privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நீட் தேர்வு - ஒரு சொந்த அனுபவம்

நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்

-

ந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேற்கூறியவை அனைத்தும் நீட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள். இது குறித்து ஏற்கனவே ஒரு சிறு பதிவினை முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் எழுதி இருந்தவை எனக்கு நேரிடையாக நிகழும் என்று அப்பொழுது எண்ணவில்லை.

இந்த வருடம் எனது தங்கை 12 ம் வகுப்புத் தேர்வினை எதிர்கொள்ள உள்ளார். அதன் பிறகு மருத்துவம் பயில வேண்டும் என்று அவருக்கு விருப்பம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அதற்க்கான விண்ணப்பிக்கும் வேலைகளைத் தந்தை தொடங்கினர். இந்தத் தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். விண்ணப்பத்தின் முதல் பக்கத்திலேயே தேர்வரின் பெயர், பிறந்த தேதி போன்ற விபரங்களுடன் ஆதார் எண்ணும் நிரப்பப்படவேண்டும். விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விபரங்கள் ஆதார் விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல அனுமதிக்கும். எனது தங்கையின் ஆதார் அட்டையில் அவர் பெயருக்குப் பின் தந்தையின் பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. மற்ற சான்றிதழ்களில் தந்தை பெயரின் முதல் எழுத்து மட்டுமே இருக்கும்.

தமிழகத்தில் பெரும்பான்மையாக இந்த முறையில் மட்டுமே பெயர்கள் எழுதப்படும். ஆனால் கொடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் தந்தையின் முழுப்பெயர் விண்ணப்பதாரரின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர மற்ற பெரும்பான்மையான மாநிலங்களில் தனது பெயருக்குப் பின்னால் தான் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை இணைத்து எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. தமிழகத்தில் பெரியார் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகச் சாதி பெயரை இணைத்து எழுதும் வழக்கம் மறைந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் அந்த வழக்கம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆளும் காவி அரசு நேரிடையாக மதவாத சாதிய பிரிவினைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆதார் அட்டைகளில் தமிழத்தில் வழக்கத்தில் இல்லாத கடைசிப் பெயர் இணைக்கும் முயற்சியும் அதன் ஒருவகையே. இந்தப் பிரச்சனையின் காரணமாக விண்ணப்பம் முழுமை பெறாத நிலையில் எனது தந்தை ஆதார் விபரங்களைத் திருத்தும் முயற்சிகளைத் தொடங்கினார்.

எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அரசு ஆதார் மையம் ஒன்று உள்ளது. காலை 9 மணிக்கு முகாமை அடைந்தவர் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வருகிறார். இதே போல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் விபரங்கள் மாற்ற, புதிய அட்டை பெற என அங்கே கூடியிருந்த கூட்டம் மிக அதிகம். ஒரு வழியாக விபரங்கள் மாற்ற விண்ணப்பித்தாயிற்று, இரண்டு நாள் கழித்து அதே மையத்திற்குத் தொலைபேசி மூலமாக அட்டை பெற எப்பொழுது வர வேண்டும் என்று கேட்ட பொழுது, குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்குமே என்று அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுதான் அந்தக் குறுஞ்செய்தியைத் தேடி படிக்கிறார்கள். விண்ணப்பித்த அன்றே ஆதார் விபர மாற்றத்திற்கான தங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது.

இந்த மாதிரி செய்தி வரும் என்று சொல்ல வேண்டியக் கடமை யாருக்கானது என்று தெரியவில்லை. அலைபேசிகளை வெறுமனே பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்துபவர்கள், ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள், அலைபேசி இல்லாதவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சரி இந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது, மீண்டும் அதே முகாமிற்கு மீண்டும் விண்ணப்பிக்கச் செல்கிறார். விண்ணப்பித்துவிட்டு வீடு வந்து சேர்கிறார். இந்த முறை அலைபேசி குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறார். அன்று மாலைக்குள் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வருகிறது. அடுத்த நாள் அந்த முகாமிற்கு அழைத்துக் கேட்கிறார், எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று? அந்த முகாமில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை.

இப்போது என்ன செய்வது, யாரைப் போய்க் கேட்பது? இணையம் மூலமாகவும் இந்த விபரங்களை மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று நான் சொன்னேன். அங்கிருந்து சான்றிதழ்களை எனக்கு அனுப்பி நான் இங்கே விண்ணப்பிப்பதற்குப் பதில் அங்கேயே ஏதெனும் ஒரு தனியார் இணையச் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்து, ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். காலை விண்ணப்பம் பூர்த்திச் செய்யப்பட்டு அந்தச் சேவை மையத்திற்கு 50 செலுத்திவிட்டு வீடு வந்து சேர்கிறார். வந்து சேரும் முன்னரே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வந்து சேர்கிறது. மீண்டும் அந்த இணையச் சேவை மையத்தை அணுகி விசாரிக்கும் போது கொடுக்கப்பட்ட சான்றிதழ் தவறு என்று வந்துள்ளது. அதாவது வங்கி கணக்குப் புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டு இருந்தது. அதுவும் பாரத வங்கி கணக்குப் புத்தகம். அரசங்கத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய வங்கி கணக்குப் புத்தகம் ஆதார் அட்டை பெற ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் ரேஷன் அட்டையைச் சான்றாக வைத்து விண்ணப்பிக்கப்பட்டது. இந்த முறை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அலைபேசிக்கு செய்தி வரவில்லை. அதே வேளையில் நிராகரிக்கப்பட்டது என்றும் செய்தி வரவில்லை. ஒருவழியாக ஆதார் பெயர் மாற்று விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அனுமானித்துக் கொண்டு நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்க இணையச் சேவை மையத்திற்குச் செல்கிறார்.

