privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைதிருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

-

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 2

உள்நாட்டுக்கான பனியன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருப்பூர், எழுபதுகளின் இறுதியில் இருந்து மெல்ல மெல்ல ஏற்றுமதிக்கான உற்பத்தியைத் துவங்கியது. இந்தியச் சந்தைக்கான உள்ளாடை உற்பத்தி எனும் அளவில் இருந்த காலத்தில் சலவைப் பட்டறைகள் பின்னர் ஏற்றுமதிக்கான உற்பத்தி விறுவிறுப்படைந்த காலகட்டத்தில் சாயப்பட்டறைகளாக உருமாறின. இன்றைக்கு சுமார் 451 சாய பட்டறைகள் திருப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

சாக்கடையாக ஓடும் நொய்யலின் கிளை

பின்னலாடை உற்பத்திச் சங்கிலியில் சாயபட்டறை, பிரிண்டிங் பட்டறை மற்றும் வாசிங் ஆகிய கட்டங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப் படுகின்றது. திருப்பூரின் சூழல் சீர்கேடுகள் அனைத்துக்கும் பனியன் கம்பெனிகளை நோக்கியே விரல் நீட்டுகின்றன பல்வேறு என்.ஜி.ஓ அமைப்புகள். குறிப்பாக நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்கு முழுமுதற் காரணமாக திருப்பூரின் சாயப்பட்டறைகளை குறிப்பிடுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

இதில் உள்ள உண்மைத் தன்மையை பரிசீலிப்பதற்கு முன், திருப்பூரின் தொழிற் பட்டறைகள் தண்ணீர் பஞ்சத்தால் படும் சிரமங்களை பார்த்து விடுவோம். ஏனெனில், திருப்பூரின் தொழிற்பட்டறைகள் வரம் கொடுக்கும் தேவதை இல்லாவிடினும், பிழைக்க வழியற்றவர்களுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றும் சூனியக்காரி அல்லவா?

”கடந்த ஒரு வருசமா யாரும் புதிய சாயபட்டறைகள் திறக்கலை. இருக்கிற சாயப்பட்டறைகளும் வரிசையா மூடிட்டு வர்றாங்க… அனேகமா நான் ஒருத்தன் தான் சமீப காலத்துல புதுசா சாயபட்டறை திறக்கிறவனா இருப்பேன்னு நினைக்கிறேன்” எனச் சொல்லி சிரிக்கிறார் சந்திரசேகர். சுமார் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ’ஸ்ரீ வாரி கலர்ஸ்’ எனும் பெயரில் திறக்கப்படவுள்ள தனது சாயப்பட்டறையில் சில நாட்களுக்கு முன் நிறுவப்பட்ட புதிய இயந்திரங்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

ஸ்ரீ வாரி கலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர். பின்னிருப்பது ஒரு கோடி முதலீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாய இயந்திரம்.

“அப்படி என்ன நம்பிக்கை?”

“நம்பிக்கை எல்லாம் ஏதுமில்லை.. இருபத்தைந்து வருசமா வேற கம்பெனியில கலர் மாஸ்டராவே வேலை பார்த்திருக்கேன். இதைத் தவிற வேற தொழில் எதுவும் தெரியாது. எப்படியாவது முட்டி மோதி மேல வந்திரலாம்னு ஒரு நம்பிக்கை தான்” என்றார்.

”உங்களோட பட்டறையின் உற்பத்தித் திறன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

”எங்களோட இயந்திரம் தினசரி அதிகபட்சமா 2600 கிலோ துணிக்கு சாயம் போடும் அளவுக்கு செயல் திறன் கொண்டது. இதுவே ரொம்ப சின்ன யுனிட் தான். பெருந்துறை சிப்காட்டில் இருக்கும் ரோகினி மாதிரி பெரிய யூனிட்டுகள்னா 30 ஆயிரத்திலேர்ந்து 50 ஆயிரம் கிலோ வரைக்கும் கையாளும் திறன் கொண்ட இயந்திரங்கள் வைத்திருப்பார்கள்..”

