privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் - அவசியம் படியுங்கள் !

வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் !

-

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 3

“ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர். அரசு தரப்பும் சரி, காவல் துறையும் சரி புகாரளித்த தரப்பான மாருதி நிர்வாகத்தின் பக்கம் நின்றே செயல்பட்டுள்ளனர்” என்கிறார் வழக்கறிஞர் ஹர்ஷ் போரா. பொய்யான கொலைப்பழி சுமத்தப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தரப்பில் வழக்கை எடுத்து நடத்திய மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜோனின் உதவியாளரான ஹர்ஷ் போரா, இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் இருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று வாதாடியவர்.

வழக்கறிஞர் ஹர்ஷ் போரா

“நீங்கள் சொல்லும் போது, காவல் துறை, அரசு வழக்கறிஞர் மற்றும் மாருதி நிர்வாகம் ஒரே தரப்பாக நின்று செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டீர்கள். நான் சட்ட அறிவற்ற சாதாரண மனிதனாக வழக்கின் தீர்ப்பையும் கணக்கில் கொண்டு கேட்கிறேன் – நீதிமன்றமும் கூட தொழிலாளிகளுக்கு எதிராக ஒரு தரப்பாக செயல்பட்டதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?” என்றோம். கேள்வியை உள்வாங்கி விட்டு நீளமாய்ச் சிரித்தார்…

“நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைக் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது, கூடாது. ஒரு வழக்கறிஞராக வழக்கு நடந்த முறை, போலீசார் விசாரணை செய்த முறை, தீர்ப்பு பற்றி எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீங்கள் என்னவிதமான புரிதலுக்கும் வரலாம். ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மையை நம்ப வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

“மூத்த வழக்கறிஞர்கள் பிருந்தா குரோவரும் ரெபெக்கே ஜோனும் இந்த தீர்ப்பு தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். 13 பேர் ஆயுள் தண்டனையும், 18 பேர் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும் பெற்றிருக்கும் நிலையில், இதை எப்படி வெற்றி என்று புரிந்து கொள்வது ?”

“குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை படித்துப் பாருங்கள். அவர்கள் சுமார் நான்காண்டு காலம் அனுபவித்த சிறைக் காவல் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே முடியாதது என்று குறிப்பிடும் நீதிபதி, அதற்காக போலீசாரைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

இப்போது தண்டிக்கப்பட்டவர்களுக்கு வாருங்கள். விடுவிக்கப்பட்டவர்களை எந்த அடிப்படையில் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் கணிக்கிறதோ அதே அடிப்படைகள் இவர்களுக்கும் பொருந்துகிறது. இதைத் தீர்ப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தே எடுத்துக் காட்ட முடியும். எனவே வழக்கு மேல்முறையீட்டில் நிற்காது” என்றார் ஹர்ஷ் போரா.

“சரி, இந்த 31 பேரின் மேல் எந்த அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது?”

“ஒரு அடிப்படையும் கிடையாது. இந்த தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்றும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் இன்னின்னார் என்றும் அரசு தரப்பில் இருந்து நிர்வாகத்தினர் சிலரை சாட்சிகளாக ஆஜர் படுத்தினர். ஆனால், ஒரு சாட்சியால் கூட குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் அடையாளம் காட்ட முடியவில்லை. போலீசு மற்றும் பிராசிக்யூசன் தரப்பால் ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியத்தை நிறுவ முடியவில்லை.”

ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர்
ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர்

“பிறகு எப்படி நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என்றது ?”

“இந்த தீர்ப்பில் உள்ள பல்வேறு முரண்பாடுகளில் இது முக்கியமானது. அதாவது, ஜியாலால் தன்னை சாதிப் பெயர் சொல்லி இழிவாகத் திட்டியதாக சங்கராம்ஜி என்கிற மேலாளரின் மீது ஒரு எதிர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தவறானது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் தீர்ப்பின் போது ஜியாலால் புகார் அளித்திருப்பதால், தொழிலாளிகள் கூட்டமாகச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்றும், சம்பவம் நடந்த இடத்தில் தொழிலாளிகள் இருந்ததற்கு இதுவே ஆதாரம் என்றும் கணக்கில் எடுத்து தீர்ப்பளித்துள்ளது.”

“இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை வைத்து தள்ளுபடியான வாதத்தை கணக்கில் எடுக்கலாமா ?”

