privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மூடு கொலைகார ராம்கியை ! சர்வகட்சி பேரணி - பொதுக்கூட்டம்

மூடு கொலைகார ராம்கியை ! சர்வகட்சி பேரணி – பொதுக்கூட்டம்

-

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளத்தில் அபாயகரமான மருத்தவக்கழிவுகளை எரித்து நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்று பொதுஅமைதியை சீர்குலைப்பதோடு, திருப்பூர், ஈரோடு மாவட்ட சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளைப் புதைக்கும் புதிய நிறுவனத்தின் அனுமதியை ரத்துசெய்து ராம்கி நிறுவனத்தை விரட்டியடிக்கும் மாபெரும் பேரணி 25.05.2017 மாலை 5 மணியளவில் காரியப்பட்டி சந்தைக்கடை பஜார் பகுதியிலிருந்து பறைமுழக்கத்துடன் எழுச்சிகரமாகத் துவங்கியது.

ராம்கி நிறுவனம் மக்கள் மீது நிகழ்த்திய கோரத்தாண்டவத்திற்கு துணைபோகும் அரசையும், அதிகாரிகளையும் அம்பலப்படுத்தும்விதமாக விண்ணதிரும் முழக்கங்களோடு பேரணிசென்றது. சிறிய அளவிலான போராட்டங்களை மட்டுமே சந்தித்திருக்கிற காரியப்பட்டி நகர் இந்தப் பேரணியால் ஸ்தம்பித்தது. சாலையின் இருப்புறங்களிலும் உள்ள மக்கள் ஆர்வமாக பிரசுரங்களை வாங்கிப்படித்து  ஆதரவு அளித்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் பேரணிசென்று  பொதுக்கூட்ட மேடை அருகே முடிவுற்றது. சரியாக 6.30 மணிஅளவில் பொதுக்கூட்ட நிகழ்வு தொடங்கியது. 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500 மக்கள் கலந்து கொண்டனர்.இதில் பெண்கள் கூட்டமே அதிகம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரியாபட்டி  ஒன்றிய செயலாளர் தோழர்.முருகன் வரவேற்புரை நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ராம்கி நிறுவனத்தை  மூடச்சொல்வது வெற்றுக் கோரிக்கையல்ல என்பதையும், மக்களின் கோரிக்கையின்பால் உள்ள நியாயத்தின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்துரைத்தார்

தோழர் வாஞ்சிநாதன்

26.6.2013 அன்று மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் பல்துறைவல்லுனர்கள் குழு ஆய்வுசெய்து 04.7.13 -இல் மாவட்டஆட்சியர் ராம்கி நிறுவனத்திற்கு சீல் வைத்ததையும், முறையாக நோட்டீஸ் அனுப்பாமல், சீல் வைத்ததால் நீதிமன்ற தடைக்கு அதிகாரிகள் வாய்ப்பு ஏற்படுத்தியதைக் குறிப்பிட்டார். அதன்பின் 2015-ஆம் ஆண்டு திருச்சுழியில், அருப்புக்கோட்டை RDOதலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தையும், மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதன் காரணமாக அதிகாரிகள் மூடஉத்திரவாதம்  அளித்ததையும், ஏப்ரல் 9, 2015-இல் DRO முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் விளக்கி அதன்பின்னர் ஒருவருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காததை அம்பலப்படுத்தினார்.

மக்கள் ராம்கி நிறுவனத்தின் வாகனங்களை சிறைப்பிடித்த பின்னர் இரண்டு சமாதானக்கூட்டம் நடத்தி அதிகாரிகள் நிறுவனத்தை இயக்கக் துடிப்பதையும், அதிகாரிகள் ராம்கியின் கைக்கூலிகள் என, அவர்கள் செயல்கள் மூலம் அம்பலப்படுத்தினார்.

மருத்துவ ஆவணங்கள், இறப்புவிகிதம், ஆய்வறிக்கைகள் அடிப்படையில் ராம்கி நிறுவனம் கொலைகார நிறுவனமே என ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும் 1998-ஆம் ஆண்டு  மாசுக்கட்டுப்பாட்டுவாரியவிதிகள் மற்றும் 2016-இல் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி குடியிறுப்புப் பகுதியில் ராம்கி செயல்படுவது விதிமீறல்.மேலும்  மாவட்ட ஆட்சியர் உத்தரவிலேயே (2011-2012 & 2012-2013) ஆண்டுக்களுக்கான உரிமம் புதிப்பிக்கப் படாததையும் (ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை), கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி வாங்காததையும், நீர்நிலை அருகில் இருப்பது,  மருத்துவ சான்றுகள்  உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் நிறுவனம் என்பதையும், மேலும் ராம்கி நிறுவனத்தால் இப்பகுதியில் மக்கள் உயிருக்கும்,பொதுஅமைதிக்கும் பங்கம் ஏற்படுவதால் ராம்கி மற்றும் தமிழ்நாடு வேஸ்ட்மேனேஜ்மெண்ட் என்ற புதிய நிறுவனத்தையும் குற்றவியல் சட்டப் பிரிவு 133 -இன் கீழ் மூடவேண்டும் என்றார்.மேலும் நிறுவனம் சரியானது என்றால், அதை கலெக்டர் அலுவலகத்தில் வைத்துக் கொள்ளத் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

மூன்று மாதத்திற்கு முன்பாக பாசிச மோடி அரசு, புதியநிறுவனத்திற்கு அனுமதி அளித்ததையும் அம்பலப்படுத்தி அரசு ராம்கி நிறுவனத்தை மூடவில்லையெனில் மக்களே ராம்கியைமூடி, இது வேற தமிழ்நாடு என்பதை நிரூபிப்பார்கள் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற மக்களும் தயார் என்றனர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக கண்டன உரை நிகழ்த்திய திரு இனியவன் அவர்கள் பேசும்போது ராம்கிநிறுவனத்தால் விவசாயம் அழிக்கப்படுவதையும், பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளானதையும் கூறி கண்டித்தார்.

