privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமின்சாரம் வேண்டுமா ? மக்கள் அதிகாரமே தீர்வு !

மின்சாரம் வேண்டுமா ? மக்கள் அதிகாரமே தீர்வு !

-

பிணந்திண்ணிகளாய் மின்வாரியம்! மிருக சாட்சிகளாய் காக்கிப் போலீசு !
மக்கள் அதிகாரமே தீர்வு! நிரூபித்துக் காட்டிய மக்கள்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடியது வார்தா புயல். ஏற்கனவே கடந்த ஆண்டு மழைவெள்ளத்தின் போது செயலற்றுக் கிடந்த தமிழக அரசு, வர்தா புயல் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என முன் கூட்டியே தெரிந்தும் எவ்வித முன் எச்சரிக்கை, முன்ஏற்பாடுகளையும் செய்யாமல் அரசாங்கமும் அதிகாரிகளும் அம்மா’வின் சமாதியைச் சுற்றி வந்தனர். முறிந்து கிடந்த பல ஆயிரம் மரங்களில் பெரும் பகுதியை மக்களே வெட்டி அப்புறப்படுத்தினர். காக்கிப்போலீசு போட்டசட்டை கசங்காமல் வேடிக்கைப் பார்த்து நின்றனர். சென்னையின் புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் மராமத்து நடவடிக்கை முற்றிலும் முடங்கிப் போய் கிடந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு சரி செய்யப்படாமல் இருளில் மூழ்கிக் கிடந்தது. திருநின்றவூரை ஒட்டிய பாக்கம் வரையிலான பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

வர்தா புயலின் சேதங்களை சரி செய்யும் பு.மா.இ.மு தோழர்கள் ( கோப்புப் படம் )
வர்தா புயலின் சேதங்களை சரி செய்யும் பு.மா.இ.மு தோழர்கள் (கோப்புப் படம்)

திருநின்றவூர் நாசிக் நகர், ஸ்ரீபதிநகர், குமரன் நகர்,சீனிவாச நகர், சம்பந்தம் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை சரி செய்ய மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பகுதியில் வாழும் மக்கள் அதிகாரம் சென்னை மண்டல உறுப்பினர் தோழர் எழில்மாறன் பகுதிமக்களை அழைத்துப்பேசி மின்வாரியத்தில் புகார் அளித்தார். அதன் பின்னும் நடவடிக்கை ஏதும் இல்லை. மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு பலமுறை முறை தொடர்பு கொண்டபோதும் அவர் போனை எடுக்கவே இல்லை. இந்த நிலையில் பகுதி மக்களை இணைத்துக்கொண்டு தோழர்.எழில்மாறன் வீடு வீடாகச் சென்று “ வீதியில் இறங்கிப் போராடாமல் மின்சாரம் கிடைக்காது” என்பதை வலியுறுத்தியும் உணர்வூட்டியும் பேசினார்.

இந்த நிலையில் நாசிக் நகர் பகுதி மக்கள் 17.12.2016 மாலை ஆறு மணி அளவில் பெரிய பாளையம் சாலையை மறித்து போராட்டத்தில் இறங்கி தோழர் எழில்மாறனை வழி நடத்த அழைத்தனர். இப்பிரச்சினைக்கு காரணமே தோற்றுப் போன , எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக்கட்டமைப்பை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு முன்னணியில் நின்று போராட்டத்தை வழிநடத்தினார். மக்களும் ஆர்ப்பரித்து முழக்கமிட்டு சாலையை முடக்கினர். அரைமணி நேரம் கழித்து கடுப்புடன் வந்த போலீசு “கலைந்து போங்க, EB-யில பேசலாம், எல்லா இடத்துலேயும் பிரச்சினையா இருக்கு,அவங்க என்னதான் செய்வாங்க” என மின்வாரியத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசி போராட்டத்தை கலைக்க முயன்றது. இதை ஏற்க மறுத்த மக்கள் மின்சாரம் வராமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம், மின்வாரிய அதிகாரிகளை இங்கே வரச்சொல் என உறுதியாகச் சொல்லி சாலையிலே அமர்ந்தனர்.
உடனே தள்ளிப்போய் நின்று போனில் யாரிடமோ பேசிவிட்டு வந்த போலீசு “நாளை காலை 11 மணிக்கு கரண்ட் வந்துவிடும், கலைந்து போங்க” என்று மிரட்டிப் பார்த்தது போலீசு. மிரட்டலுக்கு அஞ்சாமல் மக்கள் உறுதியுடன் போராடினர். போலீசுக்கும் மக்களுக்குமான வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பகுதியில் மின்சாரம் வந்துவிட்டது. மக்களின் போராட்டத்திற்கு பணிந்த மின்வாரியம் மையத்தொகுப்பில் இருந்து நேரடியாக மின்சாரத்தை வழங்கியது. மற்றொரு பகுதியில் மின் கம்பங்கள் முறிந்து கிடந்ததால் மறு நாள் காலை அவகாசம் கேட்டது மின்வாரியம். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் “நாளை காலை 11 மணிக்கு கரண்ட் வரவில்லை என்றால் 11.30 மணிக்கு சாலை மறியல் இங்கு நடக்கும்” என எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

