privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை

அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை

-

2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 2

  • முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களைச் சுற்றி சிறு நகரங்கள், கிராமங்கள் எனப் பரவலாக நடந்த கலவரங்களில் சுமார் 50,000 முசுலீம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
லோமன்: ஏன் எங்களுக்கு வேலை கொடுக்க கூடாது ? நாங்கள் போய் விடுகிறோம். படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

2017ல் ஒரு வேலை கிடைத்து விடும் என்பது லோமன் அலியின் நம்பிக்கை. வேலைக்குக் கிடைக்கும் சம்பளப் பணம் உதவியாக இருக்கும் என்பதைத் தாண்டி, அவரது காதலியைத் திருமணம் செய்ய கட்டாயம் ஒரு வேலை செய்தாக வேண்டும். காந்தலாவில் நடந்த திருமணம் ஒன்றில் வைத்துத் தான் அந்தப் பெண்ணை லோமன் பார்த்துள்ளார்; பிறகு கண்டதும் காதல் தான்.

லோமனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள். அவர்கள் இருவருக்குமே திருமணமாகி விட்டது. இருவருக்குமாகச் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள். லோமனும் அவரது தந்தையும் கைரானாவில் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென கட்டப்பட்ட நாகித் காலனியில் உள்ள ஒரே சிறிய அறையில் வசிக்கிறார்கள். அந்தச் சின்ன அறைக்குள் தந்தையுடன் அடைந்துள்ள தன்னால் காதலியுடன் மனம் விட்டுப் பேசக் கூட முடியாது என்கிறார் லோமன்.

லோமனைப் போலவே அவரது காதலிக்கும் 17 வயது தான்; தன்னால் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதைப் பற்றிக் கூட அவருக்குத் தெரியவில்லை. தனது வயதை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லை என்பதாலேயே சட்டச் சிக்கல் ஏதும் வராது என அவர் கருதுகிறார். கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது பூர்வீக கிராமமான புகுனாவைச் சேர்ந்த யாராலும் லோமனின் சரியான வயதைச் சொல்ல முடியவில்லை. தோராயமாக 17 இருக்கலாம் என்றே நினைக்கின்றனர்.

”எனது இரண்டாவது பிறந்த நாளன்று எனது தாயார் இறந்து போனார். அது ஒரு கோடைக் காலம் என்பது மட்டும் தான் தந்தைக்கு நினைவில் உள்ளது” என்கிறார் லோமன்.

கைரானாவில் இருந்து 17 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்தக் காலனிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் அந்தக் குடும்பம் இடம் பெயர்ந்துள்ளது. லோமனின் சகோதரர்களும் அருகிலேயே வசிக்கிறார்கள்.

கலவரம் வெடித்த போது ஒன்பதாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. கலவரத்தில் லோமனின் மாமா கொல்லப்பட்டிருக்கிறார். லோமன் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவரது இந்து நண்பர்களே தாக்கியுள்ளனர். ”அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை” என்கிறார் லோமன். நாகித் காலனியில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் கூலி வேலைகளே செய்கின்றனர்; அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை.

முசுலீம்களின் கொடுமை தாங்காமல் கைரானாவில் இருந்து இந்துக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுக்கும் சிங் தெரிவித்த கருத்து தங்களுடையதை போன்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இழிவு படுத்துவதென்கிறார் லோமன். ”அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும்? இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்”.

2013-ம் ஆண்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் தனது காதலியைப் பார்த்த நிகழ்வு ஒன்று தான் முக்கியமானது என்கிறார் லோமன். கைரானாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து சுமார் 30,000 வரை சேமித்துள்ளார் லோமன். அந்தப் பணத்தில் வாங்கிய வேனில் தான் தனது காதலியை முதன் முறையாகச் சந்தித்த திருமணத்திற்குச் சென்றுள்ளார். ”எனது வெள்ளை வேனையும், வெள்ளைச் சட்டையையும் அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது” எனச் சிரிக்கிறார் லோமன்.

”அவளது அப்பா அவளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். அவள் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். நானோ அந்தளவுக்குப் படிக்கவில்லை. ஆனால், சம்பாதிக்கத் துவங்கி விட்டேனென்றால் அவளது தந்தை அவளை எனக்கு மனமுடித்துக் கொடுத்து விடுவார். நான் எனது வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன்… அம்மா, வீடு, மாமா… இனி அவளாவது கிடைக்க வேண்டும்” என்கிறார் லோமன்.

ஒதிஸா : எனது பள்ளிக்கு எப்போது சாலை போடுவார்கள்?”

  • கான்ச்சன் ஹரிஜன் : இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று விட்டு ஒடிஸாவில் உள்ள தனது கிராமத்தில் ஆசிரியையாக பணிபுரிய விரும்புகிறார்.
kanchan
எங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள்? படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஒடிஸாவின் நப்ரங்பூர் மாவட்டத் தலைநகரில் அமைந்துள்ள அந்த அரசு மருத்துவமனையில் உள்ள பெண்களுக்கான அழுக்கடைந்த வார்டில் உள்ள படுக்கையில் தனது சகோதரி ராஷ்மிதா ஹரிஜனுடன் அமர்ந்துள்ளார் கான்ச்சன் ஹரிஜன். உதவிக்கு இருப்பவர்களுக்கென தனியே இருக்கைகள் இல்லையென்பதால் அவர்களது 45 வயதான தந்தை பரமானந்தா ஹரிஜன் அருகில் தரையில் குந்த வைத்து அமர்ந்துள்ளார்.

