privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாபொன்னாரிடம் சரணடைந்த பொன்னம்பலம் !

பொன்னாரிடம் சரணடைந்த பொன்னம்பலம் !

-

வில்லன் + காமடி நடிகர் பொன்னம்பலம் அ.தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கிறார். இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்கிறீர்களா? அதை பொன்னம்பலத்தின் வாயாலேயே கேளுங்கள்!

விகடனுக்கு அவர் அளித்த நேர்காணலின் தலைப்பு என்ன தெரியுமா? “‘தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்… ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்’! – கலகல பொன்னம்பலம்”

லேடி கட்சியிலிருந்து மோடி கட்சிக்கு சேர்ந்த காரணம்? காரணம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிறார் பொன்னம்பலம். ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் சேர்ந்தால் பாஜக பக்கம் ஏன் போகிறேன் என்பவருக்கு இரு அணிகளையும் பிரித்து பொம்மலாட்டம் நடத்துவது பாஜக என்பது தெரியாதா என்ன? அதனால்தான் காரணம் ஒன்றுமில்லை என்று முன்வரியில் ஒத்துக் கொள்கிறார்.

தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்… ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்

தாமரைக் கட்சியில் சேர்ந்தவுடன் காமடி வில்லனுக்கு வாழ்த்துச் சொன்ன முதல் நபர் யார் பொன்னம்பலத்தின் மனைவி தேவியாம். தேவிக்கு அரசியலே தெரியாது என்று அடுத்த வரியில் சிரிக்காமல் சொல்கிறார். பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தார்களாம். வாழ்த்து தெரிவித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் சேருவார்களோ என்னமோ?

அ.தி.மு.க-வை விமரிசிப்பீர்களா என்ற கேள்விக்கு மாட்டேன் என்கிறார். அம்மா கொடுத்த மரியாதை இப்போது இல்லை என வருத்தப்படும் பொன்னம்பலம் நான் என்ன வெளிநாட்டுக் கட்சியிலா சேர்ந்தேன் என்று கட்சி மாற்றத்தை நியாயப்படுத்துகிறார். அம்மா இவருக்கு கொடுத்த மரியாதை என்னவாக இருக்கும்? ஏதோ சினிமா முகம் என்பதால் நட்சத்திரப் பேச்சாளராக கூட்டத்திற்கு சில ஆயிரங்கள் ஊதியம் கிடைத்திருக்கும். இப்போது கட்சியே கலகலத்துப் போயிருப்பதால் நிர்மால பெரியசாமி போன்ற வண்ண்க்கம் தமிழகம்ம்ம் முதலைகளே பிழைப்பதற்கு வழியில்லாமல் இருக்கும் போது ஆஜானபாகுவான பொன்னம்பலத்திற்கு யார் படியளப்பது?

பா.ஜ.க-விலிருந்து அழைப்பு வந்ததா என்றால் இல்லை என்பவர், அன்று கூட காலையில் தினகரனைச் சந்திக்கலாம் என்று யோசித்து பின்னர் மனம் மாறி பொன்னார் வீட்டுக்கு வண்டியை திருப்பினேன் என்கிறார். இடையில் தினகரனுக்கு நேரம் சரியில்லை என்று பொன்னம்பலத்தின் பெரிய மூளைக்கு அப்டேட் செய்த காவித் தரகர் யாரென்று தெரியவில்லை.

கூவத்தூரில் பணம் கொடுத்தார்களா என்ற கேள்விக்கு தன்னால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை என்று வெட்கப்படும் பொன்னம்பலம் உண்மையில் தான் ஒரு எம்.எல்.ஏவாக இல்லையே என்று ரொம்ப வருத்தப் பட்டிருப்பார்.

தமிழக அரசியலில் பா.ஜ.க தலையீடு ஒன்றுமில்லை என அடித்துச் சொல்லுபவர், இவர்கள் (ஓபிஎஸ், ஏபிஎஸ்) ஒழுங்காக இருந்தால் பிரச்சினையே இல்லை என்று அடுத்த வரியில் தலையீட்டை ஒத்துக் கொள்கிறார். ஜெயா மரணம் குறித்து விசாரிக்க நான் என்ன சி.பி.சி.ஐ.டியா? என்று கேட்பவர் ஜெயா உயிரோடு சிகிச்சைபெறும் போது இரட்டை இலையை காண்பித்திருந்தால் பிரச்சனை இல்லை என்கிறார்.

1963-ம் ஆண்டில் பிறந்த பொன்னம்பலம் சினிமாவில் சண்டைக் காட்சி வீரராகவும் பின்னர் காமடியனாகவும் மாறினார். 2011-ம் ஆண்டில் இவர் மீது ஒரு மோசடி வழக்கும் போடப்பட்டிருக்கிறது. பிறகு மார்கெட் போன தமிழ் நடிகர்கள் போயஸ் தோட்டம் சென்று படிக்காசு பெற்று பிரச்சாரம் செய்து சம்பாதிக்கும் தொழிலே மேற்கொண்டார். இப்போது அ.தி.மு.கவில் பொறுக்கித் தின்ன வழியில்லை என்று பா.ஜ.க-வில் ஒட்டிக் கொண்டார்.

சரி இப்பேற்பட்ட கொள்கைக் கொன்றையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் பா.ஜ.க-விற்கு என்ன? எதைத் தின்றால் பித்தம் தெளியும், தமிழகத்தில் சில வார்டு கவுன்சிலர்களையாவது உருவாக்கியே தீர வேண்டும் என்றால் சந்தையிழந்த நடிகர்களையும் சேர்க்க வேண்டும் என்று அலையும் பா.ஜ.க-விற்கு பொன்னம்பலம் போன்ற பிழைப்புவாதிகள் அவசியம் தேவை.

ஏற்கனவே சில பல சினிமாக்காரர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கும் நிலையில் கங்கை அமரன் போன்ற தொழில்ரீதியான காரியவாதிகள் பா.ஜ.கவிற்கு ஆள்பிடிக்கும் வேலையை தீவிரமாக செய்வார்கள்.

சென்னைக்கு தெற்கே இருக்கும் தமிழகத்தின் குண்டுமணி அளவைக் கூட அறியாத ரஜினியைக் கூட வடக்கே இருந்து வந்த மோடி வீடு தேடி பார்க்கும் போது,தெற்கே இருக்கும் பொன்னார் போன்ற காவிக்கட்சியின் கருப்புத் தரகர்கள் வெள்ளித்திரையின் ஓய்வு பெற்ற நட்சத்திரங்களை தேடி ஓடுவார்கள் என்பதில் என்ன அதிசயம்?