privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !

நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !

-

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்த உத்தரவை இரத்து செய்து 12/06/2017 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வரும் ஜூன் 24-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்றும், இனி 2017-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த எந்த வழக்கையும் உயர்நீதி மன்றங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வு எழுதியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வினாத் தாள்களை விட கடினமானதாக இருந்ததை முன்வைத்து, பாரபட்சமான முறையில் நடத்தப்பட்ட நீட் தேர்வை இரத்து செய்து உத்தரவிடக் கோரி தமிழக உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம், ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை எடுத்து விசாரித்த உயர்நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணை முடியும் வரை முடிவுகள் அறிவிப்பதைத் தடை செய்து கடந்த 2017, மே 24 அன்று உத்தரவிட்டது. இதே போன்று குஜராத் மாநிலத்திலும் ஒரு மாணவர் தொடர்ந்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதனால் ஜூன் 8 அன்று அறிவிக்கப்பட வேண்டிய நீட் தேர்வு முடிவுகள், இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து, நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.ஈ. நிர்வாகம், இவ்விரு வழக்குகளிலும் தலையிட்டு விரைவில் தீர்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஃபுல் சந்திர பாண்ட் மற்றும் தீபக் குப்தா அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, இது குறித்து விளக்கமளிக்க சி.பி.எஸ்.ஈ.க்கு உத்தரவிட்டது. இதற்கு விளக்கமளித்த சி.பி.எஸ்.ஈ நிர்வாகம், “ஒவ்வொரு மொழிகளுக்கும் கேள்விகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டவை எனவே அவை பாரபட்சமானதாக கருதப்படக் கூடாது என்றும், தேர்வு எழுதிய 12 இலட்சம் மாணவர்களில் வெறும் 1.5 இலட்சம் மாணவர்கள் தான் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், இவ்வழக்கிற்காக பெரும்பான்மை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அதனால், உயர்நீதி மன்ற உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தது.

இவ்வழக்கில் நேற்று (12/06/2017) தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இதற்கு முன்னால் உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையை, சென்னை மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களின் தடை உத்தரவு மறைமுகமாக நீர்த்துப் போகச் செய்வதாகக் கூறி தடை உத்தரவை நீக்கி, வரும் ஜூன் 24 -ம் தேதிக்குள் முடிவுகளை வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இனி 2017 -ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த எந்த வழக்குகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுமைக்கும், நடுநிலையான, பொதுவான ஒரு தேர்வின் மூலம் தகுதியான, திறமையான மாணவர்களுக்கு நியாயமான முறையில் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதை காரணமாகக் கூறித் தான் நீட் தேர்வை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மீது திணித்தது மத்திய அரசு. இதற்கு உடனிருந்து ஒத்தூதியது உச்சநீதிமன்றம்.

தற்போது, பிராந்திய மொழியில் (தாய் மொழியில்) கல்வி கற்று மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் ஏழை மாணவர்களை வடிகட்டி வெளியே அனுப்ப ஹிந்தி, ஆங்கிலம் தவிர அனைத்து பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடினமான கேள்வித்தாள்களை அளித்து தனது சதியை நிறைவேற்றியிருக்கிறது சி.பி.எஸ்.ஈ. இந்த நவீன தீண்டாமைக்கு தமது தீர்ப்பு மூலமாக அங்கீகாரம் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இல்லையென்றால் அந்த பாரபட்சம் இல்லை என்றல்லவா சி.பி.எஸ்.ஈ நிரூபித்திருக்க வேண்டும். நீதிபதிகளும் அதை உத்தரவாதம் செய்திருக்க வேண்டும்.

அதோடு, நீட் சம்பந்தப்பட்ட எந்த வழக்குகளையும் இனி உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது எனக் கூறியிருப்பதன் மூலம், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை தவிர்ப்பதற்கு உதவி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம் !!

மேலும் :