privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநெடுவாசல் நேரடி ரிப்போர்ட் - படங்கள்

நெடுவாசல் நேரடி ரிப்போர்ட் – படங்கள்

-

சோலைவனத்தை கருக்க வரும் HELP – திட்டத்தை முறியடிப்போம்!
புதுகை – நெடுவாசல் மண்ணையும், மக்களையும் பாதுகாப்போம்!

நெடுவாசல் அருகே இருக்கும் நல்லாண்டார் கொல்லையில் உள்ள எரிவாயு போர் எந்திரத்தில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்!

புதுக்கோட்டை – நெடுவாசலில் அமுல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ-கார்பன் திட்டம் என்பது முற்றிலும் புதிய திட்டம் அல்ல. ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ போன்றதுதான். டெல்டா பகுதியில் அமுல்படுத்த முயன்று தோற்றுப்போன மீத்தேன் திட்டத்தில் உள்ள அனைத்துவித பாதிப்புகளும் இத்திட்டத்தில் ஒருங்கே அமைந்துள்ளன.

புதுக்கோட்டை என்றாலே வறட்சி மாவட்டம். ஆனால் அதற்குள்ளேயும் முப்போகம் விளையும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. டெல்டா பகுதி கருகிய சூழலில் அதன் எல்லையோரத்தில் கற்பாறைகள் அற்று, மணல் திட்டுகள் மட்டுமே கொண்ட நீர்பரப்பு பகுதி அது. விளைச்சல் மிகுந்த பசுமை நிறைந்த சோலைவனம்தான் அந்த நெடுவாசல்.

விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், பெட்டிக்கடை, பழக்கடை வைத்திருப்போர், IT, மருத்துவ, பொறியியல், சட்டக்கல்லூரி மாணவர்கள், வெளிமாவட்டத்தில், வெளிமாநிலத்தில் வேலை செய்வோர் என 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் நெடுவாசல் வட்டாரத்தில் வாழ்கின்றனர். விவசாயிகளின் வாரிசுகளான மாணவர்கள் – இளைஞர்கள் தான் இத்திட்டத்தின் பாதிப்பை தமது ஊர் மக்களுக்குத் தெரிவித்து பின் உலகுக்கும் தெரியப்படுத்தினர்.

ஹைட்ரோ-கார்பன் திட்டத்தின் பாதிப்பை உணர்ந்த மறுகணமே போராட துவங்கிவிட்டனர் அப்பகுதி மக்கள். கடந்த ஒரு வார காலமாக நெடுவாசலைச் சுற்றியுள்ள கிராமங்கள் மத்திய-மாநில அரசுக்கு எதிராக ‘கருப்பு’ கொடிகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு கம்பெனி மற்றும் மத்திய-மாநில அரசின் வஞ்சகத்தால் தம்முன்னோர்கள் ஏமாற்றப்பட்டதையும், இனி நாங்கள் ஏமாற மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் உள்ளக் குமுறலை உங்கள் முன் வைக்கிறோம்.

கடந்த 10-3-16 அன்று மோடி அரசு ஹைட்ரோ கார்பன் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP) திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்தது. 11 மாதம் கழித்து 15-2-17 அன்று நெடுவாசல் பகுதியில் இனி வெளிப்படையாக திட்டத்தை அமுல்படுத்தி ஹைட்ரோ-கார்பன் எடுக்க போவதாக அறிவித்தது.

“ தஞ்சை டெல்டா பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட மீத்தேன் திட்டம் வேறு பெயரில் அதே டெல்டா பகுதியின் கடைகோடி பகுதியில் மீண்டும் தொடங்க இருக்கின்றது. எங்க ஊர் புள்ளைங்க சென்னை IT யில படிக்கிறாங்க, வெளிமாநிலத்தில, வெளிநாட்டுல வேலை செய்யுறாங்க, இவங்கதான் இதன் ஆபத்தை புரிஞ்சுக்கிட்டு wattsapp, Facebook மூலம் எங்களுக்கும் தெரியபடுதினாங்க, அதுக்கப்புறம் தான் போராட்டத்தை தொடங்கினோம் “ என்கிறார் அப்பகுதி விவசாயி செல்வம் என்பவர்.

நல்லாண்டார் கொல்லையில் மக்கள் போராட்டம்.

“ 16 வருசத்திற்கு முன்பே அரசாங்கம் அனுமதி வழங்கிருச்சி சார், எங்களுக்கு தெரியல. எங்க ஊருலேயும் 16 வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்க வந்து உங்க ஊருல மண்ணெண்னை புதைஞ்சிருக்கு, அதை எடுத்தா உங்களுக்கு இலவசமா மண்ணெண்னை கிடைக்கும், தார்ரோடு போட்டுதருவோம் என ஆசைக்காட்டி நிலத்த வாங்குனானுவ, அதுக்கப்புறம் அந்த எடத்துல என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இந்தி காரங்க வாட்ச்மேனா இருப்பாங்க. எங்கள உள்ளேயே விட மாட்டாங்க. உள்ளுர்காரங்கள வெளி வேலைக்குதான் வச்சிக்குவாங்க ! அதிகாரிங்க வெளிநாட்டுகாரனுங்க காருல வரும்போது எங்க வயலுக்குள்ள இருக்கும் பயிர் மேல வுட்டு ஏத்திட்டு வருவாங்க.எதுத்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டதால பக்கத்து வயகாரங்கள அடிச்சிருக்காங்க. இப்பதான் தெரியுது இவங்களோட சதிவேலை, எவன் வந்தாலும் எங்க இடத்த விட்டுக் கொடுக்க மாட்டோம் சார்.

