privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு !

தாவுத் இப்ராகிமை தப்பவிட்ட மோடி அரசு !

-

பாகிஸ்தானைச் சேர்ந்த அல்டாஃப் கனானியின் முழுநேரத் தொழிலே சர்வதேச ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வது தான். இவரது ‘கனானி பணப் பரிமாற்ற நிறுவனம்’ பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமான ஹவாலா பணப் பரிவர்த்தனைகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது. சீனா, கம்போடியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களுக்கும், அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு பின்னர்  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தாலிபான், லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகம்மது, அல்கொய்தா உள்ளிட்ட குழுக்களுக்கும், தாவூத் இப்ராகிம் போன்ற நிழலுலக தாதாக்களுக்கும் ஹவாலா பணப் பறிமாற்றச் சேவைகளை பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பனாமாவில் கனானியைக் கைது செய்தது. ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கனானிக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்தியாவின் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் தொடர்பு இருப்பதை அமெரிக்க அரசின் கருவூலத் துறை உறுதி செய்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக இந்தியாவில் இராணுவத்திற்கு வாங்கும் தளவாடங்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் தரகு வேலை செய்து தயாரிப்பு நிறுவனத்திடமும், விற்பவரிடமும் கமிஷன் வாங்கினால் குற்றம். அதுவே அமெரிக்காவில் சட்டப்பூர்வ தொழிலாக – லாபி – நடக்கிறது. பிறகு தனது தேவைக்கேற்ப தாலிபான்களை கஞ்சா உற்பத்தி செய்ய வைப்பது, ஆயுதங்கள் – நிதி அளிப்பது, பிறகு தடை செய்வது என அமெரிக்கா உலகமெங்கும் செயல்படுகிறது.

தாவுத் இப்ராகிமை தப்ப விட்டது ஏன்?

இவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகரீதியாக தேர்தல் நடக்கும் ஈரான் சர்வாதிகார நாடு, சர்வாதிகாரியாகவே ஆளப்படும் சவுதி அரேபியா நேச நாடு. ஆகவே ஜனநாயகம், நிதி முறைகேடுகள், பயங்கரவாதம் என்பதற்கு அமெரிக்கா சொல்லும் விளக்கம் அதன் வல்லாதிக்க நலனோடு தொடர்புடையவை. இப்படித்தான் பாகிஸ்தான் கனானியை அவர்கள்  கைது செய்து வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் தாவுத் இப்ராகிம் குறித்தே நாம் பார்க்க இருக்கிறோம். காரணம் இந்தியாவில் காங்கிரசு அரசோ இல்லை பாஜக அரசோ இரண்டுமே பாக்கில் மறைந்திருக்கும் தாவுத் இப்ராகிமை பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக ஆறு வாரத்திற்கு ஒரு முறை சபதம் எடுக்கின்றன. அதுவும் சங்கிகளின் பா.ஜ.க-வின் சவுண்டு இன்னும் அதிகம்.

கடந்த ஆண்டு கனானியுடனான தாவூத்தின் தொடர்பு குறித்து அமெரிக்க அரசுத் துறையின் 31-வது சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அறிக்கையில், பண மோசடி மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்துப் பேசும் இரண்டாம் பாகத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த தகவல்கள், இந்த ஆண்டு மார்ச் 3 அன்று வெளியிடப்பட்ட 32-வது ஆண்டறிக்கையில் காணப்படவில்லை.

கனானியுடனான தாவூத் இப்ராகிம் தொடர்பு குறித்த தகவல்கள், இந்த ஆண்டு அறிக்கையிலிருந்து  நீக்கப்பட்டிருந்தன. காரணம் இருவருக்குமிடையிலான உறவை நிறுவும் ஆதாரங்களை அமெரிக்க அரசால் இந்தியாவிடமிருந்து வாங்க முடியவில்லை. இது குறித்து அதே அறிக்கையில் விளக்கமளித்திருக்கும் அரசுத் துறை, தாவூத் உள்ளிட்ட ஹவாலா நிதி மோசடியாளர்கள் குறித்து தகவல்களும் துப்புகளும் கொடுத்தும், விசாரணைத் தரவுகளை வைத்து அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்று கூறியுள்ளது. மேலும், இந்தியா சட்டரீதியான உதவிக் கோரிக்கைகளுக்கு பெருமளவில் உதவினாலும் அதற்கு முன் உள்ள “அமைப்புரீதியான சவால்களைச்” சமாளிக்க முடியாமல் திணறுவதாகக் கூறியுள்ளது.

வெறிநாயைக் கொல்வதென்றாலும் விசாரித்துத்தான் கொல்ல வேண்டும் என்ற ‘நீதி’க்கேற்ப அமெரிக்காவிலே எல்லாம் ‘சட்டப்படி’ சரியாக இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். தாவுத் இப்ராஹிம் விசயத்தில் இந்தியா சொதப்பியதால் அது ஏன் என்ன என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் அந்த அறிக்கை, இந்தியாவில் ஹவாலா பணத்தைக் கட்டுப்படுத்துவது, குறித்தும் முறைகேடான பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான சட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.  சமீபத்தில் மோடியால் மக்களின் தலையில் இடியாய் இறக்கப்பட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கோ,  ஹவாலா பண மோசடிகளைத் தடுப்பதற்கோ துளியும் உதவாது என்பதையும், முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் கல்வி நிலையங்கள், ட்ரஸ்டுகள், ரியல் எஸ்டேட், கட்சிநிதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலேயே இந்தியாவில் நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. அதோடு இத்தகைய முறைகேடான பணப் பறிமாற்றங்களை முடக்க எவ்வித நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது இந்த அறிக்கை.