”சாயப்பட்டறைக்கு தண்ணீர் தான் முக்கியம். இப்போ திருப்பூர்ல மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலைமைல உங்களுக்கு தொழில் செய்ய மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கும்?

”சிரமம் தான்.. எப்படியாவது மழை பெய்து இந்த வருசமாவது நிலைமை சரியாகிடும்னு நம்பறோம்”

”உங்களுடைய இந்த பட்டறையை இயக்க தேவைப்படும் தண்ணீருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்?”

”மறு சுழற்சி மையத்துக்கு மாதா மாதம் ஐந்து லட்சம் கட்டணமா செலுத்தனும். அது போக ஒவ்வொரு நாளும் எல் & டி கிட்டேர்ந்து 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கனும்.. எல் & டி தண்ணீர் லிட்டருக்கு 8.50 பைசா. எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தா எப்படியும் மாசம் ஆறு லட்சம் வரைக்கும் தண்ணீருக்காக செலவழிக்கனும்” என்றார்.

கங்கா நகரில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு பொது மையத்தின் வெளிப்புற தோற்றம். சுமார் 40-50 சாயபட்டறைகளின் கழிவு நீர் இங்கே சுத்திகரிக்கப்படுகின்றது.

“தண்ணீருக்கே ஆறு லட்சமா?”

“சார், அப்படியாவது குடுத்தா பரவாயில்லைங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் தான் தண்ணீர் தர்றான். மற்ற நாட்கள்லே மறுசுழற்சி மையத்திலேர்ந்து குறைவா தர்ற தண்ணீரை வச்சி சமாளிச்சாகனும். சனி ஞாயிறு பட்டறையை இயக்க கூடாது. அப்படிப் பார்த்தா, வாரத்துல மூனு நாளைக்குக்கூட முழு உற்பத்தித் திறனோட பட்டறையை இயக்க முடியாதுங்க”

”இந்த நிலைமையில உங்களால பட்டறையை லாபகரமா இயக்க முடியுமா?”

”ஏற்கனவே போட்ட முதலீடெல்லாம் கடன் வாங்கிப் போட்டது தான். நல்லா மழை வந்து, தண்ணீர் பிரச்சினை தீர்ந்து எல்லாம் சரியா போச்சின்னா எப்படியும் நாலு அல்லது ஐந்து வருடத்துல நிமிர்ந்துடுவேன். ஆனாலும், பெரிய லாபம் ஏதும் பார்க்க முடியாதுங்க. கைய கடிக்காம ஓட்டிக்கலாம். அவ்வளவு தான்” என்ற சந்திரசேகர், ஏற்கனவே நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்.

கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து உபரியான கழிவு நீர் குடியிருப்பு பகுதி நோக்கி திறந்து விடப்படுகின்றது.

”மறுசுழற்சி மையங்கள் பற்றிச் சொன்னீங்க. இந்த இடத்துல ஒரு கேள்வி, திருப்பூரோட நிலத்தடி நீரை நாசமாக்கினதே சாயபட்டறைகள் தான்னு சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?”

”ஒரு பத்து வருசத்துக்கு முன்னே நீங்க சொல்றது உண்மை தான்” என சங்கடமான தொனியில் சொன்னவர், மேலும் தொடர்ந்தார் “இப்போ விதிமுறைகள் கடுமையாக்கியிருக்காங்க. பத்து வருசத்துக்கு முன்னே நடந்த கோர்ட் கேசுக்கு அப்புறமா நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்காங்க. பத்து வருசமாவே நாங்க கழிவு நீரை நேரடியா சாக்கடைலையோ, நிலத்துக்கு கீழேயோ விடறதில்லே. திருப்பூரைச் சுற்றி 16 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சிருக்காங்க. இதுக்கு அரசு 200 கோடி ரூபாய் மானியம் கொடுத்தது – மிச்சத்தை சாயப்பட்டறை முதலாளிகள் சங்கம் போட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களோட நிர்வாகம் தனியார் கையில தான் இருக்கு. எங்களோட கழிவு நீரெல்லாம் இந்த மையங்களுக்குப் போகும், அதில் 70 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு எங்களுக்கே திரும்பி வந்துடும்” என்றார்.

சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வெளியேறு அமிலக் காற்றால் அக்கம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மற்றும் பெயிண்ட்டையும் மீறி உள்ளுக்குள் துருவேறிய இரும்பு கேட்

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் நஞ்சாகிப் போக சாயப்பட்டறைகள் ஒரு காரணம் என்றாலும், அவைகளே முழு காரணம் அல்ல. தொன்னூறுகளில் ஏற்றுமதிக்கான உற்பத்தி உச்சகட்டமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி எவ்வாறு நடக்கின்றது, அப்பொருட்களின் உற்பத்தி நடைமுறைகளில் சூழலியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா என்பன போன்ற கண்காணிப்புகள் இல்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு உற்பத்தி செய்வதற்குத் தேவையான சுரண்டல் பின்னிலமாகவே திருப்பூரைப் பாவித்து வந்த காலம் அது. தொன்னூறுகளின் இறுதியில் மேற்குலக நாடுகளின் மக்களிடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளில் உள்ள ஏற்றுமதிக்கான உற்பத்தி அலகுகளுக்கு பெயரளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன.

25 தொழிலாளிகள் பணிபுரியும் ஒரு சிறிய யுனிட்

தொழில் வளர்ச்சியை குறிப்பிட்ட பிராந்தியத்தில் திட்டமிட்டு ஏற்படுத்துவது இயல்பாக ஒரு பிரதேசத்தில் உருவாகி வரும் தொழில்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உத்திரவாதப்படுத்திக் கொடுப்பது, அந்தத் தொழிலின் விளைவாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடிக்கு ஏற்பாடுகள் செய்வது, தொழில்களுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களும் கச்சாப் பொருட்களும் எளிதில் கிடைக்க வகை செய்வது ஒரு அரசின் கடமை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இதே வசதிகளை காலில் விழுந்து செய்து கொடுக்கும் அரசு, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்நாட்டு முதலாளிகளின் சொந்த முயற்சியில் வளர்ந்த தொழில்களுக்கு செய்து கொடுப்பதில்லை என்பதோடு நெருக்கடி முற்றும் சமயங்களில் புதிய கட்டுப்பாடுகளை திணிக்கவும் செய்கின்றது.

மறுபுறம், தொடர்ந்து கொள்முதல் விலையைக் குறைத்துக் கொண்டே வரும் பன்னாட்டு இறக்குமதியாளர்களின் நெருக்கடியையும் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே,  பனியன் கம்பெனிகளும் அதனுடன் தொடர்புடைய சாயபட்டறைகள் உள்ளிட்ட பிற தொழிற்பட்டறைகளும் இரண்டாயிரங்களின் மத்திய பகுதி வரை பெயரளவில் இருந்த சூழலியல் சார்ந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டன. நொய்யலாற்றிலும் நல்லாற்றிலும் சாயக் கழிவுகளைக் கலந்தது போக,  பல சாயபட்டறைகள் கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளுக்குள் இறக்கி நிலத்தடி நீரை நஞ்சாக்கின. நிலைமை கைமீறிச் செல்லும் வரை அரசு நிர்வாகம் இவையெதையும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளது.

”அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம். நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு புதிய திட்டங்கள் போட்டு அதில் முதலீடு செய்யலாம். அதே போல மறுசுழற்சி மையங்களைக் கூட முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அரசாங்கமே துவங்கி அதைப் பயன்படுத்த பட்டறைகளிடம் கட்டணம் வசூலிச்சிருக்கலாம். ஆனா, திருப்பூரோட தொழில் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடலை. எல்லாத்தையும் தனியார்ட்ட ஒப்படைச்சி அவன் தான் கோடி கோடியா லாபத்தை அள்ளிட்டுப் போறான். அதுவும் நிலைமை கைமிஞ்சிப் போன பின்னாடி தான் செய்தாங்க” என்கிறார் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் குலோத்துங்கன்.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் உள்தோற்றம்.

”தனியார் கிட்டே இருந்தா தான் எல்லாம் தரமா இருக்கும்னு சொல்றாங்களே?” என்றோம்.

”கிழிச்சாங்க. எல் & டி தண்ணீரோட பி.பி.எம் அளவு 800 வரை இருக்கு. எங்களுக்கு 300க்கு உள்ளே பி.பி.எம் அளவு இருந்தா தான் பிரிண்டிங் தரமா இருக்கும். அதை ஈடுகட்ட நாங்க கலர் மையை அதிகம் பயன்படுத்துரோம். இது உற்பத்திக்கான செலவை அதிகரிக்குது. அது மட்டுமில்லாம, தண்ணிக்காக மட்டும் தினசரி 1500 ரூபா வரைக்கு செலவு செய்ய வேண்டியிருக்கு. அப்படியும் தினசரி தண்ணி கிடைக்க மாட்டேங்குது. வாரத்துல ரெண்டு நாள் கிடைச்சா அதிர்ஸ்டம். எங்களுக்கே சொந்தமா நீர் சுத்திகரிப்பு மையம் இருக்கு – ஆனால், அதில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு லிட்டருக்கு 25 பைசா ஆகும். தண்ணீர் இல்லாம ஒரு நாள் மிசினை நிறுத்தினா நாற்பதாயிரம் நட்டமாகும். இந்த நட்டத்தை தவிர்க்கவாவது மிசினை ஓட்டியாக வேண்டியிருக்கு. இது புலிவாலை பிடிச்ச கதை சார். விடவும் முடியாது, பிடிச்சிகிட்டே ஓடறதும் ஆபத்து…” என்கிறார் குலோத்துங்கன்.

குலோத்துங்கனின் நிறுவனம் தினசரி நான்கு டன் துணிகளுக்கு பிரிண்ட் அடிக்கும் உற்பத்தித் திறன் கொண்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான நாட்கள் முழு உற்பத்தித் திறனோடு இயக்குவதில்லை. கடந்த இருபதாண்டுகளில் இந்த நிறுவனத்தில் லாபம் சுமார் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தொழிலாளிகள் வேலை செய்யும்  இந்நிறுவனத்தை இழுத்து மூடி விட்டால் நூறு குடும்பங்களின் நிலை கேள்விக்குள்ளாகி விடும் என்கிற கவலை குலோத்துங்கனிடம் வெளிப்பட்டது.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்கள்

ஒருபக்கம் உற்பத்திக்கான மூலதன உள்ளீடு அதிகரித்துக் கொண்டே செல்ல, இன்னொரு புறம் துணிகளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்முதல் விலையைப் படிப்படியாக குறைத்து வருகின்றன. அரசோ தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதிகளையும் கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றது.

இதை விடச் சிறிய நிறுவனங்களின் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. நாங்கள் ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு கண்ணனைச் சந்தித்தோம். சாயமேற்றி, பிரிண்ட் செய்த பின் துணிகளைத் தைப்பதற்கு முன் துவைத்துக் கொடுக்கும் நிறுவனம். 12 தொழிலாளிகள் இரண்டு சிப்டாக பணிபுரிகின்றனர். சொந்தமாக நீர் சுழற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவன முதலாளி கண்ணன்.

