privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழக ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

தமிழக ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

-

செய்தி: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் சென்னை ஆர்.கே நகர் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீதி: ஏ1 மறைவுக்குப் பிறகு, ஏ2 சிறைவாசத்திற்கு பிறகு, ஏ1,2-க்களின் சார்பில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமகன் டி.டி.வி தினகரனுக்கு இந்தியக் குடிமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாமா?

_____

செய்தி: செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். வரும் 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. முதலமைச்சராக பழனிசாமியே தொடர்வார்.” என்றார்.

நீதி: 50,000 வாக்குகளில் தலைக்கு 500 ரூபாய் வைத்தாலே இரண்டு கோடியே 50 இலட்சம் வருகிறது. இதையெல்லாம் இப்படியா வெளிப்படையாகச் சொல்வது?

_____

செய்தி: “எங்களுக்குப் போட்டியாகக் கருதுவது திமுகவை மட்டுமே. வேறு எந்தக் கட்சியையோ, குழுவையோ போட்டியாகக் கருதவில்லை. தேர்தலில் ஆதரவு தர மதிமுக,தேமுதிக, காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்”.- ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் தினகரன்

நீதி: மற்றகட்சிகளை விடுமய்யா, எடப்பாடியிடம் கேட்டுப்பாருங்கள், யாருக்கு யார் போட்டி என்று!

_____

செய்தி: சென்னை : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 16) துவங்குகிறது. தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

நீதி: அம்மா ஆட்சிக்காலத்தில் 45% கமிஷன் என்று பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் பிளெக்ஸ் வைத்தார்கள். சின்னம்மா ஆட்சிக்காலத்தில் எவ்வளவு என்று வைப்பார்களா?

_____

செய்தி: ‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும்’ என, லோக்சபாவில், அ.தி.மு.க.  எம்.பி. சுந்தரம் வலியுறுத்தினார்.

நீதி: மரணசர்ச்சை குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் அது அப்பல்லோவோடு முடிகிற சமாச்சாரமா? போயஸ் தோட்டம், சிறு தாவூர் பங்களா, கொட நாடு எஸ்டேட் என்று கடவுள் குடியிருந்த கோவில்களில் என்ன நடந்தது என்பதை எந்த பக்தனிடம் விசாரிப்பது?

_____

செய்தி: இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துப் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரிந்தவர் ஜெயலலிதா. அந்த நன்றியை மறந்து பேசுகிறார். ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல். குற்றம்சாட்டுபவர்கள் ஆட்சியில் என்ன குற்றம் கண்டு இருக்கிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

நீதி: எடப்பாடி ஐயா, ஜெயா ஆட்சிக் காலத்தில் பேசாதவர் இப்போதுதான் பேசுகிறார் என்றால் அவர் அம்மாவுக்கு மட்டும் விசுவாசமாக இருந்தார் என்பதால்தானே? இதில் என்னய்யா குற்றம்?

_____

செய்தி: இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

நீதி: இப்போது மட்டுமா இதற்கு முன்பேயே கூட தாமரையின் கீழேதான் இரட்டை இலை இருந்தது. ஆனாலும் இலைப்பாசம் கையை அழுத்துகிறது!

_____

செய்தி: திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட ரத்த தான முகாமில், மொத்தம் 488 யூனிட் ரத்தம் மட்டுமே கிடைத்தது.

நீதி: விட்டால் கோவில் டியூப்லைட் புரவலர் பேர் போல ரத்தத்திலும் இந்த ரத்தம் கின்னசில் சாதனை படைத்த ரத்தம் என்று எழுதிவிடுவார்களோ?

_____

செய்தி: தமிழகம் முழுவதும் வறட்சி, அரிசி விலை உயர்வு காரணமாக விலையில்லா அரிசிக்குப் பதிலாக, கோதுமை வழங்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீதி:  விரைவில் சாதா அரிசி இல்லையென்றால் பாசுமதி வாங்கி பிரியாணி சாப்பிடுங்கள் என்பார்கள்!

_____

செய்தி: தமிழக போக்குவரத்து துறை  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமாக்கபப்டுகிறது. அதேபோல் வாகனப் பதிவின் பொழுது பதிவு செய்பவரின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும்.