கருப்புப் பணத்தை பணமதிப்பழிப்பின் மூலம் சாதிப்பேன் என சவடால் அடிக்கும் மோடி.

ஆக மொத்தம் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரால் ஆண்டவனாக தொழப்படும் அமெரிக்க அரசே மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காறித் துப்பிவிட்டது.

ஊழலை ஒழித்து, கருப்புப்பண பேர்வழிகளையும், ஹவாலா பேர்வழிகளையும் அடியோடு ஒழித்துக்கட்டுவதே தமது இலட்சியம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்தவர் மோடி. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்க ணக்கிலும் 15,00,000 ரூபாயை போடுவேன் எனச் சவடால் அடித்தவர் மோடி. அப்படிப்பட்ட ’ஹவாலாப் பண எதிர்ப்புப் போராளி’யான மோடியே திணறும் அளவிற்கு ‘அமைப்புரீதியான சவால்கள்’ அப்படி என்ன தான் வந்துவிட்டன ?

ஆட்சியில் அமர்ந்ததும், எல்லா நாடுகளையும் ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்த மோடியை, கருப்புப்பணத்தை எப்போது பிடித்துக் கொண்டு வருவீர்கள் என்று மக்கள் கேட்டவண்ணமிருந்தனர். அச்சமயத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட கருப்புப்பண இந்தியர்களின் பட்டியல் மக்கள் மத்தியில், “கைப்புள்ள கைல அருவாளோட கெளம்பிட்டான் .. இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ..”  என்று ஒரு ஆவலை ஏற்படுத்தியது.

பெயர்ப்பட்டியலில் உள்ள கருப்புப் பண முதலைகளிடம் இரகசியமாக விசாரணை நடத்தி அபராதம் மட்டும் வசூலிக்கப்படும் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே அறிவித்து மக்களுக்கு கரியைப் பூசினார் மோடி. “அப்போ அந்த 15 இலட்ச ரூபாய் பணம் ?” என்று கேட்ட மக்களிடம் அது தேர்தலுக்காக எடுத்து விட்ட உதார் என்று வெளிப்படையாக பேசினர் பாஜக தலைவர்கள்.

பனாமா லீக்ஸ் அம்பலப்படுத்திய கருப்புப்பண நாயகர்கள் – ஹரீஸ் சால்வே, டாஃபே நிறுவன உரிமையாளர் மல்லிகா சீனிவாசன், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்

அடுத்ததாக பனாமா நாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல், இணைய ஹேக்கர்களால் வெளியானது. அமிதாப் பச்சன், ஐஸ்வரியாராய், ஹரிஷ் சால்வே, டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதானி குழுமத்தின் வினோத் அதானி என ஒரு பெரும் பட்டியலே வெளியானது. இவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் பெயரளவிலான விசாரணையோடு ஊற்றி மூடியது மோடி அரசு.

இது தான் ஹவாலா மூலம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மோடி பிடித்துக் கொண்டு வந்த இலட்சணம். அன்புநாதனின் ஆம்புலன்ஸ் விவகாரமும், போயஸ்தோட்டத்தின் கண்டெய்னர் விவகாரமும் தான் மோடியின் உள்நாட்டு ஹவாலாப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் இலட்சணங்கள்.

அடுத்து மும்பை குண்டுவெடிப்பு தொடங்கி இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தை கட்டுப்படுத்துகிறார், பாலிவுட் திரையுலகத்தை ஆட்டிப் படைக்கிறார், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார், பாக்கின் ஐ.எஸ்.ஐ-தான் அவரை மறைத்து வைத்திருக்கிறது என்று தாவுத் இப்ராஹிம் குறித்து இங்கே ஊடகங்களும், இந்துத்துவா அமைப்பினரும் அடிக்கடி உச்சரிப்பார்கள். எனில் தேசபக்தியை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் மோடி அரசு உடனே தேவையான தரவுகளை வழங்கி அமெரிக்கா மூலம் தாவுத் மீதும், பாக் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஒருவேளை தாவுத் பிடிபட்டால் அதனால் பாதிக்கப்படும் பிரிவினரில் பாஜக முதலாளிகளும் உண்டோ? இல்லையென்றால் அமெரிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஒரு இனோவா கார் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய சூப்பர் மேன் மோடிக்கு, இத்துப்போன அரசு அலுவலக கோப்புக்களை கூட அமெரிக்காவிற்கு அனுப்ப முடியவில்லையா?

கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகவும், வரி மோசடியை கழுத்தைப் பிடித்து ஒடுக்கப் போவதாகவும் மோடி விட்ட அத்தனை சவடால்களும் வெறும் வாயால் சுட்ட வடை தான் என்று ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறது.  தற்போது அதனையே சர்வதேச அளவில் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய  அறிக்கை.

  • நந்தன்

செய்தி ஆதாரம்: