privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே - ஆதாரங்கள்

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

-

கோட்ஸே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. – ஆர். விஜயசங்கர்

ADVANI_அத்வானி
கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இல்லை என்று அத்வானி சொன்னது பொய் என்கிறார் நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரம்.

மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கோபமும், சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைக்கும் தனக்கும் இருந்த தொடர்பை கோட்சே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பாரதிய ஜனதா தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்க தலைவர்களும் கூறி வந்தனர்; கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார்.

அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து கண்டித்தவர் நாதுராம் கோட்சேயின் இளைய சகோதரரான கோபால் கோட்சேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவர் எழுதிய ”நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்சே தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்ற பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.

அதற்குப் பின் ஜனவரி 1994-ல் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு பேட்டியளித்த கோபால் கோட்சே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்எஸ்எஸ்-ஸின் பவுதிக் கார்யவாஹ் (கொள்கைப்பரப்பு செயலர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்சே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் (ஹெட்கேவாருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது தலைவராக இருந்தவர்) ஆர்.எஸ்.எஸ்-ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு விலகவில்லை,”என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கோட்சேவுக்கு தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றை கடுமையாக மறுத்தார் கோபால் கோட்சே. ”அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்து விட்டேன். ஆர்.எஸ்.எஸ். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்சேயை நீங்கள் கழற்றி விடமுடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பவுதிக் கார்யாவாஹ் ஆக இருந்த அவர் இந்துமகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”

பிரபல அமெரிக்க வாரப்பத்திரிக்கையான டைம் இதழுக்கு 2000-ம் ஆண்டில் அளித்த பேட்டியில், கோபால் கோட்சேயிடம் ஏன் காந்தியைக் கொல்ல திட்டமிட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. ”காந்தி ஒரு கபடாதாரி. முஸ்லிம்கள் இந்துக்களை படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மை கொடி.” என்றார்.

GODSE_நீதிமன்றத்தில் கோட்சே
படத்தில் இடமிருந்து வலம்: நாதுராம் கோட்சே, நாராயண் தத்தாத்ராய் ஆப்தே, விஷ்ணு ராமகிருஷ்ணா – காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட்டிருப்பவர் சத்யகி சவார்க்கார். இவர் கோபால் கோட்சேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சவார்க்கார் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்தி வந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

தங்கள் குடும்பம் நாதுராமும், கோபாலும் எழுதியவற்றை பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ். எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சவார்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.

“நாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்-ன் தினசரி ஷாகாவுக்கு செல்லும் உறுப்பினர்களின் பெயர்) என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக்கூடாது, என்கிறார் சத்யகி.

இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு (இவர் தான் பா.ஜ.க-வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951-ல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்           ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூர சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”

GANDHI_காந்தியின் இறுதி ஊர்வலம்
காந்தி இறுதி ஊர்வலத்தில் நேரு மற்றும் பட்டேல். படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு செப்டம்பர் 11,1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் சொல்கிறது. “இந்து சமுதாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்துவிட்டெரிய முஸ்ஸல்மான்களை தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப் படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்பவேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்திஜியின் உயிர்த்தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளிக் கூட பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”

அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங்கபரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாக கோட்சேயின் பாரம்பரியத்தைதான்  பாஜக வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது.. வரலாற்றையும் மறைக்க முடியாது.

-நன்றி: மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர்

மேலும் படிக்க:

  • RSS & Gandhi’s murder By A.G. NOORANI
    (There is enough historical evidence to nail the RSS’ lie that Nathuram Godse was not a member of that organisation when he assassinated Mahatma Gandhi in 1948.)