privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !

கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !

-

கிரானைட் மாஃபியா கும்பலால் வெட்டிக் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, எஞ்சி நிற்கும் மேலூரிலுள்ள பஞ்சபாண்டவர் மலை.

கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது !

துரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம், அது குறித்து அளித்திருந்த அறிக்கையை, இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் பிரண்ட்லைன் ஆங்கில இதழ் (மார்ச் 31, 2017), “ஒரு கொள்ளையின் கூறுகள்” (Anatomy of a Loot) எனும் தலைப்பில் கட்டுரை வடிவில் மிகச் சுருக்கமாக வெளியிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் செப்.11, 2014 அன்று சகாயத்தை சட்ட கமிசனராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 2014-இல் தனது விசாரணையைத் தொடங்கிய சகாயம், நவம்பர் 2015-இல், ஓராண்டுக்குள்ளாகவே தனது அறிக்கையை நீதிமன்றத்திடம் அளித்தார். சமூகத்தில் நிலவும் ஊழல் பற்றி அடிக்கடி சவுண்டுவிட்டு வரும் நீதிபதிகள் தாமாகவே முன்வந்து அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களோ, “சகாயத்தின் அறிக்கையை வெளியிடுமாறு அ.தி.மு.க. அரசிற்கு அறிவுறுத்திவிட்டு”த் தமது கடமையை முடித்துக் கொண்டனர்.

சகாயம் சட்ட கமிசனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சகாயம் விசாரணை நடத்துவதற்கு பெஞ்சு – நாற்காலியைக்கூடத் தராமல் அலைக்கழித்த, சகாயம் எங்கே போகிறார், யாரிடம் விசாரணை நடத்துகிறார், யாரெல்லாம் அவரைச் சந்தித்து புகார் தருகிறார்கள் என்பதையெல்லாம் உளவுத்துறையின் மூலம் கண்காணித்த புர்ரட்ச்சித் தலைவியின் அரசு, கிரானைட் கொள்ளை பற்றி அவர் தந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிடும் என நீதிமான்கள் நம்பியது,  ”இன்னுமடா நம்பள நம்புறாங்கே” என்ற வடிவேலுவின் காமெடியை மிஞ்சக்கூடியது.

அறிக்கை அளிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அதனை உடனடியாக வெளியிடக் கோரும் பொதுநல வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கை கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் அமர்வு, அப்பொழுதும்கூட அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிடாமல், இது குறித்துத் தமிழக அரசு பதில் அளிப்பதற்கு ஆறு வாரம் அவகாசம் அளித்து, வழக்கை ஒத்தி வைத்துவிட்டது. இந்த நிலையில்தான், பிரண்ட்லைன் இதழ் வழியாக சகாயம் அறிக்கை கசிந்து வெளியே வந்திருக்கிறது.

தமிழக அரசின் கடனும் கிரானைட் கொள்ளையும்

நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு தோற்றுப் போய், திவாலாகி, மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது என நமது ஏட்டில் தொடர்ந்து எழுதி வருகிறோம். மக்கள் அதிகாரம் இக்கருத்தை முன்வைத்து, மக்களை அணிதிரட்டி வருகிறது. 600 பக்கங்களைக் கொண்டிருக்கும் சகாயத்தின் அறிக்கை இக்கருத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு தரவுகளையும் சான்றுகளையும் கொண்டிருக்கிறது.

சகாயம் அறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் கிரானைட் கற்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்பால் தமிழக அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 65,154.60 கோடி ரூபாய். இந்த முறைகேடுகளின் மீது அபராதம் விதிக்கப்பட்டிருக்குமானால், அரசிற்கு 44,283.12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆக, மதுரை மாவட்டத்தில் மட்டும் நடந்துள்ள கிரானைட் சுரங்க ஒதுக்கீடு, உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,09,437.72 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டிருக்கிறார், சட்ட கமிஷனர் சகாயம்.

கிரானைட் கழிவுகளால் குப்பைத் தொட்டியாக்கப்பட்ட மேலூர் வட்ட கிராமப்புறம்.

பி.ஆர்.பி. உள்ளிட்டவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் குவாரிகள் உள்ளன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மதுரையைத் தவிர, பிற மாவட்டங்களில் விசாரணை நடத்த தேவையில்லை என சகாயத்துக்கு உத்தரவு போட்டதால், அங்கு நடந்திருக்கும் கொள்ளை வெளியே வராமல் அமுக்கப்பட்டுவிட்டது.

ஒருபுறம் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளை; இன்னொருபுறம் ஆளும் அ.தி.மு.க. கும்பலின், அதிகார வர்க்கத்தின் அடிமடியிலேயே கைவைக்கும் ஊழல். இந்த இரண்டும் சேர்ந்ததன் விளைவுதான் தமிழக அரசின் 3.14 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமை.

பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து, அதனைக் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்த மாஃபியா கும்பல் காராகிரகத்தில் அடைக்கப்படவில்லை. ஆனால், அப்பாவித் தமிழர்களோ, கூடுதல் வாட் வரி, பேருந்துக் கட்டண உயர்வு, ரேஷன் சர்க்கரைக்குக் கூடுதல் விலை என இக்கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாமின் – கிரானைட் கொள்ளையின் சூத்திரதாரி

தமிழகத்திலுள்ள கனிம வளங்களை முறையாக வெட்டியெடுத்து விற்று, அதன் மூலம் அரசிற்கு வருமானம் தேடித் தரும் நோக்கில்தான் டாமின் நிறுவனம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம், சொல்லிக் கொள்ளப்படும் அந்த நோக்கத்திற்கு எதிராகத் தமிழக அரசிற்கு வர வேண்டிய வருமானத்தையும் இலாபத்தையும் தனியாரிடம் கொண்டு சேர்க்கும் கைக்கூலியாகச் செயல்பட்டிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறது, சகாயத்தின் அறிக்கை.

“டாமின் நிர்வாகம் குவாரிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் நோக்கில் 1984-லும், அதன் பின்னர் 1998-லும் முகவர்களை உருவாக்குவது என்ற முறையே ஏற்படுத்தி, கிரானைட் கற்களை வெட்டுவதற்கும் அவற்றை விற்பதற்குமான உரிமங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தது. இவ்வாறு குவாரிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சட்டபூர்வ அதிகாரம் டாமின் நிர்வாகத்திற்கு இல்லாதபொழுதும், 1998, டிசம்பர் 28-இல் நடந்த டாமினின் 134-வது இயக்குநர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தனியார் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்” என சகாயத்தின் அறிக்கை டாமினில் நடந்த மோசடியைப் பதிவு செய்கிறது.

அதன் பிறகு, குத்தகைதாரர்கள் என்ற கொள்ளைக்கூட்டம், எந்த இடத்தில் கற்களை வெட்டியெடுக்க விண்ணப்பம் போடுகிறதோ, அந்த இடம் தொன்மை வாய்ந்த மலையா, நீர்ப்பாசன கண்மாயா, வாய்க்காலா, பஞ்சமி நிலமா, பொதுப்பாதையா, தனியார் நிலமா, சுடுகாடா என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனுமதி வழங்கி, அக்கும்பல் மேலூர் வட்டாரத்தை கிரானைட் கழிவுகளின் குப்பைத் தொட்டியாகச் சீரழித்ததற்குத் துணை போயிருக்கிறது, டாமின்.

திருவாதவூர் ஓவா மலையில் அமைந்துள்ள மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர்களின் குகைகளுக்கு கிரானைட் மாஃபியா கும்பலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் சகாயம்.

மேலும், “குவாரிகளில் புதைந்து கிடக்கும் கற்களின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடுவதன் மூலம், தனியார் குத்தகைதாரர்கள் கொள்ளை இலாபம் அடைவதை டாமின் அதிகாரிகள் உத்தரவாதப்படுத்தியதோடு, டாமினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குவாரிகளில் வெட்டியெடுக்கப்பட்ட கற்களை உள்ளூரில் விற்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் பல முறைகேடுகளைத் தாமே நடத்தி, 5,507.53 கோடி ரூபாயைத் தமக்குள் பங்கு போட்டு முழுங்கியதாக”க் குற்றஞ்சுமத்துகிறது சகாயத்தின் அறிக்கை.

கிரானைட் கொள்ளை – ஒரு பயங்கரவாத நடவடிக்கை

“அதிகார வர்க்கத்தின் துணையோடு கிரானைட் குவாரி குத்தகைதாரர்கள் நடத்திய முறைகேடுகளிலேயே மிகப்பெரும் முறைகேடு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் நடந்த அந்நியச் செலாவணி மோசடிதான்” எனப் பதிவு செய்கிறது, சகாயத்தின் அறிக்கை. மேலும், “இந்த ஏற்றுமதி மோசடிகள் ரூபாயின் மாற்று மதிப்பைப் பாதிக்கக்கூடிய வகையில் அபாயகரமானதாக இருந்தன” என்று தனது அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார், சகாயம்.

