privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !

சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !

-

கோமாதாவைப் பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வந்த பார்ப்பன பாசிஸ்டுகள் இப்போது கிறுக்கு முற்றிக் கூரைக்குக் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.

கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” விதிகள் என்ற பெயரிலான விதிகளை, மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.  “விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. “பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது” என்று மோடி அரசு கூறியது எப்படி முழுப்பொய்யோ, அதேபோல இதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறிய, நடுத்தர விவசாயிகள், சிறிய பால் வியாபாரிகள், சிறிய மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்கள், பால் விற்பனை, தோல் தொழில், இறைச்சித் தொழில், மாட்டு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் – ஆகிய அனைவரும் தமது வாழ்வாதாரங்களை இழப்பர். இந்த விதிகள்  இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சியை உள்நாட்டுச் சந்தையிலிருந்து முற்று முழுதாக ஒழித்துக்கட்டிவிடும். பால் மற்றும் இறைச்சித் தொழில் முழுவதையும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பால் மற்றும் இறைச்சித் தொழில் நிறுவனங்களின் பிடிக்குக் கொண்டு சென்று விடும்.

இது ஒரு பல நோக்குத் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இணையான இந்தப் பேரழிவு நடவடிக்கை தனது ஆட்சியின் மூன்றாண்டுத் தோல்வி குறித்த விவாதத்திலிருந்து நாட்டைத் திசைதிருப்பப் பயன்படும் என்று மோடி கணக்குப் போட்டிருக்கக்கூடும். இருப்பினும், இந்த அறிவிக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் ஆத்திரம், அந்தக் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விட்டது. தென் மாநிலங்களிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் வெடிக்கும் எதிர்ப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்புகள், பா.ஜ.க.வுக்கு உள்ளேயே தோன்றியிருக்கும் எதிர்ப்புகள், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் மாடுகளை விற்க முடியாததால் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோபம் ஆகியவற்றையெல்லாம் கண்ட மோடி அரசு பம்முகிறது. “பார்ப்பனியம்” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசத் தயங்கியவர்களையும் “பார்ப்பனிய எதிர்ப்பு” பேசுமாறு தூண்டியிருக்கிறது மோடி அரசு.

பார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே!

பார்ப்பனியம் என்பது எல்லாக் காலங்களிலும் ஒரு அழிவு சக்திதான். அதற்கும் உற்பத்தி நடவடிக்கைக்கும் என்றைக்கும் தொடர்பு இருந்ததில்லை. அதன் காரணமாகவே ஆதிக்கத் திமிரும் அடிமுட்டாள்தனமும் அதனிடம் சரி விகிதத்தில் கலந்தே இருப்பதை நாம் காண்கிறோம். அன்று வேள்வி என்ற பெயரில் கால்நடைகளை வகைதொகையின்றி அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது பார்ப்பன மதம். அதன் மீது வெறுப்புற்ற மக்களிடையே பவுத்தம் செல்வாக்கு பெறவே, தனது சமூக மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு, மாட்டுக்கறியைத் துறந்த பார்ப்பனர்கள், மாட்டை மாதாவாக்கி, மாடு தின்போரைத் தீண்டத்தகாதவர் ஆக்கினர்.

விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டிற்குப் பதிலாக மாட்டை முன்தள்ளி, இந்து – முஸ்லிம் பிளவை விதைத்து பிரிட்டிஷாருக்கு உதவினர் இந்து வெறியர்கள். தற்போது, இந்த விதிகள் மூலம் மாடு வளர்ப்போர், வெட்டுவோர், தின்போரை மட்டுமின்றி, கோமாதாவையும் “இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கி வருகிறது சங்கப் பரிவாரம்.

கோமாளிகளா, கொடூரர்களா?

சங்கப் பரிவாரம் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரம் என்பது உலக முதலாளித்துவம் வரையறுத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் பயபக்தியுடன் நின்றபடி, பார்ப்பனியம் ஆடுகின்ற கோரத் தாண்டவம். எனவே, சூழ்ச்சியும் அபத்தமும் அதில் கலந்திருப்பதும், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சுவை அதில் மேலோங்குவதும் தவிர்க்கவியலாது.

