privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !

ஊழலுக்காகவே ஆட்சி ! இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !

-

‘‘நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’ (ஜெயா தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி − ஆனந்த விகடன், 14.12.16)

‘‘அரசு நிர்வாகத்தில் தெளிவான பார்வையும் புத்திக் கூர்மையும் கொண்டவராக ஜெயலலிதா இருந்தார். (அவரது மறைவு) நிர்வாகத் திறன் கொண்ட அரசாங்கத் தலைமைக்கான இடத்திலும் வெற்றிடத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதே உண்மை.’’ (துக்ளக், 21.12.16)

TALENT_P2ஜெயா என்றொரு தனி மனுஷி குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலும், அ.தி.மு.க.வின் கூலிக்கார ஊடகங்களும் உருவாக்கி உலவ விட்டிருக்கும் பிம்பங்களுள் ஒன்று, ஜெயா மிகுந்த திறமைசாலி, சாட்டையைச் சொடுக்கி அதிகாரிகளிடம் வேலைவாங்கும் திறன் கொண்டவர்,  திறமை வாய்ந்த நிர்வாகத்தை அவர் மட்டுமே தர முடியும் என்பது. இந்தப் பிம்பத்தின் இன்னொரு புறத்தில் கருணாநிதியும், தி.மு.க. ஆட்சியும் திறனற்ற நிர்வாகத்தின் உருவாக முன்னிறுத்தப்பட்டனர்.

பார்ப்பான் புத்திசாலி, சூத்திரன் மூடன் என்ற மனுதர்மத்தின் நீட்சியாகவே தமிழக அரசியலில் ஜெயா குறித்து நேர்மறையான பிம்பமும் கருணாநிதி குறித்து எதிர்மறையான பிம்பமும் உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டிருக்கிறது. பார்ப்பனக் கும்பலால் தூக்கி நிறுத்தப்பட்டு வரும் ஜெயாவின் திறமை, ஒரு வெத்துவேட்டு, மோசடி என்பதை நிரூபிப்பதற்குப் பெரிய பொருளாதார அறிவெல்லாம் தேவையில்லை. தமிழக மின்வாரியத்தின் இன்றைய பரிதாபகரமான நிலைமை ஒன்றே போதும்.

2011−இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்று, அ.தி.மு.க. வெற்றிபெற்றதற்கு அப்போது நிலவிய மின் வெட்டு முக்கிய காரணமாய் இருந்தது. அம்மின்வெட்டுப் பிரச்சினையையும், தமிழக மின்சார வாரியம் அச்சமயத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் கடனில் இருந்ததையும் கருணாநிதியின் திறமையற்ற நிர்வாகத்தின் விளைவாகக் காட்டினார், ”துக்ளக்” சோ. ‘‘தான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்த்து, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன்’’ என வாக்குறுதி அளித்தார், ஜெயா.

‘‘திறமையாக’’த் தமிழகத்தை மொட்டையடித்துக் குவித்த சொத்தின் சிறு பகுதி.
‘‘திறமையாக’’த் தமிழகத்தை மொட்டையடித்துக் குவித்த சொத்தின் சிறு பகுதி.

ஆனால், நடந்தது என்ன? ஒருபுறம், மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வாய்தா வாங்கியே ஆட்சியை ஓட்டிய ஜெயா, இன்னொருபுறத்திலோ மின்சார வாரியத்தின் நட்டத்தைக் காட்டி மின் கட்டணத்தை இரு முறை உயர்த்தினார். மின் கட்டண உயர்வுக்கும் தனது அரசுக்கும் சம்மந்தமில்லை என்றும், மின்சார ஒழுங்குமுறை வாரியம்தான் அதற்குப் பொறுப்பேன்றும் நாடகமாடினார்.

மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் (2006−11) தொடங்கப்பட்டிருந்த அரசு மின் திட்டங்களை உரிய காலத்தில் முடிக்காமல், காழ்ப்புணர்ச்சியோடு அவற்றைக் கிடப்பில்போட்டது மட்டுமின்றி, தனது ஆட்சியில் புதிதாக எந்தவொரு மின் திட்டமும் தொடங்கும் எண்ணமே இல்லாமல் நடந்து கொண்டார். தனியாரிடமிருந்து அநியாய விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது, அதில் கமிசன் அடிப்பது என்ற நோக்கத்திற்காகவே அரசு மின் திட்டங்களை முடக்கியது, அவரது அரசு. இந்தத் தனியார் மின் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜெயா−சசி கும்பலுக்குப் பணங்காய்ச்சி மரங்களாக இருந்ததை அதானி சூரிய ஒளி மின் திட்டமும், உடன்குடி மின் திட்டமும் அம்பலப்படுத்தின. இதன் விளைவாக, தமிழக மின்சார வாரியம் எதிர்காலத்தில்கூட மீள முடியாத அளவிற்குக் கடுமையான நட்டத்தில் தள்ளப்பட்டது.

ஜெயாவின் மூன்றாவது தவணை ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கம் ஒரு பெருங்கொள்ளைக் கூட்டமாகச் செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்தி, மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டி
ஜெயாவின் மூன்றாவது தவணை ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கம் ஒரு பெருங்கொள்ளைக் கூட்டமாகச் செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்தி, மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட விளம்பரத் தட்டி

தி.மு.க. ஆட்சியில் 50,000 கோடி ரூபாயாக இருந்த தமிழக மின்சார வாரியத்தின் கடன் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் (2011−16) இறுதியில் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. தி.மு.க. ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் நான்கு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. ஜெயாவின் ஆட்சியில் நடந்த ஊழல், கொள்ளை காரணமாக கடன் சுமை அதிகரித்துப் போனதை ”துக்ளக்” சோ உள்ளிட்டு எந்தவொரு பார்ப்பன ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு, மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாதென்ற நோக்கத்தில், தி.மு.க. பலமானதொரு கூட்டணியை அமைப்பதைத் தடுத்து, மக்கள் நலக் கூட்டணி என்ற ஐந்தாம் படையை உருவாக்கினார்கள்.

ஜெயாவின் ஆட்சியில் அரசும், அரசு நிறுவனங்களும் கடனிலும், நட்டத்திலும் மூழ்கிக் கொண்டிருந்த அதேவேளையில், ஜெயா−சசி கும்பலோ கண்டெய்னர், கண்டெய்னராகப் பணத்தைக் கடத்தியது. மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் துபாயில் சொத்துக்களையும், இந்தோனேஷியாவில் நிலக்கிரி வயல்களையும் வாங்கிப் போட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழகத்தை அரைகுறையாக இல்லாமல், முழுதாக மொட்டையடிப்பது; அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர் வரை அடிக்கும் கொள்ளையில் உரிய பங்கை போயசு தோட்டத்தில் காணிக்கையாகச் செலுத்த வைப்பது; காணிக்கையைச் செலுத்தாமல் கம்பி நீட்டுபவர்களைக் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் தூக்கியெறிவது என்பதுதான் ஜெயாவின் தனித்திறமை.

tagline

ஊழல்தான் நிர்வாகம், நிர்வாகம்தான் ஊழல் என ஆட்சி முறைக்குப் புதிய பொழிப்புரை எழுதியவர் ஜெயா. ஜெயாவின் முதல் தவணை ஆட்சியில் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அபகரித்துக் கொண்டது தொடங்கி சுடுகாட்டு கொட்டகை போட காண்டிராக்டு விட்டது வரை ஊழலும், கொள்ளையும்தான் அரசின் செயல்பாடுகளாக இருந்தன. சிறுதாவூர், நீலாங்கரை தொடங்கி கோடநாடு முடிய கண்ணில் கண்ட நிலங்களெல்லாம் ஜெயா−சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்டன. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், அடித்த கொள்ளை எவ்வளவு என்பதை வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் எடுத்துக் காட்டியது. அத்திருமண ஊர்வலத்தில் ஜெயாவும், சசிகலா குடும்பத்தினரும் கொஞ்சம்கூடக் கூச்சமின்றி, யாரும் எங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற திமிரோடும், கொழுப்போடும் தங்க நகைக் கடைகளாக நடந்து வந்தனர்.

ஜெயா−சசி கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் போட்ட ஆட்டத்தின் விளைவாகவே, அக்கும்பல் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்டு டான்சி நில ஊழல் வழக்கு, பிளஸண்ட் ஸ்டே விடுதி ஊழல் வழக்கு, நிலக்கிரி இறக்குமதி ஊழல் வழக்கு, ஸ்பிக் பங்குகள் விற்பனை வழக்கு, அந்நியச் செலாவணி மோசடி வழக்கு என ஒன்பது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயாவின் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் சேர்த்துக் கொண்டால், 1991−96−இல் நடந்த ஜெயா ஆட்சியின் மீது  தொடரப்பட்ட ஊழல், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை 46.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியை (2011−16) 40 பர்செண்ட் ஆட்சி எனக் குற்றஞ்சுமத்திய பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்வாகத்தில் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் செல்லுகிறது என்பதை அம்பலப்படுத்தி பிளக்ஸ் பேனரே வைத்தார்கள். அந்த அளவிற்கு அரசு திட்டங்களில் கையூட்டுப் பெறுவதில் புதிய சரித்திரத்தைப் படைத்தார், ஜெயா. இதற்கு அப்பால், உதவி செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமியின் தற்கொலையும், ஆவின் பால் கலப்பட ஊழலும், மணல் மற்றும் கிரானைட் கொள்ளைகளும், 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அம்பலமான கண்டெய்னர் விவகாரமும், ஜெயாவால் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் வீட்டில் தற்பொழுது நடந்துள்ள வருமான வரிச் சோதனையும் ஜெயாவின் நிர்வாகத் திறமை என்னவென்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஊழல்களின் வழியாக ஜெயாவின் திறமை என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியாத பாமர மக்களுக்கும் உறைக்கும்படி சென்னை பெருவெள்ளம் அமைந்தது. பெருமழைக்கு முன்னதாகவே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடக் கோரிப் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அனுப்பி வைத்த கோப்பை ஜெயா உதாசீனப்படுத்தியதன் விளைவு, சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது ஜெயலலிதா எதை வாசித்துக் கொண்டிருந்தார் என்பதை வரலாறு இனி பதிவு செய்யலாம்.

