privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக் கடைகளை மூடு - தமிழக மக்கள் போர்க்கோலம் !

டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !

-

கேலிச்சித்திரம்: முகிலன்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் 2017, மார்ச் 31-க்குள் அகற்றப்பட வேண்டும் எனக் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்குள் மதுபானக் கடைகள் வைக்கக் கூடாது, மதுபானக் கடைகளுக்குச் செல்லும் வழிகாட்டி பதாகைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 5,672 மதுக்கடைகளில் 3,321 மதுக்கடைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசிற்கு ஏற்பட்டது.

கோவை காக்கா பாளையம் – போலீசு குவிப்பு

தமிழகத்தை ஆளும் அதிமுக மாஃபியா கும்பலுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அடியாக இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களே சாராய ஆலைகளை நடத்துபவர்களாகவும், அதிமுகவின் அல்லக்கைகளே பார்களை நடத்துபவர்களாகவும் இருக்கும் போது இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு? அதோடு, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 30,000 கோடி வருமானத்தை ஈட்டித் தரக் கூடியதாக டாஸ்மாக் இருப்பதால், ஏற்கனவே கடனில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இது புதிய தலைவலி.

அரசிற்கு ஏற்படும் நிதி இழப்பை முன் வைத்து சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடினால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும், ஆகையால் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கடந்த மார்ச் 29 அன்று இதனை  விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், வருமானத்திற்காக மக்களின் உயிரிழப்பை அங்கீகரிக்க முடியாது எனக் கூறி, உத்தரவை நிறுத்தி வைக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.

வெறி கொண்ட நாயைப் போல் ஒரு பெண்ணை பாய்ந்து அடிக்கும் ஏ.டி.எஸ்.பி

உச்சநீதிமன்றத்தின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள தமது டாஸ்மாக் கடைகளை, அருகில் உள்ள ஊர்ப்பகுதிகளுக்குள் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. இதற்கு எதிராக தங்களது ஊருக்குள் கொண்டு வரப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சமளாபுரத்தில், நெடுஞ்சாலைப்பகுதியில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதற்கு மாற்று மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டு வருவதற்கான பணிகளைப் பார்த்து வந்தது மாவட்ட நிர்வாகம். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 11.04.2017 அன்று சோமனூர்- காரணம்பேட்டை சாலையில்   போரட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் இருந்து 9 மணிநேரம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை. பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் அங்கு வந்த போலீசு அவர்களை களைந்து போகும் படி மிரட்டியது. அதற்கு மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து போராடிய மக்களின் மீது திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசு வெறிக் கும்பல் கடும் தாக்குதலைத் தொடுத்தது. களத்தில் முன் நின்று உறுதியாகப் போராடிய பெண்களைக் குறி வைத்து கடுமையாகத் தாக்கிய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது கைகளால் ஓங்கி அறைந்தது பார்ப்பவர்களையே பதறச் செய்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவலாக சென்றடைந்தது.

போலீசு நடத்திய தடியடியில் சமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவருக்கு மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. போலீசின் வெறித் தாக்குதலில் சுமார் 10 பெண்கள் உட்பட 30 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.  பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன், போலீசு ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரைக் கண்டித்து மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். 12/04.2017 அன்று அதிகாலை 3.30 மணியளவில் போராட்டக்காரர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வலுக்கட்டாயமாகக் கைது செய்தது போலீசு

போலீசு தாக்குதலில் போராட்டக்காரர் ஒருவரின் தலை உடைக்கப்பட்டு ரத்தம் வழிய அழைத்துச் செல்லப்படும் காட்சி

அதே போல வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு கிராமத்தில் மாற்று டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.  இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகம் 11.04.2017 அன்று காலை அங்கு கடையைத் திறந்தது. இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாட்டில்களை அடித்து நொறுக்கிக் கடையைச் சூறையாடினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் முழுக்க சுமார் 176 நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை மூடியது மாவட்ட நிர்வாகம். அக்கடைகளுக்கு மாற்றுக் கடைகளாக அருகில் உள்ள கிராமப்புறங்களில் கடைகளைத் திறக்க நடைபெற்று வரும் ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடை 11.04.2017 அன்று திறக்கப்பட இருந்தது. இதனைக் கண்டித்து அனுப்பம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கந்தன்பாளையம்,அக்கரைமேடு, ஏரிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஊர்ப் பொதுமக்கள் ஒன்று கூடி நடத்திய விடாப்பிடியான போராட்டத்தின் பயனால், டாஸ்மாக் கடை அப்பகுதியில் இருந்து ஒரே நாளில் அகற்றப்பட்டது.

அரூர் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக்கை  அருகில் உள்ள மொண்டுகுழி கிராமத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அன்று சாலை மறியலில் ஈடுபட்டதோடு, இப்பகுதியில் கடை வைத்தால் குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர். அதோடு ஒரு பெண் அங்கேயே தீக்குளிக்கவும் முயற்சித்தார். பின்னர் அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள், கடையை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கை விட்டுக் கலைந்து சென்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மூலிமங்கலம் அருகே கிலுவக்காடு பகுதிக்கு மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டித்து சுமார் 25 பெண்கள் உட்பட 35 பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சீனிவாச நகரில், மாற்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க வந்த ஊழியர்களை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், டாஸ்மாக் கடை தொடர்ச்சியாக மூடப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே குமாரபுரம் டாஸ்மாக் கடைக்கான கட்டுமான வேலைகள் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று அங்கு கட்டுமானப் பணிகளுக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல், அருப்புக்கோட்டை அருகே சலுக்குசார்ப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை போராட்டம்

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, உளுந்தூர்ப்பேட்டை அருகே கெடிலம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள திங்குவார்பட்டி, வேலூரை அடுத்துள்ள காட்பாடி, நாமக்கல் ராசிபுரம், தஞ்சாவூர், நெல்லை, அம்பாசமுத்திரம், கடலூர், விருத்தாச்சலம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்களே களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் செங்காளிப் பாளையம்  மற்றும் காக்கா பாளையத்திலும் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் காக்கா பாளையம் டாஸ்மாக் கடையைத் திறக்க கடந்த ஏப்ரல் 11 அன்று கருத்தம்பட்டி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்.ஐ.கள் தலைமையில் சுமார் 50 ஆயுதப்படை போலீசு கும்பல் குவிக்கப்பட்டது. அரசின் ஏவல்நாய்களின் பாதுகாப்போடு காக்கா பாளையம் சாராயக்கடை திறக்கப்பட்டது. அதே போல, மக்கள் எதிர்ப்பு அதிகமாக உள்ள செங்காளிப் பாளையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு போலீசு பாதுகாப்போடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

வெறிநாய்கள் போல மக்களின் மீது பாய்ந்து பிடுங்கி, மிரட்டி இன்று திறந்து விடலாம். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மக்களின் வெஞ்சினத்திலிருந்து இந்த சாராயக்கடைக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?

எடப்பாடி – மக்கள் போராட்டம்

கடந்த 2015-ம் ஆண்டு சசிப்பெருமாள் மூட்டிய தீ, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் உணர்வுமிக்கப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பற்றிப் படர்ந்தது. “மூடு டாஸ்மாக்கை” என முழக்கம் வைத்து மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பாசிச ஜெயா அரசிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவன் டாஸ்மாக்கிற்கும், அதன் வருமானத்தில் கொழுக்கும் ஜெயாவிற்கும் எதிராக பாடிய பாடலுக்காக கைது செய்யப்பட்டார். இக்கைதின் மூலம் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் போராட்டமாகப் பற்ற வைத்தது பாசிச ஜெயா அரசு. சாராயத்திற்கு எதிரான மக்களின் உணர்வுநிலை அரசிற்கு எதிராக இருந்ததால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாசிச ஜெயாவே, படிப்படியாக சாராயக் கடைகளை மூடப் போவதாக அறிவித்தார்.

இன்று மீண்டும் தமது வாழ்நிலையை சீர்குலைக்க வரும் அரசிற்கு எதிராக அதே உணர்வு நிலை மக்களிடையே எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இங்கு டாஸ்மாக்கிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளது. இது ஒரு துவக்கம் தான். இனி மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை என எது வந்தாலும் போராடப் பழகிய தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைத் தாங்களே வென்றெடுப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க