privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !

தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !

-

வெளிநாடு அனுப்புவதாகக்கூறி  தருமபுரி  மக்களை  ஏமாற்றி  பலகோடி  கொள்ளையடித்த  குறும்பட்டி  திருட்டுக்  கும்பல்  முத்துமணி – நாகப்பன்   தம்பதியின்   சொத்துக்களை  பறிமுதல்   செய்வோம்!   என்கிற  முழக்கத்தின்  கீழ்  மக்கள்  அதிகாரம்  சார்பாக   தருமபுரியில்  22.12.2016  அன்று நடந்த  சாலைமறியல்!

குடும்பத்தை நகர்த்த முடியாத ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த சிலர், நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் வெளிநாடு சென்றாவது சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி மோசடி மூலமாக பணத்தை சுருட்ட திட்டமிட்டனர், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் குறும்பட்டியை சேர்ந்த முத்துமணி – நாகப்பன்  தம்பதியினர்.  இவர்கள் 60- க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றி சுருட்டியுள்ளனர். உள்ளுர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பலரும் ஏமாந்து பணத்தை கொடுத்துள்ளனர்.

தருமபுரியில்  நல்லம்பள்ளி, பி. அக்ராகாரம் பகுதியைச் சுற்றியுள்ள  கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் சிறுக சிறுக  சேர்த்த  பணத்தையும், வட்டிக்கு  கடன்  வாங்கிய பணத்தையும்  வெளிநாட்டுக்கு  அனுப்பும்  ஏஜென்டுகள் என்ற கொள்ளை கூட்டத்திடம் பறிக்கொடுத்துவிட்டு பறிதவித்து நிற்கின்றனர்.  இந்த ஏஜென்டுகளில் முக்கியமான புள்ளி,  நல்லம்பள்ளி வட்டம்  குறும்பட்டி  கிராமத்தில்   உள்ள  நாகப்பன், அவனுடைய மனைவி  முத்துமணி மற்றும் பத்மகுமார்  ஆகியோர்.

DPI Road (3)இவர்கள் கூட்டு சேர்ந்து  ஒரு நபருக்கு  2 லட்சம் முதல்  3 லட்சம் வரை பெற்று கடந்த மே மாதம் 60 பேரை  டெல்லிக்கு அழைத்துச்சென்றானர். அங்கு சென்றவுடன் அஜய் குமார் என்வரிடம்  தொகையை  ஒப்படைத்து விட்டேன், அவர் இங்கு வருவதாக கூறிவிட்டு இப்போது  வரமுடியாது  எனக்கூறி  விட்டார், நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கையை விரித்து விட்டனர்.  அந்த 60 பேரும் செய்வதறியாமல்  நிலை குலைந்து போய்  வீடு திரும்பினர். இந்த தகவலை வீட்டிலும் சொல்ல முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் சிவன் என்பவர்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஏற்கனவே பார்த்து வந்த வேலையையும்  இழந்து  பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர். பிறகு டெல்லியில் இருந்து சென்னை வந்து, போலீசு கமிஷனரை சந்தித்து மனுக் கொடுத்தனர். பிறகு தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையம்,பொருளாதார  குற்றப்பிரிவு காவல் நிலையம், கலெக்டர், எஸ்.பி,   மீண்டும் அதியமான் கோட்டை போலீசு நிலையம்  என ஒவ்வொரு அதிகாரியையும் மூன்று , நான்கு சுற்று பார்த்தாகி விட்டது. ஆனால்  நாகப்பன்  முத்துமணியிடமிருந்து பணம் வந்த  பாடில்லை. இன்னும் எத்தனை முறை சுற்றினாலும் நீதிகிடைக்காது, பணமும்  கிடைக்காது என்று அனுபவத்தில் உணர்ந்த மக்கள், வீதியில் இறங்கினால்தான்  நீதியை  நிலை நாட்ட முடியும் என்று மக்கள் அதிகாரத்தை  நாடினர்.

பிறகு மக்கள் அதிகாரம் சார்பாக இத்திருட்டுக் கும்பலை அம்பலப்படுத்தி ஆயிரகணக்கான பிரசுரம் போட்டு, நூற்றுக்கணக்கான சுவரொட்டி  ஒட்டியும்  22.12.2016  அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தனிநபரை அம்பலப்படுத்தி பேசுவதால் அனுமதி கொடுக்க முடியாது என்று மறுத்து இக்கொள்ளை கூட்டத்திற்கு துணை போனது போலீசு. பாதிக்கப்பட்ட மக்கள் தடையை மீறி போராட வரமாட்டார்கள் அதனால் தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டு செல்வது என முடிவு செய்தோம். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று இருந்து போலீசார் இரண்டு தோழர்களை இழுத்து சென்று கைது செய்தனர்.  இதனை  பார்த்த அப்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுடன் சேர்ந்து தோழர்களை விடுதலை செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுதர கோரியும் மக்களோடு கைகோர்த்து  திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற  இந்த  மறியலுக்கு  மக்கள்  அதிகாரம்   தருமபுரி  மண்டல  ஒருங்கிணைப்பாளர்  தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அப்போது பணமோசடி செய்த இத்திருட்டுக்கும்பலை அம்பலப்படுத்தி  முழக்கமிட்டதும்  நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். உடன் மக்களை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியது போலீசு. பிறகு  அவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்று  முழக்கமிட்டதும் மக்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள், அம்மக்களைப் பார்த்து “நீ  ஏன் அவன்கிட்ட பணத்த கொடுத்து  ஏமாந்து போன, நீ இங்க வந்து உட்கார்ந்து விட்டால் உனக்கு பணம் வந்துவிடும் என்று நினைக்கிறியா?” என்று மிரட்டியவாறு  இன்ஸ்பெக்டர் கேட்டபோது “நாங்கள்  ஒரு வருசமாக  மனுக்கொடுத்து விட்டோம்  ஒன்னும் நடக்கல, எங்க பணத்தை வாங்கி கொடுக்க துப்பில்லை” என்று கிராமத்து  மக்கள் கோபத்துடன்  பதிலடி கொடுத்தனர்.

DPI Road (2)ரோட்டில்  உட்கார்ந்தால்  எந்த  அதிகாரியும்  வரமாட்டார்கள்  மண்டபத்துக்கு  வாங்க  அங்கதான்  அதிகாரி வருவார் என்று  போலிசார் நைச்சியமாக பேசிபார்த்தனர். அதற்கு  நாங்க ஒரு  வருடமாக அவர்களை  தேடிதான் போனோம்  எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க  சொல்லறது  பொய், உங்கள  நம்பி எப்படி  வரமுடியும்,  நீ  பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு  பதில் சொல்லட்டும் என்று மக்கள் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தனர். பிறகு அதிவிரைவு படையை கொண்டு அனைவரையும்  வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து குண்டுக் கட்டாக தூக்கிவேனில் ஏற்றினர். அப்போது சில பெண்களுக்கு  கையில் காயம் ஏற்பட்டது. சுமார் 30 பேரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தனர். பிறகு இரவு 8.30 மணியளவில் உங்களுடைய ஆதார் எண், தொலைபேசி  எண்  கொடுத்தால் தான் விடுதலை செய்ய முடியும் என்று மிரட்டினர். அதற்கு ஆதார் எண் கேட்பது சட்டவிரோதமானது, இதனை கொடுக்க முடியாது    வேண்டுமானால் எங்களை  கைது செய்யுங்கள் என்று  பதிலடியாக  மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசினர்.

மேலும்  அத்திருட்டுக்கும்பல்  மீது  நடவடிக்கை  எடுக்கும்  வரை  நாங்கள் உண்ணமாட்டோம்  என்று   உணவை   திருப்பி அனுப்பினர்.  இரவு 10 மணி ஆகியும் எந்த  பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தது போலீசு.  இனியும்   இவர்களிடம் கெஞ்சுவதால்  ஒன்றும்  நடக்க  போவதில்லை  என்று  மக்களிடம் தோழர்கள் பேச ஆரம்பித்தனர்.

உடனே  மண்டபத்தில் மண்டபத்தில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து போராட்டத்தை தொடங்கி முழக்கமிட்டோம். அப்போது அருகில் குடியிருப்புகளில் இருந்த மக்கள் மண்டப்பத்தை சுற்றி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர். பார்க்க வந்த மக்களை விரட்டியது போலீசு.  இப்போராட்டத்தை  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என்று  மண்டபத்தின் மேல்  மாடிக்கு சென்று முழக்கமிட்டனர். அதன் பிறகு போலீசு அடிபணிந்தது 1 மணிநேரம்  கழித்து   நாங்கள்  உடனடியாக  நடவடிக்கை எடுக்கிறோம்  என்று கூறி இரவு 11 மணிக்கு பேச அழைத்தார் டி.எஸ்.பி சோமசுந்தரம். அப்போது ஆதார் அட்டை கேட்பது கைதானவர்கள் உன்மையான முகவரிதான் கொடுக்கிறார்களா? என்று எப்படி தெரிந்துக்கொள்வது அதனால் தான் ஐடி -யை கேட்கிறோம் என்றார். இது சட்ட விரோதம் இப்படி எதுவும் சட்டமில்லை என தோழர்கள் பதில் கொடுத்தனர். நீண்டநேரம் பேசியும் பின்வாங்காமல் இருந்த தோழர்களிடத்தில் இறுதியாக போன் நம்பரையாவது கொடுங்கள் என இறுதி சுற்றில் கேட்டனர். அப்போது சில நபர்களின் போன் நெம்பரை மட்டும் கொடுத்தோம். அதன்பிறகே இரவு    12 மணிக்கு  அனைவரையும்  விடுதலை செய்தனர்.  அடுத்த நாள் காலை உடனே எஸ்.பி  யை பாருங்கள் என்று கூறியதை அடுத்து அவரிடம் 40 பேர் சென்று மனுக்கொடுத்தனர்.

சொந்த மண்ணில் வாழ்க்கையில்லை, வேலையில்லை ஏதாவது வழி கிடைக்காதா என்று வெளிநாட்டில் வேலைகளுக்கு முயல்கின்றனர் ஏழை மக்கள். அதற்காக இருக்கும் குண்டுமணி சொத்தையோ, நகையையோ விற்று மிச்சத்திற்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கி தரகர்களிடம் இலட்சக்கணக்கில் கொடுக்கின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு மாமூலைக் கொடுத்துவிட்டு தரகர்கள் இந்தப் பணத்தை விழுங்கி விடுகின்றனர். வெளிநாட்டில் வேலை என்ற கனவுடன் காத்திருந்தவர்களுக்கு பழைய அவல நிலை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. சரி கொடுத்த பணத்தை மீட்கலாமா என்று போலீசிடம் கேட்டால் போராடாதே, ஏமாந்தாய் என்று கேட்கிறார்கள்!

ஆம். இந்த அரசு நமக்கு வேலை கொடுக்கும், நமக்கு பிரச்சினை வந்தால் பாதுகாக்கும் என்று இதுவரை ஏமாந்து விட்டோம், இனி ஏமாற மாட்டோம்!

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி.
தொடர்புக்கு;  81485  73417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க