privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

-

ருப்புப் பணத்தையும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பது, போதை மருந்து கடத்தல் ஆகியவற்றையும் தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒழித்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் மோடி.  ஆனால், நவம்பர் 8−ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 50 நாட்களில் கருப்புப்பணம் கடுகளவும் ஒழியவில்லை. கருப்புப்பண பேர்வழிகள் அஞ்சி நடுங்கிடவுமில்லை. மாறாக,  ஒரு புதிய கருப்புப்பணச் சந்தை உருவாகியுள்ளதோடு, வங்கிகளின் துணையோடு கருப்பை வெள்ளையாக்கும் மோசடிதான் பெருகியுள்ளது.

பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.
பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.

கருப்பை வெள்ளையாக்குவதிலும் பணக்கடத்தலிலும் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஜூன் 2013−இல் ரிசர்வ் வங்கியால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தனியார் நிறுவனம்தான், ஆக்சிஸ் வங்கி. அப்பேர்பட்ட யோக்கியவானாகிய ஆக்சிஸ் வங்கியின் டெல்லி− சாந்தினி சவுக் கிளையில், கடந்த நவம்பர் 8−ஆம் தேதி முதலாக ஒருவார காலத்திற்குள் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகளைத் தொடங்கி, அவற்றில் ஏறத்தாழ ரூ.450 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதவிர, பல நூறு கோடி அளவுக்குப் பணப்பரிமாற்ற மோசடிக்கு உடந்தையாக இருந்த டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேலாளர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

‘‘கோப்ரா போஸ்ட்’’ எனும் வலைத்தளம், நாட்டின் ஐந்து மண்டலங்களில் நடத்திய இரகசிய விசாரணையின் மூலம் ( Operation Red spider)  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8−ம் தேதி முதல் டிசம்பர் 7−ம் தேதி வரை தமிழகத்தில் 9,000 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, ஒரு கிளைக்கு ஏறத்தாழ ரூ.87 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 900 கிளைகளைக் கொண்டுள்ள தனியார் வங்கிகளுக்கு, ஒரு வங்கிக் கிளைக்கு ஏறத்தாழ ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.
கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகவும், தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் உள்ள நிலையில், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட புதிய நோட்டுகள் கருப்புப் பணப் பேர்வழிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதை உணர முடியும்.  நவ.8 முதல் ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி. ஆகிய தனியார் வங்கிகள் எவ்வளவு பழைய நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கியுள்ளன என்பதை ரிசர்வ் பாங்க் கவர்னர் தேதி வாரியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ள போதிலும், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பழைய நோட்டுகளை மாற்றவும், பணப் பரிமாற்றங்களுக்கும் தடை விதித்து, தமிழகம் உள்ளிட்ட எதிர்த்தரப்பு ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினரைக் கொண்டு சோதனைகள் நடத்துகிறது, மோடி அரசு. ஆனால், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை நிர்வாக இயக்குனராகக் கொண்டுள்ள குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.500 கோடி அளவுக்கும், குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் மற்றொரு கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி அளவுக்கும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளபோதிலும், மோடி அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. குஜராத் கூட்டுறவு வங்கிகளில் கமிசன் அடிப்படையில் புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக யாதீன் ஓசா என்கிற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மோடிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை மோடி அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

axis bank_pic3
தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே, ஏடிஎம் கடவு எண்களைத் திருடும் மோசடிகள் தொடரும் நிலையில், ஒருவரது வங்கிக் கணக்கில், அவருக்குத் தெரியாமல் பணத்தைப் போட்டு எடுப்பதென்பதும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. உ.பி. மாநிலம் மீரட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணாகிய ஷீதல் யாதவ் என்பவரது பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள ஜன்தன் கணக்கில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது கணினிக் கோளாறினால் ஏற்பட்ட தவறாகச் சித்தரிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள புலிகரை கிராமத்தின் இந்தியன் வங்கியில், நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் முடக்கப்பட்டிருந்த சிவகுமார் என்ற விவசாயியின் கணக்கில் 1,32,758. ரூபாய் போடப்பட்டு பின்னர் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வங்கி மேலாளரான பிரபாகரன், இதுபோல பல விவசாயிகளது வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு பின்னர் வேறு கணக்கிற்கு பல இலட்சங்களை பரிமாற்றம் செய்துள்ள மோசடியை மக்கள் அதிகாரம் அம்பலப்படுத்தியது.

