privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விழுப்புரம் கொளப்பாக்கத்தில் - டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

விழுப்புரம் கொளப்பாக்கத்தில் – டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமம் செ.கொளப்பாக்கம். கோழிப்பண்ணையில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டார் தூரம் உள்ளே செல்ல வேண்டும். கிராமத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் 70 ஆண்டுகளாக இல்லை. சாலைகளில் மின்சார வசதிகள் இல்லை. முட்புதர்களும், மலைகளும்  சூழ்ந்த பகுதி. கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில் இருந்தன.  தண்ணீர் இன்றி பயிர்கள்  அனைத்தும் காய்ந்து கிடந்தது. குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை கொண்டு வந்து வைத்தது இந்த கேடு கெட்ட அரசு. இதற்காக தனியார் நிலத்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு ஒழுங்கான கட்டிடம் இல்லாமல் மர நிழலில் படிக்கும் இந்த ஊரில் தான் சாராயம் விற்பதற்கு கான்கிரீட் கட்டிடம் ஒரு கேடாம்.

தேசிய நெடுஞ்சாலை கோழிப்பண்ணையில்  இருந்த கடையைத் தான் ஊருக்கு உள்ளே  கொண்டு வந்து வைத்துள்ளார்கள். (கடை எண்:11477) இந்த கடைக்கான கட்டிடம் கட்டும் பொழுதே கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் மின்கொட்டகை கட்டுவதாக சமாளித்து வந்தனர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி  இரவோடு இரவாக சாராய பாட்டில்களை கொண்டு வந்து இறக்கியது அரசு. அன்று முதல் பள்ளி மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு ஆரம்பித்தது தலைவலி. வீட்டில் சண்டை, மாணவிகளை தரக்குறைவாக பேசுவது என்று குடிகார ஆண்களின் வக்கிரங்களுக்கு ஆளாகினார்கள்.

டாஸ்மாக் கடயை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் டி.எஸ்.பி -யை முற்றுகையிட்ட மக்கள்

கோழிப்பண்ணையில் இருந்த  கடையை எடுக்க கோரி  ஊர் தலைவர் ராஜாங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. அவரும் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு கிராம மக்களே ஒன்று கூடி கடையை எடுக்க முடிவெடுத்தனர். அதற்காக கிராமம் தோறும் கையெழுத்து இயக்கம் நடத்தி  அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் 02.01.2017 அன்று மனுவாக கொடுத்தார்கள். அதனை மூடுவதாக ஆட்சியர் வாக்குறுதி கொடுத்தார், இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆத்திரமடைந்த மக்கள் இரண்டு முறை சாலை மறியல் செய்துள்ளார்கள்,. அப்பொழுதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்கள் எவ்வளவோ போராடியும் இந்த டாஸ்மாக்  கடையை மூடாமல் அரசு தீவிரம் காட்டுவதற்கு முக்கிய காரணம், விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வரை சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு ஒரு கடை கூட இல்லை. மக்கள் வாடகைக்கு கடை கொடுக்கவும் தயாராக இல்லை. இதனையும் மூடிவிட்டால் தங்கள் “சேவை” தடைபட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம். இதே செஞ்சி சாலையில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு டாஸ்மாக் கடையை மூடியது மக்கள் அதிகாரம்.

வேறு வழி தெரியாமல் இருந்த மக்களுக்கு மக்கள் அதிகாரம் தான் நினைவுக்கு வந்தது. அந்த ஊரில் இருந்த விசிக பிரமுகர் மக்கள் அதிகாரத்தை பற்றி  கூறியதால் உதவிக்கு மக்கள் அதிகாரத்தை அணுகியுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 26 ம் தேதி கடையை முற்றுகையிட்டு போராடினார்கள். போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த  விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குவளவன் கடையை இன்றே மூடிவிடுகிறேன் என்று கூறி மக்கள் முன்னிலையிலேயே கடைக்கு சீல் வைத்தார். மக்கள் நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

“ருசி கண்ட பூனை சும்மா இருக்காது” என்பது போல 05.05.2017 அன்று  திடீரென முன்பக்க  வழியை மூடிவிட்டு பின்பக்க வழியாக கடையை திறந்து விற்பனையை நடத்தியுள்ளனர். இவ்வளவு விரைவாக கடையை திறக்க காரணம் அந்த ஊரில் பத்து நாட்களுக்கு தொடர் திருவிழா ஆரம்பித்துள்ளது. ஆத்திரமடைந்த மக்கள் அந்த “கடையை மூடுவது தான் எங்களுக்கு திருவிழா” ஆகவே   கடையை உடைப்பது என்றே முடிவுக்கு வந்துவிட்டனர். மக்களின் கோபம் ஊரெங்கும்  பற்றிப் பரவியதால் டாஸ்மாக் விற்பனையாளர் காதுக்கும் கேட்டுள்ளது. ஆகவே பயத்தால் கடையை மூடி விட்டார்.

