privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைநெஞ்சை அறுக்கும் பாலாறு - நேரடி ரிப்போர்ட் !

நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !

-

ருப்பையில் சிசுவை வைத்து எப்படி தாய் பாதுக்காக்கிறாளோ அது போலவே வட தமிழகத்தில் ஓடும் பாலாறும் தன்னுடைய மணல் வயிற்றினுள் நீரைப் பாதுகாத்து அதை கால்வாய்களாகவும் ஏரிகளாகவும் குளங்களாகவும் கிணறுகளாகவும் ஊற்றுகளாகவும் பிரசிவித்திருக்கிறது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும் ஆந்திரப்பிரதேசத்தில் 23 கிலோமீட்டரும் பயணம் செய்கிறது பாலாறு. பின்னர் வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் 222 கிலோமீட்டர் பயணம் செய்து கிட்டதட்ட 2,50,000 ஏக்கர் பாசனப்பரப்பைக் கடந்து காஞ்சிபுர மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையோரத்தில் சாக்கடையாக ஓடும் பாலாறு

பாலாற்றில் இருந்து இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் சென்னைக்கு உறிஞ்சப்படுகிறது. அதே போல பாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடு ஆகும். தோல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சையனைடு, பாதரசம், குரோமியம் உள்ளிட்ட வேதியியல் இராசயனக் கலவைகள் நேரடியாக பாலாற்றில் கலக்கின்றன.

பாலாற்றங்கரையில் பினாயூர் படுகை 30 அடிக்கும் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு சகதியாக மாறிய பாலாறு

மறுபுறம் மணல் மாஃபியா கும்பல் பாலாற்றின் வழித்தடம் 222  கிலோமீட்டர் முழுவதையும் 30 அடி ஆழத்திற்கு பெயர்த்தெடுத்து விட்டனர்.  இதற்கெதிராக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும் சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியாலும் வேறு வழியின்றி தனியார் மணல் ஏலத்தை இரத்து செய்து இனி நியாயமான தேவைகளுக்காக மட்டுமே மணல் பயன்படுத்தப்படும் என்று ஒரு சட்ட ஆணையை பிறப்பித்ததார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் முப்பதடி ஆழத்திற்கு மேல் மணலை தோண்டி பாலாற்றை நாசம் செய்து டாஸ்மாக்கை போல மணல் கொள்ளையை அரசுடைமையாக்கியது அ.தி.மு.க அரசு. சட்டப்படி 3 அடிதான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அள்ளப்பட்டதோ 20 அடிக்கு மேல். இதை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் உறுதி செய்தது. ஆனால் அன்றைய தி.மு.கவின் அமைச்சர் துரைமுருகனோ 3 அடிக்கு மேல் மணலே எடுக்கவில்லை என்று சாதித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆர்.வேலு இரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இங்கு இரயில் நீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அதிமுக ஆட்சியில் பாலாறு வரலாறு காணாத வகையில் மணற்கொள்ளையர்களால் சிதைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் உள்ள வாலஜாபாத் இளையனார் வேலூர் ஆற்றுப்பாலம் நூறடி தூரத்திற்குள் ஆறுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்

காவிரி, பாலாறு, பேரியாறு, சிறுவாணி, தாமிரவருணி என தமிழகத்தின் நீர் வளங்கள் பெப்சி கோக் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களாலும் தமிழகத்து ஓட்டுக்கட்சிகளாலும் மணல் மாபியாக்களாலும் சூறையாடப்பட்டு விட்டது. தமிழகமே முன்னெப்போதும் கண்டிராத வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் வட தமிழகத்தின் காவிரி என்று அழைக்கப்பட்ட பாலாற்றுப் படுகையில் இரண்டு நாட்கள் நடைபயணமாக சென்று அதன் நீராதாரத்தை நம்பியிருக்கும் கிராம மக்களை சந்தித்தார்கள் வினவு செய்தியாளர்கள்.

