privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் - நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?

ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?

-

டந்த ஏழு மாதங்களாக ஈரான் சிறையில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த  37 மீனவர்களில் 22 மீனவர்களை விடுவிக்க ஈரான் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்த்து. கடந்த ஆறு மாதங்களில் இவர்களை விடுவிக்க ஒரு துரும்பையும் கூட கிள்ளி எறியாத இந்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு சமூக ஆர்வலர்களின், அம்பலப்படுத்தல்களுக்குப் பின்னர் கடந்த மாதத்தில் தான் அம்மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளை எடுத்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒரு பகுதியினர்

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பிழைப்பு தேடி வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஏஜெண்டு கமிசன், விசா, பயணச்சீட்டுச் செலவு என சில இலட்சங்களைக் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வீட்டிற்குப் பணம் அனுப்புகின்றனர். இதில் பெரும்பான்மையானோர், வெளிநாடுகளுக்கு கூலி வேலைக்குச் செல்லும் சாதாரணத் தொழிலாளர்கள் தான்.

அப்படி இங்கிருந்து சவுதி அரேபியாவிற்கும், துபாய்க்கும், பஹ்ரைனிற்கும் மீன் பிடி நிறுவனங்களில் மீனவராகப் பணிபுரியச் சென்ற தமிழகத்தின் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் அவல நிலையையும், அவர்கள் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தையும்  இச்செய்தி விளக்குகிறது.

சவுதியைச் சேர்ந்த ஒரு மீன்பிடி நிறுவனத்தில் பணி புரியும் 5 தமிழக மீனவர்கள் – கடந்த 2016 ஆகஸ்ட் மாதமும், பஹ்ரைனைச் சேர்ந்த ஒரு மீன்பிடி நிறுவனத்தில் பணி புரியும் 15 தமிழக மீனவர்கள் – கடந்த 2016 அக்டோபர் மாதமும், துபாயைச் சேர்ந்த மீன்பிடி நிறுவனத்தில் பணிபுரியும் 17 தமிழக மீனவர்கள் இந்த ஆண்டு (2017) ஜனவரி மாதமும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அனுப்பப்பட்ட தூதரகக் கடிதம்

37 மீனவர்களும், சிலநாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஈரானில் உள்ள கிஷ் தீவு மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இரு துறைமுகங்களில் உள்ள படகுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கே போதுமான உணவும் நீரும் கூட வழங்கப்படவில்லை.

பஹ்ரைனைச் சேர்ந்த மீன் பிடி நிறுவனம், ஈரானில் உள்ள நீதிமன்றத்தில் தமது நிறுவனத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை மீட்க அபராதத் தொகையைக் கட்டியும் அம்மீனவர்களை ஈரானிய கடற்படை விடுதலை செய்யவில்லை. கைது செய்யப்பட்ட 37 மீனவர்களின் உறவினர்கள், இந்திய தூதரகங்களுக்கும்  மத்திய மாநில அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மனு கொடுத்தும் எவ்விதப் நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக இம்மீனவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் பஹ்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குக் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரியது. ஈரானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், அம்மீனவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் இம்மீனவர்களின் குடும்பத்தினர் வருமானமும் இல்லாமல், ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியையும் செலுத்த முடியாமல் கடன் மேல் கடன் பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

விரக்தியடைந்த மீனவர்கள் கடைசியாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்து அனுப்பியுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தூதரகங்கள், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் என அனைத்து தரப்பிடமும்  தங்களை மீட்க மனு கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் கூறுகையில் “ இந்தியத் தூதரகத்தினரைக் கேட்டால், அவர்கள் இந்தியாவிலிருந்து ஆணை பெற வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர். யார் ஆணை பிறப்பிக்கப் போவது ? மத்திய மாநில அரசுகள் தான் ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்விசயம் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரிந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. அப்படியெனில், நாங்கள் தமிழர்கள் இல்லையா?.  நாங்கள் இந்தியர்கள் இல்லையா?, நாங்கள் இங்கேயே சாக வேண்டுமா?“  என்று வெறுத்துப் போய் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்நிலையில் இங்கிருக்கும் சமூக ஆர்வலர்களும், ஸ்க்ரோல்.இன் (scroll.in)இணைய தளமும் இப்பிரச்சினையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கண் விழித்த இந்திய அரசு, ஈரான் தூதரகம் மூலம் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது.  அதன் பின்னர் தற்போது தான் ஈரான் நீதிமன்றம் 37 மீனவர்களில் பஹ்ரைனைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்களை மட்டும் விடுவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.  இன்னும் சில தினங்களில் இம்மீனவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால் மற்ற மீனவர்களை மீட்கும் வேலையை, துபாயில் உள்ள இந்திய தூதரகமோ, சவுதியில் உள்ள இந்தியத் தூதரகமோ அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீதமுள்ள மீனவர்களை மீட்பது குறித்து இவர்கள் யாரும் வாய் கூடத் திறக்கவில்லை.

தேவயானி கோபர்கடே: மேட்டுக்குடி – குற்றவாளியே ஆனாலும் ஆதரிக்கும் இந்திய அரசு

தனது வீட்டில் வேலை செய்த பெண்ணிற்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விடக் குறைவான சம்பளம் கொடுத்த குற்றத்திற்காக கடந்த 2013-ம் ஆண்டு  தேவயானி கோப்ரகடே என்னும் இந்தியத் தூதரக அதிகாரியை, அமெரிக்க அரசு விசாரணை செய்ததற்கு ’தாம் தூம்’ எனக் குதித்தது இந்திய அரசு. அதைப் போன்றே, அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்திய மேட்டுக்குடியினர் தாக்கப்படும் போதெல்லாம் உடனடியாக அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது இந்திய அரசு.

ஆனால் வெளிநாட்டில் பணிபுரியும் சாதாரண உழைக்கும் மக்களுக்கும், மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் போது மட்டும் பாராமுகமாவே இருந்து வந்திருக்கிறது இந்திய அரசு. அரபு நாடுகளில் சம்பளம் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் தொழிலாளர்களாகட்டும், அல்லது எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கும் போது கைது செய்யப்படும்  மீனவர்களாகட்டும், அவர்களை மனிதர்களாகக் கூட இந்த அரசு என்றுமே மதித்ததில்லை.

திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்? இந்திய தேசபக்தி என்பது ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் ஆடம்பர விவகாரம் என்பது இங்கே மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தொழிலாளிகளின் பாதுகாப்பு என்பது உள்நாட்டில் போராடும் உழைக்கும் மக்களின் கையிலே இருக்கிறதே அன்றி இந்திய அரசின் கையில் இல்லை!

தொடர்புடைய செய்திகள் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க