கடை இருந்தால் தானே திறப்பதற்கு இனி அந்த கடை இல்லாமல் ஆக்கிவிடுவோம்  என்ற முடிவோடு மக்கள் அதிகாரம் தலைமையில் 06.05.2017 சனிக்கிழமை அன்று  திரண்ட மக்கள் தாங்கள் இதுவரை இந்த அரசின் மேல் கொண்ட கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடப்பாரை, மண்வெட்டி கொண்டு பூட்டு போட்டியிருந்த கடையை உடைத்தனர்.

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில் கேஸ்களை வெளியில் எடுத்து போட்டுடைத்தனர். சிறியவர்கள் முதல் பெண்கள் வரை தங்களின் ஆவேசம் தீர உடைத்தார்கள்.  கிராம நிர்வாக அலுவலர் அங்கே வந்ததை சற்றும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. பாட்டிலை உடைப்பதிலேயே தீவிரமாக இருந்தனர்.

பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காதைப் பொத்திக் கொள்ளும் காவலர்

போராட்ட இடத்திற்கு வந்த  கஞ்சனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மீதி சாராய பாட்டில்களை உடைக்காதவாறு பாதுகாப்பு கொடுத்தார். போலிசை பார்த்து கொஞ்சமும் அச்சப்படாத மக்கள் பாட்டிலுக்கு  பாதுகாப்பு கொடுத்த போலிசை “ கழுவி ஊற்றினார்கள்”. அத்துணை வசை சொற்களையும் சிரித்தவாறே ஏற்றுக் கொண்டு “என் கடமையை நான் செய்கிறேன்” என்றார்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளியில் விழுப்புரம் நகர சரகத்திற்குட்டபட்ட அனைத்து காவல் நிலைய போலிசு இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு சங்கர், கலால் பிரிவு வெள்ளைசாமி ஆகிய காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்   மற்றும் உளவுப்பிரிவு,  அதிரடிப்படை என அத்துணை படையையும் குவித்தனர். எந்த படைக்கும் பயப்படாத மக்கள் கடையை அகற்றாமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றதும் செய்வதறியாமல் திகைத்த போலிசு வேறு வழியின்றி தாசில்தாரை வரவழைத்தது.

அந்த “தாசில்தார் உத்தமர்” வந்ததும் உடைந்த பாட்டில்கள், உடையாத பாட்டில்கள் அனைத்தையும் கணக்கெடுத்துக்கொண்டு இரண்டு மினி வேன்களில் மிச்ச மீதியிருந்த சாராய பாட்டில்களை  ஏற்றி அனுப்பி விட்டு கடையை மூடி விட்டோம். இனிமேல் திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

இத்தனை நாட்கள் தாங்கள் மடியில் கட்டிக்கொண்டு அலைந்த நெருப்பு இன்று அணைந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மக்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்பினார்கள்.

தங்களின் அதிகாரத்தை இழந்து மக்களின் அதிகாரத்துக்கு பணிந்த போலிசு சும்மா இருக்குமா? மக்களிடம் தாங்கள் மண்ணை கவ்விய கோபத்தில் இதற்கெல்லாம் காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பு தான் என்றும், அவர்களை கைது செய்தால் தான் தங்கள் வெறி அடங்கும் என்று நினைத்து கிராமத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய அனைத்து கிளை சாலைகளிலும் போலிசை  நிறுத்தி வைத்திருந்தது.

சரியாக மாலை ஆறு மணிக்கு கிராமத்தில் இருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் புறப்பட்டு கொஞ்ச தூரம் சென்ற தோழர்களின்  வண்டியை நிறுத்தி  கைது செய்ய முயற்சி செய்தார் பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

அவரை எதிர்கொண்ட தோழர்கள்  மீண்டும் கிராமத்திற்குள் சென்று  எங்களை கைது செய்ய வருகிறார்கள் என்று மக்களிடம் கூறியதும், மக்கள் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர். ஊருக்குள் பதுங்கியிருந்த வேட்டை நாய் போல் தபதபவென்று போலிசும் வந்து விட்டது.

போலிசை முற்றுகையிட்ட மக்கள் ஆளுக்கொரு திசையில் “எங்களுக்காக வந்தவர்கள் அவர்களை கைது செய்தால் எங்களையும் கைது செய்” என்று ஒரே குரலில் கூறியதால் என்ன சொல்வதென்று தெரியாமல், நாங்கள் அவர்களை கைது செய்யவில்லை வாகன சோதனையில் தான் ஈடுபட்டோம் என்று பச்சையாக புளுகியது. “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன சோதனை வேண்டி கெடக்கு. சாராயம் விக்கும் போது கூட வந்ததில்லை” யார்கிட்ட பொய் சொல்ற என்று மக்கள் கேட்க தன வாயை பொத்திக்கொண்டார் உதவி ஆய்வாளர்.