கதிர், நடராஜ் – புஞ்சை அரசந்தாங்கல் – தினக்கூலி

நாங்க, இந்த பாலாத்தங்கரையில தான் பொறந்தோம். சின்ன வயசுல ஆத்து நெறைய… கண்ணாடி மாறி தண்ணி போவும். அப்பவும் கைல தோண்டிய புது ஊத்து தண்ணிய தான் குடிப்போம். தேங்காத்தண்ணிய போல இருக்கும்.

இப்போ 150 அடி 200 அடி போர் தோண்டுனாக் கூட தண்ணி இல்லை. ஆடு மாடுக்கு தண்ணி இல்லாம கும்பல் கும்பலா ஊர் ஜனங்க வெளியூருக்கு நாடோடியா போய்ட்டாங்க. வீடெல்லாம் இங்க ஆளில்லாம கெடக்குது. அப்போ ஆத்தங்கரை எல்லாம் 20, 30 ஏக்கரில் மாந்தோப்பு இலுப்பை தோப்பு மண்டி கெடக்கும். ஆனா இப்போ பன மரம் கூட காஞ்சி போச்சு.

வளத்தோட்டம் கதிர்,நடராஜ பாலாற்றில் இருந்து வளத்தோட்டத்திற்கு வரும் பாசன கால்வாய் பல தலைமுறையாக சித்திரை வெய்யிலிலும் வற்றாத கால்வாய் இன்று காய்ந்து கிடக்கிறது

இங்கு ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு பெரிய ஏரி கண்டிப்பாக இருக்கும். எல்லா ஏரிக்கும் தண்ணி வர காவா… அதுல இருந்து தண்ணி போற தாங்கல்… இப்படின்னு ஊரே தண்ணி, காவா, ஏரினு பிணைஞ்சு இருக்கும்.

குடிக்கிற தண்ணி ஒரு மணி நேரம் கூட இப்போ கொழாயில வரதில்லை. பூமி காஞ்சி போச்சு. அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது. எங்க எடத்துல பத்து கண்ணு, மூணு கண்ணு, ஒத்த கண்ணுனு அதுல எப்பவுமே தண்ணி இருக்கும். அதெல்லாம் வெள்ளத்தின் போது 40 50  அடின்னு இயற்கையா விழுந்த பள்ளம். வெய்யில் காலத்துல அதுல தான் நீச்சல் அடிப்போம்.

ஒவ்வொரு ஆத்துகண்ண சுத்தியும் ஜம்பு கோர, காடு மாறி வளரும். அத அறுத்து இங்க இருக்குறவங்க பாயி மொடைவாங்க. அசுரை, கெண்ட, வெராலு, வெலாங்கு, ஜிலேபினு பல மீனுங்க ஜம்புல வளரும். வெய்யுலுல ஆத்துக்கண்ணுல குளிச்சுட்டு மீன புடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவோம்.

அப்போ இங்கஃ பிரிட்ஜ் எல்லாம் இல்லை. தரைப்பாலம் தான் உண்டு. மழக்காலத்துல கண்ணுக்கு எதுக்க தெரியுற காஞ்சிபுரத்துக்கு கூட போக முடியாது. வெள்ளம் ரெண்டு கிலோமீட்டர் அகலுத்துக்கு கர பொரண்டு ஓடும். ஆத்தர அவசரத்திற்கு காஞ்சிபுரத்திற்கு போகணும்னா கூட மாமண்டூர், வடால் வழியா 40 கிலோமீட்டர் சுத்திகினுதான் போக முடியும். இருந்தாலும்… இப்போ இருக்குற கஷ்டம் அப்போ இல்லை.

சின்ன வயசுல நாங்க வீட்டில இருந்த நேரத்த விட ஆத்துல ஆடுனது தான்.. அதிகம். மழைக்காலத்துல வெள்ளம் பொரளும் போது அஞ்சு கிலோமீட்டர் எட்ட வெள்ளம் வரும்போதே, ஆறு எங்களை எச்சரிச்சு வீட்டுக்கு தொரத்திடும். மணல்ல விளையாடுற எங்க காலு, சேத்துல எறங்குற மாறி கீழ எறங்கும். அப்பவே எங்களுக்கு தூரத்தில வெள்ளம் வருதுனு… தெரிஞ்சிடும். நாங்க எல்லாரும் விழுந்தடிச்சு வேகவேகமா கரை ஏறுவோம். அதுக்கு கொஞ்ச நேரத்துல வெள்ளம் எங்க பின்னாடியே வரும்.