மதுரை மாவட்டத்தில் வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களில் எழுபது சதவீதம் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட கற்களின் அளவையும், மதிப்பையும் குறைத்துக் காட்டி, அதன் மூலம் அமெரிக்க டாலர்களாகக் கிடைத்த கருப்புப் பணத்தை, குவாரி குத்தகைதாரர்கள் அந்நிய நாடுகளில் பதுக்கியிருக்கின்றனர்.

“இம்மோசடியைத் தாய்நாட்டின் பொருளாதார நலன்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்” எனக் குற்றஞ்சுமத்தியிருக்கும் சகாயம், “இந்தத் துரோகத்திற்கு தூத்துக்குடி, கொச்சி, சென்னை, மங்களூர் துறைமுகங்களின் அதிகாரிகளும், சுங்கத் துறையும், அரசு வங்கிகளும் உடந்தையாகச் செயல்பட்டிருப்பதோடு, விசாரணையின்போது தகவல்களைத் தர மறுத்தும், ஆவணங்களை அழித்தும் பி.ஆர்.பி., துரை தயாநிதி உள்ளிட்ட குத்தகைதாரர்களைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு நடந்து கொண்டனர்” என அம்பலப்படுத்துகிறார்.

“கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதில் பல்வேறு தில்லுமுல்லுகளை நடத்தவும், இந்த ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அந்நிய நாடுகளில் பதுக்கி வைக்கவும் குவாரி குத்தகைதாரர்கள் லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கியதாக”க் குறிப்பிடும் சகாயம், தனது விசாரணையில் 15 லெட்டர் பேடு கம்பெனிகள் உருவாக்கப்பட்டு, கருப்புப் பணம் அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்ட பிறகு கலைக்கப்பட்டதை ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார்.

நரபலி குறித்த விசாரணையை போலீசே தடுக்க முயற்சி செய்ததையடுத்து, சாட்சியங்களைப் பாதுகாக்க சுடுகாட்டிலேயே தங்கிய சகாயம்.

இந்த லெட்டர் பேடு கம்பெனிகளை உருவாக்குவதற்கு மைய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறை உதவியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், அதன் வழியாக ஏற்றுமதி வர்த்தகத்தில் பல்வேறு தில்லுமுல்லைகளை நடத்தவும் வங்கிகள் உதவியிருக்கின்றன.

ஆம்னி பேருந்து முதலாளிகள் ஒரேயொரு போக்குவரத்து உரிமத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பல பேருந்துகளை இயக்குவதைப் போலவே, குவாரி குத்தகைதாரர்கள் ஒரேயொரு உரிமத்தையும், லாரி எண்ணையும் பயன்படுத்தி, பல லாரிகளை இயக்கியுள்ளனர். துறைமுகத்தின் ஆவணங்களில் குறிப்பிட்ட பதிவெண்ணும் உரிமமும் கொண்ட லாரி, ஒரு முறையோ, இரண்டு முறையோ கிரானைட் கற்களைக் கொண்டு வந்து இறக்கியதாகப் பதிவாகியிருக்கும். ஆனால், உண்மையில் அதே பதிவெண்ணையும் உரிமத்தையும் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான லாரிகள் கிரானைட் கற்களை குவாரியிலிருந்து துறைமுகத்திற்குக் கடத்தியிருக்கும்.

இந்தக் கடத்தலுக்கும், முறைகேடான ஏற்றுமதிக்கும் துறைமுகத்திலுள்ள மத்திய சுங்கத் துறை அதிகாரிகளும், கலால் துறை அதிகாரிகளும் உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். “எத்துணை டன் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றின் தரம் என்ன, அவற்றின் விலையென்ன, இதன் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணி எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டபோது, சென்னை, கொச்சி, தூத்துக்குடி, மங்களூரு துறைமுகங்களைச் சேர்ந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், சகாயம்.