“எடுக்க கூடாது. அப்படி எடுக்க கூடாது என்பதற்கு வழிகாட்டியாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன. 31 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பே முழுக்க முழுக்க அனுமானத்தின் அடிப்படையிலானது; அந்த அனுமானமும், அப்படி அனுமானிப்பதற்கு வசதியான முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைத்த வாதங்களில் தோதான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து சேர்த்துக் கொண்டதால் வந்தடைந்ததே. வேடிக்கை என்னவென்றால் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு வசதியாக செலக்டிவாக எடுத்துக் கொண்ட வாதங்களை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றமே தள்ளுபடியும் செய்திருக்கிறது. உங்களுக்கு இந்த முரண்பாடு புரிகிறதல்லவா?” என்றவரின் முன் வழக்கு தொடர்பான பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட தொகுதிகள் இருந்தன.

“புரிகிறது. ஆச்சரியமாகவும் உள்ளது” என்றோம்.

“அது மட்டுமல்ல, தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்பதற்கு போலீசார் நிறுத்திய சாட்சிகள் அனைவருமே நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் தொழிலாளிகளில் ஒருவர் கூட சாட்சியாக கிடைக்கவில்லையா ? மானேசர் ஆலையின் காவலாளிகள் தரப்பில் இருந்து தீபக் என்பவரை சாட்சியாக நிறுத்தினார்கள். தொழிலாளிகள் தீ வைப்பதை சி.சி.டி.வி மூலம் பார்த்ததாக சொல்லும் அவரால் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. மேலும், சி.சி.டி.வி பதிவுகள் நெருப்பில் சேதமாகி விட்டதாகவும் தெரிவித்து விட்டார்கள்”

“அது சாத்தியமில்லையே. என்னதான் நெருப்பு பற்றியிருந்தாலும் கணினியின் ஹார்ட்டிஸ்குகளின் உள்ளே இருக்கும் மின்காந்த தகடுகள் உருகிப் போயிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லையே. ஒருவேளை சர்வர் எரிந்திருந்தாலும் கூட அதிலிருக்கும் ஹார்ட்டிஸ்குகளை கைப்பற்றி பாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தால் வலுவான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருக்குமே?”

“போலீசார் செய்த குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அரசு தரப்பில் நிறுத்திய சாட்சிகள் தெளிவாக இப்படிச் சொல்கிறார்கள் – ‘குர்காவ்னில் உள்ள ஜப்பான் ஹாஸ்டலில் தங்கியிருந்த போலீசார் எங்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள்’ என்று. எனில், போலீசார் குற்றம்சாட்டியவர்கள் அளித்த தங்குமிடத்தில் வசித்துக் கொண்டு, அவர்கள் அளித்த பிற வசதிகளைப் பெற்றுக் கொண்டே தான் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்கள் தரப்பு சாட்சிகள் மூலமே தெளிவாகிறது. இவ்வாறு விசாரணை நடத்தினால் அதில் நடுநிலைமை இருக்காதென்றும், அப்படி விசாரிக்க கூடாதென்பதற்கும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. அவை மீறப்பட்டுள்ளதை தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை”

”இது ஒரு சிறிய தவறாக கூட இருக்கலாமே. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்பதற்கு இது மட்டும் தான் உங்கள் வசமிருக்கும் வாதமா?” என்றோம்.

நன்றி: rebel politik

”அதுமட்டுமல்ல. உதாரணமாக கொலைக்கான ஆயுதம் கார் கதவின் பீம் என்று நீதிமன்றத்தில் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையின் படி முட்டுக் கம்புகள், இரும்பு ராடு, மண்வெட்டி மற்றும் இன்னபிற என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார் கதவின் பீமை புத்திசாலித்தனமாக ‘இன்ன பிறவுக்குள்’ கொண்டு வந்து விட்டார்கள். என்ன புத்திசாலித்தனம் என்கிறேன் என்றால், கொலை ஆயுதங்களாக குறிப்பிடப்பட்ட மற்றவை கட்டிடம் கட்டும் போது பயன்படுத்தப்படுபவை. கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் இந்தப் பொருட்களுக்கு என்ன வேலை ? என்கிற கேள்வியை புத்திசாலித்தனமாக தவிர்க்க கார் கதவின் பீம் என்று புதிய பொருளை நுழைத்துள்ளனர்.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“குற்றவழக்குகளைப் பொருத்தவரை கொலைக்கான ஆயுதம் சந்தேகத்துக்கிடமின்றி நிறுவப்பட வேண்டும் என்பது அரிச்சுவடி. கார் பீமை கொலை ஆயுதமாக பின்னர் சொருகிய போலீசார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் பீம்களை தொழிலாளர்கள் களவாடிச் சென்று தாக்கியதாக குறிப்பிடுகின்றனர். சரி, ஒரு வாத்ததிற்கு அதை ஏற்றுக் கொள்வோம். போலீசார் என்ன செய்திருக்க வேண்டும் ? கம்பெனியின் இன்வெண்டரி ரிக்கார்டுகளில் கார் பீம்கள் குறைந்திருப்பதை ஆவணப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்திருக்க வேண்டும் – செய்யவில்லை. அதே போல் கைப்பற்றப்பட்ட கொலை ஆயுதத்தை பாரன்சிக் ஆய்வுக்கு அனுப்பி காயங்கள் இதனால் தான் ஏற்பட்டதென அறிக்கை பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – இதையும் செய்யவில்லை. அட குறைந்தபட்சம், இதோ கைப்பற்றப்பட்ட ஆயுதத்தில் உள்ள கைரேகைப் பதிவுகள் என பாரன்சிக் ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் – அதையும் செய்யவில்லை. அடுத்து முக்கியமாக, கொலை ஆயுதத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரிடம் அளித்து, இந்த ஆயுதத்தை இப்படித் தாக்கியதால் இவ்வாறான காயங்கள் ஏற்பட சாத்தியமுண்டு எனச் சான்று பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – அதையும் செய்ய வில்லை.”

“ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் விசாரணை நடந்துள்ளது போல் இருக்கிறதே ?”

“அதோடு நிற்கவில்லை. மாருதி மேலாளர் அவினேஷ் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தானே ஊடகங்கள் சொல்கின்றன ? ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் படி அவர் மூச்சுத்திணறலால் (asphyxia) இறந்துள்ளார். அதாவது தொழிலாளிகள் அவரது கையையும் காலையும் முறித்து விட்டதால் நெருப்புப் பிடித்த கட்டிடத்திலிருந்து அவரால் வெளியேற முடியவில்லை என்றும், அப்போது சூழ்ந்த புகையில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் என்றும், அதன் பின்னரே அவரது உடல் தீயில் கருதியது என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் கூட தாக்கியவர்களுக்கு கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. காயம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். பிறகு எப்படி அவர்களுக்கு கொலைக்கான தண்டனையைக் கோரினார்கள்?” என்றார் ஹர்ஷ் போரா.

“அரசு தரப்பு கொலைக்கான தண்டனை கோரியதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறதே?”

“எனவே தான் இந்த வழக்கு மேல் முறையீட்டில் நிற்காது என்கிறோம்”

“ஆனால், அரசு வழக்கறிஞர் எந்த அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்குமாறு கோரினார்?”

“அதுவும் தவறு தான். தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு அரசு தரப்பில் இருந்து சில தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டினார்கள். அதில் ராவ்ஜி என்பவருக்கும் ராஜஸ்தான் அரசுக்கும் நடந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைத் தீர்ப்பு ஒன்று. ஆனால், இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து குறைத்துள்ளதை அரசு தரப்பு கவனிக்கவில்லை. மிக முட்டாள்தனமான விசயம் இது. எனது சந்தேகம் என்னவென்றால், அரசு தரப்பு வக்கீலின் ஜூனியர் கூகிளில் தூக்கு தண்டனை தீர்ப்புகளைத் தேடி எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் கூகிளைக் கேட்டால் அது கேட்டதை மட்டும் கொடுக்கும் – ஆனால், மேல் முறையீட்டில் அந்த தண்டனை குறைக்கப்பட்டதைச் சொல்லாது. இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டதை எல்லாம் முன்னுதாரணமாக காட்டக் கூடாது என்பது மிக மிக அடிப்படையானது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் தெரிவித்த போது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் முகங்கள் தொங்கிப் போனது. கூகிளை நம்பி வழக்கு நடத்தினால் அவமானப்படாமல் வேறு என்ன நடக்கும் சொல்லுங்கள் ?” என்று சிரிக்கத் துவங்கியவர், சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தார்.

“…ம், தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பு 1972-ல் வழங்கப்பட்டது. ஆனால், பாருங்கள் 73-ல் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. அதாவது ஒரு சட்டத்தின் முந்தை வடிவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனையை அந்தச் சட்டம் மாற்றப்பட்ட பின் அளிக்கப்படவுள்ள தீர்ப்புக்கு முன்னுதாரணமாக காட்டக்கூடாது என்பதும் அடிப்படையானது. இதுவும் அனேகமாக கூகிளின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இங்கே எனது அலுவலக நண்பர்களிடம் கூகிள், இண்டெர்நெட் போன்றவைகளையெல்லாம் மிதமிஞ்சி நம்பாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏன் நம்பக் கூடாது என்று இப்போது அவர்கள் புரிந்திருப்பார்கள்…”

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு கொண்டுசெல்லப்படும் மாருதி தொழிலாளர்கள்

”வழக்கின் விசாரணையின் போக்கில் உள்ள முரண்பாடுகளைக் குறித்து தெளிவாக விளக்கினீர்கள். போலீஸ் மற்றும் நீதிமன்றங்களின் விசாரணை நடைமுறை குறித்து தெரியாத சாதாரணமானவர்களுக்குப் புரியும் விதமாக இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதை எப்படி விளக்குவீர்கள்?”