வர்தா புயலின் சேதங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் மீனவர்கள் (கோப்புப் படம்)
வர்தா புயலின் சேதங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் மீனவர்கள் (கோப்புப் படம்)

5 நாட்களாகமின்சாரம் இன்றி கொசுக்கடியில் தண்ணீர் கூட இல்லாமல் கேட்பாரற்று கிடந்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடிய ஒரு மணி நேரத்தில் தங்கள் அதிகாரத்திற்கு போலீசையும் மின்வாரியத்தையும் பணிய வைத்து தங்களின் உத்தரவை நிறைவேற்ற வைத்தனர். மறுநாள் காலையிலும் மக்கள் விடுத்த கெடுவிற்கு பயந்து 10.30 மணிக்கெல்லாம் மின்சாரத்தை வழங்கியது மின்வாரியம். மறுநாள் 18.12.2016 அன்று சரியாக காலை 11 மணியளவில் ஸ்ரீபதிநகர், குமரன் நகர், சீனிவாசநகர், சம்பந்தம் நகர் ஆகிய பகுதிகளைச் செர்ந்த மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக தோழர்.எழில்மாறனை அழைத்துக்கொண்டு அதே பெரியபாளையம் சாலையை மறித்தனர்.

தோழர் எழில்மாறன் முழக்கமிட்டதை உற்சாகமாக மக்கள் கேட்டு முழக்கமிட்டனர்.“ கரண்டு இல்லை,தண்ணீர் இல்லை, டாஸ்மாக் தண்ணீர் மட்டும் ஆறாக ஓடுது” என்ற முழக்கத்திற்கு மக்கள் எழுந்து நின்று கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரித்தனர். இதைக் கண்டு பீதியடைந்த போலீசு மக்கள் அதிகாரம் தோழர்கள்தான் வழி நடத்துகிறார்கள் என்று அறிந்து “ நீதான் நேற்றும் மக்களை தூண்டிவிட்டு ரோட்ட மறிக்குறே, இனைக்கும் ரோட்ட மறிக்குறே, இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, உன்னை கைது செய்வேன்” என்று அநாகரீகமாக மிரட்டி தோழர் எழில்மாறனை இழுத்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரை மக்கள் சூழ்ந்து கொண்டு “ அவரை எப்படி லூசுன்னு சொல்லுவே, நீ தான்யா லூசு, இங்கு நீ எதுக்கு வந்தாய், EB காரனை வரசொல்லு, தப்பு பண்ணது அவன், EB காரனால தான் ரோட்டை மறிச்சோம், அவந்தான் சட்டம் ஒழுங்கை கெடுத்தவன் அவனைப் போய் அரெஸ்ட் பண்ணு” என்று தோழர் எழில்மாறனை மக்களிடமிருந்து பிரிக்கவிடாமல் தடுத்தனர்.

காட்சிகள் மாறின. எத்தனையோ முறை போன் செய்த போதும் எடுக்காத உதவிப் பொறியாளர் ஓடி வந்தார்.தோழர் எழில்மாறனின் கையைப் பிடித்துக் கொண்டு “இன்று மாலை 6 மணிக்கு கரண்ட் வந்துவிடும்” என்று கெஞ்சினார். இன்று மாலை 6 மணிக்குள் மின்சாரம் வராவிட்டால் மீண்டும் சாலையை மறிப்போம் போராட்டம் தொடரும் எச்சரிக்கை செய்துவிட்டு மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கினர். சரியாக 6 மணிக்கு முன்னரே மின்சாரம் வந்தது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது வீதியில் இறங்கிப் போராடுவதில்தான் உள்ளது என்பதை மக்களின் போராட்டம் நிரூபித்துக் காட்டியது. போலீசு சொன்னது போல மக்களை போராடத் தூண்டிய தோழர் எழில்மாறனின் வயதோ 67. தன் உடலில் உள்ள பல்வேறு உபாதைகளையும் பொருட்படுத்தாமல் துடிப்போடு போராடும் இளைஞரான அவருக்கு பகுதி மக்களின் பாசமும் பாராட்டுக்களும் மலை போல குவிகின்றன. தோழரின் வீட்டுக்கே வந்து மக்கள் தங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பகுதியில் நடந்து செல்லும் போது இதுவரை பார்த்திராதவர்கள் எல்லாம் பார்த்துப் பேசுவதும், பேசிராதவர்களெல்லாம் பெண்கள் உட்பட கைக்கொடுத்து பேசுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்போதும் வெளிநாட்டில் பணி புரியும் இப்பகுதியைச் சார்ந்த ஒரு இளைஞர் இங்கு இருக்கும் போது 5 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து இருக்கிறார். போராட்டத்திற்கு தோழர் எழில்மாறன் தலைமை தாங்கியதை கேள்விப்பட்டு நேரம் கூட பார்க்காமல் இரவில் வந்து வாழ்த்திவிட்டுப்போனார். சாலையில் நடந்து செல்லும் போது போதையில் கிடந்த ஒருவர் தோழரை “ உங்களை போலீசு லூசுன்னு சொன்னான், நான் திருப்பி நீ தாண்டா லூசுன்னு திட்டுனேன்” என்று கூறியவரிடம் “எல்லாம் சரிதான் தண்ணி அடிப்பதை கொஞ்சம் நிறுத்துங்களேன் ” என்றிருக்கிறார். அவர் மீண்டும் அடுத்த நாள் நிதானமான நிலையில் வீட்டிற்கு வந்து இனிமேல் நான் குடிக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளார். பள்ளி மாணவர்கள் “அடுத்த போராட்டம் எப்ப தாத்தா, நாங்க தயார்” என்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். போராட்டம்தான் மகிழ்ச்சி என்ற மார்க்சின் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்தது இச்சம்பவம்.

புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களைவிட தரமற்று பராமரிப்பு இன்றி கிடந்த மின்கம்பங்களே அதிகம் முறிந்துள்ளன. புதிய மின்கம்பங்களை மக்களே தங்கள் சொந்த செலவில் வாங்கி மாட்டு வண்டியில் அவற்றைத் எடுத்துச் சென்று நட்டனர். மின்கம்பங்களை ஊன்ற தற்காலிகமாக வந்திருந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கும் உணவினை மக்கள் தான் கொடுத்தனர்.

மின்வாரியமோ, அரசோ எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் புயல்பாதிப்பை பயன்படுத்தி எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்று லஞ்சம் கொடுக்கும் இடங்களுக்கு முதலில் மின்சாரம் வழங்குது என கூச்ச நாச்சமின்றி செயல்படுகிறது. தேர்தலுக்காக ஓட்டுகேட்டு வந்த பலரும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வராமல் மின்வாரியத்துக்கு லஞ்சம் வாங்கித்தரும் புரோக்கர்களாக செயல்பட்டனர். நம்மை ஆளும் தகுதியை அரசு இழந்துவிட்டது, தான் செய்ய வேண்டிய கடமையை செய்ய முடியாமல் தோறுப் போய்விட்டது, மக்களின் வரிப்பணத்திற்கு வேலை செய்யாமல் லஞ்சப்பணத்திற்கு வேலை செய்து மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. இனியும் இந்த அரசுக்கட்டமைப்பை நம்பிப் பலனில்லை.

மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் நிரூபித்துள்ள போராட்டம் இது !

( ஸ்ரீபதி நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை, 91768 01656.