ராஷ்மிதாவுக்கு அறிவாள் செல் அனீமியா (Sickle cell anaemia) என்கிற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நாளான டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இவர்கள் மருத்துவமனையில் தான் இருக்கின்றனர். தனது காலை நேர பணிச்சுற்றுக்காக வந்த மருத்துவர் பிரியரஞ்சன் பகாலி,  ராஷ்மிதாவுக்கு சிவப்பணுக்கள் சராசரியான அளவில் பாதி (6 gm/dl) தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பில் கலைப் பிரிவை எடுத்துப் படித்து வரும் கான்ச்சன், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கிறார். ”ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச்சில் வருகிறது. ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது” என்கிறார் கான்ச்சன். அவரது பெற்றோருக்கு கான்ச்சன் தவிர இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மொத்தம் ஐந்து பேர் கொண்ட அந்த தலித் குடும்பத்தில் கான்ச்சன் மட்டுமே அதிகம் படித்தவர்.

இரண்டாண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பில் 56 சதவீத மதிப்பெண்களுடன் கான்ச்சன் தேறியவுடன், அவரைத் தனியார் மேல்நிலைப் பள்ளியொன்றில் சேர்த்துள்ளார் அவரது தந்தை. ஒவ்வொரு மாதமும் கல்விக் கட்டணமாக தனது தந்தை நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலியாக உழைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே தனது மாதாந்திர பள்ளிக் கட்டணம்  2,200 ரூபாயைக் கட்டுகிறார் என்பது கான்ச்சனுக்குத் தெரியும்.

அவர்களது கிராமத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நப்ரங்பூரில் உள்ள தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிடப் பள்ளியின் விடுதியில் ராஷ்மிதா தங்கிப் படிக்கிறார். ”அவளுக்கு சுத்தமாக முடியாமல் போய் விட்டது. அந்த விடுதியில் இருந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் தான் அழைத்து வந்தோம்” என்கிறார் கான்ச்சன். அவர்களது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லையென்பதால் மாவட்டத் தலைநகரில் உள்ள பெரியாஸ்பத்திரிக்கே வந்தாக வேண்டும்.

இந்தியாவின் வறுமையான மாவட்டங்களில் ஒன்றான நப்ரங்க்பூரில் ஆம்புலன்சு வண்டிகள் மிகவும் அரிது. ராஷ்மிதாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கவே அவருக்கு ஆம்புலன்சு கிடைத்துள்ளது. இதே ஒதிஸாவின் காலாஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மாஜி கடந்த ஆகஸ்டு மாதம் தனது மனைவியின் இறந்த உடலைச் சுமந்து செல்ல பிண வண்டி கிடைக்காமல் தலைச் சுமையாக தூக்கிச் சென்றது தேசிய ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.

ஆனால், 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது பள்ளிக்குப் போதுமான பேருந்து வசதி இல்லை என்பதே கான்ச்சனுக்கு உள்ள பெரிய கவலை. பத்து ரூபாய் செலவாகும் அந்த முப்பது நிமிட பயணத்தில் உட்கார இடம் கிடைப்பது மிகவும் அரிது. ”பேருந்தில் பயங்கர கூட்டமாக இருக்கும். அங்கும் இங்கும் அழைக்கழிக்கப்பட்டு நசுக்கப்படுவது பெரிய வலி” என்கிறார் கான்ச்சன்.

பயணத்திலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் உள்ள சிரமங்களைப் பார்த்த பின், மாலை நேர டியூசன் செல்லும் தனது திட்டத்தை கான்ச்சன் கைவிட்டுள்ளார். “எங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள்?” என்கிறார் கான்ச்சன்.

இரண்டு வருடங்களுக்கு முன் பக்கத்து மாவட்டமான கோராபுட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது மாமாவுடன் சென்றது தான் தனது ஒரே வெளியூர் பயணம் என்கிறார் கான்ச்சன். ஆனால், பூரி ஜெகன்னாதரை அதற்கு முன்பே பார்த்து விட வேண்டுமென்பது அவரது கனவு. மார்ச்சில் வரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் வென்ற பின் பொருளாதாரத்தில் இளங்கலையும் அதன் பிறகு முதுகலையும் படிக்க வேண்டும் என்பது கான்ச்சனின் ஆசை.

படித்து முடித்த பின் தனது கிராமத்துக்குத் திரும்பி அங்கே அவருக்குப் பிடித்த அறிவியல் ஆசிரியரைப் போலவே தானும் ஒரு ஆசிரியையாக வேண்டும் என விரும்புகிறார். “அவர் மிகவும் நல்லவர், எங்களைக் கடிந்து கொண்டதே இல்லை” என்று தனது ஆசிரியரைப் பற்றிக் கான்ச்சன்.

தமிழாக்கம்: முகில்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 1

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க