privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

-

 “அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

“ஒரு இந்துப் பெண்ணை எடுத்தால், நாங்கள்100 முஸ்லீம் பெண்களை எடுப்போம்” என அறிக்கை விட்ட யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்தைப் பொறுத்தவரை,  குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியைப் போன்று மதவெறிப் பேச்சால், அடிக்கடி மீடியாக்களின் விவாதங்களில் பேசப்படும் நபர். தற்போதைய உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்த யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் மோகன் பிஷ்ட். கல்லூரிக் கல்விக்குப் பின், 1990-ம் ஆண்டு இந்தியா முழுவதும் இரத்த வெள்ளம் ஓட வைத்த ஆர்.எஸ்.எஸ் – விசுவ ஹிந்து பரிஷத்தின் இராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அச்சமயத்தில் இவரது இரத்தவெறியைப் பார்த்து வியந்த கோரக்பூரின் ‘குரு கோரக்நாதர்’ ஆலயத்தின் தலைமைச் சாமியார் அவைதியநாத், அஜய்யை தமது சீடராக ஏற்றுக் கொண்டு, அவருக்கு யோகி ஆதித்யநாத் எனப் பெயர் சூட்டினார்.

யோகி ஆதித்யநாத் முதன்முதலாக தமது 26வது வயதில் (1998), கோராக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் ’ஹிந்து யுவ வாஹினி’ என்னும் ஒரு அடியாள் படையை உருவாக்கினார். இவ்வானரப் படையை வைத்து 1998 – 2007 காலகட்டத்தில் மட்டும், கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 கலவரங்களை நடத்தியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய ‘பெருமைகள்’ இந்துத்துவக் கும்பலிடையே வெகு வேகமாகப் பரவக் காரணம், கலவரங்களைத் தொடங்க அவர் எடுத்துக் கொள்ளும் காரணங்கள் தான். மோடிக்கு குஜராத் கலவரம் நடத்த இரயில் எரிப்பு காரணம் தேவைப்பட்டது.  ஆனால் யோகி ஆதித்யநாத்துக்கு மசூதிக்கு அருகில் அரசமரம் வளர்ந்தது கூட கலவரம் செய்ய போதும். இத்தகைய திறன் தான் இந்துத்துவக் கும்பலின் மத்தியில்  ஆதித்யநாத்தின் பெருமையை கொண்டு சேர்த்தது.

மசூதிக்குள் வளர்ந்த அரச மரத்தை வைத்து ஒரு மதக் கலவரம், பான்பராக்கை மென்று  துப்பியதில் இரு நபர்களுக்கு நடுவே நடந்த சண்டையை வைத்து ஒரு மதக் கலவரம், இரு தனிநபர்களுக்கு இடையே இருந்த சிறு தகராறை வைத்து ஒரு மதக் கலவரம் என யோகி ஆதித்யநாத் நடத்தியிருக்கும் கலவரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி, 1998-2007-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடத்தப்பட்டன.

கோரக்பூரில் 2007-ம் ஆண்டு ஆதித்யநாத்தால் முன் நின்று நடத்தப்பட்ட கலவரம், இந்தியாவையே பதற வைத்தது. ஜனவரி மாத இறுதியில், மொஹரம் பண்டிகையை முன்னிட்டு கோரக்பூரில் இசுலாமியர்கள் ஒரு பேரணி நடத்தினர். அந்த சமயத்தில் இந்துத் திருமணத்தில் இரு தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேரணியில் பங்கேற்ற இசுலாமியர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட இராஜ்குமார் அக்ரகர் என்பவர் பேரணிக்கு வந்த இசுலாமியர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத், கோரக்பூருக்கு சுற்றுவட்டார பகுதி முழுக்க தமது விஷ-வன்மப் பிரச்சாரங்களின் மூலம் இந்து, முசுலீம் கலவரத்தைத் தூண்டினார்.

ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பெரும் கூட்டத்தைத் திரட்டி வந்து, இசுலாமியர்களின் கடைகளுக்குத் தீ வைப்பதும், அவர்களது பொருட்களைச் சூறையாடி, திருடிக் கொள்வதும் என மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

கருத்துப்படம் – முத்து

இக்கலவரத்தின் தாக்கம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. யோகி ஆதித்யநாத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இரத்து செய்யப்பட்டது. ஆதித்யநாத்தின் “ஹிந்து யுவ வாஹினி” – வானரக் கும்பல் கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பும் இல்லாமல் அடியாள் படையும் இல்லாமல், கோரக்பூருக்குள் செல்வதற்கு பயந்த ‘மாவீரர்’ ஆதித்யநாத், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக்க் கூறி, தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்கும்படியும் கேட்டு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டுக் கதறினார்.

அதன் பின்னர், சிறு சிறு கலவரங்களை நடத்துவதைக் கைவிட்டு, அதிகாரவர்க்கத்தைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு திட்டமிட்ட கலவரங்களை நடத்தத் தொடங்கினார்.

உத்திரப் பிரதேசத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற முசாஃபர்நகர் கலவரங்களைத் தொடர்ந்து, லவ்-ஜிஹாத் என்னும் பெயரில் இந்துப் பெண்களைத் திட்டமிட்டு காதலித்து இசுலாமிய இளைஞர்கள் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரங்களை ஏற்படுத்தினர். கர்-வாப்சி என்னும் பெயரில் மாற்று மத்த்தினரை மிரட்டி, மதம் மாற்றும் வேலைகளிலும் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஆதித்யநாத்தின் கை மேலும் ஓங்கியது. பகிரங்கமாக இசுலாமிய விரோத அறிக்கைகளை வெளியிடுவது என அவ்வப் போது தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருந்தார்.

இதுவரை யோகி ஆதித்யநாத்தின் மீது கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை எதுவும் இந்தச் ‘சாமியார் ’ முதலமைச்சர் ஆவதைத் தார்மீகமாகவும், சட்டரீதியாகவும் தடுக்கவில்லை என்பது தான் சிறப்பு.

இந்தக் கிரிமினலை உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக்குவதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் வாழும் முசுலீம்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருக்கும் மதச்  சிறுபான்மையினருக்கும் பகிரங்கமாகச் சவால் விட்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல். ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை உபயோகித்து ஆட்சிக்கு வந்த மோடியைப் போலவே, அகிலேஷ் யாதவின் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையையும், ஆதிக்க சாதி அரசியலையும் வைத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.  இவரது தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கையில் இந்த ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதோ இல்லையோ, உத்தரப் பிரதேசத்தில் இரத்த ஆறு ஓடும் என்பது மட்டும் புரிகிறது.

ஒரு தேர்ந்த ரவுடியை, நாடறிந்த காவி பயங்கரவாதியை, பல வழக்குகளின் குற்றவாளியை, முசுலீம்களை வெளிப்படையாகவே கொல்வதாக மிரட்டும் ஒரு வன்மம் பிடித்தவரை முதலமைச்சராக அறிவிப்பதன் மூலம் பார்ப்பனிய பாசிசத்தின் வெளிப்படைத்தன்மையை அறிவித்திருக்கிறார் மோடி.

என்ன செய்யப் போகிறோம்?

-நந்தன்