புஞ்சை அரசந்தாங்கல் கதிர்,நடராஜ: அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது

எங்க தாத்தா எல்லாம் , டேய், காலுக்கு கீழ பனமரம் உயரம் மணலு இருக்குடா அதுல தாண்டா இப்போ வெள்ளம் போகுது. அடுத்து மேல் வெள்ளம் வருண்டா வாங்கடானு கத்துவாரு.. இப்போ சாதாரணமா 50 அடி ஆழத்துக்கு அந்த மணல பல கிலோமீட்டருக்கு வாரிட்டாங்க. அதுக்கு அப்பால ஆறுன்னு எங்க இருக்கும்.

அந்த கீழ் ஊத்து தண்ணிய தான் நாங்க காவாயாக்கி அந்த காலத்துல விவசாயம் பண்ணுவோம். அந்த தண்ணியில எங்க முகமே தெரியும். அவ்ளோ.. தெளிவா இருக்கும்.

விவசாயம் பண்ணுன எங்க குடும்பத்து பசங்க இப்போ ஷூ கம்பெனிக்கும் தோல் கம்பெனிக்கும் தினக்கூலியா போகுதுங்க. வீட்டுக்கு பின்னால கடல் மாதிரி காவாய் போகும். அங்க தான் நாங்க குளிப்போம். துணித் துவைப்போம். அதுதான் எங்களுக்கு விவசாயத்திற்கான பாசனக்காவாய். அது எந்த காலத்துலயும் வத்தாது. இப்போ அத பாருங்க முள்ளு மண்டிக் கிடக்குது.

பாலகிருஷ்ணன் – ஆடு மேய்ப்பவர் – குருவி மலை

மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது. இப்போ பாருங்க இது பொட்டல் காடு மாறி இருக்குது. இப்போ ஒரு போகம் அறுக்குறதே பெரும்பாடா ஆயி போச்சு. அதுக்கே பம்புசெட்டு இருந்தா தான் முடியும். இப்போ ஆடு மாட்டுக்குக் கூடத் தண்ணி இல்லாம நாடோடி மாறி அலையுறோம். இந்த வெய்யுலுல முன்னெல்லாம் ஒருபக்கம் விதைப்பு மறுபக்கம் அறுப்புனு வாழ்ந்தோம்.

பாலாறு பாசன நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறிய குரூரம் மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது.

மழக்காலத்துல இந்த பூமி வேற மாறி இருக்கும். மழக்காத்துன்னு வெடவெடன்னு இருக்கும். ஒருக்கைல பொறந்த ஆட்டுக்குட்டி மறுக்கைல ஜம்புகூடைனு மழையில திரிவோம். ஆடு ஒருப்பக்கம் நாங்க ஒருபக்கம்னு தீராத மழையில மாட்டிக்குவோம்.

மூணு மாசம் மழை பெஞ்சாலும் மொத்த வருசமும் நாங்க சொகமா இருந்தோம். ஏரித் தண்ணி காவாத்தண்ணி வத்தாம இருந்தது தான் அதுக்குக் காரணம். இப்போ அந்த ஏரியும் காவாவும் எங்க இருக்குனு தேடுறோம்.

வருசத்துல ஆறு மாசம் கடன் வாங்கி சாப்பிடுவோம். அடுத்த ஆறு மாசம் மகசூல வெச்சு அதை அடைச்சுடுவோம். அத நம்பி கடன் குடுப்பாங்க.

நாங்க கூழோ அரிசி சோறோ குடிச்சிட்டு நிம்மதியா இருந்தோம். எங்களோட ஆடு மாடும் பச்ச புல்ல மேஞ்சிட்டு பசபசன்னு திரிஞ்சிச்சுங்க. இப்போ நாங்க ரெண்டு பேருமே வத்தி போயிட்டோம்.