படித்தவர்களும் பாமரர்களே
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே

முதலில் ஆதார் பெயர் மாற்ற விண்ணப்பத்தினைப் பார்க்கிறார்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. புதிய ஆதார் மின்னணு அட்டையும் கிடைத்து விட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. முதல் பக்கம் முடிவில் பெயர் விபரங்கள் ஆதார் விபரங்களோடு ஒப்பீடு நடக்கிறது. ஒப்பீட்டின் முடிவில் கொடுக்கப்பட்ட பெயரும் ஆதார் விபரமும் ஒத்து போகவில்லை என்று வருகிறது. அப்படி என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விபரங்கள் அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்கள் மட்டுமே இந்த இணையத்தில் உள்ளீடு செய்யப்ட்டுள்ளது. புதிய விபரங்கள் இணைக்கப்படவில்லை. புதிய விபரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான வசதி செய்யப்படவில்லை. இப்போது என்ன செய்வது?? இதற்கிடையே நீட் அலுவலகத்தை அலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள நடந்த கூத்துகள் வேறு உள்ளது. அதைப் பின்னர்ப் பார்ப்போம். இப்போது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முதலில் முடித்து விடுவோம்.

இந்த முறையும் தோல்வி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து இருக்கத் தெரிந்த நபர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிறார். அவருக்கும் ஆதார் பெயரில் மாற்றம் செய்யப்படவேண்டி இருந்ததால் அந்தப் பணிகளை எல்லாம் ஏற்கனவே முடித்து வைத்து இருந்தார். அந்தப் பெண்ணுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. சரி, அவர்கள் என்ன முறையைப் பின்பற்றிப் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று விசாரித்தார். அவர்கள் பெயர் மாற்றம் செய்யவில்லை, புதிதாக ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்துப் பெற்று இருக்கிறார்கள். அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்களை மாற்ற முயற்சிக்கும் பொது அவர்களுக்கு இதே போல் பிரச்சனைகள் வந்து உள்ளது. ஆகையால் பெயர் மாற்றம் செய்ய மீண்டும் முயற்சிக்காமல் புதிய அட்டை விண்ணப்பித்துப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் புதிய யோசனை ஒன்று வந்தது. அதாவது விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கொடுக்காமல், ஆதார் பெயர் மாற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை கொடுத்து முயற்சிக்கலாம் என்று. விபரங்களைச் சரி பார்க்கும் போது இந்த விண்ணப்ப எண்ணை வைத்து தேடும் போது புதிய விபரங்கள் கொடுக்கப்படும் அப்பொழுது எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு வழியாக இந்த யோசனை மூலம் முதல் பக்கத்தைத் தாண்டி அடுத்தடுத்த பக்கங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு வழியாக விண்ணப்பம் பணம் செலுத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தேர்வு கட்டணம் ரூ.1400 ஆனால் இணையச் சேவை மையம் பெற்றுக் கொண்டது ,ரூ.1600 . நல்லது… ஒருவழியாக விண்ணப்பம் முடிந்தது. இன்று இரவு அவருடன் அலைபேசியில் உரையாடும் போது அவர் சொன்னதுதான் முக்கியம். இரண்டு வாரத்திற்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கப் போகிறேன் என்று. அதன் பிறகும் ஒன்றைச் சொன்னார் இதுக்கு மேல விண்ணப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார், நானும் அதையே நம்புகிறேன்.

இதற்கிடையே நீட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள நான் முயன்றேன். அவர்களது இணையதளத்தில் 5 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலை வரை 1000 முறைக்கு மேல் முயற்சி செய்து விட்டேன் ஒரு முறை கூட என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்நேரமும் பிஸி என்று தான் வந்தது. சனி ஞாயிறு விடுமுறை வேறு, வேலை நாட்களிலும் காலை 9 30 மணி முதல் மாலை 5 மணி வரைதான் சேவை. 5 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது, ஒன்றுக்கு கூட இது வரை பதில் இல்லை.

இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது. அவர்களால் முடியாத பட்சத்தில் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் மாணவன் நேரடியாக இந்த வேலைகளைச் செய்ய இயலுமா என்பது கேள்விக்குறிதான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் மட்டும் இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்றால் அதுவும் இந்தக் கல்வி சந்தையில் கேள்விக்குறியே? ஆனால் நீட் தேர்வு இல்லாத சமயத்தில் கிடைக்கும் ஒன்று இரண்டு இடங்கள் கூட இப்போது கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

நன்றி: பேஸ்புக்கில் Sakthi Vel

  1. In democracy why our voice is under-powered. Why could not defeat these bloody bastards on the next Parliament election. when Koodunkulam people fights, neduvasal people did not bother. When kaveri basin farmers fights mullai periyaar farmers did not bother. when some people fights for gail pipeline why the neet students 4 their families did not bother.

    • ஆமாம் இப்படி பேசி பேசியே இந்தியாவை முடக்கி போடுங்கள் நீட் தேர்வின் மூலம் தரமான மாணவர்கள் உருவார்கள் ஆனால் மருத்துவ கல்லூரிகளுக்கு வருமானம் கிடைக்காது அவர்கள் சொல்லும் கருத்துக்களை உங்களை போன்ற ஆட்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

      தேர்வு இல்லாமல், திறமையில்லாமல் பணத்தை கொடுத்து மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களால் என்ன நன்மை ? தமிழக மாணவர்களின் திறமையை அழிக்கும் காரியங்களை தான் அரசியல்வாதிகள் நீட் எதிர்ப்பின் மூலம் செய்கிறார்கள், திறமையான மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆகலாம் என்ற நிலையை கொண்டு வர பார்க்கிறார்கள்.

