privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசின்னம்மாவுக்கு அதிர்வேட்டு - விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்

சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்

-

PTI3_31_2012_000062Bல்லணை முதல் செம்போடை வரை தியாகச்செல்வி.. சின்னம்மாவைத் தலைமை ஏற்க வருந்தி அழைக்கும் கட்அவுட்-சுவரொட்டிகளில் பச்சை வண்ணம் தூக்கலாய் இருந்தது. சின்னம்மா அ.தி.மு.க பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற வைபவத்தை ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்வேட்டு முழங்க கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அதே நல்ல நாளில் சின்னம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் பதினோரு பேர் இறந்தனர் என்ற செய்தி கொண்டாடியவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. திருத்துறைப்பூண்டி சின்னம்மா திருமண மண்டபம் அருகில் அ.தி.மு.க-விலிருந்து விலகி  பாஜக-வில் அண்மையில் இணைந்துள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. செல்லா நோட்டு மோடி குறித்துச் சிறிது நேரம் பேசிவிட்டு விவசாயிகள் இறப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார் உடன் இருந்த நண்பர்.

“சீக்கு வந்து அம்மாவாசை, பவுர்ணமிக்குச் செத்தவனையெல்லாம் விவசாயி சாவுன்னு பத்திரிகைக்காரன் எழுதுறான்” என்றார் அந்த பாஜக நபர். அந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தது தகரவெளி மல்லிகாவின் கருத்து.

ஆதிச்சபுரத்ல பட்டினியில் ஒருபையன் செத்தான். அவன் வயத்துல நாலு பருக்கைச் சோறு இருந்ததுன்னு மெடிக்கல் ரிப்போட் சொல்லுதுன்னு பேசினவங்கதான் அதிமுக-காரங்க. அவங்க கிடக்குறாங்க. வயலப் பார்த்தா வயிறு எரியுது. நா வயப்பக்கமே போறதில்ல. எம்பொண்ணு வயப்பக்கம் போகாதே பிரஷர் எகிறிடும்ங்கிறா” என்று உண்மை நிலையை வாய்வார்த்தைகளில் படம்பிடித்துக் காட்டினார் இரண்டரை ஏக்கர நிலத்தில் நெல் விதைத்திருக்கும் மல்லிகா.

“குஞ்சங்கட்டி அழகாயிருக்குப் பயிறு, மேலேருந்து வாடிக்கிட்டே வருது, நாலுநாள் முன்னாடி வரை திடமாத்தான் போயிட்டு வந்தேன். இனிமேல் போய்ப்பார்க்க மனசுவல்ல. ஆறுபேரையும் (குடும்ப உறுப்பினர்கள்) அனாதையாகக்கிடாதேன்னு பசங்க சொல்லுதுங்க” என்கிறார் மூன்று ஏக்கரில் நெல் விதைத்துப் பிள்ளைகளை வளர்ப்பது போல் பயிரைப் பேணிக் காத்த தோளாச்சேரி புவனா.

farmer“பேருதான் பார்வேர்டு, நெலம பேக்வேடுதான்” என்று தொடங்கிய ஐயர் வீட்டுப்பெண்மணி இரண்டு ஏக்கரில் நெல் விதைத்திருக்கிறார். வயல்லேயே கிடப்பாங்க என்று மற்றவர்கள் அவரைப்பற்றிக் கூறினார்கள். “போன வருசமாவது ஆறு மூட்டைநெல் கிடைச்சுது. நிவாரணபணம் வந்தது. அதுவே நட்டம்தான். அந்த வருஷம் தம்பிடி நெல் கிடைக்காது. புதுர் சமைக்கக் கூட வழியில்ல. நிவாரணப் பணம் கிடைச்சாலும் யாரும் சமாளிக்க முடியாது போன வருஷ இன்ஷியூரன்ஸ் பணமே இன்னும் வரல” என்றார் ஐயர் வீட்டு அம்மா. இதைச் சந்தித்த விவசாயிகள் அனைவரும் வழிமொழிந்தார்கள்.

இதைப் பதிவு செய்யும் நேரத்தில் விவசாயிகள் இறப்பின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது. அதில் சரிபாதி பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2,500 என்கிறது புள்ளிவிவரங்கள்.

02-01-2016 அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார் திருக்குவளை நாட்டிருப்பு பன்னீர் செல்வம். பன்னீர்செல்வம், கணேசன், ஜோதிபாசு சகோதரர்கள் திருக்குவளை தியாகராஜசுவாமி கோயில் நிலம் மூன்றரை ஏக்கரில் பயிர் செய்திருக்கிறார்கள். குடும்பம் தனித்தனியாக இருந்தாலும் வருடத்திற்கு ஒருவர் என்று முறைபிரித்து சாகுபடி செய்கிறார்கள். இந்த வருடம் பன்னீரின் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகளுக்குத் திருமணம் செய்த கடனையும் சேர்த்து நான்கரை லட்சம் கடன் உள்ளது. இரண்டரை லட்சம் வங்கியில் நகைக்கடன் மீதம், கந்து வட்டிக் கடன் பிரச்சனை, வாடும் பயிர் துக்கம் தாளாமல் தூக்கு மாட்டிக் கொண்டு உயிர்விட்டார்.

இரண்டரை லட்சம் கடனில் உள்ள பன்னீரின் சகோதரர் கணேசன் “பேச்சலரா வெளியூர் போய் சம்பாதிக்க? மண்ண விட்டுப் போக முடியாது” என்று உறுதியாகக் கூறுகிறார். “குடிக்கத் தண்ணி இல்ல, குழாயில் தண்ணி வரலைன்னா ஆறுகிலோமீட்டர் போய் குடிதண்ணி கொண்டுவரணும். எதச் சொல்லிப் பொலம்ப?” என்றார் பன்னீரின் மற்றொரு சகோதரர் ஜோதிபாசு.

800-03தெருவே கூடி தெருமுனைவரை வந்து, “பார்த்துப் போங்க. ரோடு ரொம்ப மோசமா இருக்கு” என்று நம்மை வழி அனுப்பி வைத்த காட்சி கடைமடை விவசாயிகளின் உயர்ந்த பண்பை எடுத்துக் கூறுகிறது. கிராமப்புற இணைப்புச் சாலைகள் பளபளப்பாக இருந்தாலும் சேரிக்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன. பிரதான சாலையிலேயே இருசக்கர வாகனத்தை வைத்துவிட்டு வெண்மணி, நினைவிடத்தைப் பார்க்க நடந்தே செல்ல வேண்டியிருந்தது.

“கிராமப்புற கூட்டுறவு சொசைட்டி பேங்குகளிலும், தபால் நிலையத்திலும் வரவு செலவு முடக்கப் பட்டதால் கிராமப்புற மக்கள் தவியாய்த் தவிக்கிறார்கள். கூலி விவசாயிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது” என்றார் தபால்துறை ஊழியர் ஒருவர். செல்லா நோட்டுப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கூலி விவசாயிகள். வேலை இருந்தாலும் கூலிகொடுக்கக் காசு இல்லை என்ற நிலை கிராமப்புற கூலி விவசாயிகளை நடை பிணமாக்கியுள்ளது.

“64 வேலி கொளப்பாடு கிராமபுத்தில் 100குழி கூட அறுத்துக் கரை சேர்க்க முடியாது” என்று கூறிய படியே அறிமுகப்படுத்திக் கொண்ட கொளப்பாடு சண்முகம். “இப்படியே போனா ஒருத்தன ஒருத்தன் அடிச்சிப் புடுங்குற நிலை வந்துரும்” என்று எச்சரித்தார்.

“15 பவுன் நகை அடமானம் இருக்கு. ஐந்து லட்சம் வெளிகடன் இருக்கு. ஆடு மாடு இருக்கு, சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு, எந்தக் குறைச்சலும் இல்ல. வயப்பக்கம் போக மட்டும் பிடிக்கல” என்றார் இரண்டு வேலி சாகுபடி செய்யும் மாங்குடி சண்முக வேல்.

“சோம்பிக்கிடக்க மாட்டான் சோலி (வேலை) கண்டா” என்று கீழத்தஞ்சை விவசாயிகளை வர்ணிப்பார் மக்கள் கலைஞர் திருமூர்த்தியார்.

அறுபது அடியில் இருந்த நீர்மட்டம். 200 அடிக்குச் சென்றுவிட்டது. தரைக்கு மேல் உள்ள இறவை இயந்திரத்தை வைத்து நீர் இறைக்க முடியவில்லை. இருந்தாலும் மக்களின் முன்முயற்சி குறைந்து விடவில்லை. மூன்று நான்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆழ்குழாய் அமைத்து முறைவைத்துத் தண்ணீர் பாய்ச்சும் கூட்டுப் பாசன முறையைச் சிலர் முயற்சித்துள்ளனர். 240 அடிக்குக் கீழே நீர் மட்டம் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. 200 அடிகுழாய் போட்டு உப்பு நீராகித் தோற்றவர்களும் உள்ளனர். 250அடிக்குக் கீழ் சென்றால் 1000 அடி ஆழத்தில்தான் நீர் கிடைக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

“கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே சாவான் விவசாயி” என்ற புதுமொழியே கீழத்தஞ்சையில் உருவாகியுள்ளது. பெரிய அம்மாவைப் பராமரித்த களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த சின்னம்மா-பன்னீர் அரசு தற்போதுதான் விழித்தெழுவது போல பம்மாத்து காட்டுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்கள் அதிமுக-வை பெரிய அளவுக்கு அசைக்கவில்லை. இப்போதுதான் வறட்சி பாதிப்பைக் கணக்கிட ஆய்வுக்குழுவை அரசு அறிவித்துள்ளது.

சென்ற ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரவேண்டிய தொகையே இன்னும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்போது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஃபார்ட்டி பர்சண்ட் (40%) கமிஷன் கவர்மென்ட் என்று பெயரெடுத்துள்ள அ.தி.மு.க அரசு எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.

“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது
வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது
என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல
இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”

என்ற ம.க.இ.க பாடலை நினைவு கூர்ந்த கூலி விவசாயி தோழர் அய்யாவு பத்தாயிரம் பேர் மக்கள் ஒன்று கூடி ஒரே நாளில் பாமனி ஆற்றின் கரையை உயர்த்தி 35 கி.மீட்டருக்கு மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை மக்கள் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார். “S.G.முருகையன் தலைமையில் நடந்த சிரமதான இயக்கம் போல மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்ற அவரது கூற்று மெய்ப்பட வேண்டும்.

  • வினவு செய்தியாளர்

modi-farmerகேலிச்சித்திரம்: முகிலன்
மக்கள் கலை இ லக்கியக் கழகம், சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க