privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைதானாடா விட்டாலும் எங்கள் தசையாடியது - துரை சண்முகம் கவிதை

தானாடா விட்டாலும் எங்கள் தசையாடியது – துரை சண்முகம் கவிதை

-

தமிழர் மேல் விழுந்த அடி!

jallikattu-protestலையில் சிக்கிய மீன்களை
வக்கிரமாய் நாங்கள் அடித்ததில்லை.
சிக்கியது என்பதற்காக
செவுள்களை பிய்த்ததில்லை
சினைமுட்டை சிதைத்ததில்லை.

திருக்கை அடித்தபோதும்
சுறா கடித்தபோதும்
நொறுக்கிடும் வெறி வந்ததில்லை
கொடுவால் முகத்தில்
ரத்தம் வரச்செய்ததில்லை.

திசைவழி தேடி அலைந்து
மீன் ஏதும் கிடைக்காத போதும்
தசை வலியோடு திரும்பினாலும்
கடுப்பில் துடுப்பால்
கடலையும் நாங்கள் அடித்ததில்லை.

கரைமேவும் நண்டுக்கும்
காவல் எமது கட்டுமரம்
இரைதேடும் பறவைக்கும்
அடைக்கலமாகும் நெய்தல் நிலம்.

துடிக்கும் நெத்திலிக்கும்
நீர் தெளிக்கும் எம் கைகள்
அடித்து ரத்தம் சொட்ட
அடைக்கலம் தேடிய பிள்ளைகளுக்கு
தண்ணீர் தருவது எங்கள் இயல்பு
தடுக்க நீ யாரடா விலகு!

nadukkuppamசோறின்றி, நீரின்றி
நெடுநேரம் கடலோரம்
தவிக்கும் பிள்ளைகளைப் பார்த்து
துடித்தது எங்கள் மனது
தானாடா விட்டாலும்
எங்கள் தசையாடியது
மனிதாபிமானத்தில் காப்பாற்ற
எங்கள் கலம் ஓடியது
மறுக்க நீ யாரடா
முதலில் மனிதனாகப் பழகு!

உப்புக் காற்றில் தினம்
உயிர் மூச்சு வேகுது
சிங்கள கடற்படையால்
ஒரு தலைமுறையே சாகுது
தட்டிக் கேட்க
உங்கள் தடிகளைக் காணோம்,
இனத்தைக் கட்டிக் காத்ததற்கா
இத்தனை கொடூரம்?

கானாங்கெளுத்தியும், வவ்வாலும்
மீனில் மட்டுமா பார்த்தீர்கள்
எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள்
காரப்பொடியும், ஓட்டாம்பாறையும்
எங்கள் உடம்பில் தின்றீர்கள்
வஞ்சிரத்தை
எம் மீனவப் பெண்களின்
நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.

தரையிறங்கிய விண்மீனாய்
எம் தமிழர் கூட்டம்
திரைகடலும் பெருமிதத்தால்
திமிறிக் காட்டும்
கரைக்குலமாம் மீனவர் கூட்டம்
தமிழ் உணர்வுக்கு தாய்ப்பால் ஊட்டும்.

ஆழமாய்… அமைதியாய்
நாட்டுப் பற்றாய்… நனிநாகரிகமாய்
விளைந்த மெரினாவின் விளைச்சலை
இமை மறந்து வியந்தது உலகமே
யாரால் விளைந்தது கலகமே?

Police-sliderஅடித்தீர்கள்
ஆடை அவிழ்த்தீர்கள்
எரித்தீர்கள்
யார் சமூக விரோதிகள்?

தமிழர் தாலாட்டில்
இன
யாரடித்தார் சொல்லி அழு
என்ற வார்த்தையை
அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது
உங்கள் அடையாளம்.

துடுப்பசைப்பது இருக்கட்டும்
உடுப்பணியவும் முடியாமல்
உடைக்கப்பட்ட எலும்புகளோடு
தழும்பேறிய எம் விழிகள்
உலகுக்கே அடையாளம் காட்டுகின்றன!
“தடை செய்யப்பட வேண்டிய பயங்கரவாதிகள்,
தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்…
ஏவிவிட்ட காவிகள்
ஏறிமிதித்த காக்கிகள்.

— துரை.சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க