இலட்சக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, தொழிலை இழந்து, உடமைகளை இழந்து அநாதரவாகத் தெருக்களிலும், மொட்டை மாடிகளிலும் பரிதவித்து நின்றபோது, ஜெயா அவர்களை ஹெலிகாப்டர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்; தனது செருப்புகூடத் தண்ணீரில் நனைந்துவிடாதபடி ஏ.சி. வேனில் குந்தியபடி நகர் வலம் வந்து, தனது ஆர்.கே.நகர் தொகுதி மக்களைப் பார்த்து, வாக்காளர்களே என ஏளனமாக அழைத்துவிட்டுப் போனார். ஜெயாவின் விசுவாசிகளோ, சோற்றுக்கும் குடிநீருக்கும் கையேந்தி நின்ற மக்களின் முகத்தில்கூட ஜெயாவின் ஸ்டிக்கரை ஒட்டிவிடக்கூடிய திமிருடன் அலைந்தனர்.

TALENT_P4
2011-16 ஆட்சிக் காலத்தில் ஜெயா−சசி கும்பல் ஊழல்-கொள்ளை மூலம் சேர்த்த சொத்து எத்துணை ஆயிரம் கோடி என்பதை வெளியுலகுக்குக் காட்டிய கண்டெய்னர்கள்.

சீனாவில் ஊழல், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபிடும் ஆளுங்கட்சியினர், அதிகாரிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அதிபர்கள்கூட நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இந்தியாவிலோ, ஊழல் குறித்து அதிகமாக சவுண்டுவிடும் பார்ப்பனக் கும்பல் ஜெயாவைக் காப்பாற்றிக் கைதூக்கிவிடுவதில் மட்டுமே அக்கறை கொள்கிறது.

‘‘பல்வேறு ஊழல் வழக்குகளை அவர் எதிர்கொண்டாலும், அவரது அரசியல் வாழ்க்கையை அவற்றால் முடக்க முடியவில்லை. ஏனெனில், பெரும்பான்மையான மக்கள் அவர் பக்கம் நின்றனர். குடும்பம் இல்லாத அவர் எதற்காக ஊழல் செய்து பணம் சேர்க்கப் போகிறார் என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாக இருந்தது’’ என எழுதி ஜெயாவை அனைத்துக் கிரிமினல் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கிறார், ஆர்.எஸ்.எஸ்.−ஐச் சேர்ந்தவரும் ”துக்ளக்” இதழின் புதிய ஆசிரியருமான குருமூர்த்தி.

அடித்தட்டு மக்களிடம் மட்டுமல்ல, உலக விசயம் தெரிந்தவர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்திடமும் காணப்படும் அரசியல் பாமரத்தனமும் பிழைப்புவாதக் கண்ணோட்டமும்தான், ஜெயா தமிழகத்தின் அம்மாவாக அவதாரமெடுத்ததற்கான அடிப்படையை வழங்கியிருக்கிறது. தனக்காகத் தீச்சட்டி ஏந்தும் பாமரத் தமிழன் தொடங்கி உச்சநீதி மன்ற நீதிபதி முடிய அனைவரையும் விலைக்கு வாங்க முடியும் என்பதைத் தனது அரசியல் வாழ்க்கை நெடுகிலும் நிரூபித்திருக்கிறார், ஜெயா. தான், தனது கட்சி மட்டுமல்ல, சமூகத்தையே ஊழல்மயப்படுத்துவதில் மற்ற அரசியல் தலைவர்கள், ஓட்டுக்கட்சிகளைக் காட்டிலும் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா. இதுதான் அவரது திறமை, இதுதான் அவர் நிகழ்த்திக் காட்டிய புரட்ச்சி!

– மாணிக்கம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க