      • நல்லது.. என்னுடைய பதிவில் கூறப்பட்ட செய்திகள் இந்த தேர்வின் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும் போது ஏற்பட்ட சொந்த அனுபவம்.. கடைக்கோடி மக்களால் இந்த வழிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதுதான் ஒட்டுமொத்த பதிவின் கேள்வி.. இதற்கு நீங்கள் கூறிய மறுமொழி சிறிதும் ஏற்புடையதல்ல..

        “நீட் எதிர்ப்பின் மூலம் செய்கிறார்கள், திறமையான மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆகலாம் என்ற நிலையை கொண்டு வர பார்க்கிறார்கள்”.. நீட் தேர்வின் மூலம் எவ்வாறு பணமற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்புள்ளது என்று சற்று விளக்கினால் சரியாக இருக்கும்.. நுழைவு தேர்வு இல்லாமல் வெறும் பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் மூலம் நடக்கும் கலந்தாய்வுகளின் வாயிலாகவே இன்னும் ஏழை மாணவர்களால் மருத்துவம் பயில முடியவில்லை.. இந்த நிலையில் நுழைவு தேர்வு என்று ஒன்று இருக்குமானால் அதை எப்படி இந்த ஏழை மாணவர்களால் எதிர் கொள்ள முடியும்.. மாநில அளவிலான நுழைவு தேர்வு கூட பரவாயில்லை.. அதில் மாநில பாடத்திட்ட்டத்தில் இருந்து வினாக்கள் வரும் ஏற்கனவே படித்ததை வைத்து ஒப்பேத்தி விடலாம்.. தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்பது எவ்வளவு பெரிய சூழ்ச்சி.. இதில் தேசிய படத்திட்டத்தில் இருந்துதான் பெருபாலும் வினாக்கள் வரும்.. அதனை எதிர்கொள்ள ஏழை மாணவர்கள் தனியாக வகுப்புகள் ஏற்பாடு செய்து அதில் பயில வேண்டும்.. வெறும் மூன்று மாதத்திற்க்கு 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை கூட இந்த வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. இதில் ஒரு சாதாரண வகுப்பை சேர்ந்த மாணவனால் சேர்ந்து படிக்க முடியும் என்பது நடக்காத காரியம்..

        இந்த நுழைவுத்தேர்வு மூலம் சாதரண வகுப்பை சேர்ந்த ஏழை மாணவர்கள் வரமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம் இந்திய தொழில் நுட்ப கல்லூரிகள் (ஈஈT).. அதாவது இந்த கல்லூரிகளில் சேர்ந்து பொறியியல் பயில தேசிய அளவிலான நுழைவு தேர்வு எழுத வேண்டும்.. இப்படி ஒரு தேர்வு இருப்பதே கிராமப்புற மாணவர்களுக்கு தெரியாது.. இதற்கு நான் ஒரு உதாரணம். (வேறு ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்த பின்புதான் அங்கு வந்த நகர்ப்புற மாணவர்களின் மூலம் இப்படி ஒரு தேர்வு உள்ளதை அறிந்தேன்).. இது நடந்து இப்போது 8 வருடங்கள் ஆகிறது.. இப்போது எந்த அளவுக்கு இந்த தேர்வு அறிமுகமாகி உள்ளது என்று தெரியவில்லை.. இன்றைய நிலையில் கூட இந்த கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பம்.. மொத்த எண்ணிக்கையில் 1 சதவிகிதம் கூட வராது.. உங்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. தெரிந்திருந்தாலும் நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள் என்பது உங்கள் மறுமொழியின் முதல் வாக்கியமே சொல்கிறது..

        • ஒரு உதாரணம் நீட் தேர்வில் தென்இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள் (வெறும் 41 சதவீத தமிழக மாணவர்கள் தான் மருத்துவம் படிக்க தகுதியானவர்களாக இருக்கிறார்கள்) கேரளாவில் உள்ள மாணவர்களில் 80 சதவீத மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள் (ஆந்திரா 72 சதவீதம் தெலுங்கானா 77 சதவீதம் கர்நாடக 71 சதவீதம்…) தமிழகத்தின் கல்வி தரம் எந்தளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்… தமிழக பிளஸ் 2 தேர்வில் 200 க்கு 200 வாங்கிய மாணவனால் அண்ணா யூனிவர்சிட்டி முதல் வருட படிப்பில் தேற முடியவில்லை, அந்தளவுக்கு தமிழகத்தில் பள்ளி கல்வி தரம் தாழ்ந்து இருக்கிறது.

          உள்நாட்டில் உள்ள மாணவர்களோடு போட்டி போடவே பயந்தால் எப்படி சர்வதேச தரம் உள்ள மாணவர்களை தமிழகம் உருவாக்குவது ? உங்களை போன்றவர்கள் தமிழக மாணவர்களின் வாழ்வுக்கு பெரும் தீமையை கொண்டு வந்து இருக்கிறீர்கள்…

          அரசு பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று மூடினாலும் கவலையில்லை ஆனால் அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற கூடாது… அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மட்டும் CBSE பள்ளியில் படித்து ஹிந்தி மற்றும் தரமான கல்வியை கற்கலாம் ஆனால் சுப்பனின் மகனும் குப்பனின் மகனும் எந்த சூழலிலும் ஹிந்தி கற்று கொள்ள கூடாது, தரமான கல்வி அவனின் மகனுக்கு கொடுக்க கூடாது என்பதில் அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாக இருக்கிறார்கள்.

