ஊருக்கு ஒரு கடுதாசி!

பொங்கலுக்கு
வருவதாய் இருந்தால்
எங்களுக்கு விருப்பமில்லை

என்ன இருக்கிறது இங்கே…
தினம்
ஒரு பிணம்song slider
விவசாயி வீட்டில்

முளைப்பாரி
கேட்ட ஊரில்
ஒப்பாரி

என்னை விட்டு போயிட்டியே!…
எனச் சுற்றிலும் கதறல்
இடையே
பொங்கலோ! பொங்கல்!
எனக் கத்த எங்களால் முடியாது.

வரப்பு வெடித்து
கிடக்கையில்
வயல் நண்டுக்கேது
கொண்டாட்டம்.
வயக்காத்து நிற்கையில்
நாரைக்கேது நடமாட்டம்.

எறும்பும் செத்த வீட்டில்
கரும்பெதற்கு?
பாடைக்கு பக்கத்தில்
விருந்தெதற்கு?
விவசாயத்தின்
இடுப்பை ஒடித்து விட்டு
எம்.சி.ஆர்., ராம்ராஜ்
வேட்டி எதற்கு!
வேதனைக்குப் பொங்காமல்
ஒருநாள்தமிழன்
வேசம் எதற்கு?

போரடிக்க
வழியில்லாமல்
ஊர் மாரடிக்குது
‘போர்’ அடிச்சா மட்டும்
நீங்க எட்டிப் பார்க்க
ஊரு கேக்குது!

கருகிய நெற்பயிர்கள்

கருகிய நெற்பயிர்கள்

எங்க
ஆத்து மண‍ல சுரண்டும் போது
யாரு வந்தீங்க,
எங்க
ஆடு, மாடு தவிச்சபோது
யாரு வந்தீங்க,
தெருக்குழாயில் ஈரம்தேடி
கரிக்குருவி ஏமாந்து
கத்தும் போது யாரு கேட்டீங்க!
உருத்தெரியாமல்
ஊரு சிதைஞ்சு  கிடக்ககையில்
எங்க
பொங்க வந்தீங்க?

நெல்லு
வளர்த்துக் கொடுத்தோம்
வகை வகையா தின்னீங்க
மாடு வளர்த்துக் கறந்தோம்
மடிப்பாலு குடிச்சீங்க.

ஆடு வளர்த்துக் கொடுத்தோம்
கறிக்குழம்பு  ருசிச்சீங்க
கோழி வளர்த்துக் கொடுத்தோம்
நாட்டுக்கோழி ரசிச்சீங்க

நாங்க
மாரடைச்சி கிடந்தோம்
யாரு வந்து தடுத்தீங்க?

உழவருக்கு இல்லாத
உழவர் திருநாள்
உங்களுக்கு ஏங்க?
உழவருக்காக போராட
ஊருக்குள்ள வாங்க!

துரை. சண்முகம்