privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !

ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !

-

ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதில் இந்த உலகத்தில் யாராலும் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவை விஞ்ச முடியாது என்கிற அதிமுக அடிமைகளின் பெருமையில் மண் விழுந்துள்ளது. சென்னை வெள்ளத்தின் போது வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உதவிப் பொருட்களின் மீது தனது மூஞ்சியை ஒட்டி பெருந்தன்மை என்னவென்று இந்தியாவுக்கே பாடமெடுத்தார் ஜெயா. ஆனால், அவரது ஸ்டிக்கர் சாதனையை மோடி தற்போது விஞ்சியுள்ளார் – வேறு ஒரு நாட்டின் மீதே தனது ஸ்டிக்கரை ஒட்டி உலகத்தையே மலைக்க வைத்துள்ளார்.

பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆனதைத் தொடர்ந்து மோடியின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டிய கௌரவப் பிரச்சினையில் மோடி அரசு உள்ளது. இதற்காக ஒவ்வொரு அமைச்சகமும் தாம் செய்த சாதனைகளை பூதக் கண்ணாடி மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சாதனைகளை வலைவீசித் தேடி சிலவற்றை ஒப்பேற்றியுள்ளது.

அடுத்த நாட்டு எல்லையை தனது எல்லையாக காட்டும் மோசடி அயோக்கியத்தனம்

அதாவது ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தான் இந்தியா எல்லைக் கோடு நெடுக ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டது என்பது தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனைகளில் ஒன்று. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, “இதோ ஒளிவிளக்குகளால் ஒளிரும் இந்திய – பாகிஸ்தான் எல்லையைப் பாரீர்” எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் அறிக்கை வந்ததும் காத்திருந்தாற் போல் காவிசாரி பிரச்சார பீரங்கித் தளங்கள் இப்புகைப்படத்தை வெளியிட்டு பீற்றிக் கொள்ளத் துவங்கின.

இதற்கிடையே புகைப்படத்தின் அழகில் மனம் பறிகொடுத்த ஆல்ட்நியூஸ் இணையப் பத்திரிகை அது குறித்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் குட்டு வெளிப்பட்டுள்ளது. உண்மையில் மேற்படி புகைப்படம் ஸ்பெயின் மொராக்கோ நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கோடு நெடுக அமைக்கப்பட்டுள்ள ஒளிவிளக்குகளின் படமாகும். ஸ்பெயினையும், மொராக்கோவையும் மத்திய தரைக் கடல் பிரிக்கிறது என்றாலும் வடக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதிக்கு அருகே மொராக்கோவிற்கு பக்கத்தில் ஸ்பெயின் இந்த எல்லயை உருவாக்கி பராமரிக்கிறது. அங்கிருந்து அகதிகள் பிரச்சினை உள்ளிட்டு இதர பிரச்சினைகளுக்காக இந்த எல்லை பராமரிக்கப்படுகிறிது.

மட்டுமின்றி இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஒளிவிளக்குகள் அமைக்கும் பணி 2003 -ம் ஆண்டே துவங்கி 2014 -ம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ முடிவுறும் நிலையில் இருந்ததும் பழைய ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சாதனைகளைத்’ தேடி ஏதும் கிடைக்காத அலுப்பில் முந்தைய அரசுகள் பெற்ற குழந்தைக்கு தனது இனீஷியலைப் போட்டுக் கொண்டுள்ளார் மோடி.

இந்துத்துவ கும்பல் வழக்கமாக முகநூல் மற்றும் வாட்சப்பில் இது போல் போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதும், அமெரிக்காவை அகமதாபாத்தில் படைப்பதும் சுவிட்சர்லாந்தை சூரத்தில் பிரசவிப்பதும் சாதாரணமானது தான். சம்பந்தப்பட்ட படமும் அதன் செய்தியும் பொய்யானது என்பது கண்டுபிடிக்கப்படுவதற்குள் தாம் விரும்பும் செய்தி பலரிடமும் சென்று சேர்ந்து விடும் என்கிற அசட்டு நம்பிக்கை. வதந்திகளைத் தின்றே அரசியலில் வளர்ந்து அதிகாரத்தைப் பிடித்தவர்கள் என்பதால், ஆட்சியையும் வதந்திகளின் மூலமாகவே நடத்திச் செல்கின்றனர்.

வெட்கம் மானம் சூடு சொரணை என அனைத்தையும் உதிர்த்தவர்கள் என்பதால் எப்பேர்பட்ட பொய்யையும் சொல்லத் தயங்குவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணங்கள், ஹெச்.ராஜாவும், குருமூர்த்தியும்.

தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் இசுலாமியர்களை விமர்சிக்காதது ஏன் என்று கூகிளின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கேட்பது போன்ற செய்திப் படத்தை ஹெச்.ராஜா வெளியிட்டார். இது தவறான படம் என்று பலரும் சுட்டிக்காட்டி கழுவிக் கழுவி ஊற்றிய பின்னும் அந்தப் படத்தை இன்னமும் விலக்காமலே வைத்துள்ளார்.

ஹெச்.ராஜாவாவது நாலாந்தர நியூசென்ஸ் கேசு என்று புறந்தள்ளி விடலாம். இந்துத்துவ கும்பலின் ஒர்ர்…ரே அறிவாளி என்று அவாள்கள் உச்சி முகர்ந்து பெருமைப் பட்டுக் கொண்டாடும் எஸ்.குருமூர்த்தி, சமீபத்தில் தான் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டேன் என்று ஏ.ஆர்.ரகுமான் சொல்வது போல் ஒரு செய்திப் படத்தை வெளியிட்டிருந்தார். இதுவும் பச்சைப் பொய். பலர் சுட்டிக்காட்டிய பின்னும் விலக்காமல் வைத்துள்ளார்.

இந்துத்துவமே பொய்களையும் அவதூறுகளையும் அடிப்படையாக கொண்ட சித்தாந்தம் என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் தேவையா என்ன?

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க