          தமிழக அரசு தரமான பாடத்திட்டம் கொண்டு வந்தால் ஏன் கோச்சிங் கிளாஸ் போக வேண்டும், பள்ளியில் கற்கும் கல்வியே போதுமே IIT மற்றும் நீட் தேர்வுகளை எழுத… ஆனால் தரமான கல்வியை தமிழக மக்களுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் கொண்டு வரமாட்டார்கள்.

          **********

          • சார்வால் மணிகண்டன்,

            சக்திவேல் எழுப்பிய எதார்த்தமான கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க துப்பில்லாமல் ஏன் மழுப்புகிறீர்கள்? சந்துல இந்தி வேற…இந்த பொழப்புக்கு பேசாமல்………………..

            தமிழகத்தின் கல்விதரம் குறைந்து இருப்பதற்கு நீட் தேர்வு மற்றும் இந்தி இல்லாதது தான் காரணம் என்றால் அதைவிட கோமாளித்தனமானது எதுவுமில்லை.

            தமிழகத்தை விட தனி நபர் வருமானம் மிகக் குறைவான பீகார், மதிய பிரதேஷ், உத்திர பிரதேஷ், சத்தீஸ்கர், இராஜஸ்தான் உள்ளிட்ட ஹிந்தி பெரும்பான்மை மக்கள் கொண்ட மாநிலங்களும் தான் கல்வித்தரத்தில் தமிழகத்தை விட தாழ்ந்து உள்ளன. அதனால் உங்கலால ரீலு சுத்த முடியாது. எங்க போனாலும் இந்தி கொண்டு வந்து இடையில் சொருகும் உம்முடைய பித்தலாட்டங்கள் எல்லாம் எடுபடாது.

            ஹிந்தி பெரும்பான்மையாக பேசும் மாநிலங்கள் தமிழகத்தை விட பொருளாதரத்தில் , கல்வியில், சுகாதாரத்தில், பெண்கள், சமூக பாதுகாப்பில் தமிழகத்தை விட பின்தங்கியே இருக்கின்றன.

            சரி நீட் தேர்வை பொறுத்தவரை….
            https://www.vinavu.com/2016/09/30/neet-sc-true-colour-revealed/

            இந்த கட்டுரையே உமக்கு சமர்ப்பணம்……

            • நான் சொல்ல வரும் விஷயமே இது தான், தமிழக மக்களின் திறமையை குறைத்து எடைபோட்டு அவர்களின் கல்வி தரத்தை மேலும் மேலும் குறைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது தான் நான் வைக்கும் குற்றச்சாட்டே… எப்படி ஆந்திரா மாணவர்கள் மட்டும் எப்படி அதிகளவில் IIT நுழைவு தேர்வில் அதிகளவில் வெற்றி பெற முடிகிறது, ஏறக்குறைய 7000 மாணவர்கள் (ஆந்திரா மற்றும் தெலுங்கானா) அவர்கள் மாநிலத்தில் இருந்து நுழைவு தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து வெறும் 790 மாணவர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்… தமிழகத்தின் கல்வித்தரம் அந்தளவுக்கு குறைவாக இருக்கிறது, இதை மாற்ற வேண்டும் தமிழக மாணவனுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

              தமிழக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அனைவருக்கும் ஹிந்தி கற்று கொடுக்கப்படுகிறது தரமான CBSE கல்வி அவர்களுக்கு கிடைக்கிறது ஆனால் குப்பனையும் சுப்பனையும் முட்டாள்களாக நினைத்து கொண்டு அவர்கள்

          • குப்பனும் சுப்பனும் இந்தியையும் நீட் தேர்வையும் எழுதுவதை விட அஞ்சாம் கிளாஸ் முடிக்கணும் அதுதான் சாரே இன்றியமையாதது. ஆசிரியரே இல்லாத பள்ளிகூடங்கள், ஓராசிரியர் உள்ள பள்ளிகூடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற பள்ளிகூடங்கள் … இவை தாம் கல்வித் தரம் இல்லாமல் போனதர்க்கான காரணங்கள்.

          • உள்நாட்டில் மாணவர்களோடு போட்டு போடுவதற்கு யார் பயப்படுகிறார்கள்? நீட் தேர்வு என்பது என்ன வென்று அறியாத மாணவர்கள், பயிற்சியினை எடுப்பதற்கு வாய்ப்புகள் ஏதுமற்ற மாணவர்கள் எப்படி அறிவாலியே பயப்படுகிறார்கள்? நாகூசாமல் அயோக்கியத்தனமாக கூறுகின்றீர்கள். உமது நாக்கிற்கு நரம்பில்லை என்றாலும் வாய்க்கு வந்தபடி பேசுவது தகுமோ…

            • தற்போது தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறைந்து விட்டது, சில பள்ளிகளில் மாணவர்களே இல்லை ஆசிரியர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள், சில அரசு பள்ளிகளில் மிக குறைந்த மாணவர்கள் தான் இருக்கிறார்கள், அதற்காக மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்க சொல்லி ஆசிரியர்கள் கெஞ்சும் நிலை இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

              இதற்கு காரணம் தனியார் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள் அதனால் அரசு இலவசமாக கல்வி கொடுத்தாலும் சுப்பனும் குப்பனும் தனது பிள்ளையை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறான். ஆனால் சுப்பனுக்கும் சுப்பனுக்கும் தமிழக கல்வி தரமே தாழ்ந்து இருக்கிறது என்பது தெரியவில்லை.