இந்த பூமியில எது போட்டாலும் மொளைக்கும் சார். இந்த ஊருல இருந்து 20 கி.மீ சுற்றளவில் நெல், சோளம், வேர்கடலை, பலா, முந்திரி, வாழை, தென்னை, பூ , உளுந்து, மிளகு என எங்க திரும்பினாலும் சோலைவனமா காட்சியளிக்கும். இத அழிக்கிறதுக்கு எப்படி சார் மனசுவருது அரசாங்கத்துக்கு, இந்த இடம் வேணுமுன்னா மொதல்ல எங்கள கொல்லட்டும்  இந்த அரசாங்கம், அதுக்கப்புறம் எரிவாயுவ உறிஞ்சிக்கட்டும் “ என்றார் ஆதங்கத்துடன் ஒரு விவசாயி.

“ எங்கள் ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தோட சேர்ந்தது. இப்போ புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைச்சிட்டாங்க . இங்குள்ள நெடுவாசல மையமா வச்சி கருக்கா குறுச்சி, வாணகண்காடு, மாங்காடு, வடகாடு, புள்ளான் விடுதி, கணியன் கொல்லை, நல்லாண்டார் ஆகிய கிராமங்களிலேயும் போர்போட்டு ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க. அதனையும் இணைச்சி ஹைட்ரோ-கார்பனை உறிஞ்சப் போறாங்களாம். அப்படி உறிஞ்சா இப்பகுதியை சுற்றி வாழும் 5 லட்சம் மக்களின் வாழ்வு கருகிப் போய்விடும் “ என அச்சப்படுகின்றனர்.

நல்லாண்டார் கொல்லையில் எரிவாயு சோதனையின் போது வந்த எண்ணெய்க் கழிவுகள் பல ஆண்டுகள் ஆகியும் அழியாமல் அதே நாற்றத்துடன் தேங்கி இருக்கிறது.

10 வருசத்துக்கு முன்னால 30, 40 அடியில தாராளமா தண்ணீர் கிடைக்கும், இப்ப வறட்சி கடுமையாக இருக்கு, 100, 200 அடி போர் போட்டாத்தான் தண்ணீர் கிடைக்குது. எரிவாயு எடுத்தா மொதல்ல நிலத்தடி நீரத்தான் வெளியேற்றுவாங்களாம். தண்ணீர் இல்லன்னா நாங்க எங்க சார் போவோம். எங்க புள்ள, பொண்டாட்டி, ஆடு, மாடு எல்லாம் எங்கத்தான் போறது. அந்த காலத்துல இலவச மண்ணெண்ணை தரோமுன்னு எங்க முன்னோர்கள ஏமாத்துனாங்க. இப்ப பி.ஜே.பி அமைச்சர் H.ராஜா பேசும்போது மத்திய அரசோட திட்டம் அமுல்படுத்தியே தீருவோம் என்கிறார். அ.தி.மு.க கட்சிகாரனுங்க இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிச்சிட்டாங்க. ஆனா நாங்க இந்த திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம். எங்க உசுரே போனாலும் எங்க நிலத்த தரமாட்டோம் சார் என மத்திய அரசின் மீதான தனது வெறுப்பை உமிழ்ந்தார்கள் அக்கிராம மக்கள்.

மத்திய – மாநில அரசின் உதவியோடு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க போய் தோற்றுப்போன பன்னாட்டு கம்பெனி வேறுபெயரில் டெல்டாவையும் சேர்த்து உறிய நெடுவாசலை நுழைவு வாயிலாக பயன்படுத்த பார்க்கிறது, ஜெம் லேபாரட்ரீஸ் என்ற பன்னாட்டு துபாய் கம்பெனி. இக்கொலைகார கம்பெனியை விரட்டியடுக்கும் வீரமிக்க போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போராட்டத்தை செழுமைப் படுத்தும் வகையில் நம் கண்முன்னே ஏராளமான அனுபவத்தை விதைத்து சென்றுள்ளது ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதே சமயம் தனது போராட்டத்துக்கு தலைமை சக்தியை ஏற்படுத்திக் கொள்ளாததால் இறுதியில் இழப்புகளை சந்தித்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று இங்கும் என் ஜி வோ எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்த முயல்கின்றன.

NGO தலைமையை ஏற்றுக் கொண்ட அனைத்து போராட்டங்களும் தோற்றுப்போய் இறுதியாக ஆளும் அரசுக்கு சாதகமாக கொண்டு சேர்த்ததற்கு பல சான்றுகள் உள்ளன. மத்திய, மாநில ஆளும் கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் அதே போல இத்தகைய  NGO குழுக்களையும் போராட்ட தலைமைக்கு வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.

சாதி – மதம் கடந்து ஜனநாயக – முற்போக்கு சக்திகள் விவசாயிகள் , மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தமக்கான தலைமையை தானே நிறுவிக்கொண்டு போராடும் போதுதான் வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் மிதிக்க மாட்டோம் என்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல மாற்றுப் பெயரில் வரும் மீத்தேன் திட்டத்தை நெடுவாசலை விட்டு விரட்டாமல் எம் தெருவாசலை மிதிக்கமாட்டோம் என்ற போராட்ட அறைகூவலை முன்னெடுத்து செல்வதுதான் நம்முன் உள்ள ஒரே வழி.

 

 

படங்கள்,தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க