உங்களால் நம்ப முடிகிறதா? ஆண் மயிலின் கண்ணீர்த்துளியை விழுங்கிப் பெண் மயில் கருத்தரிப்பதாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சாதிக்கிறார். மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்துகிறது குஜராத் அரசு. ரூ.500, 1000-த்தைச் செல்லாமலாக்கிவிட்டால் பொருளாதாரம் புயல் வேகத்தில் வளரும் என்று பில்லிசூனியத்தைப் போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் மீது ஏவுகிறார் ஒரு பிரதமர். மொத்தத்தில் சங்கப் பரிவாரத்தினர் எனப்படுவோர், முட்டாள்தனமும் வக்கிரமும் ஆதிக்கத் திமிரும் கலந்த தெலுங்கு சினிமா வில்லனைப் போன்ற விசித்திரமான பிராணிகள்.

அதனால்தான், கோமாதா சென்டிமென்டை வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சங்கப் பரிவாரம், பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து விட்டது. “முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் ஆசையில், பித்தம் தலைக்கேறிய இந்தக் கும்பல், அக்லக்கைக் கொன்ற கத்தியை உருவி, “இந்து” விவசாயிகளின் வயிற்றில் செருகி விட்டது.

விதிகளின் முதல் பலி விவசாயி!

மோடி அரசு தற்போது உருவாக்கியிருக்கும் விதிகள் முதலில் விவசாயிகளைத்தான் குறி வைத்துத் தாக்குகின்றன. “மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி தனது மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது. வாங்குபவரும் வெட்டுக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அடிமாட்டுக்கு விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம்” என்கிறது மோடி அரசு. மேலும் மாட்டை வாங்குபவர், “அந்த மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரிடமும் விற்க மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். மீறினால், அதுவும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

வேலையிழந்த மாட்டு வியாபாரிகள்

இந்தப் புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கூறியிருக்கும் காரணங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரகத்தைச் சேர்ந்தவை. மாட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாடுகள் அடி மாடுகளாக விற்பனை செய்யப்படுவதால், விவசாயத்துக்கு மாடு இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, ஆரோக்கியமற்ற மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதால், அந்த இறைச்சியைச் சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதனால்தான் மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டுக்கு விற்பதையும் வாங்குவதையும் தடை செய்திருப்பதாகக் கூறுகிறது மோடி அரசு.

மாடு இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது அண்டப்புளுகு. விவசாயம் சார்ந்த பணிகளில் மாடுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே உண்மை. மாட்டின் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதால், அது பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகாததாகிவிட்டது. ஏரில் பூட்டுவது, நீர் இறைப்பது, வண்டி இழுப்பது போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45% அளவுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று அது வெறும் 5% ஆகக் குறைந்து விட்டது.

விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்த அரசு. பாசனப் பராமரிப்பை அரசு புறக்கணிப்பது, வங்கிக் கடன் வழங்க மறுப்பது, உள்ளீடு பொருட்களின் கொள்ளை விலை, விளைபொருளுக்கு நியாயவிலை மறுப்பு போன்ற பல காரணங்களால்தான் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன.

விவசாயத்தின் அழிவையும் மீறிக் கிராமப்புற மக்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருப்பவை கால்நடைகள்தான். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் 1000 பேரிடம் 1586 மாடுகளும், ஏழை விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 1518 மாடுகளும், நடுத்தர விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 2575 மாடுகளும் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால், நாட்டில் இருக்கும் 70% கால்நடைகள், 67% ஏழை விவசாயிகளிடம் உள்ளன.

பயன்படாத மாட்டைப் பராமரிக்க முடியுமா?

