privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கநெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !

நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !

-

’’வாடிவாசலை திறக்காமல் வீடு வாசல் இல்லை’’ என்று மாணவர்களும், இளைஞர்களும், மக்களும் மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்டு பார்ப்பன பாசிச மோடி அரசுக்கு எதிராக மூட்டிய போராட்டத் தீ இன்று நெடுவாசலிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டாமல் வீடு திரும்பமாட்டோம் என்று விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மீண்டுமொரு மெரினா எழுச்சி நடந்துவிடக்கூடாது, காளையை அவிழ்த்துவிட்டது போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ள மோடி அரசோ, தனது எடுபிடியான எடப்பாடியின் போலீசை ஏவி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. இதனை முறியடித்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.

மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி மண்ணெணெய் எடுக்கப்போகிறோம் என்று பொய் சொல்லி விவசாயிகளிடம் குத்தகை பத்திரத்தில் வெறும் கைநாட்டு வாங்கிக்கொண்டு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தில் சுமார் 10 ஆயிரம் அடிக்கு ஆழ்துளை பம்புகளை போட்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு இருப்பதை கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 15 -ந் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவதாக அறிவித்தது மோடி அரசு. அதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமான ஜெம் லெபாரட்டரீஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டுள்ளது.

மக்கள் குடியிருக்கும் கிராமப் பகுதியில், அதுவும் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பது அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடக் கூடியது. பல நாடுகள் இதுபோன்று பூமிக்கு அடியில் இருந்து எரிவாயு எடுக்கும் ஃபிராக்கிங் தொழிற்நுட்பத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால், மோடி அரசோ நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில்  ஹைட்ரோகார்பன் எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதற்குப் பெயர்தான் தேசநலனா? இல்லை. தேசதுரோகம்.

இந்நிறுவனங்கள் அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster)  மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.

இந்த சதியை மூடி மறைத்துக்கொண்டு ’’நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்’’  என்கிறார் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வானரக்கூட்டத்தை சார்ந்த இல.கணேசன். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக தமிழக மக்களை அழிப்பதற்கு பெயர் ‘வளர்ச்சியா?’. இல்லை. இது ஒரு வீழ்ச்சி. கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சியை ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சியாகக் காட்டும் இந்த மக்கள் விரோதிகள்தான் தங்கள் மண்ணையும், மக்களையும் காக்க போராடும் விவசாயிகளை, மாணவர் – இளைஞர்களை, அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் புரட்சிகர, முற்போக்கு அமைப்பைச் சார்ந்தவர்களை தேசதுரோகிகள் என அவதூறு பரப்பி, பீதியூட்டி போராட்டத்தை சீர்குலைக்க பார்க்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் வாழ மக்களை தியாகம் செய்யச் சொல்லும் இந்த தேசவிரோதிகளை தமிழகத்தில் நடமாட அனுமதிக்கலாமா?

ஓட்டுக்கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் மக்கள், அதே போல போராட்டத்தில் புகுந்துள்ள  NGO குழுக்களையும்  நம்பக்கூடாது. பி.ஜே.பி மக்களின் எதிரி என்றால், NGO க்கள் மக்களின் துரோகி. இவைகள் கார்ப்பரேட்டுகள் பெற்றெடுத்த விசவித்துக்கள். இவைகளை புடுங்கியெறிவதோடு, வளர்ச்சியின் பெயரால் மக்களை கொல்ல வரும் கொள்ளிவாய்ப் பிசாசான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், தமிழக மக்கள் மீது நாசகரத்திட்டங்களை அன்றாடம் திணித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலையும் தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம்!

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை – 9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க