குத்தகைதாரர்களின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பெரும்பாலான வங்கிகள் இந்த ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான அந்நியச் செலாவணி வரவு-செலவு கணக்குகளைத் தர மறுத்துள்ளன. குறிப்பாக, ஒலிம்பஸ் கிரானைட்ஸ் என்ற நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான அழகிரியின் மகன் துரை தயாநிதி குறித்த விவரங்களை சகாயம் கேட்டதற்கு, மதுரையிலுள்ள கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, “துரை தயாநிதி அந்நிறுவனத்தின் பங்குதாரர்தான். ஆனாலும், அவர் குறித்த விவரங்கள் (know your customer) தங்கள் வங்கிக் கிளையில் இல்லை” எனக் கூசாமல் கையைவிரித்துக் காட்டியிருக்கிறது.

கிரானைட் ஏற்றுமதி தொடர்பாகவும், அதில் ஈடுபட்ட லெட்டர் பேடு நிறுவனங்கள் தொடர்பாகவும் 2012-ஆம் ஆண்டுக்குரிய விவரங்களை மட்டும்தான் தேடி எடுக்க முடிந்தது என்றும், அதற்கு முந்தைய, பிந்தைய ஆண்டுகளுக்குரிய விவரங்களைத் தம்மால் நெருங்கவே முடியவில்லை என்றும் அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார், சகாயம். அந்த ஒரு ஆண்டில் மட்டும் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம், ஒரு லெட்டர் பேடு நிறுவனத்தின் மூலம், தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ததில் 38.78 கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணி மோசடி செய்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியான பி.ஆர்.பி.க்குச் சிறந்த ஏற்றுமதியாளர் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது, மைய அரசு.

தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ். குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.

இந்தத் தொகையை (38.78 கோடி ரூபாயை) எதனால் பெருக்கினால், எத்தனை தடவை பெருக்கினால் கிரானைட் ஏற்றுமதியில் நடந்துள்ள மோசடிகளின் மொத்த மதிப்பு கிடைக்கும் என்பதை சகாயத்திற்கும் அப்பனான அதிகாரிகள் விசாரணை நடத்தினால்கூட கண்டுபிடித்துவிட முடியாது. ஏனென்றால், “தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள சுங்கத் துறை மற்றும் கலால் துறையின் கணினிப் பதிவுகளில், கிரானைட் ஏற்றுமதி தொடர்பான விவரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது; கம்பெனிகள் விவகாரத் துறை, அந்நிய வர்த்தக இயக்குநரகம் ஆகியவற்றின் கணினிப் பதிவுகளில், பி.ஆர்.பி. கிரானைட்ஸ், ஒலிம்பியா கிரானைட்ஸ் உள்ளிட்ட கிரானைட் குவாரி நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான விவரங்களை நாங்கள் பெற முடியாதபடி தடுக்கப்பட்டோம். இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி/இறக்குமதி இரகசியக் குறியீட்டு எண், இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குறித்த விவரங்கள், இந்த நிறுவனங்களின் கார்ப்பரேட் இரகசிய குறியீட்டு எண் போன்றவற்றைக்கூட அரசின் இணையதளங்களில் இருந்து எம்மால் பெற முடியவில்லை” எனக் குறிப்பிடுகிறார், சகாயம். தொழில் அதிபர்கள் என்ற போர்வையில் பொதுச் சொத்தைத் திருடித் தின்ற ஒரு மாஃபியா கூட்டத்தை, இந்த அரசுக் கட்டமைப்பு எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பதை நிறுவும் சான்றுகள் இவை.

அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனம்

“கிரானைட் கொள்ளை தொடர்பான செய்திகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த சமயத்தில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதுபோலக் காட்டிக்கொண்டு, 44 கிரிமினல் வழக்குகளை கிரானைட் குவாரி அதிபர்கள் மீது தொடுத்தது. தமிழக அரசின் ஊழல் கண்காணிப்புத் துறை 34 அதிகாரிகளின் வீட்டைச் சோதனையிட்டது. மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்களான மதிவாணன், காமராஜ்; சுரங்கத் துறையைச் சேர்ந்த துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்டுப் பல அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், நாளாக நாளாக விசாரணையின் சூடு தணிந்து போய், வழக்குகள் இயற்கையாக மரணித்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.”

“நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையர் சகாயம் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதையே உள்ளூர் போலீசு விரும்பவில்லை. நரபலி போன்ற கொடூரமான கொலைக் குற்றத்தைச் சட்ட ஆணையர் விசாரிப்பதைக்கூடச் சீர்குலைத்து, சுரங்க குத்தகைதாரர்களைப் பாதுகாக்கத் துணிந்தது போலீசு. கீழவளவு உதவி ஆய்வாளர் அய்யனார், மேலூர் பகுதி கூடுதல் துணை போலீசு கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகிய போலீசு அதிகாரிகள் நரபலி தொடர்பான விசாரணையைத் தடுத்து அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்றால், மதுரை ஊரகப் பகுதி போலீசு மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரி இந்த அதிகாரிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்.”

“ஊழல் அதிகாரிகள், நாணயமற்ற உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்கள், பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத குவாரி குத்தகைதாரர்கள் என்று அமைந்திருந்த இந்தக் கூட்டணி, முறைகேடுகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தடுப்பதை உறுதிப்படுத்தியது.”

“ஒவ்வொரு குத்தகைதாரரும் அரசுக்கு ஏற்படுத்தியிருக்கும் நட்டத்தைத் தனித்தனியாகக் கணக்கிட்டு, அந்தத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் இரண்டே மாதங்களில் முடிக்க வேண்டும் என செப்.2015-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம், இது நாள்வரை ஒரு நயாபைசாவைக்கூட குத்தகைதாரர்களிடமிருந்து வசூலிக்கவில்லை. அவர்களிடம் பேருக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு, உச்சநீதி மன்ற உத்தரவையே முடக்கிப் போட்டுவிட்டது.”

“தாங்கள் மாட்டிக்கொள்ள மாட்டோம், தங்களை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற தைரியத்தில்தான், அதிகாரிகள் குத்தகைதாரர்களின் கொள்ளைக்கும் குற்றங்களுக்கும் எல்லாவிதத்திலும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இலஞ்சம் பணமாகவும், பொருட்களாவும் தரப்பட்டு, மேலிருந்து அடிவரை தமக்கு எதையும் செய்துகொடுக்கக் கூடிய அதிகாரிகளின் கூட்டத்தைக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்” என அதிகார வர்க்கத்தின் கூட்டுக் களவாணித்தனத்தைப் பதிவு செய்திருக்கும் சகாயம், “அதிகார வர்க்கத்தின் இத்தகைய ஒத்துழைப்பின்றி, பள்ளிப் படிப்பையே முடித்திராத ஒரு குத்தகைதாரர் (பி.ஆர்.பழனிச்சாமி) ஒரு மாபெரும் கிரானைட் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை நடத்திய பெரும்புள்ளிகள் பி.ஆர்.பழனிச்சாமி (இடது) மற்றும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி.

கிரானைட் கொள்ளையை மாபெரும் கருந்துளையைப் போல ஆழங்காண முடியாத மோசடி என்று கூறும் சகாயம்,  “இந்த அமைப்பு முறை முற்றும் முழுதாக தோற்றுப்போயிருப்பதுதான், இந்தக் கொள்ளையின் ஆணி வேராக இருக்கிறது” என்று தனது அறிக்கையில் ஒப்புக்கொள்கிறார். பிறகு, தனது கூற்றுக்கே முரணான வகையில் நாய் வாலை நிமிர்த்துவதற்கான பரிந்துரைகளையும் தனது அறிக்கையில் பட்டியலிடுகிறார்.

  • சென்னை உயர்நீதி மன்றம், மத்தியப் புலனாய்வுத் துறையின் கீழ் ஒரு பன்முகப் புலனாய்வு அமைப்பை உருவாக்கி கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
  • மைய அரசின் கீழுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், கிரானைட் தொழில் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தைக் கண்காணிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மையத்தை உருவாக்க வேண்டும்.
  • கிரானைட் ஏற்றுமதி தொடர்பாக நடந்துள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்கு மத்திய அரசின் அமலாக்கத் துறை சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
  • கனிமப் பொருட்களை வெட்டியெடுப்பது தொடர்பாக உள்ள பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி அமைக்க வேண்டும்.
  • அனைத்திற்கும் மேலாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டங்களில் நேர்மையான, அப்பழக்கில்லாத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்.

தோற்றுப் போய்விட்ட அமைப்பு முறையை, அப்பழுக்கற்ற அதிகாரிகளைக் கொண்டும் சட்டங்களைத் திருத்துவதன் மூலமும் சீர்செய்துவிட முடியும் என்ற சகாயத்தின் நம்பிக்கை, கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற திரைப்பட காமெடியைத்தான் நினைவுபடுத்துகிறது. சகாயம் மட்டுமல்ல, நகர்ப்புற நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரும், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அடிபணியாத, இலஞ்சத்திற்கு மயங்காத அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால்தான், இந்த அரசமைப்பு முறை சீரழிந்துபோய்விட்டதாகக் கருதுகிறார்கள்.

