலம்தான் நமது உரிமைகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பையும் அதனை தலைமைதாங்கி வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்.-மோடி கும்பலையும் இந்த சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியும். களமிறங்க ஒன்றிணைவோம்!

சேலம் உருக்காலையை விழுங்க வருகிற ஜிண்டாலை விரட்டியடிப்போம் !
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம் !

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க