”முதலில் கொலைக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 13 பேர். இதில் ஜியாலாலைக் கழித்துப் பார்த்தால் 12 பேர். அவர்கள் அத்தனை பேரும் தொழிற்சங்க நிர்வாகிகள். ஆக, தொழிற்சங்க நிர்வாகிகளாக குறிவைத்து கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருப்பதில் இருந்தே அவர்களது நோக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிப் போடுவது தான் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். அடுத்து, தாக்குதல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 135 பேர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் அத்தனை பேரின் பெயர்களும் அகர வரிசைப்படி அமைந்துள்ளது. அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகளுக்கும் அகர வரிசைப்படியே குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.”

“இதைக் கொஞ்சம் புரியும் படி விளக்குங்களேன்”

”இதைப் புரிந்து கொள்ள சட்ட அறிவெல்லாம் தேவையில்லை நண்பரே. பொது அறிவே போதுமானது. அதாவது போலீசார் ஆரம்பத்தில் எழுதிய முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக தொழிற்சங்க நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி விட்டு அவர்களுடன் ‘அடையாளம்’ தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தீவைப்புச் சம்பவம் நடந்த மறுநாள், கம்பெனியின் பதிவேட்டைக் கையில் வைத்துக் கொண்டு வரிசையாக ஒவ்வொருவராக கைது செய்து வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே தான் பெயர்கள் மிகச் சரியாக அகர வரிசைப்படி அமைந்துள்ளது.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“அடுத்து, கார் கதவின் பீமை பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை”

“நானும் முன்பு பார்த்ததில்லை. இந்த வழக்கிற்காக நான் ஒரு கார் பீமை வாங்கி தூக்கிப் பார்த்தேன். சுமார் மூன்று கிலோ வரை இருக்கும். போலீசாரும் அரசு தரப்பு வழக்கறிஞரும் சொல்வதைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கொலைவெறியோடு இந்த மாதிரி பயங்கரமான ஒரு ஆயுதத்தைக் கொண்டு தாக்கியிருந்தால் அடிபட்டவர்களுக்கு எந்தமாதிரியான காயங்கள் ஏற்படும் சொல்லுங்கள் ?”

“பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.”

“ஆனால், அப்படி நடக்கவில்லை. ஓரிருவருக்கு கை கால் எலும்புகளில் மெல்லிய விரிசல் ஏற்பட்டது என்கிறது போலீசின் விசாரணை அறிக்கை. நான் ஒரு கிரிமினல் லாயர். எத்தனையோ கிரிமினல் வழக்குகளைப் பார்த்திருக்கிறேன். கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கை கால்களை மாத்திரம் குறிபார்த்து – அதுவும், மெல்லிய காயங்கள் ஏற்படும் படி அடிக்கவே மாட்டான். தலையில் அடிப்பான் அல்லது உடலில் குத்துவான். இதையெல்லாம் போலீசாரும் சரி, நீதிமன்றமும் சரி கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.”

“எங்களுடன் நேரம் செலவழித்ததற்கும் பயனுள்ள இந்த உரையாடலுக்கும் மிக்க நன்றி திரு.போரா”

“நன்றி”

இரவு நேரம் பத்தைக் கடந்திருந்தது. நாங்கள் தில்லி டிபென்ஸ் காலனியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜோனின் அலுவலகத்தில் இருந்து வெளியேறினோம். மறுநாள் மானேசர் சென்று தொழிலாளிகளைச் சந்திப்பது என திட்டம்.

மாருதி தொழிலாளர்கள் இந்த அநீதியான அடக்குமுறைகளுக்குப் பணிந்தார்களா ? அவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கருவிலேயே சிதைத்து அழிக்க வேண்டும் என்ற மாருதி முதலாளியின் நோக்கம் நிறைவேறியதா ?

(தொடரும்)

வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலை : நேரடி அறிக்கை ( பகுதி – 1 )
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில் (பகுதி 2)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க