privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்காஞ்சிபுரம் : குழம்புச் செலவுக்கே கூலி இல்லை !

காஞ்சிபுரம் : குழம்புச் செலவுக்கே கூலி இல்லை !

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 3

காஞ்சிபுரத்தில் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்ற வழக்கு அங்கே புகழ் பெற்ற கைத்தறித் தொழிலை உணர்த்துகிறது. இருப்பினும் இந்த வழக்கின் படி அங்கே ஏதோ சுலபமாக வாழலாம் என்பதல்ல. அந்த காலாட்டும் கைத்தறி தன்னகத்தே பல்வேறு துயரங்களை உள்ளடக்கியது. இங்கே தெருக்களில் தடுக்கி விழுந்தால், பட்டு அல்லது பருத்தி பாவு மீதுதான் விழ வேண்டும். நாள் முழுக்க பட்டு, பருத்தி, நூல்களை நெசவுக்கு ஒழுங்குப்படுத்தும் ஏதோ ஒரு வேலை, தெருக்களில் நடந்துக் கொண்டிருக்கும். மேலும், பாவு ஓடுவதற்கென்றே ஒவ்வொரு பேட்டையிலும் குளிர்ச்சியான புளியமரங்கள் மத்தியில் பல ஏக்கர் கணக்கில் பொதுப் பாவடிகள் நிறைந்திருக்கும். இங்கு, எந்தக் கோடையிலும் வெயில் அண்டாது, வேர்க்காது.

ஆனால், இப்போது… நெசவு தனது இறுதிமூச்சை நிறுத்தும் நிலைக்கு நொடிந்து விட்டது. பொதுவில் குடும்பத்தில் இறக்கும் தறுவாயில் இருக்கும் நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பு பெண்களையே சாரும். அதே கதிதான் காஞ்சி நெசவிற்கும். இங்குள்ள இளைஞர்கள், ஆண்கள் பலரும் கல்யாண சமையல் வேலைக்கும், பல்வேறு கம்பெனி வேலைகளுக்கும் ஓட, வீட்டிலிருக்கும் வயதான பெண்கள் தங்கள் குடும்ப தொழிலான நெசவை விடாமல் வதைபட்டவாறே பாதுகாக்கின்றனர்.

நூற்பாலையிலிருந்து பேல் கணக்கில் வரும் கச்சா நூலை. தேவைக்கு தகுந்தாற் போல் பெட்டிகளாக பிரித்து  அதை போந்து, சிலுப்பை, தார் என்று கடைசி அலகுகளாக்கி தறியில் லுங்கிகளாக உருமாற்றுகிறார்கள், நெசவாளர் பெண்கள். இந்த தொடர் வேலைகளுக்கு மத்தியில் கச்சாநூல், பாவு நூலாகவும், ஊடு நூலாகவும் மாறுவது தனிக் கலை. கச்சா நூலை, நுட்பமாகத் தட்டி, மண்ணெண்ணை தடவி மிருதுவாக்கி  அதை பரூட்டத்தில் ஓட்டி இழைகளாக்கி, 32 இழைகளை வரிசையாக கைஆலையில் ஓட்டி அதை, சாயடிக்க எடுத்துச் சென்று பல வண்ண சாயங்கள் ஏற்றிக் காயவைத்து பிறகு தோச்சடியில் கஞ்சிப்போட்டு  பாவாக்கி  அதை ஒவ்வொரு இழையாக ஒரு நாள் முழுக்க, அச்சில் பிணைத்து  தெருவில் நீட்டி, பாவுபோட்டு கடைசியில் தறி உருளையில் சுற்ற வேண்டும்.

உருளையை கைதறியில் பிணைத்து, ஊடு நூல் பூட்டிய நாடாவில் நெய்வதுதான் நெசவு. இதில் ஒவ்வொரு துறைக்கும் தனிதிறமை தேவை. ஆனால்,நெசவாளி பெண்கள் எல்லா வேலைகளிலும் ஆச்சரியமூட்டும் வண்ணம் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

தமது பால்ய பருவத்திலிருந்து உறவாடும் தறித்தொழிலை  தன் மூத்த குழந்தையைப் போலவே  கருதுக்கின்றனர். கடுமையான உடலுழைப்பைக் கோரும் இத்தொழில் செய்யும் பெண்களுக்கு போதுமான கூலி கிடைப்பதில்லை. ரேஷன் அரிசியும், வீட்டில் வளரும் முருங்கைக் கீரையும்தான் அவர்களின் அன்றாட உணவு. கல்யாண  சமையல் வேலைக்கு செல்லும் ஆண்கள் எடுத்துவரும் இனிப்புகள்தான் அவர்கள் எப்போதாவது ஆசையோடு தின்னும் தின்பண்டம்.