இந்த ஆடுங்க தான் இதுநாள் வரைக்கும் எங்க குடும்பத்தக் காப்பாத்துது. ஆடு மேச்சு அஞ்சு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்துட்டேன். பையனையும் இப்போ கல்லூரி படிப்பு படிக்க வக்கிறேன். இப்போ பொண்ணு வயித்து பேத்திங்களுக்கும் இந்த ஆடுங்கள வெச்சு தான் எல்லாம் செய்யறேன்.

நூறு ஆடுங்க எப்பவுமே எங்கால சுத்தி சுத்தி வரும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்க போடுற குட்டிங்களை வெச்சு தான் இவ்ளோவையும் செஞ்சேன். கட்டிக் குடுத்துட்டாலும் அப்பப்போ தாய்தகப்பனு ஓடியாராங்க. நாம இருக்குற வரைக்கும் தான் செய்ய போறோம்.

வெள்ளாம இல்லாம போனதால மனுசனுக்கு மட்டும் இல்ல ஆடுமாட்டையும் ஆயிரம் நோயோட தான் வளக்குறோம். மனுசனுக்கு ஹார்ட் அட்டாக் வர மாறியே ஆடுங்களும் அப்பப்போ விருவிருனு இழுத்துக்கிட்டு மயக்கம் போட்டு கிழே விழுந்துருதுங்க. மாட்டு டாக்டர வெச்சு அதுகளையும் காப்பாத்த வேண்டி இருக்கு.

முனிரத்தினம் – வளத்தோட்டம் – விவசாயி

ஞ்சு ஏக்கரு நெலம் எனக்கு. ஒரு ஏக்கரு பயிர் வக்கிறதே இப்போ பாடாப்போவுது…. இப்போ இங்க ஆறா இருக்குது? பாலாறுனு இத சொல்ல முடியுமா? வெறும் வேலிக்காத்தானா (சீம கருவேல மரம்) மண்டிக் கிடக்குது. மனசெல்லாம் நோவுது.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்றுப் பாலம் சீமகருவேல மரமாக மண்டிய அவலம்

ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க. அம்மா ஆட்சியில எல்லாத்தையும் வாரி ஆத்தையே சமாதி கட்டிட்டாங்க.

அப்போ எல்லாம் ஆத்து மணலை யாருனா பக்கத்துல வீடு கட்டனும்னா தான் எடுப்பாங்க. நாங்க அதுக்கு ஒரு வண்டி ஒரு அம்பது அறுவதுனு ஓட்டறதே பெருசு. இப்போ எட்டு டயரு வண்டி பன்னெண்டு டயரு வண்டினு ஜே.சி.பிய சுத்தி சுத்தி வெச்சு மொத்தமா வாரிட்டாங்க. வேலிக்காத்தான் முள்ளால ஆத்தையே மூடிட்டு போய்ட்டாங்க.

இருபது வருசத்துக்கு முன்ன கூட நெலம இவ்ளோ மோசமா இல்லை. அப்போ இந்த காச்ச காலத்துல எங்க ஊருகாரங்க எல்லோரும் சேர்ந்து ஆத்துல கொளஞ்சி அடிப்போம் (ஊத்து வாய்க்கால் தோண்டுவது). அதுக்கு ராவோட ராவா எங்க ஊரு பங்குக்கு என்பது பேரு ஆத்துக்கு போவோம். மாடு பூட்டி பலக மாட்டி வாய்க்கா எடுப்போம். இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்காரங்களும் இந்த காவாய தொடர்ச்சியா தொண்டுவாங்க.

இந்த காவால ஊத்தெடுக்குற தண்ணி மேல்மடைல இருந்து கடைமடை வரைக்கும் ஒரு ஏக்கர் நிலம் ஒரு மணி நேரத்துல பாயும். அப்படி இருந்துச்சு தண்ணி வளம். ஆறு பாத்தா காஞ்சி தான் இருக்கும். ஆனா என்ன மந்திரமோ தெரியாது தண்ணி மட்டும் வத்தாது. இப்போ மணல் போனதிலிருந்து ஆறே செத்துப் போச்சு.

முனிரத்தினம் வளத்தோட்டம் விவசாயி ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க

இந்த காச்ச காலத்துல தான் நாங்க நாத்து நடுவோம். குள்ளகார், மோஷம், கிச்சிடி சம்பா, பிசினி இப்படி எடத்துக்கு ஏத்த மாறி ஆளுக்கொரு நெல்லப் போட்டு பயிர் அறுப்போம்.

இந்த ஆத்துல ஒரு முள்ளு செடிய பாக்க முடியாது. இப்போ ஆறே முள்ளு மண்டி கிடக்குது. என்னத்த சொல்ல.

தனசேகரன் – புஞ்சைஅரசந்தாங்கல் – மாணவர்

ம்மா அப்பா பிரிந்ததால் அப்பா வழிப் பாட்டியின் பாதுகாப்பில் இருக்கும் மாணவர் தனசேகரன்.

நான் இப்போ படிக்கிறத நிறுத்திட்டேன். போன வருஷம் ஓரிக்கையில் இருக்கிற சி.பி.டி.லீ(C.P.T.LEE) செங்கல்வராயன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எடுத்து படிச்சேன். செமஸ்டர் பீஸ் கட்ட முடியாமல் பாட்டி படிப்பை நிறுத்திருச்சி. இந்த வருஷம் பச்சப்பாஸ் கல்லூரியில் சேர்க்க சொல்லி பாட்டிகிட்ட சொல்லி இருக்கேன். பணம் இல்ல என்ன பண்றதுன்னு தெரியலனு சொல்லுது பாட்டி. எனக்கு Bsc zoology படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது. அதுக்கே இப்போ வேலை இல்லை அதனால் பணம் கிடைக்கலைன்னு சொல்லிடுச்சு.

தனசேகரன் புஞ்சைஅரசந்தாங்கல் மாணவர் எனக்கு Bsc zoology(விலங்கியல்) படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது

விஜயா – மாடு மேய்ப்பவர் – வளத்தோட்டம்

ங்க கீழ் ரோட்டுக்கும் மேல் ரோட்டுக்கும் இடையில இருக்குற இரண்டு கிலோமீட்டர் இடத்துல 25 கவர்மென்ட் மோட்டார்ல… தண்ணி எடுக்குறாங்க. அந்த தண்ணி எங்களுக்கு கிடையாது. மெட்ராசுக்கு போகுது. ஒரு ஆளே உள்ள போற அளவு பைப்புல தான் தண்ணி எடுக்குறாங்க. தண்ணி இங்க காயாம என்ன பண்ணும். மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.

விஜயா தாத்தனாஞ்சேரி எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல

இருந்த ஏரியும் காவாயும் சிறுத்துப் போயி தூந்துப் போச்சு. ஏரி இருந்த தடமே இப்போ காணும். அப்புறம் தண்ணி எங்க நிக்கும்.

எனக்கு ரெண்டு பொம்பள குழந்தைங்க. உள்ளூரு கவர்ன்மென்ட் பள்ளிக்கூடத்துல மூணாவதும் நாலாவதும் படிக்குதுங்க. எங்க ஊட்டுக்கறாரு விவசாயம் பாத்தவரு இப்போ வேலை இல்லாம சென்ட்ரிங் வேலை பாக்குறாரு. வேலை செய்ய முடியல உடம்பு கஷ்டமா இருக்குனு சொல்றாரு. என்ன பண்றது கொழந்தைங்க இருக்குதே.

சோத்துக்கு வழி இல்லனாலும் நோய்க்கு கொறச்சல் இல்லை. சக்கர நோய்க்கு பத்து வருசமா மாத்திர சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். காஞ்சிபுரம் கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில மாசம் ஒருவாட்டி மாத்திரை வாங்கி வரேன். பால் மாடு வெச்சு இருக்கேன்னு தான் பேரு. கொழந்தைங்களுக்கு ஒரு வாய் காப்பி போட்டு கொடுக்குனும்னா கூட கணக்கு பாப்போம். ஏன்னா விக்கற பாலு குறைஞ்சுடும். அத வெச்சு மாட்டுக்கு வக்கபுல்லு வாங்குறதா இல்ல நாங்க சோறு சாப்புடறதா?