இந்த கிரானைட் கொள்ளை விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். மதுரை மாவட்டத்தில் இந்த முறைகேடு கடந்த இருபது ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள், போலீசு கண்காணிப்பாளர்கள், சுரங்கத் துறை இயக்குநர்கள் வந்து போயிருப்பார்கள். அவர்களுள் இரண்டே இரண்டு பேர்தான், சகாயமும், அன்சுல் மிஸ்ராவும்தான் இந்தக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தார்கள். நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் இருவரையும் பணிமாறுதல் என்ற பெயரில் தூக்கியெறிந்து, கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாத்தார், அன்றைய முதல்வர் ஜெயா.

கிரானைட் கொள்ளையை விசாரிக்குமாறு சகாயத்திற்கு உத்தரவிட்டு, நெற்றிக் கண்ணைத் திறந்துவிட்டது போலக் காட்டிக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம், தனது உத்தரவின் மை காய்வதற்கு முன்பே விசாரணையை மதுரை மாவட்டத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு மறு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தையும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும், எந்தவொரு அரசுத் துறையும் கால்தூசுக்குச் சமமாகக்கூட மதிக்கவில்லை. தனக்கு ஒத்துழைக்க மறுத்த தலையாரி, ஏட்டய்யாவைக்கூட சட்ட ஆணையர் சகாயத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைத்துவிட்டு நீதிமன்றம் பூச்சாண்டி காட்டியிருக்கிறது என்ற உண்மை விசாரணையின் போக்கிலேயே அம்பலமானது.

குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் கை வெட்டப்பட்டதைச் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

இதற்கும் மேலாக, கிரானைட் கொள்ளையின் முக்கிய புள்ளியான பி.ஆர்.பழனிச்சாமி, மதுரை தவிர, பிற மாவட்டங்களில் தனது தொழிலை நடத்திக் கொள்ள அனுமதித்தார், உயர்நீதி மன்ற நீதிபதி ராஜா. இந்த முறைகேடான தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியிடமும் ஆளுநரிடமும் வழக்கறிஞர்கள் புகார் செய்தனர். அந்தப் புகாரின் மீது நடவடிக்கை இல்லை. மாறாக, தீர்ப்பை விமரிசித்த வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில்.

மதுரையில் உள்ள ஐந்து காவல் நிலையங்களைக் குறிப்பிட்டு, அந்த போலீசு நிலைய அதிகாரிகள் எந்த வழக்கிலும் பி.ஆர்.பழனிச்சாமியையோ, அவரது குடும்பத்தாரையோ கைது செய்யக்கூடாதென்ற உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியது.

“நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளை நடந்திருக்கிறது. அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு வெளிப்படையாகவே இந்து நாளிதழில் எழுதினார். ஆனால், ஏட்டய்யாவையே விசாரிக்க முடியாத சகாயம் நீதிபதியை எங்கே விசாரிப்பது?

இந்த இலட்சணத்தில் சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்குப் புலனாய்வு, அதனை உயர்நீதி மன்றம் கண்காணிப்பது என்றெல்லாம் சகாயம் பரிந்துரைத்திருக்கிறார். இவையெல்லாம் சங்கர் பாணி சினிமாக்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்றவாறுதான் தற்பொழுது சட்டங்கள் திருத்தப்படுகின்றன. நெடுவாசல் பகுதியில் எதை வேண்டுமானாலும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளுமாறு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.  இப்படிபட்ட நிலையில், கனிம வளங்களைக் கொள்ளையிட முடியாதவாறு சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற சகாயத்தின் பரிந்துரை போகாத ஊருக்கு வழி சொல்லுவதாகும்.

நாடும் மக்களும் எதிர்கொள்ளும் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகள் தொடங்கி இயற்கை வளக் கொள்ளை வரையிலான எதையும் இன்றைய அரசு, அதிகாரக் கட்டமைப்புக்குள்ளே தீர்க்க முடியாது  என்பதுதான் சகாயம் அறிக்கை கூறவரும் உண்மை. இதனை சகாயம் புரிந்துகொண்டாரோ இல்லையோ, பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க