privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !

கிராமங்களில் புயலடித்தால் மரங்கள் சாயாது !

-

சென்னையில வர்தா புயல் வந்து போன வழித்தடம் முழுவதும் மோசமான அழிவை ஏற்படுத்திவிட்டு போய்விட்டது. அழிவோட அளவு ஆயிரம் கோடிக்கு மேல இருக்கலாம்னு கணக்கு சொல்லுது. இதுல வேறோடு சாஞ்ச மரங்க மட்டும் ஒரு லட்சமாம். புயல்ல ஏற்பட்ட மத்த இழப்புக்கள ஒன்னு ரெண்டு வருசத்துல நம்மால சரிபார்க்க முடியும். ஆனா வேரோடு சாஞ்ச மரத்த மீண்டும் உருவாக்க பல பத்து வருசம் கடுமையா முயற்சி செய்தா மட்டும்தான் முடியும். இருந்த கொஞ்சநஞ்ச மரத்தையும் இழந்துட்டு பல அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மத்தியில மூச்சுத் திணறுது சென்னை மாநகரம்.

vardah-storm
பேயாட்டம் ஆடிட்டு போன புயலால சென்னையின் வீதியெல்லாம் சின்னாபின்னமா இருந்துச்சு.

பேயாட்டம் ஆடிட்டு போன புயலால சென்னையின் வீதியெல்லாம் சின்னாபின்னமா இருந்துச்சு. போர்க்களத்துல போராடி உயிர் விட்ட வீரனப் போல அடியோட சாஞ்சுக் கெடந்த மரங்கள பலரும் செல்ஃபிக்காக மட்டும் பாத்தாங்க. ஆனா சோத்துக்கு வழியில்லாத நெலையில கூட ஒரு விவசாயி வயித்து பசிக்காக ஒரு மரத்த வெட்டி விக்கனுமின்னா அவரு மனசு பொறுக்காது. ஆனா வீட்டு வாசலுல காவக்கார(ன்) மாதிரி இருந்த மரத்த பறி கொடுத்துட்டு ‘மரம்’ மாதிரி நின்ன நகரத்து மனுசங்கள பாக்க கொஞ்ச கோபமாத்தான் இருந்துச்சு.

இயற்கை சீற்றமுன்னா தவிர்க்க முடியாத அழிவு ஏற்படுங்கிறது நமக்கும் தெரியும். ஆனா இயற்கையோட முடிஞ்ச அளவு போராடுறதுதானே மனித இயல்பு. நம்ம வீட்டு மரத்த நாமதானே காப்பாத்தனுங்கற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம மரம் உயிர் பிழைக்க எந்த உதவியும் செய்யாத நிலைய சென்னையெங்கும் காண முடிஞ்சது. விழுந்த மரத்த அப்புறப்படுத்திட்டு மின்சாரத்துக்கு வழி தேடுற அவசரத்த மரம் விழாம தடுக்கறதுல காமிக்கல.

ஆனா படிக்காத கிராமத்து விவசாயி புயல எதிர் கொள்ளும் விதமே வேற. மழக்காத்து வருதுன்னாலே தன்கூட இருக்குற மரத்தோட உயிரத்தான் மொதல்ல காப்பாத்த நெனப்பான் விவசாயி. தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் போய் புயலுங்க கிட்ட இருந்து மரங்களை எப்படி காப்பாத்துவாங்கன்னு கேட்டா எல்லாரும் அதை விலாவாரியா சொல்லுவாங்க!

மரத்த அடியோட அசைக்கும் புயல் காத்தின் அழுத்தத்த குறைக்க முதல்ல மரத்தோட இலைகள சுமந்துருக்கும் சின்ன கிளைகள வெட்டி மரத்தோட பாரத்தையும் அசைவையும் குறைப்பாங்க. மரத்தோட தரத்தையும் வயசையும்  பொருத்து பெருங்கெளைய வெட்டுவாங்க. தேவப்பட்டா மரத்த மொட்டையா வெட்டி அதக்கு ஆயுளைக் கொடுத்து உயிர் உண்டாக்குவாங்க. பெரிய இழப்ப சின்ன இழப்பா மாத்துவாங்க.

vardah-storm1
புயல் மழைன்னதும் சாப்பாட்டு பொருளை வாங்கி பத்திரப்படுத்த ஆளாய் பறக்கும் நகரத்து மனித மனம் அண்டையில நிக்கிற மரத்தோட அருமைய மறந்து விட்றாங்க.

இலைதலைகளை சுமக்கும் ஒரு மரத்தை காத்து வேர் வரைக்கும் அசைக்க முடிம். காத்துல ஆடுற மரம், இலைகளும் சிறு கிளைகளும் இருந்தா பலமா ஆடும். கிளைங்க வெட்டப்பட்ட மரத்த வேரோட சாய்க்கிறது கொஞ்சம் சிரமம். கரண்டு கம்பிங்களுக்கு ஓரளவுக்கேணும் சேதம் வராம இருக்க பக்கத்துல உள்ள மரத்த முக்கியமா வெட்டுவாங்க. ஆடு மடுங்களுக்கு தனி எடமிருந்தாலும் செனையாருந்தா, நோயிருந்தா வீட்டுக்குள்ளேயே ஒரு பக்கம் கட்டுவாங்க. உயிர்கள காப்பாத்தி அதன் வழியாதான் வாழ்வாதாரத்துல ஏற்பட இருக்கும் சேதத்தக் குறைச்சுக்குவாங்க.