              தரமான கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று சுப்பனும் குப்பனும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறான் ஆனால் தமிழக அரசியல் தரமற்ற கல்வியை கொடுத்து அவனை வஞ்சிக்கிறது.

          • 200 க்கு 200 வாங்கினால் அறிவாளி என்று யார் இங்கே கூறுகிறார்கள்?. பெரும்பாலான தனியார் பள்ளிகூடங்களில் 10 அம வகுப்பிர்க்கான பாடங்களை 9 லேயேயும் 12 ற்கான பாடங்களை 11 அம வகுப்பிலேயே தொடக்கி விடுகிறார்கள். பின்னர் அது மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதாக முடிகிறது. இது கல்வியை தனியார்மயமாக்கியதன் விளைவு. ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சரியான முறையிலேயே பாடங்கள் கர்பிக்க்படுகின்றன. ஆனால் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியின்மை காரணமாகவும் சமூக பொருளாதார பிரசினைகலாளும் மாணவர்களால் மதிப்பெண் எடுக்க முடிவதில்லை.

            இது பசுவின் மூளைக்கு விளங்காதத்தில் வியப்பில்லை.

            • நீங்கள் இன்னும் பிரச்சனையை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

              சமீபகாலங்களில் தமிழகத்தின் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்த்தால் ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும் 2010 ல் 85 சதவீதம் இருந்த வெற்றி பெற்ற மாணவர்கள் 2016 ல் 91 சதவீதம் உயர்ந்து இருக்கிறது அதற்கு நீங்கள் சொல்வது போல் முன் கூட்டியே பாடங்களை நடத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, தேசியளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் கடைசி இடத்தில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்மா ? அதற்கு என்ன காரணம் என்று உங்களால் நேர்மையாக பதில் சொல்ல முடியும்மா ?

              ஆங்கிலம் 27வது இடம்
              கணக்கு 25 வது இடம்
              அறிவியல் 21 வது இடம்
              சமூக அறிவியல் 28 வது இடம்

              NCERT ரிப்போர்ட்

              இப்படி தமிழக மாணவனுக்கு தரமற்ற கல்வியை கொடுத்து அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்கள், இந்த மாதிரி தரமற்ற கல்விக்கு எதிராக போராட தமிழகத்தில் ஒருவரும் இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனையான விஷயம்.

              • முதலில் இந்த பதிவின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டு கருத்துக்களை வெளியிடுவது முறையாக இருக்கும். இந்த தா பதிவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மணிகண்டன் இது வரை எந்த கருத்துகளையும் சொல்லவில்லை.. இந்த பதிவின் நோக்கம் நீட் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் முறையில் உள்ள நடைமுறை சிக்கலைகளையும்.. கடைநிலை ஏழை மாண்வர்களால இந்த வழிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வினை எழுதி விட முடியுமா என்பது தான்? அது மட்டுமல்லாது டிஜிட்டல் இந்தியா, ஆதார் போன்ற திட்டங்கள் எந்த அளவுக்கு கடைநிலை மக்களை பாதிக்கிறது போன்றவையும் அடங்கும். முதலில் அவர்களால் விண்ணப்பிக்கவே முடியாத பட்சத்தில் எவ்வாறு தேர்வு எழுத முடியும்.

                அதற்க்காக நான் நீட் தேர்வு அவசியம் என்று எப்பொழுதும் சொல்லவில்லை.. நீங்களே ஒத்துக்கொள்வது தமிழகத்தின் கல்வித்தரம் தாழ்ந்து விட்டது என்று.. அப்படி மிகவும் குறைந்த தரத்தில் பயிலும் மாணவன் எவ்வாறு தரம் உயர்ந்ததாக நீங்கள் சொல்லும் மாணவர்களோடு போட்டி போட முடியும். அது கண்டிப்பாக இயலாது. அவ்வாறு போட்டி போடா வேண்டும் என்றால் முதலில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் நீட் தேர்வுக்கு செல்ல முடியும்.

                தரம் உயர்த்துதல் என்பது உங்கள் பார்வையில் ஆங்கில கல்வி மற்றும் இந்தி பயிலுதல். இதை விட முட்டாள் தனமான வாதம் எங்குமே இருக்க முடியாது. முதலில் கல்விக்கும் மொழிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை புரிந்து கொண்டு வாதங்களை வைப்பது நல்லது. ஆங்கிலம் இந்தி கற்றவனெல்லாம் பெரிய அறிவாளியா? அப்படி என்றால் ஆங்கிலம் மொழியை தாய் மொழியாக கொண்ட வெளி நாடுகளில் இருக்கும் அனைவரும் அறிவாளிகளாக இருக்க வேண்டும் அப்படி இருப்பது இல்லை.. அதே போல் இந்தியை தாய் மொழியாக கொண்ட வட மாநிலங்களில் ஏழைகளே இருக்க கூடாது.. இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில உள்ளது என்பது கூடுதல் தகவல்.. நீங்கள் சொல்லும் இந்தியை பேசும் மாநிலங்கள் தமிழகத்திற்கு கீழ் இருப்பதை வைத்து பார்த்தால் உங்கள் இந்தி பற்றிய வாதம் சுத்த உளறல் என்பது புரியும்.

                மொழி என்பது வரும் கருத்து வெளியிடலுக்கு உதவும் ஒரு ஊடகம் மட்டுமே..எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் இவர்களுக்கு தெரிந்த வற்றை நான் அறிந்து கொள்ளவும் உதவும் ஊடகம் மட்டுமே மொழி.. வெறும் சைகை அறிந்தவர்களுக்கு மொழி என்பது தேவை கூட இல்லை. மொழிக்கும் கல்வி தரத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.. இன்னும் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால் இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக அழிவிலான அறிவியல் கலை சொற்கள் புழக்கத்தில் உள்ளது.

                ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக பேர் தேர்வினை கடந்து வருகிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்.. அதை நினைத்து ஆதங்கம் வேறு.. நீங்கள் ஒரு கிணற்று தவளை என்பது புறிகிறது.. அங்கு நடத்தப்படுவது கல்வி கூடங்கள் அல்ல தொழிற்சாலைகள் அல்லது பட்டறைகள்.. ஆறாம் வகுப்பு சேரும் போதே இந்த தேர்வுகளுக்கான பயிலரங்கம் தொடங்கப்பட்டு விடுகிறது.. இதுதான் தரமான கல்வி முறை என்றால் அப்படி ஒரு கல்வி என் சந்ததிக்கு கண்டிப்பாக தேவை இல்லை.. கல்வி என்பது வெறும் மதிப்பெண் கிடையாது.. பயின்றதை வைத்து அவன் வாழ்வியல் நிகழ்வுகளையும், சமூக அவலங்களையும் ஒருங்கே புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது மட்டுமே தரமான கல்வி.. வெறும் மதிப்பெண் பெற்று ஏதேனும் தொழிற்சாலையிலோ, மென் பொருள் நிறுவனத்திலோ கனரக இயந்திரங்களுக்கு நடுவே மனித இயந்திரமாக வேலை செய்யும் வகையில் கொடுக்கப்படும் கல்வி என்பது கல்வியே இல்லை.. சொல்ல போனால் இந்த மனநிலை தான் கல்வியின் தரம் இன்னும் உயராமல் இருக்க காரணம்..

                • ஹிந்தி கற்பதை கல்வி தரத்தோடு ஏன் குழப்பி கொள்கிறீர்கள் என்று புரியவில்லை…

                  நான் சொல்ல வருவது இது தான்.

                  தயாநிதி மாறனை மத்தியில் அமைச்சராக கொண்டு வந்த போது சொன்ன வார்த்தை மாறனுக்கு ஹிந்தி தெரியும், அதனால் வட இந்தியர்களோடு கலாநிதி சுலபமாக பழக்க முடியும், ஹிந்தி தெரியும் என்பதை ஒரு தகுதியாக கருணாநிதி சொன்னார், ஆனால் தமிழக அரசியல் குப்பனையும் சுப்பனையும் ஹிந்தி கற்க கூடாது என்று அவனுக்கான வாய்ப்பை மறுக்கிறது. இந்த அரசியலை தான் நான் குறை சொல்கிறேன்.

                  சமசீர் கல்வியில் ஒரு பாடத்தை புரிகிறதோ இல்லையோ மனப்பாடம் செய்து அதை அச்சு பிசகாமல் விடைத்தாளில் எழுதினால் போதும் உங்களுக்கு முழு மதிப்பெண் கொடுத்து விடுவார்கள். இது தான் கேள்வி இது தான் விடை இப்படி தான் சமசீர் கல்வி இருக்கிறது.

                  CBSE பாட திட்டத்தில் இப்படி மனப்பாடம் மட்டும் செய்து தேர்வில் வெற்றி பெற முடியாது, கேள்வியை புரிந்து கொண்டு பதிலை நாம் சொந்தமாகவே எழுதலாம். CBSE பாட திட்டத்தில் analysis and reasoning அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அதனால் மாணவர்களின் அறிவு திறன் வளர்கிறது, அதனால் அந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெறுகிறார்கள்.

                  சமசீர் கல்வியில் இருக்கும் குறைகளை மறைக்க நீங்கள் வேண்டுமானால் IIT தேர்வுகளில் CBSE பாடங்களில் இருந்து தான் கேள்வி கேட்கிறார்கள் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளலாம் ஆனால் உண்மை அது அல்ல.

                  • முதலில் வரலாறு பற்றி சிறிது தெரிந்து கொண்டு வாதிட வருவது நல்லது..

                    தமிழகத்தில் நடந்தது தனிப்பட்ட மொழியை எதிர்த்து அல்ல கொளகையை எதிர்த்து. ஹிந்தி என்ற மொழி அளவில் அது மதிக்கப்படவேண்டியது.. அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.. அதே வேளையில் அது கட்டாயமாக்கப்படும் போது எது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது.. இங்கு யாரும் ஹிந்தியே படிக்க கூடாது என்று யாரும் போராட வில்லை.. தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் யாரும் எந்த மொழியையும் கற்கலாம்.. அதே வேளையில் இந்த மொழியை கற்றே ஆகா வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது.. இந்த விவாதித்தால் ஹிந்தியை உள்ளெ இழுத்தது நீங்கள்தான் எனபதை நினைவூட்ட வேண்டியது எனது கடைமை..