”தண்ணிக்காக மட்டும் மாசம் நாற்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகுது சார். பதினெட்டு லட்சம் செலவுல ஆர்.ஓ பிளாண்ட் ஒன்னு போட்டிருக்கோம். இதை நடத்தவே மாசம் ஐம்பதாயிரம் செலவாகும்.. எல் & டி காரன் கிட்டே தண்ணீர் இணைப்பு கேட்டா மெயின் ரோட்டிலேர்ந்து பைப் இழுக்கிற செலவை நீயே பார்த்துக்கன்னு சொல்லிட்டான். அதுக்கு எப்படியும் ஏழு லட்சம் செலவாகும். அவ்வளவு செலவு செய்தாலும், முறையா தண்ணீர் தரமாட்டான்” என்கிறார் கண்ணன்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் (துணியை சலவை செய்யும் நிறுவனம்) இங்கே துணியை வெளுக்க நீராவியை உற்பத்தி செய்யும் கொதிகலன். பழைய பாணியில் விரகு வைத்து எரிக்கிறார்கள்.

தொடர்ந்து குறைந்து வரும் கொள்முதல் விலையால் குறைந்து கொண்டே செல்லும் லாபம், தண்ணீர் பற்றாக்குறை என முதலாளிகளின் கழுத்தைச் சுற்றிலும் கத்தி இருந்தாலும், நிலைமையைச் சீர்செய்வதற்கு உறுதியான கோரிக்கைகளோ போராட்டங்களோ எழவில்லை. மாறாக, மூலதன உள்ளீட்டையும் லாபத்தையும் ஈடுகட்ட தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிகின்றன. இன்றைய நிலையில் திருப்பூரில் ஒரு சிப்ட் வேலை என்பது குறைந்தபட்சம் 12 மணி நேரமாக உள்ளது. வடமாநிலத் தொழிலாளிகள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்வதால், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அடைவதற்காக நேரம் காலமின்றி வேலை செய்கின்றனர்.

நீராவி இயந்திரத்திலிருந்து செல்லும் சூடான ஆவி துணியைத் துவைத்த பின் அதிலிருந்து நிறக் கழிவுகள் மற்றும் பிசிருகளை பிரித்து கழிவாகச் செல்கிறது.

தண்ணீர் பஞ்சத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும், திருப்பூர் தொழிலாளிகளின் அசுரத்தனமான உழைப்பு ஒன்று மட்டுமே இன்றைய தேதியில் அந்நகரைக் காப்பாற்றி நிலை நிறுத்தியுள்ளது. நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட நேரமின்றி வேலையின் பின்னே மக்கள் ஓடுவதாலேயே அரசு நிர்வாகம் திருப்பூரின் தண்ணீர் பற்றாக்குறையை இடக்கரத்தால் அலட்சியமாக கையாள்கின்றது – ஏனெனில், தாகத்தில் மரணிக்கும் நிலை வரும் வரை புரட்சி வெடிக்கப் போவதில்லை என்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் அமைத்துள்ள மறுசுழற்சி மையம்.

தண்ணீர் பஞ்சமும், அரசின் துரோகத்தனமும், முதலாளிகளின் பாராமுகமும், இடம்பெயர்ந்த  தொழிலாளிகளின் கொல்லும் மௌனமும் திருப்பூரைக் விசக் கொடுக்குகளாக சுற்றி வளைத்துள்ளன. இந்தத் தேக்க நிலையை ஒரு மாபெரும் மக்கள் போராட்டமே உடைத்தெறிய முடியும். தண்ணீர் பிரச்சினை எல்லை மீறிச் சென்று விட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே சிறு அளவில் மக்கள் போராட்டங்களும் பரவலாக முணுமுணுப்புகளும் கேட்கத் துவங்கியுள்ளன – இது தீர்மானகரமான வடிவங்களை எடுப்பது ஒன்றே திருப்பூருக்கு விடிவு காலத்தைக் கொண்டு வரும்.

திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதா, உருவாக்கப்பட்டதா? மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் நிலை என்ன?

திருப்பூர் பலைவனமாக்கப்பட்ட வரலாறு…

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !