privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்குழந்தைக்கு நல்ல நேரம் - தாய்க்கு கெட்ட நேரம் !

குழந்தைக்கு நல்ல நேரம் – தாய்க்கு கெட்ட நேரம் !

-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ரவி. முதுகலை வேதியியல் படித்தவர், நல்லச் சம்பளத்தில் வேலை. இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர் ரவியின் காதல் மனைவி. மனைவிக்கு இது இரண்டாவது பிரசவம். முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்தது. இரண்டாவது கர்ப்பம் எட்டு மாதம் முடிவதற்குள் ஏற்கனவே போட்ட ஒட்டுத்தையல் கொஞ்சம் பிரிந்து விட்டதால் வலி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

maternity psமருத்துவரோ குழந்தை போதுமான வளர்ச்சி அடையவில்லை அதனால் இன்னும் மூன்று வாரங்களுக்கு வயிற்றில் இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். வலி குறைந்தால் தையல் பிரியும் அபாயம் குறைவு. இருந்தாலும் அவ்வப்போது பிரசவ வலிவரும். வலி குறைவதற்கான மருத்துவத்தை செய்து கொண்டு படுக்கையிலேயே ஓய்வெடுக்க வேண்டும். அப்போது தான் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

குழந்தை என்பது மக்களால் மகிழ்ச்சியின் குறியீடாக கொண்டாடப்படும் நிலையில் அந்த மகிழ்ச்சிக்குப் பெண்களால் கொடுக்கப்படும் வலி அதிகம். ஓரிரு நாள் இல்லாது ஒரு மாத காலமாக பிரசவ வலியைப் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு பேருந்து பயணத்தில் கூட தோள் வலி தவிர்க்க தோல் பையத் பேருந்தில் பக்கத்து இருக்கையில் கொடுக்கிறோம். ஆனால் பிரவசச் சுமையை ஒரு பெண் யாரிடம் பகிர முடியும்?

பெண்களின் மறு பிறப்பு பிரசவம் என்பார்கள். அப்படி செத்துப் பிழைக்கும் நேரத்தில் கூட குழந்தை ‘நல்ல நேரத்தில்’ பிறக்க வேண்டும் என்று காட்டுமிராண்டித்தனமாக பலர் முயல்கின்றனர். அதில் ரவியும் ஒருவர். மனைவியின் உடல் நிலையைப் பற்றிக் கவலை இல்லாத ரவி இன்னும் ஒரு வார காலம் தாமதமாகக் குறிப்பிட்ட நாளில் குழந்தைப் பிறந்தால் ஜாதகப்படி ராசிபலன் அற்புதமாக இருக்கும் என்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.

அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கூட ஏழை பாழைகளிடம் இந்த கொடூரமான மூட வழக்கம் இல்லை. பண்ணையார்தனமாக வாழ்ந்தோரிடம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். மேலும் பெண்ணின் மதிப்பை உணராத காலமது. அரண்மனையின் ஜோதிடர் குறித்துக் குடுத்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று அரச குலப்ப பெண்களுக்கு பிரசவ வலி வந்த பிறகு இயற்கைக்கு மாறாக தலைகீழாகக் கட்டிவைத்துக் குழந்தை பிறக்கும் நேரத்தைத் தள்ளி வைத்தக் கதையெல்லாம் உண்டு. ஆனால் இன்று அறிவியலும், மருத்துவ விழிப்புணர்வும் மேலோங்கிய காலத்தில் இப்படி ‘நல்ல நேரம்’ வேண்டி மனைவியின் உயிரை சூதாடும் நிலையை என்னவென்று சொல்வது?

ரவியின் மனைவிக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இந்த முறையும் அவர் இறுதி மாதங்களில் பெரும் அவஸ்தையோடுதான் இருந்துள்ளார். திரும்பிப் படுக்க முடியாது, எழுந்து உட்கார்ந்து பிறகு தான் படுக்க முடியும். ஒரு தடவை எழுந்து உட்காரப் பத்து நிமிடமாகும். எழுந்து நடந்தால் வலிக்கொஞ்சம் குறையும் ஆனால் முடியாது. கை, கால் அசைத்தாலே பழைய தையல் பிரிவது போல் இருந்ததால் பாத்ரூம் போகக் கூட யோசிக்கும் நிலையில் இருந்துள்ளார்.

சுடாது என்று தெரியும் வரை தான் கற்பூரத்தை கையில் ஏந்தும் பக்தியெல்லாம் பக்தனுக்கு இருக்கும். கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் தான் அந்தப் பெண்ணும். ஆனால் உயிர் போகும் நிலையில் ராசிபலன் பார்ப்பதை எந்தப் பெண்ணும் சகித்துக் கொள்வதில்லை. காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டேன். ஒவ்வொரு நொடியும் நான் படும் வேதனையைப் பார்த்த பிறகும் பிரசவத்தைத் தள்ளிப் போடும் மனம் அவருக்கு எப்படி வந்தது. அந்தாளு மனுசனா மிருகமா என கண் கலங்கியுள்ளார் அந்தப் பெண்.

