privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

-

மிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக

  • விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்துசெய்!
  • விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • காவிரி நடுவர் மன்றத்தை உடனே அமை!
  • வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்காதே!

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ போரடக்கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளையோ, போராட்டத்தையோ சிறிதளவும் மதிக்காமல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றது. இதனைக் கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி, தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக 17.04.2017 அன்று திருச்சியில் உள்ள மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக சுவரொட்டி மூலம் அறிவித்தனர். காலை 9:00 மணி முதலே தடுப்பரண்கள் அமைத்து, சாலையை மறித்து கடமை உணர்வுடன் காத்துக்கிடந்தது போலீசு. இதனால் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமானது. போலீசின் இந்தக் கெடுபிடியைக் கண்டு அருகிலுள்ள சினிமா தியேட்டருக்கும், பெட்ரோல் பங்குக்கும் வந்தவர்கள் ’ஏதும் மந்திரிங்க, நடிகருங்க வர்ராங்களா?’ என பேசிக்கொண்டனர். திட்டமிட்டபடி மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்ட இடத்திற்கு அருகில் மக்களோடு மக்களாக கலந்து தயாராக இருந்தனர்.

சரியாக 11:00 மணியளவில் பறை முழக்கம் கேட்டவுடன் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கொடி மற்றும் முழக்கத்தட்டிகளை ஏந்தியபடி பல முனைகளில் இருந்தும் திரண்டு பாஸ்போர்ட் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். முன்னேறிய தோழர்களைப் போலீசு தடுக்க முயன்றது. தோழர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் போலீசைப் புறந்தள்ளி முன்னேறிச் சென்றனர். போலீசின் தடுப்பரண்களைத் தாண்டி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோடி முகமூடி அணிந்து விவசாயிகளுக்கு சுறுக்கு மாட்டி இழுக்கும் எமதர்மனாக மோடியை சித்தரித்தும், மோடி முகமூடி அணிந்தவரை செருப்பால் அடித்தும் காட்சி விளக்கம் செய்தனர். பி.ஜே.பி-யின் தாமரை சின்னத்தை வெட்டியெறிந்து காலில் போட்டு மிதித்தனர்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் “இந்த அரசு விவசாயிகளின் போராட்டத்தை சிறிதளவுக்கூட மதிக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த இதே அரசுதான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இது மக்களுக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இது எந்த வகையிலும் மக்களுக்கு உதவாது. இதனை தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கான மாற்று அரசை நிறுவ வேண்டும். அனைத்து அம்சங்களிலும் இந்த அரசை முடக்கி மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வு அது தான் மக்கள் அதிகாரம்” என்றார்.

பிறகு தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்ற போலீசார் போராட்டத்தை தடுத்துவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிடுவற்குள் மற்றொரு குழுவினர் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டவாறு தடுப்பரண்களை தள்ளிவிட்டு முன்னேறிச் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் போராட்டத்தைப் பார்த்து மிரண்டனர். போர்குணமாக போராடிய தோழர்களை கைது செய்ய முடியாமல் போலீசு திணறியது. போலீசுத்துறை துணை ஆணையர் மயில்வாகனன், ஜல்லிகட்டு போராட்டத்தின்போது எந்த அமைப்பினரை பெயர் குறிப்பிடாமல் தீவிரவாதிகள் என்று சித்தரித்து பீதியூட்டினாரோ அதே அமைப்பினரின் போராட்டத்திற்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய காலத்தின் காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். போர்க்குணமிக்க இப்போராட்டம் மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகவும், போராடக் கூடிய மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்தது.

போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

காவிரி ஆணையம் மறுத்து விட்டு
ஒற்றை ஆணையம்னு ஏய்க்காதே!
வளர்ச்சி என்று ஏய்க்காதே
ஹைட்ரா கார்பனைத் திணிக்காதே!

விவசாயி, வியாபாரி…
மீனவன… மாணவன…
மக்களையெல்லாம் கொன்று விட்டு
டிஜிட்டல் இந்தியா யாருக்கு?

பதில் சொல் பதில் சொல்
காட்டை அழித்த கிரிமினல் ஜக்கி
சிலை திறக்க பறந்து வந்த…
கூப்பிடு தூரத்தில் சாகக் கிடக்கான்
தமிழகத்து விவசாயி…
எட்டிப்பார்க்க நேரமில்லையா
உலகம் சுத்தும் மோடியே
பதில் சொல் பதில் சொல்!

வர்தா புயலுக்கும் வறட்சிக்கும்
அறுபதாயிரம் கோடி கேட்டாக்கா
ரெண்டாயிரம் கோடிதான் தருவானாம்!

யானைப்பசிக்கு சோளப்பொறி
பார்ப்பன கும்பலின் மனுநீதி!
இது பார்ப்பன கும்பலின் மனுநீதி!

வேண்டும் காவிரி மறுப்பானாம்
வேண்டாத மீத்தேன திணிப்பானாம்
விடமாட்டோம் விடமாட்டோம்
பார்ப்பன கும்பலே பா.ஜ.க-வே
திராவிடப் பகையே விடமாட்டோம்!

அவமானம் அவமானம்
விவசாயிகளை கொச்சைப்படுத்தும்
எச்சி ராசாவ … சொர்ணக்காவ…
உலவ விடுவது அவமானம்!

மாடு செத்துப் போனதெல்லாம்
தேசியப் பிரச்சினையாம்….
விவசாயிகள் செத்து மடிவது
உப்புப் பொறாத விசயமா?
கோமாதாவின் புதல்வர்களை
மாட்டுக்குப் பிறந்த முண்டங்களை
உலவ விடுவது அவமானம்!

காவிரி உரிமையை மறுத்துவிட்டு
வறட்சி நிவாரணம் மறுத்து விட்டு
விவசாயிகளைக் கொன்று விட்டு
மீனவனைக் சுட்டுப்போட்டு
ஆட்டம் போடும் மோடி அரசை
அடித்து விரட்ட வாருங்கள்!

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
திராவிடத்தை… சமூக நீதியை
எதிர்க்க வந்த பார்ப்பன கொழுப்பை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!

துரத்தியடிப்போம், துரத்தியடிப்போம்!
தமிழர் விரோத திட்டங்களை
நீட் தேர்வை, ஹைட்ரா கார்பனை…
கெயில் குழாயை, நியூட்ரினோவை…
திணிக்க முயலும் பா.ஜ.க-வை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!

விவசாயி… தொழிலாளி…
மாணவனும் மீனவனும்…
டாஸ்மாக் எதிர்க்கும் பெண்களும்
தனித்தனியாப் போராடி
தீர்வு கான முடியாது…

கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும்
இந்த அரசமைப்பையே ஒழிக்காம
எந்தப் பிரச்சினையும் தீராது…
தோற்றுப்போன அரசமைப்பு
மக்களுக்கு உதவாது!

போராட்டங்கள் இணையட்டும்
மக்கள் அதிகாரம் மலரட்டும்!

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தஞ்சை மண்டலங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க