தேவராஜன், மேக நாதன், பழனி, சாந்தமூர்த்தி, இரவி, தமிழினி – திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் :

ந்த அமைப்பு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது, வட்டார எம்.எல்.ஏக்களை சந்திப்பது, மனு கொடுப்பது, அதிகாரிகளிடம் முறையிடுவது என்று படிப்படியாக இயக்கமெடுத்து பின்னர் அப்பகுதியில் ஆத்தோர கிராமத்தில் இயங்கிய மணல் குவாரியை மக்கள் போராட்டத்தின் மூலம் மூடியது.

திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் அரசும் அதிகார வர்க்கமும் வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை

அதற்கு அடுத்து பாலாற்று படுகை நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் வெள்ளக்காலங்களில் நீர் வழிந்தோடுவதை தடுக்கவும் தடுப்பணை கட்டும் கோரிக்கைகளை முன் வைத்தது. அதற்காக கல்லூரி மாணவர்களிடம் ஓவியப் போட்டி, கட்டுரை எழுதுவது, புத்தக வெளியீடு, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஊர்வலம், கிராம கூட்டங்கள் என்று பல வழிகளில் இயக்கம் போராடியது.

இதற்கு மக்கள் சிவில் உரிமை கழகம், வட்டார ஆசிரியர் – மாணவர்கள் அணி, சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர் வீரப்பன் இவர்கள் உதவியுடன் ஆற்று மணல் கொள்ளையை ஊடகங்களில் வெளிப்படுத்தியது.

கடந்த பத்தாண்டுகளில் பாலாற்று பாசனப் பரப்பு குறைந்து வருவதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புள்ளி விவரங்களாக சேகரித்து மக்கள் முன் வைத்தது. இதனால் பாலாறு கண்ணெதிரே அழிவதை உணர்ந்த 150 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்கள் மணல் அள்ளுவதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

பாலாறு செய்யாறு வேகவதி ஆறு சங்கமிக்கும் திருமுக்கூடலில் இருந்து சென்னைக்காக உறிஞ்சப்படும் பாலாறு

இவர்களின் சட்டபூர்வ தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக பாலாற்று மக்களுக்கு துரோகம் இழைத்தன. வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. மரணத்தில் இருக்கும் பாலாற்றின் கடைசி நீரை உறிஞ்சும் செய்யாறு சிப்காட், ஸ்ரீபெரும்பதூர் சிப்காட், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டுகளில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய சமூக நல நிதியை அரசிடம் முறையாக கொடுக்காமல் தாங்களே பூங்கா கட்டுவதாகவும் பொதுப்பணிகள் செய்வதாகவும் ஏமாற்றுகின்றன. இந்த நிதியே பலத் தடுப்பணைகள் கட்ட போதுமானது என்று பலமுறை எடுத்துக்காட்டியும் அதிகார வர்க்கம் பொருட்படுத்தவில்லை.

இதற்கு மாறாக திருமுக்கூடலில் இரயில் நீர் திட்டத்தின் கீழ் ரயில்வேத்துறைக்கு மேலும் பல இராட்சத குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது அரசு. இதற்குத் தேவையான நீராதாரத்திற்கான படுக்கை அணையை(Bed Dam) கட்டி அதை தடுப்பணை கட்டியதாக கணக்கு காட்டி ஏமாற்றியது.

முத்தாள், நடராஜன், காத்தவராயன், ராஜேந்திரன், கண்ணையா  – இவர்கள் அனைவரும் வாலாஜாபாத் அருகே பாலாற்றுக்கரையில் உள்ள நெய்குப்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள்.

