privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !

மல்லையாவை தண்டிக்கக் காத்திருக்கும் தொழிலாளிகள் !

-

ல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுவிட்டார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். அன்றாடம் பேருந்துகளிலும் இரயில்களிலும் இணையத்திலும் மல்லையாவின் மோசடி பற்றி மக்கள் விவாதங்களையும், கருத்துக்களையும் பகிர்கின்றனர்.

ஆனால் மல்லையாவை பற்றி தெரியாத கதை ஒன்று உள்ளது. மல்லையா சம்பள பாக்கி கொடுக்காமல் 3,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் வாழ்க்கையை சூறையாடியிருக்கிறார். வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் பாஸ்போர்ட் ஏஜெண்டுகளால் ஏமாற்றுப்பட்டு, பணத்தை பறிகொடுத்து மனநோயாளியாக அன்றாடம் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பதும் போர்ஜரி ஏஜெண்டை தேடுவதுமாக சில காட்சிகள் வந்திருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதற்கு சற்றும் குறைவில்லாமல் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட ஊழியர்களின் கதை முடிவில்லாமல் நீள்கிறது.

செப்டம்பர் 30, 2012 ஆம் ஆண்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கடைசி விமானம் பறந்தது. அன்றைய தேதிவரை பணியில் இருந்த சேவைப்பிரிவு அதிகாரி அனிருத் பலாலுக்கு நிலுவையில் இருந்த ஏழுமாத சம்பள பாக்கி, தொழிலாளர் வைப்பு நிதி (Provident Fund), எட்டுவருட பணிக்கொடை (Gratuity) இன்று வரை வழங்கப்படவில்லை.

அனிருத் பலால் போன்ற ஊழியர்கள் அரசின் கதவுகளை பிரதமர் வரை தட்டிப்பார்த்தும் பலன் இல்லை. ஜூன் 8, 2013 அன்று உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கிறது. இதற்குப் பின் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கமுடியாது என்று அறிவிக்கும் மல்லையா, 2016 மார்ச்சில் இலண்டனுக்கு ஓடி போகிறார்.

இடைப்பட்ட காலங்களில் மல்லையாவால் சுரண்டப்பட்ட ஊழியர்களின் வாழ்க்கை என்னவாயிற்று?

நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ரஜ்னி ஜெயினுக்கு இன்று வரை வேறு வேலை கிடைக்கவில்லை. இவர் கிங்பிஷ்ர் ஏர்லைன்ஸில் கணிப்பொறி சேவை அதிகாரியாக பணியாற்றியவர்.

ரஜ்னி நிலுவைத் தொகையை வழங்குமாறு மல்லையா நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். நிர்வாகமோ ‘சம்பள பாக்கியை வழங்கமுடியாது; வேண்டுமானால் தொழிலாளர் வைப்புநிதியை மட்டும் தருவதாகவும் அதற்கும் முன்தேதியிட்டு ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும்’ என தனக்கு நிபந்தனையிட்டதாக Scroll  இணையத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சம்பளபாக்கி வழங்காததால் தன் சக ஊழியரின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதையும் வேறு சிலர் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் வீட்டை காலி செய்ய வேண்டியிருந்ததையும் மற்றொரு ஊழியரின் தாயார் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதையும் ரஜ்னி பதிவு செய்திருக்கிறார்.

‘மல்லையாவின் 9,000 கோடி ரூபாய் திருட்டைப் பற்றி மட்டுமே பேசும் ஊடகங்கள் தொழிலாளிகளுக்கு சம்பளபாக்கி வழங்காததை கண்டுகொள்ளவில்லை’ என்கின்றனர் ரஜ்னி ஜெயின் போன்ற ஊழியர்கள்.

மல்லையாவை பத்திரமாக இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, இலண்டன் சென்றே மல்லையாவை பிடித்துவருவோம் என்று நாடகமாடும் மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கியை பெற்றுத்தருவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம், கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிபுரிந்த அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சம்பளபாக்கி மற்றும் பணிப்பலன்கள் அனைத்தும் முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டிருக்கின்றன. ஏனெனில் பிறநாட்டு தொழிலாளர் சட்டங்கள் மல்லையாவை தண்டிக்க ஓரளவு வழிவகை செய்கிறது. இந்தியாவிலோ நம்நாட்டு தொழிலாளிகளை மட்டும் எளிதில் ஏமாற்றி அவர்களது வாழ்க்கையையே கேள்வி கேட்பாரின்றி மல்லையா போன்றவர்களால் எளிதில் நிர்மூலமாக்க முடிகிறது. எனில் இந்திய அரசுக் கட்டமைப்பில் தொழிலாளர் ஆணையம், நீதிபரிபாலனை அமைப்புகள், ஆளும்வர்க்க பத்திரிக்கை ஊடகங்கள், சட்ட சரத்துகள், நாடாளுமன்ற உச்சநீதிமன்றங்களால் ஒரு தொழிலாளிக்கு என்ன பிரயோசனம் இருக்கிறது?

தன்னை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும், தன் சார்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும் இந்த அமைப்பில் எந்த வாய்ப்பும் இல்லாததால் ரஜ்னி ஜெயின், நீத்து சுக்லா போன்ற மல்லையாவால் வஞ்சிக்கப்பட்ட ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தானே நேருக்கு நேர் மல்லையாவை தண்டித்தால் ஒழிய தீர்வில்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நாடெங்கிலும் தொழிலாளர்களின் நிலைமை இதுதான். இன்று “சம்பளபாக்கி தொழிலாளர்களுக்கு தரமாட்டோம்; உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று மல்லையா போன்ற பெருமுதலாளிகள் மட்டும் சொல்வதில்லை; அரசும் அதைத்தான் சொல்கிறது. மாருதி ஆலைத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் என நாடெங்கிலும் உழைக்கும் மக்கள் அரசாலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளாலும், உள்நாட்டு தரகுமுதலாளிகளாலும் பல திசைகளிலும் சட்டத்தின் உதவியோடு, நீதிமன்றங்களின் உதவியோடு, காவல் துறையின் அடக்குமுறையோடு, ஆளும் வர்க்க பத்திரிக்கைகளின் ஜால்ராக்களோடு சூறையாடப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு என்று ஒரு அரசு, தொழிலாளர்களுக்கென்று சட்ட நீதிமன்ற அமைப்புகள், தொழிலாளர்களுக்கென்று பத்திரிக்கை ஊடகங்கள் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைய வேண்டியதன் அவசியத்தைத்தான் இந்த அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதுவன்றி தொழிலாளிகள் மல்லையா போன்றவர்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் சம்பளபாக்கியை பெறமுடியாது. அதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இவ்விதம் கூறுகிறது.

“பாட்டாளிவர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும்.”

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க