தமிழ்புலிகள் கொள்கை பரப்புச் செயலாளர் திரு கலைவேந்தன் அவர்கள் ராம்கிநிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்டும், போராடியும் கூட, ஆளும்வர்க்கங்கள் மக்கள்நலனை கருத்தில்கொள்வதில்லை எனவும், மோடி அரசின் வஞ்சிக்கும் செயல்களையும் அம்பலப்படுத்தி, ராம்கியை மட்டுமல்ல BJP RSS-யையும் விரட்டியடிக்க போராட வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் அர்ச்சுனன் தனது கண்டன உரையில் ராம்கி நிறுவனத்திற்கு எதிராக நடந்த சமாதானக் கூட்டங்களில், மார்க்சிஸ்ட்கட்சி கலந்து கொண்டு பங்களிப்பு செய்ததை நினைவுகூர்ந்தார். திருப்பூர், ஈரோடு மற்றும் வெளிநாட்டு மின்ணனுக் கழிவுகளை இங்கு கொட்டுவதற்கு அனுமதியை மத்தியஅரசு கொடுக்கிறது எனில்இது நாடா? சுடுகாடா? எனக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத் தடையாணை மூலமே ராம்கிசெயல்படுவதால், நீதித்துறையையும் அம்பலப்படுத்தியதோடு, கட்சிவேறுபாடுகள் கலைந்து ராம்கி நிறுவனத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவைகள் இருப்பதாகப் பேசினார்.

மதிமுக காரியப்பட்டி ஒன்றிய செயலாளர் திரு கலாமணி அவர்கள் ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு அடுத்தக்கட்டமாக என்ன முடிவெடுத்தாலும் அதற்கு ஆதரவாக மதிமுக துணைநிற்கும் என முடித்தார்.அதிமுக(அம்மா) மற்றும் அதிமுக(புரட்சித் தலைவி அம்மா) கட்சியினரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு

இறுதியாக சிறப்புரையாற்றிய திமுகவின் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர்  திரு தங்கம் தென்னரசு தனது உரையில், அதிகாரவர்க்கத்தில் உள்ள அரசு அதிகாரிகள், தனிநபர் இலாபத்துக்கு ஆதரவாகவோ, அரசியல்வாதிகளுக்காகவோ, செயல்படாமல், மக்களுக்காகச் செயல்படவேண்டும் எனக் கண்டனம் செய்தார். அரசியலில் இரு துருவங்களாக உள்ள திமுக-வும், அதிமுக-வும் இக்கூட்டத்தில் இணைந்து கலந்து கொள்கிறது என்றால், இப்பிரச்சனையின் முக்கியத்துவத்தை அரசு உணர வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எடுத்துரைத்த மருத்துவ ஆவணங்களை சுட்டிக்காட்டி, நோய்பாதிப்புகளை எடுத்துரைத்தோடு, ராம்கி நிறுவனத்திற்கு எதிராக சட்டசபையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து ராம்கி நிறுவனத்தை மூடவலியுறுத்தியதை சுட்டிக்காட்டியதோடு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக்கூறி, அதன்பின் புதியநிறுவனத்துக்கு அனுமதிக் கொடுத்து சிறப்பாக நடவடிக்கை எடுத்ததாகவும் அப்படியெனில், இந்த அதிகார வர்க்கம் யாருக்கானது எனக் கேள்வி எழுப்பினார்.

தாமரைக்குளம், பொட்டல்குளத்தில் சாயப்பட்டறை நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழக அளவிலும், தேசியத் தலைவர்களுடனும் பேசி ராம்கி நிறுவனத்திற்கு எதிரான பிரச்சனையை மாநிலப் பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் மாற்றித்     தெருக்களில் இறங்கி போராடக்கூடிய முன்னெடுப்புகளைச் செய்வோம் என உறுதியளித்தார். ராம்கிநிறுவனத்தின் கதவுகள் நிரந்தரமாக மூடப்படவில்லை எனில் அதிக அளவில் மக்களைத் திரட்டி, முக்குளம் பகுதியை நெடுவாசலாக, மெரினாவாக, போராட்ட பூமியாக மாற்றி வெற்றி பெறச் செய்வோம் என நம்பிக்கையூட்டினார்.

அ.முக்குளத்தைசேர்த்தராம்கிஎதிர்ப்புபோரட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்திருந்த ஜனவரி  18 தைப்புரட்சி அமைப்பிற்கு ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு சார்பாக நன்றி  தெரிவிக்கப்பட்டது. இறுதியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் அனைத்துக்கட்சி பேரணி-பொதுக்கூட்டம் முடிவுற்றது. கூட்ட முடிவில் பெரும் நம்பிக்கையுடன் மக்கள் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க