                    கொஞ்சமாவது வெளி உலக அறிவை பெற்றுக்கொண்டு பின்னர் மணிகண்டன் விவாதத்திற்கு வந்து இருக்கலாம்.. ஐஐடி க்கான தேர்வு முறை பற்றி சிறிய விளக்கம்.. இந்த தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட ஐஐடி இன் கண்காணிப்பின் கீழ் வருடம் ஒரு ஐஐடி ஆக நடத்தும்.. அதற்கு கேள்விகள் தேர்வு செய்வது முதல் எந்தெந்த இடங்களில் தேர்வு நடக்க வேண்டும் யார் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்பது வரை அந்த ஐஐடி தான் முடிவு செய்யும்.. ஒவ்வொரு ஐஐடி யிலும் இந்த தேர்வு (JEE) நடத்துவதற்கே தனி அலுவலகம் அதற்கு பொறுப்புக்காக ஒரு பேராசிரியர் என ஒரு பெரிய கட்டமைப்பு இருக்கிறது.. இந்த அமைப்பு ஒவ்வொரு மாநில பாடத்திட்டத்தையும் கணக்கில் எடுத்து கேள்விகளை தேர்வு செய்வது இல்லை.. இதற்கு மேல் இந்த ஐஐடி நிறுவனங்கள் அனைத்தும் என்னை பொறுத்த வரை நாட்டின் சாபக்கேடுகள்.. ஒட்டுமொத்த சாதிய ஒடுக்குமுறையின் தலைமையகம்.. மத ரீதியான முட்டாள்தனங்களின் பயிலகம்.. ஊரை எப்படி ஏமாற்றுவது என்று கற்று கொடுக்கும் பட்டறை..

          • Manikandan is roaming in which LOGA?According to you,CBSE is standard education pattern.Is it not?Please analyse students from which stream are attending coaching classes for NEET and IIT.Only CBSE students are attending these classes in large numbers in spite of the fact questions in NEET as well as IIT JEE are set as per CBSE pattern.

            • ஏன் சமசீர் கல்வி படிக்கும் மாணவர்கள் யாரும் நீட் மற்றும் IIT தேர்வுகளுக்கு கோச்சிங் போவதில்லையா ? அப்படி போயும் தமிழக மாணவர்கள் மிக குறைந்தளவே அந்த தேர்வுகளில் வெற்றி பெருகிறார்களே ஏன் ?

  2. நேற்று தான் கடைசி நாள் நீட் தேர்வுக்கு பதிவு செய்ய, ஆனால் தமிழக அரசாங்கம் எந்த தெளிவான அறிக்கையும்விடாமல் மாணவர்களை அலக்கழிக்கிறது.

