privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

மீஞ்சூர் திருவெள்ளைவாயில் : ஒரு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

-

ரு மாத காலமாக மீஞ்சூர் பக்கத்தில் திருவெள்ளைவாயில் சுற்றியுள்ள கிராமங்களில்  டாஸ்மாக் எதிர்ப்பு குழு கட்டி  மக்கள் அதிகாரம் தோழர்கள் வேலைகளை செய்து வந்தனர். இளைஞர்கள் உடனே போராட்டம் நடத்த வேண்டும் என்று  முன் வைத்தனர். நாம் மட்டும் சென்று போராடுவது தீர்வில்லை. அனைத்து ஊர் மக்களையும் அணிதிரட்டி போராட்டம் செய்தால் தான் கடையை மூட முடியும் என நாம் முன் வைத்தோம். அனைவரும் அதை ஏற்று கொண்டனர். முதலில் மனு கொடுக்கலாம் என டாஸ்மாக் குழுவில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதனடிப்படையில் ஒவ்வொருவரும் வேலை பிரிவினை செய்து கொண்டு மக்கள் மத்தியில் அனைவரும் ஒரு வாரம் காலம் சென்று கையெழுத்து வாங்கினர்.

4.5.2017  அன்று பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்திலும், கலெக்டரிடமும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும்  மனு கொடுக்க சென்றனர். நெடுஞ்சாலையில் உள்ள கடையாக இருந்தும் ஏன் அகற்றவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், அலுவலகத்தில் இருந்து கொண்டே இல்லை என பொய் சொல்லியுள்ளார். சார் ஆட்சியர் என் மீது நம்பிக்கை இல்லையா? கண்டிப்பாக மூடி விடுவேன் என்று கூறினார். ஆனால் யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.

டாஸ்மாக்கை முற்றுகையிட்ட மக்கள்

அதற்கு பிறகு மக்களின் கோபம் அதிகமாகிறது. பத்து ஊரை சேர்ந்த கிராம மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஒருத்தர் பொறுப்பெடுத்து கொண்டனர். மொத்த 600 பேர்கள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என சமமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தான் அதிக அளவில் கலந்து கொண்டு போராடுவார்கள். ஆனால் ஆண்களும் பெண்களின் எண்ணிக்கைக்கு சமமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.  மக்கள் திரண்டு போராட்டத்திற்கு வந்த போது போலீஸ் தடுத்தது. தடுப்பையும் மீறி மக்கள் போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். உணர்வு பூர்வமாக முழக்கங்களை மக்கள் எழுப்ப தொடங்கினர்.

டி.எஸ்.பி வந்து மக்கள் மத்தியில் பேசினார். நீங்கள் ஏன் வருகிறீர்கள், கடையை மூடும் அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் பதிலளித்தனர். உடனே தொலைபேசியில் பேசி வருவாய்துறை அதிகாரிகளை வரவழைத்தனர். கலால்துறை அதிகாரிகள் வந்து கடிதம் எழுதி அதில் டி.எஸ்.பியும் அந்த அதிகாரியும் கையெழுத்து போட்டு கடையை மூடுவதாக தெரிவித்தனர். மக்கள், நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தை தொடந்தனர். மக்களுக்கு போலீஸ் மீதோ, அதிகாரிகள் மீதோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. இவர்கள் சொல்வதை செய்வார்கள் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.

சுற்றியுள்ள கடைக்காரர்கள் போராடும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தனர். எந்த கட்சிக்காரர்களும் வர கூடாது என தெரிவித்தனர். சில கட்சிக்காரர்கள் வந்து பணம் கொடுத்த போது மக்கள் வாங்க மறுத்து விட்டனர். மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என கூறினர்.

தொடர்ந்து போராடி கொண்டிருந்த போது மண்டல துணை தாசில்தார் வந்தார். அவரும் கடிதத்தில் கையெழுத்து போட்டு கடையை நிரந்தரமாக மூடி விடுகிறோம் என்று அறிவித்தார். சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிராமத்திலும் கடை வரக் கூடாது என மக்கள் முழக்கமிட்டனர். வேறு வழியின்றி நாளை இதைப்பற்றி கோட்டாச்சியர் அலுவலகத்தில் பேசி சுமுகமாக ஒரு முடிவிற்கு வரலாம் என கூறினார். அங்கெல்லாம் வர முடியாது, இங்க வர சொல்லுங்க, நாங்க எங்கும் வர முடியாது என மக்கள் தெரிவித்தனர். உடனே கடைக்கு சீல் வைத்தார்கள். சீல் வைத்து கடிதத்தை மக்களிடம் கொடுத்தனர். மக்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து வெற்றியைக் கொண்டாடினர்.

இனி மனு கொடுத்து பயனில்லை, மக்கள் சக்தி மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து வீடு திரும்பினர். இனி எந்த பிரச்சனைக்கும் இவர்களை நம்ப கூடாது நாம் தான் களத்தில் இறங்கனும் என சிலர் பேசுவதை கேட்க முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க