privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்

சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்

-

பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனை!
சிவில்-ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நீதிமன்றங்கள்
!

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளை சார்பாக கடந்த 2-4-17 ஞாயிறு அன்று “ பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா (UAPA) சட்டத்தை நீக்கு!” என்ற முழக்கத்தை முன் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது.

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன் “மாபெரும் அபாயமாய் மின்னணு சாட்சியங்கள் ! சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள் !” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தோழர் பாலன்
தோழர் பாலன்

நரசிம்மராவ் – மன்மோகன் சிங் இணைந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் கொள்கையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். பகத் சிங் ஏகாதிபத்தியத்தை முற்றிலும் ஒழிக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்தார். இப்போது நரேந்திர மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தரகர் வேலை பார்க்கிறார். பறந்து பறந்து பன்னாட்டு முதலாளிகளை இந்தியாவுக்கு அழைக்கிறார். ஆனால் அவன் நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை சொந்த நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதில்லை. கடமையைச் செய் ! பலனைக் கேட்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னதை மோடி அமல்படுத்துகிறார்.

நமது தாய் நாட்டின் வளங்களை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார். தண்டகாரண்யா மலைப் பகுதியிலே எண்ணற்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றைக் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். ராணுவத்தை ஏவி அந்த மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை பேராசிரியர் சாய்பாபா எதிர்த்துப் போராடினார். அவர் டெல்லியில் இருக்கிறார். மராட்டிய மாநிலம் கட்ஜ்ரோலி மாவட்டக் கோர்ட் அவருக்கு தண்டனை கொடுத்துள்ளது. எப்படி? அந்தப் பகுதியிலுள்ள இரண்டு பேருக்கு சாய்பாபாவைத் தெரியும் என்பதை வைத்து வழக்குப் போட்டு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் பிணையில் வந்தார். இப்போது அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ், சி.டி., டி.வி.டி. போன்ற மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக வைத்து அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று  நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார். அது 7 நீதிபதிகள் அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது. எனவே மின்னணுக் குப்பைகளை வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(ஊபா) ஒரு மக்கள் விரோதக் கருப்புச் சட்டம். குடிக்கத் தண்ணீர் கேட்டால் அது சட்ட விரோதம். ஆற்று நீர், நிலத்தடி நீரைக் கொள்ளையடித்தால் அது சட்டப் பூர்வம். வேலை கேட்டால் சட்டவிரோதம். வேலையை விட்டுத் தூக்கினால் சட்டப்படியானது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடினால் சட்டவிரோதம். வாழ்வாதாரங்களைக் கொள்ளையடித்தால் அது சட்டவிரோதம் இல்லை. தாடி வைத்துள்ள இசுலாமியருக்கு ஊபா.

மதுரை வழக்கறிஞர் முருகன் ஊபா சட்டதில் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? மாவோயிஸ்டுகள் என்று சொல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில தோழர்களுக்காக அவர் கட்டணம் வாங்காமல் வாதாடினார். அவர் கடமையைச் செய்தார். பலனை எதிர்பார்க்கவில்லை. அதுதான் குற்றம் என்று ஊபா அவர் மீது பாய்ந்துள்ளது. சட்டவிரோதம் என்று எதை வேண்டுமானாலும் அரசு சொல்லலாம். அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அதுதான் பெரிய அபாயம்.

ஒரு நாயைக் கொன்றால் அதை ஏன் கொன்றாய் என்று கேட்டால் அதற்குப் பைத்தியம் என்று சொல் என்றான் ஹிட்லர். அதுபோலத்தான் மக்களுக்காகப் போராடுகிறவர்களை நக்சலைட்டுகள். பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று சொல்லி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் மோடியின் வேலை. ஹிட்லரின் முடிவு மோடிக்கும் ஏற்படும் என்று சொல்லி தனது சிறப்புரையை முடித்தார் வழக்கறிஞர் தோழர் பாலன்.

முன்னதாக தலைமையுரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் “ பேராசிரியர் சாய்பாபா முதலில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எழ வேண்டிய எதிர்ப்புக் குரல்கள் குறைந்துள்ளன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது படித்த அறிவுஜீவி தரப்பினர் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கோ இருக்கிற சாய்பாபாவுக்குத்தானே வந்திருக்கிறது. நமக்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. மதுரையில் வழக்கறிஞர் முருகனுக்கு எதிராக இந்தக் கருப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. நாளை நெடுவாசலில், தஞ்சையில், கூடங்குளத்தில், மெரினாவில் போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் மீது பாயலாம். டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது, என் மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழலுக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது நிரந்தரத் தொழில் தடைவரை தண்டனை சட்டப் புறம்பாக மின்னணு சாட்சியங்களை வைத்து விதிக்கப்பட்டுள்ளது.

தோழர் வாஞ்சிநாதன்

சாய்பாபா 90% உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியில் தான் அவரால் இயங்க முடியும். அவருடைய சிந்தனைக்கு, கருத்துக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகப் போராடுகிற முன்னணியாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் அறிவுஜீவிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.

ஆஜ்மீர் தர்கா, மாலேகான், ஹைதராபாத் போன்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துமத வெறியர் அசீமானந்தா குண்டு வைத்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பின்பும், பத்திரிகைகளில் நேரடியாக பேட்டி கொடுத்து தண்டனையும் எதிர்பார்த்திருந்த போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு போதிய சாட்சியங்கள் இல்லையாம். ஆனால் நேரடி சாட்சியங்களே இல்லாத நிலையில் இரண்டாம் தர சாட்சியங்களை வைத்து சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. பார்ப்பன இந்து மத வெறிக் கும்பலின் பாசிசக் கொடுங்கரங்கள் நீதிமன்றங்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி தன் வசமாக்கி வருகின்றன. எனவே மக்கள் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிற, ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்டுள்ள அனைவரும் செயலை நோக்கி முன்வரவேண்டிய தருணம் இது “ என்று கூறி முடித்தார்.

அதன் பிறகு கேள்வி-பதில் நிகழ்வு நடை பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பினர்களும் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மின்னணு சாட்சியங்கள் பற்றியும், தற்போதைய அரசியல் சமூக சூழலில் நீதிமன்றங்களை நாம் பயன்படுத்த முடியுமா? சாய்பாபா பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.பொருத்தமான முறையில் பாலன் பதில் சொன்னார். மேல்முறையீட்டில் அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். லாட்டரி விழுவது போல் சில வேளைகளில் தீர்ப்புகள் வருவதுண்டு என்று தெளிவுபடுத்தினார்.

நிறைவாக கிளைச் செயலாளர் லயனல் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பெண்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 250 பேர்வரை கலந்து கொண்டனர். 5000- துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பலர் செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். சட்டம், நீதி சார்ந்த பல அறிஞர்களின் மேற்கோள்கள் பிளக்ஸில் அச்சிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை, தொடர்புக்கு – 9443471003