privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்திருவள்ளூர் - குடந்தையில் மூடப்பட்ட டாஸ்மாக் - மக்கள் அதிகாரம்

திருவள்ளூர் – குடந்தையில் மூடப்பட்ட டாஸ்மாக் – மக்கள் அதிகாரம்

-

அனுப்பம்பட்டு டாஸ்மாக் கடை மக்கள் போராட்டாத்தால் மூடப்பட்டது !

திருவள்ளூர் அருகே உள்ளனுப்பம்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் 10-ம் தேதி  அன்று அனுப்பம்பட்டு நெடுசாலையில் மூடிய டாஸ்மாக் கடையில் உள்ள சாராய பாட்டில்களை இரவோடு இரவாக வந்து இறக்கியது டாஸ்மாக் நிர்வாகம். இதை அறிந்த ஊர் மக்கள் 11-ம் தேதி காலையில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தை தொடங்கினர். எங்கள் ஊரில் சாராய கடையை திறக்க கூடாது என போராட தொடங்கினர். இந்த போராட்டத்தை பற்றிய தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அந்த பகுதிக்கு சென்று மக்களுடன் இணைந்து போராட தொடங்கினர்.

முதல் நாள் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து  இந்த கடையை இங்கே திறக்க வேண்டாம் என மனு ஒன்றை தயாரித்து தாசில்தாரிடம் கொடுத்தனர். இது குடியிருப்பு பகுதி, மக்கள் செல்லும் வழி, பள்ளிக்கூடம் 100 மீட்டருக்குள்  இருக்கிறது. பெண்கள் இந்த வழியாகத்தான் ஊருக்குள் சென்று வருகிறார்கள் அதனால் எங்களுக்கு பாதிப்பு உள்ளது என மக்கள் மனுவில் எழுதியிருந்தனர். தாசில்தார், மறுநாள் நேரில் வந்து பார்த்து முடிவு சொல்வதாக கூறினார். ஆனால் நேரில் வந்து பார்க்கவில்லை.

அந்த கடை அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவருடைய இடத்தில் தான் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று யாரும் போராட்டத்திற்கு போக கூடாது என இரண்டாவது நாள் ஆள் வைத்து மிரட்டியுள்ளார். டாஸ்மாக் வைக்க இருக்கும் கந்தம்பாளையம் கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மிரட்டிகிறார் என்ன செய்வது என அச்சப்பட்டனர். எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கதான் செய்வார்கள் நாம் இவர்களை மீறி தான் போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவர் சசிகலா அணியை சேர்ந்தவர். கந்தம்பாளையம் நாலூர் ஊராட்சி தலைவர் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர். போராடும் மக்களை போலிஸ் நிலையத்தில் உங்கள்  ஊராட்சி தலைவரின் மீது புகார் கொடுங்கள் என பேசியுள்ளார். போலிசிடம் புகார் கொடுத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளக்கிய பேசிய பிறகு மக்கள் நாம் சொல்வதை ஏற்று கொண்டனர். போலிசிடம் போக தேவையில்லை நாங்கள் போராடுகிறோம். யாருக்கு இந்த கடையை மூட அதிகாரம் இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் உறுதியாக கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

அன்று மாலை நான்கு மணி வரை வருவதாக சொன்ன தாசில்தார் வரவில்லை. போலிசோ உங்களுடைய பாதுகாப்பிற்கு நாங்கள் வரவில்லை. கடையின் பாதிகாப்பிற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என சொல்கிறார்கள் என மக்கள் தங்களுக்குள் பேசி ஆவேசப்பட்டனர். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது கடையை நடத்த வேண்டும் என்பது தான்  போலிஸ், தாசில்தார் எல்லாம் கூட்டு களவாணிகள் தான் என்பதை மக்கள் மத்தியில் விளக்கினோம். இப்படி பேசி கொண்டிருக்கும் போதே வருவாய் துறை அதிகாரி வந்து என்ன நடக்கிறது என்று நோட்டம் பார்க்க வந்திருந்தார். வந்தவர் மக்களிடம் ஒன்றும் பேசவில்லை.

