privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்

தங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்

-

வுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அரசு முறைப் பயணமாக 5 கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சுமார் ஒரு மாத கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சவுதியிலிருந்து 500 டன் பொருட்களையும், சுமார் 1500 பேர் கொண்ட ஒரு பெரும் பட்டாளத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

மலேசியா, இந்தோனேசியா, ப்ரூனே, ஜப்பான், சீனா, மாலத்தீவு மற்றும் ஜோர்டன் ஆகிய ஏழு நாடுகளுக்கும் வியாபாரம் மற்றும் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, இவ்வாண்டு (2017) பிப்ரவரி மாத இறுதியில் தமது பயணத்தைத் துவக்கியுள்ளார் சவுதி மன்னர் சல்மான். அவருடன் 25 இளவரசர்களும், அவரது உதவிக்காக சுமார் 570 பணியாட்களும், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என சுமார் 800 பேரும் பயணிக்கின்றனர்.

 

அமெரிக்காவின் எடுபிடி ஆனாலும் தங்கப்படிக்கட்டில் தான் பாதம் பதிப்பார்.

இப்பயணத்தில் சவுதி மன்னர் ஒவ்வொரு நாடுக்கும் செல்லும் போதும், அவர் விமானத்தில் ஏறி, இறங்குவதற்கு வசதியாக தங்கத்தால் செய்யப்பட்ட தானியங்கி படிக்கட்டுகள் இரண்டும், அவர் சொகுசாகப் பயணிக்க எஸ்-600 ரக மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் இரண்டும் அவருடன் சேர்ந்து பயணிக்கின்றன. கடைசியாக அவர் இந்தோனேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பெய்த மழையிலிருந்து அவரைக் காக்க அவரது மெய்காவலர்களும், இந்தோனேசிய அதிகாரிகளும் என கிட்டத்தட்ட 7 நபர்களுக்கும் அதிகமானோர் அவருக்குக் குடை பிடித்தனர்.

மழை நீர் பட்டுவிடாமல் மன்னருக்கு குடை பிடிக்கும் அதிகாரிகள்

இது குறித்த படங்களையும், செய்திகளையும் பல்வேறு மேற்கத்திய ஊடகங்களும், தங்களது நாளேடுகளிலும், இணையதளங்களிலும் கிண்டலாகப் பதிவு செய்திருக்கின்றன. சவுதி மன்னரின் தங்கத் தானியங்கிப் படிக்கட்டு, பெரும் ஆட்படை மற்றும் பென்ஸ் கார்களுடனான இந்தப் பயணத்தை, “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம்” என்ற தொனியிலேயே சல்மானின் கிழக்காசியப் பயணத்தைப் பதிவு செய்து வருகின்றன மேற்கத்திய ஊடகங்கள். இந்தக் கிண்டலுக்கு உரிய கோமாளிதான் சவுதி மன்னர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கிண்டல் செய்யும் கனவான்களின் அருகதை என்ன?

பிற்போக்குத்தனங்களின் கூடாரமாகவும், மத அடிப்படைவாத வஹாபியிசத்தின் புகலிடமாகவும் திகழும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் அற்பத்தனமான பகட்டைக் கிண்டல் செய்யும் இதே ஊடகங்கள் தான் உலகின் போலீசுக்காரனாகத் திகழும் அமெரிக்காவின் அதிபர்களின் அருவெறுக்கத்தக்க பகட்டை பிரம்மாண்டமானதாகச் சித்தரித்து எழுதியிருக்கின்றன.

படியிறக்கப்பட்டதும் அரசரை அள்ளிச் செல்லத் தயாராக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

அமெரிக்க அதிபர்களின் பயணத்தின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உத்திகள் பற்றியும், அமெரிக்க அதிபர் பயணிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் குறித்தும், அவருடன் பிரத்யேகமாக எடுத்துச் செல்லப்படும் கார்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறித்தும் , அவ்வாகனங்களில் இருந்து கொண்டே, உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு பொத்தானின் அழுத்தத்தில் அணுகுண்டுத் தாக்குதல் தொடுக்கக் கூடிய அளவிற்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், அமெரிக்க அதிபருடன் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் அடிபொடிகள் குறித்தும்  பயங்கரமாகச் சிலாகித்து பிரமிப்பூட்டும் வண்ணம் எழுதியிருக்கின்றன.

இந்தோனேசியாவில் இசுலாமியத் தலைவர்களோடு சந்திப்பு நடத்தும் வஹாபிகளின் புரவலர் – சவுதி அரசர் சல்மான். ( அமெரிக்க அடியாளும் நானே அல்லாவுக்கு அத்தாரிட்டியும் நானே )

உலக ஆண்டையின் அற்பத்தனமான பீற்றல்களும், படாடோபங்களும்  பெருமிதங்களாகக் காட்டப்படும் போது, அந்த ஆண்டையின் பாதங்கழுவி புதுப் பணக்காரனாக உருவெடுத்திருக்கும் அடிமையின் அற்பத்தனமான பீற்றல்கள் கிண்டலுக்குரியவையாகக் காட்டப்படுகின்றன.  உலக ஆண்டையான அமெரிக்காவின் அதிபர்கள், மேற்கொள்ளும் பயணங்களாகட்டும் அல்லது உலக ஆண்டையின் கைத்தடியான சவுதி அரசர் மேற்கொள்ளும் பயணங்களாகட்டும், மூன்றாம் உலகநாடுகளைச் சுரண்டுவதற்கான இந்தப் பயணங்களின் அருவருக்கத்தக்க படாடோபங்களுக்கும் பீற்றல்களுக்கும் பின்னே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் இரத்தக் கறை படிந்திருக்கிறது என்பதே உண்மை! சவுதி ஷேக்குகள் தமது ஆடம்பரங்களின் வடிவமைப்பை ஆண்டை அமெரிக்காவைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்கள்.

இந்நிலையில் இசுலாத்தின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் சவுதி அரேபியாதான் உலகமெங்கும் வகாபியசத்தை துட்டுக் கொடுத்து ஸ்பான்சர் செய்கிறது. சவுதி அரேபியாவின் எண்ணையெ வளத்தைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காதான் வாகாபியிசத்தை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறது.

இருப்பினும் இந்த தங்கபடிக்கட்டு நாயகனை போராளியாக பார்க்கும் அப்பாவிகளை எப்படி திருத்துவது?