ஒரு மாட்டின் ஆயுட்காலம் 15 முதல் அதிக பட்சம் 25 ஆண்டுகள். நாட்டுப் பசுமாடுகளானால் சராசரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வெளிநாட்டுப் பசுக்களானால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவை பால் தருவதில்லை. எனவே பால் வற்றிப்போன மாடுகளை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டுமென்றால், விவசாயி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டும். ஆண்டுக்கு சுமார் 40,000 ரூபாய்.

விற்க முடியாமல் கைவிடப்பட்ட மாடுகள் தெருவோரக் கழிவுகளைத் தின்னும் அவலம். (கோப்புப் படம்)

இவையே காளைக்கன்றுகளாக இருந்தால், அவற்றை உழவுக்கும் பயன்படுத்த முடியாத இந்தக் காலத்தில், அந்தக் காளைகளை கடைசி காலம் வரை விவசாயி பராமரிக்க வேண்டும். ஒரு பசுமாடு ஈன்று தரும் சுமார் 8 கன்றுகளில் 4 காளைக்கன்றுகளாக இருக்குமாகையால், அவற்றை எந்த விவசாயியாவது பராமரிக்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். ஆரோக்கியமான மாடுகளை விற்கக் கூடாது என்ற தடையின் மூலம் பயன்படாத இந்தக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை விவசாயிகளின் மீது சுமத்தியிருக்கிறது மோடி அரசு.

உழைத்து ஓய்ந்து போன முதியவர்களையும் உழைப்பதற்குத் தயாராக இருந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களையுமே பராமரிக்க முடியாத நாட்டில், பால் தராத பசுவை பத்து ஆண்டுகளுக்கும், காளை மாட்டை இருபது ஆண்டுகளுக்கும் பராமரிக்க வேண்டும் என்று கூறுவது விவசாயிகளின் குடும்பத்துக்கே விதிக்கப்படும் ஆயுள் தண்டனையல்லவா?

“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாபாரி விற்பனைக்கான ஆதாரத்தை வருவாய்த்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர், மாட்டுச்சந்தையைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்திருக்கும் கமிட்டி போன்ற 5 இடங்களில் தரவேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயி ஒரு மாட்டை விற்பதற்கு இத்தனை இடங்களிலும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுத் தடை அமலில் இருந்தபோது போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் காட்டிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகள் பன்மடங்கு கொடியவை. இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்பதும் விற்பதும் வாங்குவதும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதைப் போன்ற ஒரு கிரிமினல் நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுவிடும்.

அதிகாரிகள் என்ற அட்டைகள் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இரத்தக் காட்டேறிகள் “பசுப் பாதுகாவலர்கள்” என்ற பெயரில் எல்லா ஊர்களிலும் முளைப்பார்கள். தங்களுக்கு மாமூல் தரவில்லை என்றால், போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டி, விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிப்பார்கள். தற்போது முஸ்லிம்களுக்கு நடந்து வருவது, நாளை இந்து விவசாயிகளுக்கும் நடக்கும். அந்த விதத்தில், இந்த அறிவிக்கையை மோடி அரசின் மிக முக்கியமான “மதச்சார்பற்ற நடவடிக்கை”யாக நாம் கருதலாம்.

முஸ்லிம்கள், தலித்துகளை அழிவுக்குத் தள்ளுவதே நோக்கம்!

இந்த புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறும் இரண்டாவது காரணம், “மக்களுக்குத் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவது” என்பதாகும். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக் என்ற முதியவரை வெட்டிக் கொன்ற கட்சி, “அக்லக்கைப் போன்றவர்கள் கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டுவிடக் கூடாதே” என்று கவலைப்படுகிறதாம்! நம்புகிறீர்களா?

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலையிழந்து நிற்கும் உ.பி. மாநில இறைச்சிக்கூடத் தொழிலாளர்கள்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது யாரும் அறியாத இரகசியமல்ல. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டுக்கறி தடை வந்த பிறகு, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குரேஷி என்ற சாதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் தலித் மக்களுமாக பல இலட்சம் பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு நாடு முழவதும் அம்மக்களை ஆளாக்கி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற வக்கிரமான நோக்கம் மோடி அரசின் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது.

இப்போது, எதிர்ப்பு அதிகரித்தவுடன்,  “இறைச்சித் தொழிலைக் குற்றப்படுத்துவது எமது நோக்கமல்ல, மாட்டுச் சந்தையில்தான் அடிமாடுகளை விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறோம். அதை இறைச்சிக்கூடத்தினர் விவசாயிகளிடம் அல்லது பண்ணைகளிடம் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்” என்று சமாளிக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்.

சந்தைகள் எனப்படுபவை, கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளையும் விளை பொருட்களையும் விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக உருவாக்கப்பட்டவை. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும், ஓரளவேனும் நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பையும் சந்தைகள்தான் வழங்குகின்றன. இந்த வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் விவசாயிகள், மாடு வாங்குபவர்கள், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக்கூடத்தினர் உள்ளிட்ட அனைவருடைய தொழில் செய்யும் உரிமையையும் பறிக்கிறது மோடி அரசு.

மாட்டுக்கறி தடைக்கெதிராகப் போராடும் புமாஇமு அமைப்புத் தோழர்கள்

ஒருவேளை, இறைச்சிக் கூடத்தினர் விவசாயியிடம் நேரில் சென்று கால்நடையை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தாலும், அவர்களை மறித்துத் தாக்கவும் மாமூல் வசூலிக்கவும் அதிகார வர்க்கமும் இந்து அமைப்புகளின் காலிகளும் கூட்டணி அமைத்துத் தயாராக இருப்பர். அந்த வகையில் இந்துத்துவ கிரமினல்களின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

அதேபோல, “சந்தையில் மாடு வாங்குபவர், அந்த மாட்டை வேறு மாநிலத்துக்கு விற்க முடியாது என்றும், அப்படி விற்க வேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் புதிய விதி கூறுகிறது. மாட்டுக்கறிக்கு தடை இல்லாத கேரளம், வடகிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்குத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் வணிகம் செய்வதற்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 301, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் உரிமையை நேரடியாகவே பறிக்கிறது.

சந்தை – சுத்தம் – தரம் – புனிதம்!

“சந்தை” என்ற சொல்லுக்கு ஒரு கிரிமினல்தனமான விளக்கத்தை இந்த அறிவிக்கை தருகிறது. இதன்படி சந்தை என்பது வழக்கமான மாட்டுச் சந்தை மட்டுமல்ல, “இறைச்சிக் கூடத்தின் வாயிலில் கால்நடைகள் நிறுத்தப்படும் இடம் (lairage), இறைச்சிக்கூடங்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் (vehicle stand), கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் (animal pounds)” உள்ளிட்ட அனைத்தையும் “சந்தை” என்ற சொல்லுக்கான விளக்கமாகக் கூறுகிறது இந்த விதி. இந்த விளக்கத்தின்படி மாட்டிறைச்சிக் கூடமே சந்தை என்ற சொல்லுக்குள் அடக்கப்படுவதால், எல்லா மாட்டிறைச்சிக் கூடங்களையும் எந்த நேரத்திலும் சட்ட விரோதமானவையாக்க முடியும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.

அதேபோல, “தரமான இறைச்சி” என்பதும் மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. “தரப்படுத்துதல்” என்ற பெயரில் உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சிறு உணவகங்கள், தெருவோர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு FSSAI  (Food Safety and Standards Authority of India – உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) என்ற மைய அதிகாரத்தின் மூலம் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளும் அடக்கம்.

தெருவோரக் கடைகளுக்கு உணவுத்தரம் பற்றி “சொல்லிக்கொடுக்கும்” பொறுப்பை கோகோ கோலா நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் மோடி. உணவுச்சந்தையை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மோடியும் சந்திக்கும் புள்ளி இது. தரமற்ற மாட்டிறைச்சிக் கூடங்களைப் “போட்டுக்கொடுக்கும்” பொறுப்பை ஜல்லிக்கட்டு புகழ் பீட்டா (PETA) ஏற்றிருக்கிறது. 30,000 சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்கள் FSSAI இன் உரிமம் இல்லாமல் நாட்டில் இயங்குவதாக பீட்டா அறிவித்திருக்கிறது. இறைச்சிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்கபரிவாரமும் பீட்டாவும் இணைகின்ற புள்ளி இது.

“புனிதமற்றது” என்று பார்ப்பனியம் கருதுகின்ற மாட்டிறைச்சி, மதச்சார்பற்ற மொழியில் “தரமற்றது” என்று முதலில் முத்திரை குத்தப்படுகிறது. பிறகு மோடி அதனைச் “சட்டவிரோதமானது” ஆக்குகிறார். தரத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கான அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதன் மூலம், “பார்ப்பனியச் சுத்தம் – பன்னாட்டுத் தரம்” என்ற இரண்டையும் சமூகத்தின் மீது திணிக்கிறது மோடியின் அரசு.

சுத்தம், தரம் என்ற பெயரிலான தாக்குதலை எல்லா இறைச்சிக்கடைகள் மீதும் நடத்த முடியும். “ராமேசுவரம் போன்ற புனித நகரங்களில் இறைச்சிக் கடைகளே இருக்கக் கூடாது”, “கோயில்களுக்கு அருகே இறைச்சிக்கடை கூடாது” என்பன இந்து முன்னணியின் கோரிக்கைகள். “இந்துப் பண்டிகை, ஜெயின் பண்டிகை நாட்களில் இறைச்சிக் கடைகளை மூடவேண்டும்” என்பது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் நகரங்கள் இந்துப் பகுதி – முஸ்லிம் பகுதி என்று பிரிக்கப்பட்டு விட்டன. இந்துப் பகுதியில் அசைவ உணவுக்கடைகளே கிடையாது. அசைவ உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் முஸ்லிம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அங்கே அங்கீகரிக்கப்பட்ட பொது ஒழுங்காக நிலைநாட்டப்பட்டு விட்டது.

இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும், மத நம்பிக்கைக்காகப் பலியிடுவதும் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பிராணிகளைத் துன்புறுத்தும் குற்றங்கள் ஆகாது. தற்போது மிருகவதை சட்டத்தின் கீழ் சந்தையில் மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்திருப்பதன் மூலம், இறைச்சித்தொழிலையே “விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றமாக” காட்டுகிறது மோடி அரசு. இது சட்டப்படி செல்லத்தக்கதே என்ற நிலைமை ஏற்படுமானால், இதே அடிப்படையில் நாளை ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஒதுக்குவதும், அவற்றின் மீது கண்காணிப்பை ஏவுவதும், தேவைப்படும்போதெல்லாம் குற்றப்படுத்துவதும் சாத்தியமாகிவிடும்.

மாநில அதிகாரத்தைப் பறிக்கும் குறுக்குவழி!

அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனைத் தடுக்கவோ, முறைப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல கால்நடைச் சந்தைகளையோ, காய்கனிச் சந்தைகளையோ முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுடையது. இதில் மைய அரசு தலையிட இயலாது.

எனினும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலத்தின் உரிமைகளையும் கள்ளத்தனமான முறையில் பறிப்பதையே தனது வழிமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தூசுக்குச் சமமாகக் கருதித் திணிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு, மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக நிதிமசோதாவாக திணிக்கப்படும் ஆதார் சட்டம் ஆகியவற்றைப் போன்றே, குறுக்கு வழியில் “விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தின்” கீழ்தான் (Prevention of cruelty to animals act, 1960) “மாட்டுச்சந்தைகளை நெறிப்படுத்தும்” இந்த விதிகளையும் அறிவித்திருக்கிறது மோடி அரசு. மிருகவதையைத் தடுப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் வழங்குவதால், இந்த சந்து வழியாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள்ளே நுழைந்திருக்கிறது மோடி அரசு.

“கொம்பு சீவக்கூடாது, சாயம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது” – என்று பல நிபந்தனைகளைப் போடுகின்றன மோடியின் புதிய விதிகள்.

“இந்த விதிகளை மீறியதாக அதிகாரிகள் கருதினால், மாட்டைப் பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்புவார்கள். வழக்கு முடியும் வரை மாட்டின் பராமரிப்புக்கான செலவுக்கு மாட்டின் உடைமையாளர்கள்தான் பொறுப்பு. மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டாலும், மாட்டின் உரிமையாளர் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது”.

“மேற்கூறிய விதிகளுக்கு முரணாக, வாகனங்களில் மாடுகளை அனுப்பினால், அந்த வண்டியில் உள்ள மாடுகளை விற்றவர்கள், வாங்குபவர்கள், வாடகை வண்டியின் உரிமையாளர், இவற்றில் சம்மந்தப்பட்ட தரகர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கு முடியும் வரை மேற்படி மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும். வண்டியும் மாடுகளும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும். மேற்படி விதிகளில் எது ஒன்றை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைகள் அல்லது விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.

“நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும்” என்ற தனது நோக்கத்தை பல மாநிலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனால்தான் இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. “இந்த விதிகள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு முரணானவை” என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள். “இந்த விதிகளுக்கு கட்டுப்படமாட்டோம்” என்று கேரள, புதுச்சேரி, கர்நாடக, மே.வங்க முதல்வர்கள் அறிவித்திருக்கிறார்கள். மோடி அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் சட்டம்தான் அடிக்கொள்ளி!

ஆனால், அரசியல் சட்டத்தின் துணை கொண்டே இந்த விதிகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணுவதும், அதற்கு நீதிமன்றத்தை நம்புவதும் அறிவுக்குகந்த நடவடிக்கைகள் அல்ல. இந்திய அரசியல் சட்டமென்பது இந்துத்துவ பாசிசத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். “கால்நடை பராமரிப்பு அறிவியல் வழியில் அமைய வேண்டும்” என்றும், “பசு மற்றும் அதன் கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்படவேண்டும்” என்றும் இரு முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் கூறுகின்ற அரசமைப்பின் உறுப்பு 48 தான், நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டங்களுக்கான அடிக்கொள்ளி.

பார்ப்பன மத நம்பிக்கையான “பசுவதைத் தடை”யை, “கால்நடை செல்வத்தைப் பேணுதல்” என்ற மதச்சார்பற்ற மொழியில் திணித்திருக்கின்ற இந்தக் கயமையை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே பல உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழிகாட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் பசுவதை தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (குரேஷி) வழக்கில், “பயன்படாத மாடுகளை வெட்டத் தடைவிதிக்கவியலாது” என்று 1958-இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 2005-இல் இன்னொரு (மிர்சாபூர்) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. “பயன்தராத மாடு என ஒன்று கிடையாது” என்றும், “சாணி, மூத்திரத்தை விற்றே விவசாயி கணிசமாகச் சம்பாதிக்கலாம்” என்றும் அரியதொரு கண்டுபிடிப்பை அந்த தீர்ப்பு வெளியிட்டது.  இந்த அரசியல் சாசன அமர்வின் அறிவுக்கும், ராஜஸ்தானின் மயில் நீதிபதியுடைய அறிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அந்தத் தீர்ப்பைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். இது குறித்த கட்டுரைகளை முந்தைய புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமைகள் அடிப்படையற்றவை. சட்டவிரோதமாகவும் மரபுகளை மீறியும் பண மதிப்பழிப்பை மக்கள் மீது ஏவினார் மோடி. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமையும் பறிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை. “ஆதார் கட்டாயமில்லை” என்று சொல்லிக்கொண்டே அதனை எல்லா முனைகளிலிருந்தும் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தெரிந்தும் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையையும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் உரிமையையும் துச்சமாக மதித்து அடாவடியாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் “சிங்கத்தோடு விளையாடுகிறீர்களா” என்று தனது மேட்டிமைத்தனத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியது.

தமிழக மக்களின் எழுச்சிதான் அந்த ஆணவத்தை வீழ்த்தியது. பார்ப்பன பாசிசம் என்பது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்ற வெறும் பண்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது, நாட்டு நலனுக்கு எதிரானது, மக்களின் ஒற்றுமக்கு எதிரானது. இதை மக்கள் சொந்த முறையில் புரிந்து கொள்ளத்தக்க வாய்ப்பை இந்த அறிவிக்கையின் வாயிலாக வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இது ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று.

-மருதையன்

புதிய ஜனநாயகம், ஜூன் 2017

**********

பெட்டிச் செய்தி : கௌரி மௌலேகி – யார்?

“நாங்களாக இந்த அறிவிக்கையை வெளியிடவில்லை. கௌரி மௌலேகி என்ற பெண்மணி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையின்படிதான் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறது மோடி அரசு. இந்த நாடகம் எப்படி அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

கௌரி மௌலேகி

2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் கௌரி மௌலேகி ஒரு மனு தாக்கல் செய்தார். “நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கதிமாயி திருவிழாவில் பலியிடப்படுவதற்கு இலட்சக்கணக்கான எருமைகள் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்படுவதால், அதனைத் தடுக்க உத்தரவிடவேண்டும்” என்பது மனு.

இதனை எப்படித் தடுப்பது என்று ஆலோசனை கூறுமாறு “சஷஸ்திர சீமா பால்” என்கிற பெயரிலான நேபாள் எல்லையில் பணியாற்றுகின்ற ஆயுத போலீசு படைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன் இயக்குநரான பன்ஷிதர் ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, “நேபாளத்துக்கு எருமை கடத்துவதைத் தடுப்பது எப்படி” என்பதோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், “இந்திய மாட்டுச் சந்தைகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவது, இறைச்சிக்காக விற்கப்படுவது ஆகியவற்றைத் தடுப்பதற்கும்” தனது பரிந்துரைகளை அளித்தது. அந்தப் பரிந்துரையைத்தான் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை என திரிக்கிறது மோடி அரசு. மேற்படி பரிந்துரையை வழங்கியதற்காக, மேனகா காந்தியின் “பீப்பிள் பார் அனிமல்ஸ்” என்ற என்.ஜி.ஓ., சர்மாவுக்கு விருது அளித்து கவுரவித்தது.

இதற்கிடையில் கதிமாயி கோயிலில் பலியிடுதலைத் தடை செய்து விட்டதாக அந்தக் கோயில் நிர்வாகமே 2015-இல் அறிவித்துவிட்டதால், எருமை கடத்தல் பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டு கடத்தலுக்குச் சட்டமில்லை. ஆனால், நேபாளத்தைக் காட்டி உள்நாட்டு மாட்டுச்சந்தை முடக்கப்பட்டுவிட்டது.

கௌரி மௌலேகி, தனது இணையப் பக்கத்தில் “கோரட்சக்”குகளைப் புகழ்கிறார். “மாட்டுக்கறி பணம் பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுவதாக” ஒரு புதுப்புரளியைக் கிளப்பி, மோடி அரசின் அறிவிக்கையை எதிர்ப்பவர்களை மிரட்டுகிறார். “பயனற்ற மாட்டுக்கு அதை வளர்ப்பவன்தான் பொறுப்பேற்க வேண்டும். முடியாவிட்டால் தொழிலை மாற்றிக்கொண்டு போகட்டும்” என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார்.

கௌரி மௌலேகி யார் தெரியுமா? இவர் மேனகா காந்தி நடத்திவரும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற என்.ஜி.ஓ.-வின் டிரஸ்டி. அதே நேரத்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கு ஆலோசகர் என்ற அரசு பதவியிலும் இருப்பவர்.

இதைத்தான் “யாரோ ஒரு பெண் போட்ட வழக்கு” என்கிறார்கள் பாரதிய ஜனதா யோக்கியர்கள். பார்ப்பன பாசிசத்தின் “வலைப்பின்னல்” இந்த அரசமைப்பு முழுவதும் ஊடும் பாவுமாக எப்படிப் பரவியிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.