சும்மா நின்று பார்த்து கொண்டிருந்தார். போலிஸிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள் அவரிடம் சென்று மேடம் பாருங்க இங்கு கடை வந்தால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாது என்று முறையிட்டனர். என்னிடம் அதிகாரம் இல்லை, உடனே முடிவு செய்ய முடியாது என்றார். மேல் அதிகாரிகள் தான் முடிவு செய்ய முடியும் என்றார். மேலே மேலே என்றால் யாரு? உங்கள் வீட்டின் பக்கத்தில் இப்படி டாஸ்மாக் கடையிருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? இப்படி பேசுவீர்களா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். உடனே அவர் கிளம்பிவிட்டார். கடையை இன்று திறக்கமாட்டார்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இரண்டாவது நாள் – நம் ஊர் மக்கள் மட்டும் போராடினால் வெல்ல முடியாது. பக்கத்தில் உள்ள ஊர் மக்களை இணைத்து கொண்டு போராடினால் தான் கடையை மூட முடியும் என மக்களிடம் கூறினோம். மக்கள் ஏற்று கொண்டனர். கந்தன்பாளையம் ஊரில் உள்ள பெண்கள், ஆண்கள், பள்ளி மாணவர்கள் என மொத்தம் 30 பேர் பக்கத்துக்கு கிராமமான ராஜபாளையம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை அணிதிரட்டினர். பின்பு ராஜபாளையம் ஊர் மக்களுக்கும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்பு இரண்டு ஊர் மக்களும் சேர்ந்து கொண்டு அடுத்த ஊரான ஏரிமேடு கிராமத்திற்கு சென்றனர்.

அடுத்த நாள் மூன்று ஊர்களிலும் மக்கள் அதிகாரம் போஸ்டர் ஒட்டப்பட்டது. மூன்று ஊர் மக்களும் சேர்ந்து மொத்தம் 200 பேர்கள் அடுத்த நாள் போராட்டத்தில் இறங்கினர். டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை போலிசு கிழித்துவிட்டனர். மூன்றாவது நாள் போராட்டத்தின் போது பொன்னேரி டி.எஸ்.பி நேரில் வந்தார். நீங்கள் செய்யும் போராட்டங்களை நாங்கள் கோட்டாச்சியர், கலெக்டருக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம் என்று போனில் அனுப்பிய செய்தியை காட்டி மக்களை படிக்க சொன்னார். மக்களும் படித்தனர். வன்முறையெல்லாம் செய்ய கூடாது. யாருடைய பேச்சை கேட்டோ இப்படி செய்கிறீர்கள் என்று கூறினார். உடனே இது எங்கள் பிரச்சனை யாரை பேச்சையும் கேட்டு நாங்கள் போராடவில்லை. மூன்று நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறோம் இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் என மக்கள் கூறினர். அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மக்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். மதியம் 1 மணி பிறகும் எந்த அதிகாரியும் வரவில்லை. தொடர்ச்சியாக இப்படி எங்களால் போராடிக் கொண்டேயிருக்க முடியாது. ஒரு முடிவு சொல்லுங்கள், 2 மணி வரை கெடு என்று போலிசிடம் மக்கள் அறிவித்தனர். அப்படி வரவில்லை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர். உடனே போலிசு போனில் பேசினார். பொன்னேரியில் இருக்கும் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என கூறினார். ஆண்கள் மட்டும் போவதாக இருந்தது. பெண்கள் பத்து பேர்கள் போக வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டது. இவர்கள் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் தாசில்தார் போராடும் இடத்திற்கு வந்தார். வந்து மக்களிடம் பேசவில்லை. போலிசிடம் மட்டும் பேசிவிட்டு சென்று விட்டார். போலிசுக்காரர்கள் வெறும் 30 வீடுகள் தான் இருக்கிறது ஒரு பிரச்சனையும் இல்லை என கூறினார்கள். அதை கேட்டு விட்டு சென்றுவிட்டார். உடனே பெண்கள் போலிசை சுற்றி வளைத்து உங்களுக்கு தெரியுமா? எந்த பிரச்சனையும் இல்லையென்று சொல்கிறீர்கள், உங்கள் வீட்டின் பக்கத்தில் டாஸ்மாக் இருந்தால் இப்படி சொல்வீர்களா? என சரமாரியாக கேள்வி கேட்டனர். உடனே அந்த இடத்தை விட்டு போலீசுக்காரர்கள் நகர்ந்துவிட்டனர்.

மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை
மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை

இந்த தாசில்தார் தான் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த கடையை மூடினால் கள்ள சாராயம் வந்து விடம் பரவாயில்லையா? என்று கேட்டுள்ளார். மக்கள் பாதிப்புகளை எடுத்து கூறி கடையை மூடுங்கள். கள்ள சாராயம் வந்தால் நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம் என்றனர்.  ஏற்கனவே நாங்கள் மனு கொடுத்துள்ளோம் என அந்த மனுவையும் சேர்த்து காட்டியுள்ளனர். கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி கூறிய பிறகே மக்கள் வந்தனர்.

இங்கு கடையை திறக்க விடமாட்டார்கள் என்று உணர்ந்த அதிகாரிகள் உடனே வருவாய் துறை அதிகாரி அனுப்பி கடையை பூட்டு போட்டு, நோட்டீஸ் ஒட்டினர். மறுபடியும் திறந்தால் போராட்டம் தொடரும் என கூறி மக்கள் கலைந்தனர். மக்களின் போராட்டம் வென்றது. இவர்களிடம் கெஞ்சி ஒரு பயனுமில்லை. உறுதியான போராட்டமே ஒரே தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் கற்று கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.


சுந்தர பெருமாள் கோவில் :

நீதிமன்ற உத்தரவுன் படி குடந்தை – தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை சுந்தர பெருமாள் கோவில் அருகிலுள்ள சுடுகாட்டின் அருகிலேயே டாஸ்மாக் கட்ட இடம் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த சுந்தர பெருமாள் கோவில் இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் தோழர்களும் களநிலையை அறிந்து 10.04.2017 கடந்த திங்கள் கிழமை அன்று சில மணிநேரங்களில் மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று அப்பகுதி உழைக்கும் மக்களை அணிதிரட்டினர். தோழர் சங்கத்தமிழன் தலைமையில் இளைஞர்கள்,பெண்கள்,குழந்தைகள், வயதானவர்கள் என 70-க்கு மேற்ப்பட்டோர் திங்கள் கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை அறிந்து வந்த அதிகாரிகள் டாஸ்மாக் வரவே இல்லை. இப்போது ஏன் போராடுகிறீர்கள்…? என்று கேட்ட போது போராட்டத்தில் இருந்த பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை பார்த்து அப்போ டாஸ்மாக் வந்த பிறகு போராடினால் மூடி விடுவீர்களா…? என சரியான பதிலடி கொடுத்தார்.

இவ்வாறு சமரசத்திற்கு பணியாது மக்கள் எங்கள் பகுதில் டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம். அப்படி மீறி டாஸ்மாக்கை திறந்தால் கடையை கொளுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.  சில பெண்கள் எங்கள் உயிரே போனாலும் சரி டாஸ்மாக் கடையை வைக்க விடமாட்டோம் என உறுதியாக போராட்டத்தில் முன் நின்றனர். மக்களின் இந்த நெஞ்சுரத்தை கண்ட அதிகாரிகள் உடனடியாக பின் வாங்கினர்.

எழுத்து பூர்வமாக இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மூன்று மணிநேர சாலை மறியல் போரட்டத்தை விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கொராநாட்டு கருப்பூர் :

கொராநாட்டு கருப்பூர் நெடுஞ்சாலையில் நீதிமன்ற உத்தரவுன் படி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை கொரநாட்டு கருப்பூர் அருகிலுள்ள புளியந்தோப்பு பகுதியில் அமைக்க கடந்த 11.04.2017 செவ்வாய்கிழமை அன்று மாலை அங்கு செங்கள் இறக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த கருப்பூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள், மக்கள் மத்தியில் இதனை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதனை அறிந்து கிராமமக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதைத் தடுக்க களமிறங்கினர். அதைத் தொடர்ந்து குடந்தை – சென்னை நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமை தாங்கினர்.

அதன் பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து சமர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மக்கள் அதற்குப் பணியாமல் போராட்டத்தினைத் தொடர்ந்தனர். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அதிகாரிகள் கடை வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர். எழுத்து பூர்வமாக அறிவித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் சென்னை – குடந்தை சாலை முடங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

குடந்தை – 97902 15184.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க