privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்வாழ்க்கைவயக்காட்ட பாத்த எவனும் சோத்துல கை வைக்க முடியாது !

வயக்காட்ட பாத்த எவனும் சோத்துல கை வைக்க முடியாது !

-

pongal paanai psவிவசாய உழைக்கும் மக்கள், உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டாடி மகிழும் விழா பொங்கல். ஆனால் எலிக்குக் கூட ஒரு பிடி நெல்லு இல்லாத நிலையில் புத்தரிசி பொங்கலிட எங்கே போவான் விவசாயி? விதைத்த பயிர் பருவமடைந்து தையில் அறுவடைக்கு வந்ததின் ஆனந்தத்தின் வெளிப்பாடான பொங்கல் விழா இவ்வருடம் எழவு வீட்டு விசேசமாகி விட்டது.

அதே தஞ்சையில் மன்னார்குடியின் பெயரைக் கெடுக்கும் சசிகலா நடராசனின் கும்பல் தஞ்சையில் மூன்று நாள் விழா நடத்தி கேளிக்கை நிகழ்ச்சிகள் காட்டி, அறுசுவை ஊட்டி விவசாயிகளை இழிவுபடுத்துகிறது. இந்நிலையில் தஞ்சை விவசாயிகளை சந்தித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எப்படி ஏன்று கேட்டோம்.

நடராஜன்:

“பொங்கலா” விரக்தியுடன் சிரித்தார். “என்னோட ஆயிசுக்கும் பாத்ததில்ல’’. வடிகாலுக்குக் கூட நாத்தங்கால்ல தண்ணி இல்லாத நெலமை. 6 பையி வெதை நெல்லு வாங்குனே, ஆத்துல தண்ணி வருமோ வராதோன்னு பயந்து போர்வல் தண்ணிய நம்பி 3 பையில உள்ள வெத நெல்ல மட்டும் நாத்து விட்டேன். எப்படியும் மழை பெய்யும், ஆத்துல பின்னகட்டியாவது(பின்னாடி) கொஞ்சம் தண்ணி வரும் பாத்துக்கலான்னு நம்புனேன். நம்பிக்கதான் மிச்சம் நாத்து பூத்துருச்சு. பக்கத்தூர் போர்வல்காரரு நாத்த வாங்கிக்கிறதா அட்வான்ஸ்சும் கொடுத்தாரு. நாத்து அரிச்சு சேறு அலம்பக் கூட தண்ணியில்லாம அதுவும் போச்சு. வெத நெல்ல கருதா அறுக்க மனசு வராம மாட்ட விட்டு மேச்சுட்டேன்.

மொத்தமா உழுதுட்டு மார்கழி பட்டம் பயிறு உளுந்து வெதச்சுருக்கேன். ஒரு மழை பேஞ்சா ஒரு பயிறு கருகினாலும் ஒன்னு துளுத்துக்கும். ஆண்டவன் கணக்கு எப்படியோ.? இந்தப் பொழப்பெல்லாம் நம்மோட போகட்டுமுன்னு 2 லட்சருவா 3 பைசா வட்டிக்கி வாங்கி பையன வெளிநாடு அனுப்பிச்சேன். கத்தார் போயி ரோட்டுக்கு தாரு போடுற வேலைங்கிறான். நெஞ்சு வெடிச்சுரும் போலிருக்கு.”

பானுமதி:

மன்னார்குடி மாஃபியாவின் பொங்கல்!

மூணு ஏக்கர் நெலமும் தரிசா கெடக்கு. ஊருக்கே மொதல் ஆளா நடவுநட்டு அறுப்பருப்பேன். அந்த அரிசியிலதான் பொங்கல் வப்பேன். பொங்கலுக்கு முன்ன அறுவடை செய்யாதவங்களுக்கு அறுப்பு முடிஞ்சதும் தாங்கன்னு நெல்லக் கடனா குடுப்பேன். இன்னைக்கி ஒரு பிடி நெல்லு இல்ல வீட்டுல. புதுப்பாணை, புது அரிசி, புது தவுடு எல்லாம் போயி ரேசனுல அம்மா குடுத்த புளுத்தரிசி பொங்கல்தான் இந்த வருசம். என்னத்த சொல்லன்னு சங்கடப்பட்டுதான் பொங்கப் பானைய அடுப்புல வச்சேன்.

நம்ம பாடுதான் திண்டாட்டமுன்னா 2 கறவமாடு நிக்குது. அதுக்கு வைக்கோலும் மில்ல மேச்சலுக்கு புல்லும்மில்ல. ஒரு மழத்தண்ணி பேஞ்சா கொஞ்சம் பயிர் பச்ச இருக்கும். வயக்காட்டுப் பக்கம் போயி பாத்தா விரிச்சான்னு கெடக்கு. காவிரித் தண்ணியும் வந்த பாடு இல்ல.மாட்டுக்கு பாலு கூடுமின்னு ஒரு படி அரிசி கஞ்சி வப்பேன். வெளிய சொன்னா வெக்கம் இப்ப இன்னும் ஒரு படி சேத்து வைக்கிறேன்.”

மாணிக்கம்:

“பொங்கலுக்கும் விவசாயிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாம போச்சுங்க. முன்னெல்லாம் மார்கழி மாசமே கொண்டாட்டம் ஆரம்பிச்சுரும். கருது அறுப்புக்கு வந்துரும். எந்த பக்கம் திரும்புனாலும் களத்துமேட்டுல முட்டு முட்டா நெல்லு குவிஞ்சு கெடக்கும். வெள்ளாம சிறுசோ பெருசோ வெளச்சல் சரியில்லனாலும் வருசம் பூரா உழைச்சவனுக்கு கையில நாளு காசிருக்குற சந்தோசம் தெரியும்.

இந்த நெலம அழிய ஆரம்பிச்சு பல வருசமாச்சு. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா அழிஞ்சது போயி இந்த வருசம் மொத்தமா விவசாயி பொழப்பு தரிசா போச்சு. பொங்கலப்ப தஞ்சாவூரு மார்கெட்டு போயி பாருங்க எள்ளு போட்டா எள்ளு தெரிக்கும் அப்படி ஒரு கூட்டம். வாழத்தாரு வெட்டுன கொண்டக்கட்டையில இடரி விழாதவன் இருக்கவே முடியாது. இந்த வருசம் வாழ, மஞ்ச, கரும்பு எல்லாமே பேருக்குதான் மார்கெட்டுக்கு வந்துருக்கு. அதையும் வாங்க ஆளில்லாம நாதியத்துக் கெடக்கு.

கலைராணி:

“பொங்கலா? பொங்கல் போலவா இருக்கு. ஊருல வேண்டா வெறுப்பா செய்ய வேண்டிருக்கு. இந்நேரம் ஊரே ஜெ ஜென்னு இருக்கும். டி.என்.சி(அரசு நெல் கொள்முதல் நிலையம்) நால்ரோட்டுல நாலாப் பக்கமும் நெல்லு கீயுகட்டி நிக்கும். காஞ்சது, காயாதது நாமுந்தி நீ முந்தின்னு நெல்ல வித்துட்டு பொங்கல் தடபுடலா கொண்டாடிருக்கும் மக்க.

நம்ம கையிலதான் காசு இல்ல கருது அறுத்தவங்க கிட்ட வாங்கிக்கலான்னா அதுக்கும் வழியில்ல. ஆத்துல தண்ணி வல்ல, விவசாயி வீட்டுல அரைக்காப்படி அரிசிக்கி வழியில்ல. இதைப்பத்தி ஆள்றவங்க யாருக்கும் கவலையுமில்ல. ‘யார் வீட்டு எழவோ பாய் போட்டு உறங்குன்னு’ இருந்தா நாங்க மட்டும் அழிய மாட்டோம் எங்களோட சேத்து மத்தவங்களும் அழிஞ்சுதான் ஆகனும்”

எங்களுக்கு மூனு ஏக்கர் சொந்த நெலம் இருந்துச்சு. 10 வருசத்துல படிபடியா எழந்து இன்னைக்கி ஒரு குழி நெலம் கெடையாது. உங்கத் தேவைக்குதானே வித்தீங்கன்னு நீங்க கேக்கலாம். உண்மைதான் ஆனா விவசாயி பொழப்பு இந்த நெலமையில இருந்தா விக்காம என்ன செய்ய முடியும். மூனு வருசமா சும்மாவே இருந்துட்டு இந்த வருசம் மாமா வீட்டு நெலத்து மேல சாப்தாரி போட்டு பேங்குல லோனு எடுத்து டிராக்டெர் வாங்குனோம். ஆத்துல தண்ணி வந்தாதானே ஏரு ஓட்டி சம்பாரிக்க முடியும். பேங்குக்காரன் சும்மா விடுவானா? பைனான்ஸ் எடுத்து தவணையக் கட்டுறோம். எந்த வகையில விவசாயத்துல நொழஞ்சாலும் முன்னேற முடியலையே?

கோபால்:

pongal padayal ps“பானை பொங்குச்சா காலு வீங்குச்சான்னு சொல்லுவாங்க”. விளைச்சலோட சந்தோசம்தான் பொங்கலோட வெளிப்பாடு. வெள்ளாமை இல்லாத இந்த வருச பொங்கல் சடங்குக்கான வெளிப்பாடு.

ஆத்துல தண்ணி வராம நடவு நட்டு என்ன பண்ண முடியும். 90 நாளு பயிருக்கு 60 நாளாவது தண்ணி கெடக்கனும். அரசாங்கத்து மேல நம்பிக்க வச்சு ஆண்டவன் மேல பாரத்த போட்டு நட்டுவச்சுட்டு கடங்கரான் ஆனதுதான் மிச்சம். ரெண்டு ஏக்கர் நெலமும் தரிசா போச்சு. இப்ப மீண்டும் உழுதுட்டு மானாவாரி பயிர வெதச்சு வச்சேன். பயிரப் பாத்தா நல்லாருக்கு களையெடுத்தா ரெண்டு எள்ளு, உளுந்து வெளையும் ஆனா களபுடுங்க மண்ணக் கொத்துனா இருக்க ஈரமும் காஞ்சுப்போயி பயிரெல்லாம் சருகாப் போயிடும். இந்த நெலையில பொங்கவச்சு மண்ணாப் போனேன் போங்க.

விவசாயி வீட்டு எருக்குழி, கட்டுத்தறி, வைக்கப்போரு இதப்பாத்து பொண்ணுக் கூடுன்னு சொல்லுவாங்க. அப்புடி பெருமையோட வாழ்ந்தவன் விவசாயி. இன்னைக்கி தரிசா கெடக்குற நெலத்த பாத்தா நாண்டுகிட்டு சாகலாம் போலிருக்கு. கடைமடை வரைக்கும் பாயும் காவேரி ஆத்துத்தண்ணி ஓடுன ஊருல குடிக்கத் தண்ணியில்லாமப் போவுது. பம்புச்செட்டுல குழாய் நெறையா வந்த தண்ணி இன்னைக்கி காக்குழாய்க் கூட வரல. இருக்குறத அழிச்சுட்டு அடுத்த நாட்டுக்கிட்ட சாப்பாட்டுக்கு கையேந்தப் போறோம். அதவிட அசிங்கம் வேறதுவும் இல்ல. வெள்ளக்கார அரசாங்கமாவது வாழ வழி செஞ்சு குடுத்து நம்மள அடிமையா வச்சிருந்தான். இன்னைக்கி இருக்கவனுங்க இருக்குறத புடிங்கிகிட்டு சாகுங்கடாங்குறான்.

நா எதுவும் தப்பா பேசுறதா நெனைக்க வேண்டாங்க. அம்புட்டு கோவம் வருது. எங்கயோ யாருக்கோ அப்புடின்னு இந்த பிரச்சனைய ஒதுக்க முடியாது. கவலைப்பட வேண்டியவனே விவசாயிங்க சாவு விதி வந்து முடிஞ்சதுங்கறான். ‘கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லைங்க’. வயக்காட்டுப் பக்கம் வந்து ஒரு தரம் பாத்துட்டு போவட்டும். மனசாட்சி உள்ள எவனா இருந்தாலும் சோத்துல கைய வைக்க முடியாது.

அரசு வேளாண்மைத் துறை அலுவலர்:

“பொங்கல் கொண்டாட்டம் நமக்கு சிறப்பா இருந்துச்சு. பொதுவா பாக்கும் போது மக்கள் கடமையேன்னுதான் செய்றாங்க. காரணம் விவசாயம் பொய்யாப் போனதுதான். பொன்னா விளையிற பூமி தரிசாவும், நட்டப் பயிரு தீஞ்சும் கெடக்குறத ஒரு விவசாயியா இருந்து பாக்கும் போது ரொம்ப கொடுமையா இருக்கு.

திருவாரூர் மன்னார்குடி விவசாய நிலம்தான் அதிக பாதிப்பு அதுக்கு காரணம் ONGC நிறுவனத்தால கேஸ் எடுக்கப்பட்ட துளைகள்தான். இதனால கடல் தண்ணி தாராளமா நிலப் பகுதிக்கு வந்துருச்சு. 150 அடிக்கு மேலயே உப்புத்தண்ணி இருக்கு. இதனால போர்வல் தண்ணிய பயன்படுத்த முடியாது. ஆத்துத் தண்ணிய முழுசா நம்பிதான் அந்தப் பகுதி விவசாயம். ஆத்துல வர்ர வண்டல் மண் ஈரப்பதத்த அதிகமா தக்கவச்சு பயிருக்கு பாதுகாப்பா இருக்கும். ஆத்துல அதிகமா மணல் அள்ளப்படுவதால வண்டல் மண்ணுக்கு வழியில்ல. இப்படியே தொட்டு தொட்டுப் பிரச்சனை போயிட்டே இருக்கு.

பாதிப்புக்கு உள்ளான நிலப் பகுதிய கணக்கு எடுத்து அனுப்பனும். வறட்சியால விவசாயம் பாதித்த ஊர்கள்ல நாலு பக்கம் 4 வயல தேர்ந்தெடுத்து 4-க்கு-4 என்ற கணக்குல அறுவடை செஞ்சு எத்தனைச் சதவீத அளவு விளைச்சல் என்பதை நிர்ணயித்து அது பயிர் காப்பீட்டு திட்டத்துக்குள் இருக்கான்னு கணக்கு கொடுக்கனும். பாதிச்சது ஒரு பக்கம் இருக்க கட்சித் தலையீடு குறுக்கிட்டு போர்வெல் பலத்துல விளைஞ்ச பகுதியையும் நிவாரணத்துல சேக்க சொல்லி கொடைச்சல் குடுக்குறாங்க. பொங்கல் ஒரு பக்கம் இருக்க இதுதான் அதிகமா மண்ட காயிது.”

– சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க