நடராஜன்:

நாங்க எல்லாருமே பதினைஞ்சு வயசுல இருந்து ரைஸ் மில்லுல மூட்ட தூக்குற கூலிங்க. நெல் அவிக்கிற வேலையும் செய்வோம். சின்ன வயசுல பாலாத்து தண்ணிய கடந்து தான் ரைஸ் மில்லுக்கு வரணும். ஒத்தையா எங்களால வர முடியாது. அதனால நாங்க ஒருத்தருக்கொருத்தர் கைகோத்து தண்ணிய கடந்து வருவோம். இன்னும் வெள்ளம் பொறன்டா நாலு பானைய நாலு மூலைக்குக் கட்டி அதுல கொஞ்சம் மணலக் கொட்டித் தெப்பம் கட்டுவோம். அத புடிச்சிகினு தான் கரைய கடந்து வேலைக்கு வருவோம்.

வீட்டுக்கு ஒரு ஆளுனு நாங்க தோண்டுன புளியம்பாக்கம் காவாய் இக்கரை காவா, அங்கம்பாக்கம் காவாய் அக்கரை காவாய். அது தான் எங்க ஊரு விவசாயத்த கவனிச்சுகிது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் பாலாற்றுக்கு அக்கரையில் உள்ள நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்த நெல் மண்டித் தொழிலாளி நடராஜன்

தண்ணி தேவாமிர்தம் மாறி இருக்கும். ஆத்துல காவாய் எடுக்குறதுக்கு மாட்டப் பூட்டி கொளஞ்சி அடிப்போம். அதுக்கு அப்பால பெரம்ப பூட்டி தண்ணி காவாய சீர் பண்ணுவோம். வேலைக்கு வராதவங்களை ஒரு தலக்கட்டுக்கு இவ்ளோன்னு அபராதம் போடுவோம்.

மணல ராவும் பகலும் லாரி வெச்சு அள்ளி ஆத்தையே தூத்துட்டாங்க. இங்க விவசாயமே இல்லை. எங்களுக்கு இந்த ரைஸ் மில்லு வேலை தான் சோறு போடுது.

வேலைக்கு காலைல ஏழு மணிக்கு வந்தா மறுநாளு மதியம் மூணு மணிக்கு தான் முடியும். நாங்க நாலு நாலு பேரு ஒரு குரூப்பா வேலை செய்வோம். நூறு மூட்டைக்குக் குறையாத நெல்லை தொட்டில கொட்டி தண்ணிய உட்டு அலசி மொதக்குற கருக்காய கையில வாரி சுத்தம் பண்ணுவோம். சுத்தம் பண்ணுன நெல்லை டேங்குல கொட்டி அதுல தண்ணிய ஊத்தி வேக வைப்போம்.

நெல்லு வேக நைட் ஒன்பது ஆவும். அத அப்படியே ஆவி கட்டிட்டு நைட் சாப்பாட்டுக்கு போயிடுவோம்.

மறுநாளு வெள்ளென காலைல வெந்த நெல்ல சிமெண்ட் களத்துலக் கொட்டிடுவோம். அதை காய வெக்க பல்லு பெரம்பு ஓட்டுவோம். பிறகு காலாலத் துளாவுவோம். துளாவுவுது விளையாட்டுக் கிடையாது. ரெண்டு காலையும் பாம்பு மாதிரி சரசரன்னு தேச்சுகினு முன்ன போகணும். இதால கோடு போட்ட மாதிரி தரை ஈரமும் காயும் அதால நெல்லும் காயும். இது அரை நாள் முழுக்க மாத்தி மாத்தி செய்யனும். சூடாலே காலே காப்பு காச்சி கெடக்குது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையின் பாலாற்று கரையோர கிராமங்களில் வாழும் நெல் மண்டித் தொழிலாளர்கள்

நெல்லு பதமா காஞ்சதும் கையில நிம்டி பாத்து அரிசி ஒடையாம இருக்கானு பாப்போம். பிறகு அதை அம்பாரம் ஆக்கி நைட் பூரா டம் கட்டுவோம். அப்போ தான் அரிசி உடையாம முழுசா இருக்கும். இல்லாட்டி ரவை மாறி அரிசி நொறிங்கிடும்.

பிறகு இதை மெசின்ல போட்டு அரிசியாக்குவோம். பிறகு சைஸ் வாரியா மூட்டையாக்கி லோட் ஏத்துவோம். முதலாளியோட கணக்கு மூட்டைக்கு 20 ரூபாய். இந்த ரெண்டு நாள் வேலைக்கு 600 கிடைக்கும். வருசத்துக்கு ரெண்டு மாசம் தான் முழுசா வேலை இருக்கும். மத்த நாளெல்லாம் பாதி வேலை பாதி கூலி கெடச்சாலே பெருசு.

இப்போ இங்க தண்ணி இல்ல விவசாயமும் இல்ல. எனக்கு வயசாயி போச்சு. எந்த வேலைக்கு போறதுன்னு தெரியல. பசங்கள எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல. இதுல இந்த இருமுடி செலவு மட்டும் குறையில. என்னாப் பாக்குறீங்க கட்டிங் செலவுதான் என்று சிரிக்கிறார்.

தாத்தனாஞ்சேரி தடுப்பணை – பாலாற்றுக் குறுக்கே செங்கல்பட்டுக்கு அருகே கட்டப்பட்ட தடுப்பணை (Bed Dam)

தாத்தனாஞ்சேரி தடுப்பணையை நேரடியாகவே சென்று பார்த்தோம். தடுப்பணை என்று சொல்வது வெறும் உடைந்த பாறாங்கற்களே. உடைந்த பாறாங்கற்களையே ஐந்தடி ஆழம் ஐந்தடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி கொட்டி இருக்காங்க. இரு கரைகளிலும் சுமார் முன்னூறு அடி நீளத்திற்கு நடைப்பாதை சிமெண்டு சிலாபு ஒட்டி வைத்து இருக்காங்க. இதற்கு பெயர் தான் தடுப்பனையாம். அதிகாரிகளின் இந்த அக்கிரமத்தை ஊர்காரர்கள் காரித் துப்புகிறார்கள்.

தாத்தனாஞ்சேரி தடுப்பணை நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தரக் கேட்டோம்

தாத்தனாஞ்சேரி தடுப்பணையில் இருந்த விக்னேஷ் என்ற மாணவர் கூறியது:

நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தர கேட்டோம். அவுனுங்க (அதிகாரிங்க) இங்க வந்து கல்ல கொட்டிட்டு நாங்க தடுப்பணை கட்டிட்டோம்னு சொல்றானுங்க. அதுமட்டுமல்லாமல் இனிமே இங்க பிரிட்ஜ் கட்ட முடியாதுனு சொல்றாங்க. கொட்டிட்டு போன ஆறு மாசத்துக்குள்ள வர்தா புயல் வந்துச்சு. கருங்கல்லு பாதி வெள்ளத்துல அடிச்சிகினு போய்டுச்சு. மீதி இருக்கறது தான் நீங்க பாக்குறது. இங்க தண்ணியும் இல்ல ஒன்னும் இல்ல. எதுக்கு இத செஞ்சாங்கனு தெரியல. அவங்க ஏமாத்தறாங்கனு மட்டும் எங்களுக்கு நல்லாத் தெரியுது.

இது கூட இங்கு பாலாற்றில் எடுக்கும் இரயில் நீருக்காக நீர் ஊத்துக்காக செய்த மோசடி. அதுக்கும் கூட இது பயன்படாது. எதையோ சொல்லிப் பணத்த அடிச்சுட்டாங்க.

***

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் நீராதாரத்தை நம்பி கிட்டத்தட்ட 1200 ஏரி குளங்கள் இருந்திருக்கின்றன. சென்னையின் கட்டுமான பணிகளுக்காகவும் பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளுக்காகவும் வளமான திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலவளமும் நீர்வளமும் சுரண்டப்பட்டுவிட்டன. சென்னையின் செயற்கையான வளர்ச்சியில் பாலாற்றின் இயற்கை அழிவைக் காணலாம்.

பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு பேரூயிர். அது உருவாக்கிய வளங்களும், வாழ்க்கையும், சுற்றுச்சூழலும் ஏராளம். உலகமயத்தின் அகோரப் பசிக்காக இந்த ஆற்றின் மைந்தர்களும், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கையும் இன்று அழிந்து கொண்டிருக்கிறது.

செய்தி, படங்கள் – வினவு செய்தியாளர்கள்