காஞ்சிபுரம் கருக்குப்பேட்டையில் கை ஆலை ஓட்டும் ஆலக்காரம்மா

“எங்க… இப்ப முன்ன மாதிரியெல்லாம்… தொழில் இல்ல… வேற வழியில்லாம செய்துட்டு இருக்கோம். எங்க தலைமுறையோட சேர்த்து தொழிலையும் புதைச்சிட வேண்டியதுதான்.

ஒருப்பெட்டியில் 30 பொந்து, கச்சா பொருளா வரும். அதை டீசலும், மண்ணெண்ணயும் போட்டு பக்குவமாக உதறி எடுக்கணும், பிறகு அதை அடிக்கணக்கில் பிரித்து 2 அடி ஒரு பரூட்டம் என நூல் இழைக்கணும். பரூட்டத்திலிருந்து, இழைத்ததை  ஆலையில் ஓட்டி, பாவாக மாற்றவேண்டும். ஒருநாளைக்கு இரண்டு ஆலை ஓட்டுறதே இப்ப கஷ்டமாயிருக்கு. இரண்டுக்கும் கூலி ரூ 300 வரும். அதில் பரூட்டத்தில் இழைக்கற கூலி போக மீதி 150 ரூபாய்தான் நிக்கும். டீசல், மண்ணென்ணெ செலவும் இந்த பணத்தல செஞ்சா… மீதி என்ன இருக்கும்?”

“தொழிலைத் தக்க வைக்கறதுக்காக யார்கிட்ட இருந்தும் எந்தவித உதவியும் இல்ல.. பல முறை அலைஞ்சும் 1000 ரூபா முதியோர் பென்ஷனைகூட என்னால  வாங்க முடியால”.

கம்சவள்ளி, 36 வயது,

“நூல், கட்டு கட்டும் வேலைய டெய்லியும் செய்வோம், வர்ற நூலைப் பொறுத்தே வேலை அமையும். ஒரு பாவுக்கு 8 கைலி வரும். 2 மீட்டர் ஒரு கைலி (லுங்கி). ஒவ்வொரு கட்டுக்கும் இடைவைளி 4 இன்ச்சு. கட்டு புத்தூர் கட்டுமாதிரி இறுக்கி கட்டனும். அதைப்போல 40 பாவுக்கு மூச்சுவிடாம கட்டுக்கட்டனும். பொழுதன்னைக்கும் கட்டினாலும் 200 ரூபா வர்றது கஷ்டம்.

காஞ்சிபுரம் ஒட்டி இருக்கிற ஊரு இது, கன்னிகாபுரம். இது நகராட்சியில சேர்ந்துடுச்சினு இப்ப மண்ணு வேலையும் (100 நாள் வேலை) கொடுக்கறதில்ல. இந்த தொழிலை மட்டுமே நம்பி குடும்பம் நடத்த முடியல… எங்கம்மாவுக்கு 65 வயசுக்கு மேலே ஆச்சு. முதியோர் பென்ஷனுக்கு எழுதிப்போட்டு அலைஞ்சதுதான் மிஞ்சம். எங்கம்மாவே போய் சேர்ந்திடுச்சி இன்னும்  யாரும் கண்டுக்கல”.

சுகன்யா, வயது 20, பி.காம் பட்டதாரி.

“வீட்ல நேரம் கிடைக்கறப்போ இந்த வேலைய செய்யறேன். காஞ்சிபுரத்தில இருக்கற ஒரு லேடி டாக்டர்கிட்ட உதவியாளார வேலை செய்றேன். காலைல 7 மணிக்குப் போய் சாயந்திரம் 7 மணிக்கு வரணும். சம்பளம் ரூ 4000 தர்றாங்க. கொஞ்ச நாள் கழிச்சி சம்பளத்த ஏத்தறதா சொல்லி இருக்காங்க. லீவு நாள்ல இங்க வந்து வேலை செய்வேன்”.

கற்பகம், வயது 40

“தொழில் சுத்தமா நொடிஞ்சி போயிடுச்சி, இதுல நிலையான வருமானம் கிடையாது. இப்ப நாங்க செய்யிர வேலை, கட்டுப்பிரிக்கிற வேலை. இத, சும்மாதான் செய்யனும்.  கட்டு பிரிக்கற வேலைக்கு கூலி கிடையாது. கட்டுப் போடறவங்களேதான் அதை பிரிக்கணும்னு சொல்வாங்க. அப்பத்தான்   கட்டு போட எங்கள கூப்பிடுவாங்க… இந்த வேலையும் ஒரு நாள் ஃபுல்லா.. ஆகும். .. டீ மட்டும் போட்டு தருவாங்க… இந்த கூலி வைச்சில்லாம் குடும்பம் பாக்க முடியாது. கொழம்பு செலவுக்கும், குழந்தைகளுக்கு  தின்றதுக்கு வாங்கிக் கொடுக்கவே பத்தாது.. ” என்று கலர் சாயம் ஏறிய கையை நீட்டி சிரிக்கிறார்.

1980 களில் துவக்கப்பட்ட காஞ்சிபுரம்-அய்யன்பேட்டை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வெறும் 5 தறிகளள் மட்டுமே இயங்குகிறது. அதில் 2  பெண்கள் தறி நெய்கிறார்கள், இருவர் தார் சுற்றுகிறார்கள்.

தார்சுற்றும் பெரியம்மா

“நாள் ஒன்றுக்கு ரூ 30, 40 வரை தார் சுற்றுவேன்.. வீட்டிலிருந்தால், அதற்கும் வழியில்லை. வயசாயிடுச்சு நாள்புல்லா சுத்துனா  கை கொடையும் என்ன பன்றது… பேரன், பேத்திககோட செலவுக்குனா உதவட்டுமேன்னு வர்றேன்.. ஒய்வில்லாம ஒழைச்ச கை… சும்மா இருக்க முடியாதும்மா..”.

நெசவாளர் நீலா, வயது 50

“ஒரு பாவு நெய்ஞ்சா ரூ 1000  கிடைக்கும். அதுல 8 லுங்கி வரும்.. இதை ஒரு வாரத்துல நெய்வேன். தறி வேலை எல்லாம் எங்களோட முடிஞ்சிடும் யாரும் புதுசா வர்றதில்ல… கை தூக்கி விட்டு தொழிலை காக்க யாருமே இல்ல… சரியான கூலி, தொடர்ச்சியா வேலை இருந்தா வீட்டு பசங்கள வா.. னு நம்ம சொல்லலாம்… இல்லாம எப்படி அதுங்களையும் கெடுக்கறது…”.

வேலையில்லாமல், நெசவாளி பத்மா

“வீட்ல தறி சத்தம் கேட்டு 4 வருசமாச்சி, அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்ல… அம்மாவும் கூட சேர்ந்து தறிவேலை செய்யும். இப்ப சரியான கூலி இல்ல.. தொடர்ந்தாப்புல வேலையும் இல்ல… என்ன செய்யறதுன்னே தெரியல… எப்பவாச்சும் வரும் மண்ணு வேலயே கதியினு இருக்கோம்.. அதுக்கு கூலி சரியாப் போட மாட்டேன்றாங்க… சொந்த வீடு இருக்கறதானால தப்பிச்சேன்…”.


ங்கு திரும்பினாலும் அரசின்-விவசாயம்,கைத்தொழில் புறக்கணிப்பால்  நெசவாளர் குடும்பங்கள் போக்கிடம் இல்லாமல் நிற்கதியாக நிற்கின்றன. குடும்பத்தால் பராமரிக்க முடியாமல் வயதான பெண்கள் காலி சாராய பாட்டில்களை சேகரித்து கூட வாழ வேண்டிய நிலை. அங்கே இங்கே ஏதாவது கிடைப்பதை வைத்து ஆண்கள் குடிக்கிறார்கள். அவர்கள் குடித்துவிட்டு போடும் பாட்டில்களை இவர்கள் பொறுக்குகிறார்கள். இன்னும் சிலரோ சமூகத்தால் துரத்தப்பட்டு பிச்சையெடுக்கிறார்கள், மனநோயாளியாக திரிகின்றனர்.

நெசவாளிக் குழந்தைள் ஊட்டசத்தின்றி சூம்பிக் கிடக்கின்றார்கள். பெண் பிள்ளைகள் பள்ளியில் பாதியில் நின்று, வயிற்றை கழுவ கம்பெனி வேலைக்கு ஓடுகிறார்கள்.  புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் உழைக்கும் பெண்களின் நிலை இதுதான். இதே காஞ்சிபரம்தான் சங்கராச்சாரி எனும் மோசடி சாமியாருக்காவும், சென்னை தி நகரில் எடுக்கப்படும் பட்டுப் புடவைகளுக்காகவும் புகழோடு நினைக்கப்படுகிறது. அடுத்த முறை காஞ்சிபுரம் வந்தால் கைத்தறி நெசவாளிகளின் கிராமங்களுக்கு சென்று பாருங்கள்! தமிழக கிராமங்களின் உண்மையான மாதிரியை அங்கே காணலாம்!

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க