எப்படி பேசினாலும் கடிவாளம் போடுவதால், உங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது. எனவே நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றது போலிசு. “உங்களை நாங்கள் பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்கவில்லை, உங்கள் பாதுகாப்பை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம், எங்களை மீறி நீங்கள் எப்படி அவர்களை கைது செய்து விடுவீர்கள் என்று பார்த்து விடாலாம் என நேருக்கு நேராக மக்கள் கூறியதும் தங்கள் பாட்சா இனியும் இவர்களிடம் செல்லாது என்பதை எப்பொழுதும் போல் தாமதமாகவே புரிந்து கொண்டது போலிசு.

உடனடியாக அங்கிருந்து கிளம்பினால் பெரும் அவமானம் என்பதால் தொடர்ந்து அந்த ஊரில் உள்ள  கைக்கூலிகளின் உதவியோடு ஊரையே சுற்றி வந்தது.   விடியற்காலை வரை சுற்றி மக்களை பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். விடிந்தும் தோழர்களை அவர்களால் கைது செய்ய முடியவில்லை.

இனிமேல் “சும்மா இருந்தால் ஊருக்குள்ள ஒரு பையனும் மதிக்க மாட்டான், அதனால் காசு கொடுத்தாவது பதக்கம் வாங்கி செல்வோம்” என்ற வடிவேல் காமெடி போல் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்த தாய்மார்கள் இரண்டு பேரையும், காலைக்கடன் கழிக்க சென்றவர்களையும் “கையில் மாட்டியதை எடுத்துச் செல்லும் வழிப்பறி திருடன் போல்”  யாருக்கும் தெரியாமல் கைது செய்து வேனில் ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றது  போலிசு.

மக்கள் பாதுகாப்பில் இருந்த தோழர்களை கைது செய்ய முடியாததால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் போஸ்கோவை அவருடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அடாவடியாக கைது செய்தது.  எப்படியோ  ஒன்பது பேரை கைது செய்து தன்  வீரத்தை நிலைநாட்டியது காவல்துறை.

உள்ளூர் அதிமுக பிரமுகர் மூலம் மூளை சலவை செய்ய முயற்சிக்கும் போலீசு.

சம்பவம் அறிந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்வதென முடிவெடுத்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மோகன்ராஜ் தலையில் மீண்டும் திரண்ட மக்கள் சாரை சாரையாக கிளம்பினார்கள். மீண்டும் அதே போலிசு படை களமிறங்கியது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை ரிமாண்ட் செய்து விட்டு இரண்டு பெண்கள் உட்பட ஆறு  பேர் விடுதலை செயபட்டனர். மற்றவர்களையும் விடுதலை செய்யாமல் இங்கிருந்து கலைய மாட்டோம் என்று மக்கள் உறுதியாக நின்றனர்.

நேரடியாக மக்களிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் அதிமுக வின் உள்ளூர் பிரமுகர் ஒருவரை களமிறக்கி மக்களைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. தன்னால் முடிந்த வரை மணிக்கணக்காக பேசியும் ஒருவர் கூட அவர் சொல்வதை கேட்கவில்லை. அவமானப்பட்டது தான் மிச்சம்.

நேரம் ஆகியும் காவல்துறை அவர்களை விடுவது குறித்து எதுவும் சொல்லாததால் அங்கேயே இந்த அரசையும் காவல்துறையின் காட்டுமிராண்டி தனத்தையும் கண்டித்து முழக்கமிட்டு ஆர்பாட்டம் நடத்தியாதல் மக்கள் அதிகாரம் தோழர்கள் உட்பட 65 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யகூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்பளித்தும் சட்டவிரோதமாக கைது செய்கிறது போலிசு. இதன் மூலம் நீதி மன்ற தீர்ப்புகள் எல்லாம் எங்கள் காலுக்கு சமம் என்று பறைசாற்றி விட்டது காவல்துறை.

அரசுக்கட்டமைப்பே தோற்றுப் போய் விட்டதன் விளைவு தான் தாங்கள் வகுத்த சட்டத்தை அவர்களே மீறுகிறார்கள். இனி இவர்களிடம் கெஞ்சுவதில் எந்த பயனும்  இல்லை என்பதை மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து விட்டார்கள். இன்று சாராய மதுக்கடையை நொறுக்கிய மக்கள் நாளை இந்த அரசையும் நொறுக்குவார்கள். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அதிகார வர்க்கத்திற்கும் உணர்த்துவார்கள்

-வினவு செய்தியாளர்.