நீதி: இதெல்லாம் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி கார்களை வாங்குவோருக்கும் உண்டா? பிறகு குடித்தும் இடித்தும் கொன்று போட்டும் ஓடும் போது முகத்தையும் முகவரியையும் மறைக்க முடியாதே?

_____

செய்தி: டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. அதே வேளையில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்களுக்கு பணம் தர மாட்டோம் என எழுதி ஒப்பந்தம் போட்டால் அந்த இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சோளக் காட்டு பொம்மை போல் செயல்படுகிறது. இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறும். ஆனால் அவ்வாறு நியாயமான முறையில் நடைபெறாது” என்றார்.

நீதி: எந்தத் தேர்தலில் பணம் இல்லை, இல்லை தேர்தல் ஆணையம்தான் நியாயமாக செயல்பட்டிருக்கிறதா? ஆர்.கே நகரில் ஆள் இல்லை சாதி இல்லை என்பதை இப்படி போங்காட்டமாக பேசக்கூடாது டாக்டர் அய்யா!

_____

செய்தி: ரூ.2.97 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை புதன்கிழமை (மார்ச் 15) வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

நீதி: துபாய், இந்தோனேசியா, சுவிஸ், பனாமா, தமிழகம், இந்தியா என்று அனேக இடங்களில் அட்டகாசமான கிளைகளோடு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபரை இப்படி தம்மாத்துண்டு மூன்று கோடி ரூபாய் கேசில் புகார் கூறியமைக்காக வன்மையாக கண்டிக்கிறோம்.

_____

செய்தி: ஜோலார்பேட்டை அருகே, அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்த தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து, இரண்டு பேர் உடல் சிதறி பலியாயினர்.

நீதி: அரசு அனுமதி பெற்ற நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு உண்டா? இல்லை அரசு அனுமதி பெற்ற கூலிப்படைதான் உண்டா?

_____

செய்தி: மேட்டூர் முதல் நெருஞ்சிப்பேட்டை வரை காவிரியாற்றில், ஜே.எஸ்.டபில்யூ., கெம்பிளாஸ்ட், மால்கோ எனர்ஜி லிட்., மேட்டூர் அனல்மின் நிலையம், சேலம் இரும்பாலை உட்பட, ஏழு பெரிய ஆலைகள் தங்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுக்கின்றன. மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க, மேட்டூர் சப்-கலெக்டர் மேகநாதரெட்டி ஆலைகள் எடுக்கும் தண்ணீரின் அளவு குறித்து அறிக்கை கேட்டுள்ளார்.

நீதி: இதிலிருந்து தெரிவது என்ன? தண்ணீரை அரசு அளந்து கொடுக்கவில்லை. அப்படியானால் தாமிரபரணியில் கோக் நிறுவனம் எடுத்து குடித்திருக்கும் நீருக்கும் அளவோ, பதிவோ இருக்காது.

_____

செய்தி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி, பணிக்கன்குப்பம் காலனியை சேர்ந்தவர் ராஜா (எ) ராஜாகுட்டி (40) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் தெரு விளக்கு பராமரிப்பு, பீஸ் போடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். நேற்று மதியம் அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மின் தடையை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும். மகள் சந்தியா (18) மகன்கள் விஷ்வா, வேலன் ஆகியோர் உள்ளனர்.

நீதி: மின்சாரத்தை தனியார்மயமாக்கும் அரசை தொழிலாளிகளின் உயிரை மின்சாரமயமயாக்குகிறது.

  1. சிங்கப்பூர் குடிமகன் என்பது பொய், அப்படி இருந்தால் இந்திய தேர்தலில் எப்படி போட்டியிட முடியும் ? பத்திரிக்கைகள் கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள்

  2. இருநாட்டுக்குடிமக்களாக இருப்பதை இந்திய அரசியல் சட்டம் தடுக்கவில்லையே? சோனியா காந்தியே இன்னும் இத்தாலிநாட்டுக் குடியுரிமை வைத்திருபபவர்தானே?

Leave a Reply to நிறைமதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க