புயல் முடிஞ்ச பிறகு வீட்டு வாசல்ல விழுந்த மரத்த முடிஞ்ச மட்டும் நகத்தி போட்டு பாதைக்கு வழி செஞ்சுட்டு இருந்தாரு ஒருத்தர். கண்ண குத்தும் ஒயரத்துக்கு நீட்டிட்டு இருந்த கொம்பை ஒடிக்க முயற்சி செஞ்சுட்டு இருந்தார். ஒடிபடாத அந்த கொம்பு கயிறு போல முறுக்கியது. அவரும் விடாம போராடிகிட்டுருந்தார். மற்றொருவர் ரோட்ல முக்கா பாகம் அடைச்சுட்டு விழுந்து கெடந்த மரத்த வாகன போக்குவரத்துக்காக காய் நறுக்கும் கத்திய வச்சு சரி செஞ்சுகிட்டுருந்தார். எல்லா வேலைகளையும் இயந்திரம் செய்துன்னு ஒத்துக்குவோம். ஆனா அவசர தேவைக்கு ஒரு அருவா வீட்டுல வைச்சுகிட்டா ஒன்னும் சட்ட விரோதம் இல்லையே!

புயல் மழைன்னதும் சாப்பாட்டு பொருளை வாங்கி பத்திரப்படுத்த பறக்கும் நகரத்து மனுசங்களுக்கு அண்டையில நிக்கிற மரத்தோட அருமை தெரியலை. கண்ணுக்கு குளிர்ச்சியா தேவைக்கு ஏத்தபடி இருந்த மரத்த வெட்டிப்புட்டு தகட்டுக் கூரையில நிழல் குடை கட்டுற மனப் போக்கு மனுசங்கிட்ட  உருவாகிப் போச்சு. இயற்கை வளங்கள லாப நோக்கத்துக்காக அரசே திட்டமிட்டு அழிக்கும் போது தனி மனிதனை மட்டும் குத்தம் சொல்ல முடியல. இருந்தாலும் இயற்கையை நம் வாழ்வாதாரத்தோடு வச்சுப் பாக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுது.

vardah-storm2
இந்த அபாயத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வர போகிறோம்.

ஊரெங்கும் பெருத்துப் போன வான் உயர்ந்த கட்டடத்தின் மத்தியில மூச்சு முட்டி திணறும் வேளையில கூட, எந்த ஏசி மிசின் அதிகக் குளுமையைத் தரும் என்ற சிந்தனையை நோக்கி மனுசங்க தள்ளப்பட்றாங்க. ஒரு பக்கம் பணம் சேக்க நகரத்துல வழி இருக்குன்னா அவங்க அறியாமலே செலவு செய்ய கட்டாயப்படுத்துற வழியும் இருக்கு.

புயல்ல சாஞ்ச மரத்துல தூங்குமூஞ்சி போன்ற அன்னிய ரக மரம்தான் அதிகமுன்னும் நம் பாரம்பரிய மரம் குறைவுன்னும் சொல்றாங்க. யோசன பண்ணி பாருங்க. ஆனி வேரு கொண்ட பூவரசமரம், புளியமரம், புங்கமரம், மாமரம், வேப்பமரம், பலாமரம் இதெல்லாம் சாலையோரத்துல இருக்கான்னு பாருங்க. எல்லாத்தையும் வெட்டிட்டு சல்லி வேரு உள்ள செகப்பா பூப்பூக்குர ஏதோ ஒரு மரத்த நட்டுவக்கிது அரசு. வனத்துறை, தாவர ஆராய்ச்சி என தனி இலாகாவே இருக்கும் போது இதெல்லாம் எப்படி நடக்குது.

இந்தப் புயலினால் விழுந்த மரங்களின் பாதிப்பால் நாம் எதிர் கொள்ளவேண்டிய அபாயமான பாதிப்பை பற்றி தி இந்து நாளிதழில் படித்தது. (நன்றி தி இந்து)

ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்ததில் மரங்களின் அளவு குறைந்து காற்றில் ஈரப்பதம் குறையும். அதனால் நீர்நிலைகள் அதிகம் ஆவியாகும். பசுமை பரப்பு குறைவதால் வெப்பம் அதிகரித்து வரும் கோடையில் 2 டிகிரி வரை கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும். இதனால் திறந்தவெளி தார்சாலைகளில் ஒளி ஒலியின் அளவு கூடி இறைச்சல் அதிகமாகும் கண் கூசும். வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றில் உள்ள தூசு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அப்படி ஒரு பாதிப்பு வராமல் 70 சதவீதம் வரை மரம்தான் ஏற்றுக்கொள்ளும்.

இந்த அபாயத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வர போகிறோம். எதிர் வரும் சந்ததியினருக்கு இதே நிலையைதான் வாழ்நாள் பரிசாக கொடுக்கப் போகிறோமா?

– சரசம்மா