  3. இங்கே மணிகண்டன் செய்யும் முட்டாள் தனமான வாதம் ஒன்றை தோல் உரிக்கலாம்; //நீட் தேர்வின் மூலம் தரமான மாணவர்கள் உருவாகுவார்கள் // மருத்துவ கல்லூரி தேர்வுகள் அனைத்தும் அனைத்து இந்திய மருத்துவ சபையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த தேர்வுகள் மாநிலத்திற்கு ஓன்று என நடத்தப்படுவதில்லை. நீங்கள் நீட் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒரே தேர்வு, ஒரே பாடம், எனவே இரண்டு தரவகை அமைய இடமில்லை.
    மேலும் முட்டாள் ஒரு இடத்தில் அண்ணா பல்கலை முதலாமாண்டு தேர்வுகளில் பலர் தேர்ச்சி அடைவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். இதிலிருந்தே, அந்த முட்டாள், தரம் நீட் தேர்வு அல்லது பள்ளி இறுதி தேர்வை தாண்டிய தேர்வுகளில் முடிவு செய்யப் படுகிறது என்று தெரிந்து கொண்டு, இந்த பொய்யான வாதம் கள்ளத் தனமாக செய்யப் படுகிறது.
    இந்த முட்டாள், இன்னொரு இடத்தில், மத்திய கல்வி திட்டத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள், அகில இந்திய அளவில் மிக மோசமான தரவரிசையை மட்டுமே அடைந்துள்ளார்கள் என கூறுகிறார். இதிலிருந்து மத்திய கல்வி திட்டமும், அதில் பயிலும் மாணவர்களும் எந்த விதத்திலும் உயந்ததில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  4. சமச்சீர் கல்வி திட்டம் சிறப்பானது என வாதிடும் வினவு கும்பலுக்கு இரண்டு கேள்விகள்.
    1) புதுச்சேரி அரசு பள்ளிகளில் இவ்வளவு காலம் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டம் (Tamil Nadu State Board Syllabus) தான் பின்பற்றப்பட்டது. இந்த சமச்சீர் கல்வி திட்டம் என்னும் கூத்து வந்தவுடன் புதுச்சேரி அரசானது தனது பள்ளிகளில் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தை படிப்படியாக புகுத்தி வருகிறது. அப்படியானால் புதுச்சேரி அரசாங்கத்தினர் முட்டாள்களா? அவர்களும் அங்கிருக்கும் கல்வியாளர்களை கலந்து ஆலோசித்து தானே இந்த முடிவை எடுத்து இருப்பார்கள். தமிழக அரசு பள்ளிகளில் இருப்பதை விட புதுவை அரசு பள்ளிகளில் கல்வித்தரம் அதிகம் என அங்கு உள்ளவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அங்கு அரசு பள்ளியில் படிப்பதற்கும் தனியார் பள்ளியில் படிப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை என அவர்கள் கூறுவதுண்டு. அரசு பள்ளிகளும் தரமானவை என அவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட புதுவை அரசு பள்ளிகளில் இப்போது சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்பட்டு வருகிறது. இப்படி போனால், எதிர்காலத்தில் புதுவை மாணவர்களுக்கு தமிழ் உணர்வையும் சமூக நீதி சார்ந்த சிந்தனையையும் எங்கனம் ஏற்படுத்த முடியும்?
    2) சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் ஏதோ மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் பாடத்திட்டம் என வாதிடப்பட்டு வருகிறது. தில்லியில், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் (Corporation Schools) சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் பயிற்று மொழியாக இந்தி உள்ளது. பாடப்புத்தகங்களும் இந்தியில் தான் உள்ளன. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
    இந்திய அரசியல் சட்டப்படி மத்திய அரசு தான் அதிக அதிகாரங்களை கொண்டுள்ளது. மாநில அரசுக்கு குறைவான அதிகாரங்கள் தான் உள்ளன. கல்வி என்பது மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டின் அதிகாரங்களுக்கு கீழ் உள்ள ஒரு துறை. அதாவது Concurrent List எனப்படும் பொதுப்பட்டியலில் கல்வி வருகிறது (வருகிறது என சொல்வதை விட மாநில அரசு அதிகாரத்தின் கீழ் மட்டும் இருந்த கல்வி, அவசர நிலை காலத்தில், பொதுப்பட்டியலுக்கு கொண்டு போகப்பட்டது என சொல்வது தான் சரி). ஆகையால் கல்வி சார்ந்த விடயங்களில், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மத்திய அரசோடு மாநில அரசுகள் ஒத்துப்போய் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசை தனக்கு ஏற்றவாறு இணங்கச்செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுத்து கல்வி என்னும் துறையை பொதுப்பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் நான் பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன் (அது சரியாகவே இருந்தாலும்) என நடந்தால் தமிழக மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே அனைத்திந்திய அளவில், மத்திய அரசு அல்லது தனியார் துறை சார்ந்த உயர்கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களை காட்டிலும், பின் தங்கி இருக்கிறார்கள். மத்திய அரசு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மாநில அரசு உயர் கல்வி நிலையங்களை காட்டிலும் கல்வியின் தரம் அதிகம். கட்டணமும் ஒப்பீட்டளவில் குறைவு. உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகம். கல்வி உதவித்தொகை கிட்டுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். இவற்றில் படித்தவர்களுக்கு ஒப்பீட்டளவில் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை உண்டு. ஆனால் தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசின் நிறுவனங்களிலேயே, உயர்கல்வியாக இருந்தாலும் வேலைவாய்ப்பாக இருந்தாலும், தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கு மாநில அரசின் கல்வி சார்ந்த கொள்கைகளே பெருமளவுக்கு காரணம்.
    இந்த சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கருணாநிதியின் குடும்ப சுயநலம் தான் காரணம் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் சங்கிலித்தொடராக சர்வதேச பள்ளிகளை (International Schools) திறந்து கல்லா கட்ட மாறன் சகோதரர்கள் எண்ணி இருந்தார்களாம். அதற்கு ஏற்றாற்போல் மற்ற தனியார் பள்ளிகளை ஒழிக்க அவை பின்பற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் ஒழிக்கப்பட்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்னும் ஒன்று திணிக்கப்பட்டதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
    சமச்சீர் கல்வி என்பது மாநில அரசின் பாடத்திட்டம். சி.பி.எஸ்.ஈ என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொறுப்பான மத்திய அரசின் பாடத்திட்டம். இரண்டுமே அரசுகளின் பாடத்திட்டம் தான். மேலும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது (அம்மாநிலத்தின் தனித்தன்மைகளை உள்ளடக்கி இருக்கும் அதே வேளையில்) பல விடயங்களில் சி.பி.எஸ்.ஈ யை அடியொற்றியே இருக்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் இருந்து மாநிலங்களுக்கு தெளிவான அறிவுறுத்தலே உள்ளது. ஆனால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் தயாரிக்கப்பட்ட போது சி.பி.எஸ்.ஈ யை அரைகுறையாக அடியொற்றி தயாரிக்கப்பட்டதால் தரம் குறைந்தது. கேள்வித்தாள் தயாரிப்பது, மதிப்பீடு செய்வது ஆகியவற்றில் கூட சி.பி.எஸ்.ஈ யை பின்பற்றவில்லை. விளைவு, மோசமான பள்ளி கல்வி தரம். மத்திய அரசும் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் உள்ள கேந்திரிய வித்தியாலயா, சைனிக் பள்ளி ஆகியவற்றை நடத்துகிறது. அவற்றில் கல்விக்கட்டணமும் குறைவு. அவற்றில் வேலை செய்யும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்கள் தான். இட ஒதுக்கீடும் உண்டு. இந்த பள்ளிகளில் சேர்வதற்கு மட்டும் பெரிய பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்களே. அது எப்படி? ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து தானே வருகிறது! அது ஏன்? இத்தனைக்கும் மாநில அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகத்தானே சம்பளம் வாங்குகிறார்கள். மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மட்டும் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?
    மேலும் நீட் தேர்வு மட்டும் அல்ல. மத்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கான தேர்வுகள் முதற்கொண்டு, ஐ.ஐ.டி நுழைவு தேர்வு, யூ.ஜி.சி-நெட் தேர்வு ஆகிய அனைத்து தேர்வுகளிலும் அடிப்படை அறிவை சோதிக்க சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் இருந்தும் பாடப்புத்தகங்களில் இருந்தும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு அரசு தான் நடத்தும் தேர்வுகளில் தான் வகுத்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்பதை எப்படி தவறாக கருத முடியும்?
    இந்த மாதிரி கட்டுரை எழுதிக்கொண்டும் விதண்டாவாதம் பேசிக்கொண்டும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் நம் மாநிலத்துக்கு உண்டான பங்கினை நாம் பெறவே முடியாது. நமக்கு கிடைக்க வேண்டியதை அண்டை மாநிலத்தவர் எடுத்துக்கொள்வார்கள். இப்போதே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. வேலை வாய்ப்புக்கும் வருமானத்துக்கும் உதவாத கல்வியில் என்ன மதிப்பீடுகள் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு பயன் இல்லை. நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தான் இப்படி நடுங்குகிறார்கள். மற்ற மாநிலங்களில் இப்படி இல்லை.

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க