இத்தனை நாள் பொறுத்துகிட்ட இன்னும் ஒரு வாரம் தானே என்று மனைவியிடம் மன்றாடினார் ரவி. தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விடும், முதல் குழந்தை ஏமாந்து போய்விடுவான் எனவும் மனதை மாற்ற முயற்சித்துள்ளார். மருத்துவரும், மனைவியும் இதற்கு சம்மதிக்கவில்லை. கடைசியாகக் குலதெய்வ வழிபாடு செய்யும் வரை இரண்டு நாள் பிரசவத்தைத் தள்ளி வைத்து நினைத்ததைக் கொஞ்சமேனும் சாதித்துள்ளார்.child ps

வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நல்ல நாள் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்யும் பல மருத்துவர்களில் ரவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் ஒருவர். சிறு நகரங்களில் உள்ள இவரைப் போன்ற மருத்துவர்கள் இப்படித்தான் கம்பெனி நடத்துகிறார்கள். இருந்தாலும் மிகவும் பிரச்சனை உள்ள ஒரு கேசில் இனியும் தாமதம் ஆக்க முடியாது என்பது தான் இந்த மருத்துவரது கருத்தாகஇருந்துள்ளது.

“இந்து மத நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழும் கவுண்டர் சாதி இன மக்கள். பார்ப்பனர் – வேளாளரைப் போல கவுண்டர் சாதி மக்களும் கடவுள் மேல அதிக நம்பிக்கை வைச்சுருக்காங்க. எதைச் செய்தாலும் சடங்கு சம்பிரதாயம் பார்த்து தான் செய்வார்கள். இது போல் இந்த நேரத்தில் கூட தன் உடல்நிலைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் குடும்பம், கணவன் சொல்லுக்கு செவிசாய்க்க காரணம் இந்தப் பகுதியில் பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகம்.” என்றார் இந்த தகவலைச் சொன்ன தோழி.

மழைப் பிறப்பும், பிள்ளைப் பிறப்பும் அந்த மஹாதேவனுக்கேத் தெரியாது என்ற பழமொழியை மாற்றி அமைத்தது அறிவியல். அந்த அறிவியல் வளர்ச்சியை முறியிடிக்கும் முகமாக அழிக்க முடியாத இரவு நேரக் கொசு போல ஆன்மீகம் இன்றும் மக்களை கடித்து வருகிறது.  குழந்தை பிறந்த நேரத்தை வைத்து தான் இதுவரை ஜாதகம் எழுதப்பட்டது. இப்பொழுது அதிஷ்டத்தைத் தனதாக்கிக் கொள்ள நல்ல நேரத்தைத் தெரிவு செய்து குழந்தைப் பிறப்பை நடத்துகிறார்கள் ஆன்மீகத்தைக் கண்மூடித் தனமாக நம்பும் மக்கள்.

கரு தாயின் வயிற்றில் 300 நாள் தான் இருக்க முடியும் என்பது இயற்கை. அதுக்கு முன் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவம் கை கொடுக்க வாய்ப்பிருக்கு. 400-வது நாள் தான் நல்ல நாள் என்று தாமதப்படுத்த முடியுமா? குழந்தை என்பது மனிதனின் பரிணாம வாழ்க்கைச் சுழற்சியின் இயற்கை நிகழ்வு. மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லாது அறிவியலின் துணை கொண்டு பார்க்கத் தான் மருத்துவம். ராகு காலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை, பாத்து பக்குவமா செய்யறதுக்கு பிரசவம் ஒன்னும் பாட்டி சுடுற பலகாரம் கிடையாது.

ஜெயலலிதாவும், சசிகலாவும் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் சகலவிதமான சடங்கு, யாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஊட்டியில் கஜ முக யாகம் முதல் திருநள்ளாற்றில் காஞ்ச மிளகாய் யாகம் வரை எதையும் விடவில்லை. ஆனால் இன்று ஜெயா சமாதியை குற்றவாளியின்  சமாதி என்றும், சசிகலா குற்றவாளியாக பெங்களூருவிலும் இருப்பதை யார் மறைக்க முடியும்?

எப்போது பிறந்தோம் என்பதல்ல, என்ன செய்தோம், எப்படி வாழ்ந்தோம் என்பதை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்கள். ஆகவே உங்கள் குழ்ந்தைகள் தாயின் வேதனையை குறைக்கும் நேரத்தில் பிறக்கட்டும். இல்லையேல் அதை மருத்துவம் முடிவு செய்யட்டும். மதி கெட்டு ஜோதிடம், ஜாதகம் என்று ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடாதீர்கள்.

-சரசம்மா
(உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க