இறக்குமதிக்கான கோடிக்கணக்கான தொகையை வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துக்கு அனுப்புவதாகக் கூறித்தான், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி − இறக்குமதி வர்த்தகம் வாயிலாக வருடந்தோறும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் கருப்பணம் வெளியேறி வருகிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் உள்ளிட்ட மின்னணு பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் நடந்துள்ளன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு  இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் நிழல் உலகப் பின்னணியை ஏற்கெனவே அம்பலமாக்கியிருக்கின்றன.

மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு...!
மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு…!

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், அதில் முறைகேடுகள் இருக்காது, இதன் மூலம் சட்டப்படியான வருமான வரியை விதிக்க முடியும், மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நாட்டு மக்களின் காதுகளில் இன்னமும் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் அச்சகம், ரொக்கப் பணத்தைப் பாதுகாக்கும் கருவூலம் ஆகியவற்றின் வழியாகவும் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த இடங்களிலும் சோதனை நடத்த வேண்டுமென்கிறார். ஆனால் இதற்கு விளக்கமளிக்காத மோடி அரசோ, ஒருசில வங்கிக் கிளைகளில் மட்டும் சோதனை நடத்துவதோடு நின்றுவிட்டது. மணற்கொள்ளை மாஃபியா சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய ரூ. 2,000 நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது என்பதை அந்த நோட்டுகளின் எண்ணை வைத்தே கண்டறிய முடியும் எனும் போது, மோடி அரசோ அது பற்றி வாய்திறக்க மறுக்கிறது. மறுபுறம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்து மோசடிகளைத் தடுப்போம் என்று வெற்றுச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சோதிக்குமளவுக்கு அடிக்கட்டுமான வசதிகளோ, போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளோ இல்லை என்று வங்கி ஊழியர் சங்கங்களே இந்த வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்துகின்றன.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது உலகறிந்த ஒரு மோசடி. மோடி அரசோ, இன்றைய கிரிமினல் முறையிலான அரசுக் கட்டமைப்பைக் கொண்டே இதனைச் சாதிக்க முயற்சிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகளும் கருப்புப் பணப் பேர்வழிகளும் தங்களது வழக்கமான கிரிமினல் நடவடிக்கைகளால், மோடியின் ஊதிப் பெருக்கப்பட்ட கருப்புப்பண ஒழிப்புத் திட்டத்தின் காற்றைப் பிடுங்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

– குமார்

***

பணமற்ற பொருளாதாரம்: உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர், அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

swipingலாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து, போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து, போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணை முதலாளிக்கிட்ட குடுத்து, போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், போன மாசம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2,000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், போன மாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை லாட்ஜ் ஓனர்கிட்ட குடுத்தாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை, நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே திரும்பிப் போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, வைத்திய பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி, யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம மோடியின் புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பே டிஎம் ஆப்ல 1%, டீக்கடை ஆப்ல 1%, பால் பண்ணை ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பே டிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பே டிஎம் ஆப்ல 1% – இப்பிடி பே டிஎம் பாக்கெட்டுக்கு ரூ.5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = ரூ.24.50- போயிடும். 500 ரூவாயில ஆரம்பிச்ச ட்ரான்ஷாக்சன், லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது ரூ.475.50 ஆகிடும்.

(குறிப்பு : இப்போதைக்கு ட்ரான்ஷாக்சன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக 1% ஆக எடுத்துக்கிட்டோம்.)

இதுல யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இப்பவாவது புரிஞ்சிக்குங்கோ, இது யாருக்கான திட்டம்னு !

– அன்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017