privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் - ஒரு பொறுக்கியின் மரணம் !

‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் !

-

ந்திய அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் இந்தியாவின் “சூப்பர் காப்” எனப் புகழப்பட்ட கே.பி.எஸ். கில், 26.05.2017 அன்று மரணமடைந்ததற்கு தங்களது வருத்தத்தைத் தெரிவித்து, அவரது புகழையும் பாடிவருகின்றனர். 30.05.2017 அன்று வெளியான தமிழ் ஹிந்துவில் கூட கே.பி.எஸ். கில் குறித்த சேகர் குப்தா என்னும் முன்னாள் பத்திரிக்கையாளரின் கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கன்வர் பால் சிங் கில் என்ற கே.பி.எஸ்.கில், கடந்த 1958-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியிலமர்ந்த அவர், 1980-களின் தொடக்கத்தில் அம்மாநிலத்தின் ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இவர் மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அச்சமயத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் போராட்டக்காரர் ஒருவரை உதைத்தே கொன்றிருக்கிறார். அக்குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, பின்னர் அவ்வழக்கிலிருந்து டில்லி உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

கிரிமினல் கில்

1984-ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். காலிகளும், காங்கிரசு காலிகளும் இணைந்து நடத்திய சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு கேட்டுப் போராடும் போராளிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமையைச் சீர் செய்ய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்குப் பெயர் போன கில், பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். 1984-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட கில் 1988 – 1990 கால கட்டத்திலும், 1991 – 1995 காலகட்டத்திலும் மாநிலத்தின் டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் கில்லின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பஞ்சாப் போலீசு, பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் இளைஞர்களை, சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, போலி மோதலிலும், போலீசுக் கொட்டடிகளிலும் கொன்று குவித்தது.

டிஜிபியாக பதவியேற்ற பின்னர், ஆபரேசன் பிளாக் தண்டர் என்ற பெயரில், சீகியர்களின் புனித்த் தலமான அமிர்தசரஸ் தங்க கோவிலுக்குள் போலீசு படையை அனுப்பி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சுமார் 43 பேரை கோவிலுக்குள்ளேயே கொன்று குவித்தார் கில். இந்தக் காலகட்ட்த்தில் பத்தாயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் போலீசின் ஒடுக்குமுறையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் போலி மோதல் கொலைகளின் மூலம் கொல்லப்பட்டனர். விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலரும் ‘காணாமல்’ போயினர். அதாவது தடயமில்லாமல் ஒழித்துக் கட்டப்பட்டனர். 1989 – 1992 காலகட்டத்தில் மட்டும் பஞ்சாபில் சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்கள், போலீசால் கொலை செய்யப்பட்டனர்.

கே.பி.எஸ்.கில், தீவிரவாதத்தை ஒடுக்க சீக்கியப் போராளி அமைப்புகளைத் தடை செய்து, போராளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவில்லை. மாறாக அவர்களைக் கூண்டோடு போலி மோதல் கொலைகள் மூலம் ஒழித்துக் கட்டினார். இந்த நரவேட்டை நாயகனின் வெறி கொண்ட நடவடிக்கைக்கு அப்பாவிகள் தான் பெரும்பான்மையாகப் பலியாகினர். இது தவிர போராளிகளைக் கொல்லும் போலீசுக்கு பரிசுத்தொகைகளும், காட்டிக் கொடுப்பார்களுக்கும், போலீசுக்கு கங்காணிகளாக செயல்படுபவர்களுக்கும் பெருந்தொகைகளைப் பரிசாக வழங்கினார் கில். அன்றைய காலகட்டத்திலேயே ரூ. 50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட போராளிகளைக் கொல்பவர்களுக்கு பகிரங்கமாகவும், பட்டியலில் இல்லாதவர்களையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் கொன்றவர்களுக்கு கமுக்கமாகவும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

ஜஸ்வந்த் சிங் கல்ரா

இதனால் கில் என்ற இரத்த வெறியனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பஞ்சாப் போலீசு, கொலை செய்வதையே நோக்கமாகக் கொண்டு வெறி கொண்டு திரிந்தது. கொலை செய்தால் பணமும் பரிசும் கிடைக்கும் என்ற அடிப்படையில் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையைப் போன்று செயல்பட ஆரம்பித்தன போலீசு கும்பல். இந்நிலைமையைக் கண்டு 1993-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “கில் போலீசுத்துறை தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், பஞ்சாப் மக்கள் போராளிகளைக் கண்டு பயங்கொள்ளவில்லை, மாறாக போலீசைக் கண்டு தான் அஞ்சி நடுங்குகின்றனர்” என்று எழுதியது.

கில் தலைமையிலான பஞ்சாப் போலீசால், கொட்டடியிலும், போலி மோதலிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளை சுடுகாட்டில் எரித்த போலீசின் மோசடியை மனித உரிமைச் செயல்பாட்டாளரும், வங்கி ஒன்றின் இயக்குனருமான ஜஸ்வந்த் சிங் கல்ரா அம்பலப்படுத்தி, அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1995 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் நாள், காலையில் தனது காரைக் கழுவிக் கொண்டிருந்த கல்ராவை, கடத்திச் சென்றது போலீசு கும்பல். அவரது உறவினர்களுக்குக் கூட அவர் குறித்த எந்தத் தகவலையும் தர மறுத்தது போலீசு.

ஜஸ்வந்த் சிங் கல்ராவை உடனடியாக மீட்டுத்தரக் கோரி செப்டெம்பர் 11, அன்று அவரது மனைவி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில்  கில்லுக்கு எதிராக கல்ரா பல்வேறு ஆதாரங்கள் திரட்டியிருந்த சூழலில், அவருக்கு போலீசில் இருந்து மிரட்டல் தொடர்ச்சியாக வந்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரைப் போலீசு தான் கடத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பதில் மனுவில், பஞ்சாப் போலீசு, கல்ராவைத் தாம் கைது செய்யவில்லை என்றும் அவரைத் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தில் சொன்னது. கில்லின் உத்தரவுப்படி பஞ்சாப் போலீசால் கடத்தப்பட்ட கல்ரா, ஒரு மாத காலம் சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின்னர் அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேடி வருவதாக வெளியுலகிற்குக் கணக்குக் காட்டியது பஞ்சாப் போலீசு.

அதன் பின்னர் கடந்த 2005ம் ஆண்டு, கில்லின் காலகட்டத்தில் சிறப்புப் போலீசு அதிகாரியாகப் பணியாற்றிய குல்தீப் சிங், இவ்வழக்கில் கில்லின் கிரிமினல் தனத்தை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக விளக்கினார். அவ்வாக்குமூலத்தில், செப்டெம்பர் மாதம், போலீசால் கடத்தப்பட்ட கல்ராவை, அக்டோபர் மாதத்தில் போலீசு அதிகாரி அஜித் சிங் சந்துவின் வீட்டில் வைத்து கில் சந்தித்தார் என்றும் கில் சந்தித்த சில நாட்களில் கல்ரா அங்கிருந்து ஜாபல் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் போலீசால் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒருவேளை ‘கில்’லின் அறிவுரையை கல்ரா ஏற்றிருந்தால் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கு இதன் பின்னர் சூடுபிடித்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. குற்றத்தின் சூத்திரதாரியான ‘கில்’ அயோக்கியத்தனமான முறையில் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ரூபன் தியோல் பஜாஜ் – கேபிஎஸ் கில்

வெறுமனே ஒரு வெறி பிடித்த மிருகமாக, ஒரு கொலைகாரனாக, மட்டும் கில்லின் வாழ்க்கையைச் சுருக்கிப் பார்க்க முடியாது. அவர் ஒரு கடைந்தெடுத்த பெண் பித்தனாகவும் இருந்தார். 1988-ம் ஆண்டு ரூபன் தியோல் பஜாஜ் என்னும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது கில் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். அப்பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி இது குறித்து புகார் அளித்து வழக்குப் பதிவு செய்தார். 1996-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பிரிவு 509, பிரிவு 357ன் படி மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனையும், தொடர்ந்து 2 மாத சிறைத் தண்டனையும், ரூ. 2,00,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது, இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்திய கில்லிற்கு தண்டனையை உறுதி செய்த அதே வேளையில் சிறைத் தண்டனையை மட்டும் இரத்து செய்தது.

1988 -ம் ஆண்டு ஒரு பெண் அதிகாரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கிரிமினலுக்கு 1989 -ம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

1995 -ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மோதல் மேலாண்மை நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராகப் பதவியேற்றார். அரசாங்கங்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக அது செயல்பட்டது. 1997 -ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் இவரை பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்க அழைத்தது, ஆனால் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளியாக் தீர்ப்பு வழங்கப்பட்டதால் இந்தக் கிரிமினலால் அப்பதவியை ஏற்க இயலவில்லை

அது போல 2000 -ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக தமது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை உதவி வழங்க கில்லை அழைத்தது இலங்கை.

கிரிமினல் கில்லை உபயோகித்துக் கொண்ட குஜராத்- சட்டீஸ்கர் கிரிமினல்கள்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நடத்தப்பட்ட குஜராத் கலவரத்திற்கு பிறகு, கில்லை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் மோடி. மோடி – கில் என்ற இரண்டு கிரிமினல்களின் கூட்டணியில் 2002 -ம் ஆண்டிற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட போலீசு வெறியாட்டங்கள் குறித்து தனியான விவரங்கள் எதுவும் தேவை இல்லை.

முசுலீம் மக்களைக் கொன்று குவித்த மோடிக்கு உதவியாக தமது கடமையை ஆற்றிய பின்னர், பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்க சட்டீஸ்கர் அரசு கில்லை பாதுகாப்பு ஆலோசகராக 2006ம் ஆண்டு நியமித்தது. எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.

கிரிமினல்களுக்காக மக்களைக் கொன்று குவித்த கிரிமினல் கில், தனது 82-வது வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். முதலாளித்துவப் பத்திரிக்கைகளும், ஊடகங்களும், இந்தக் கிரிமினலின் மறைவிற்கு அஞ்சலியும் புகழாரமும் செலுத்துகின்றன. இந்த ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள அவர்கள் போற்றிப் புகழும் கிரிமினல் கில்லின் யோக்கியதையைப் புரிந்து கொண்டாலே போதும்.

– நந்தன்