privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்விவசாய நெருக்கடிக்குத் தீர்வு - உழவனின் அதிகாரமே !

விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே !

-

டன் தள்ளுபடி கோரித் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் ம.பி. மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆட்சியாளர்களிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்ற வழமையான போராட்டங்களுக்குப் பதிலாக, விவசாய விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்புவதை நிறுத்தி, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய போராட்டதைக் கையிலெடுத்துள்ளனர், மகாராஷ்டிர மாநில விவசாயிகள். துப்பாக்கிச் சூட்டில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்ட பிறகும்கூட, ம.பி. மாநில விவசாயிகள் போராட்டம் தணிந்துவிடவில்லை. சாலைத் தடையரண்களை ஏற்படுத்திப் போக்குவரத்தை முடக்குவது, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது என அம்மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. ஓரிரு மாநிலங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் வெடித்துவிடுமோ என மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கதிகலங்கிப்போய் நிற்கின்றனர்.

சாலையில் தடுப்புக்களை ஏற்படுத்திப் போராடும் ம.பி விவசாயிகள்

கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி ஏப்பம் விட்ட கடன்களையெல்லாம் வாராக் கடனாக எழுதித் தள்ளுபடி செய்வதற்குக் கிஞ்சித்தும் தயங்காத இந்து மதவெறிக் கும்பல், கடன் தள்ளுபடிக் கோரிக்கைக்காகப் போராடும் விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் நாட்டில் பணவீக்கம் – அதாவது விலைவாசி உயர்ந்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டி, விவசாயிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, அவமதிக்கிறது. மோடிக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆட்சி நடத்திவரும் அ.தி.மு.க. கும்பலோ, விவசாயிகள் அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும், சொசைட்டிகளிலும் மார்ச் 31, 2016 முடிய வாங்கியிருக்கும் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது, தமிழக அரசு. இந்த ஆணை குளறுபடிகள் நிறைந்திருப்பதாகவும் விவசாயிகளிடையே பாகுபாடு காட்டுகிறதென்றும் கூறித் தொடரப்பட்ட வழக்கில், ”வறட்சியும், விவசாயிகளின் துர்மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

விளைபொருள்களை சாலையில் கொட்டி மகாராஷ்டிர விவசாயிகளின் போராட்டம்

”உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசின் கொள்கை முடிவில் தலையிடுகிறது” என வாதிட்டு, உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது, தமிழக அரசு. தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வைத் திணித்த நீதிமன்ற உத்தரவை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் கொள்கையைக் கைவிட முடியாது எனக் கூறி, மல்லுக்கட்டுகிறது.

அ.தி.மு.க. அரசு தமிழக விவசாயிகளுக்கு இழைத்துவரும் துரோகம் இதோடு நின்றுவிடவில்லை. ”தமிழகத்தில் வெறும் 80 விவசாயிகள்தான் அகால மரணமடைந்திருப்பதாகவும், அவர்களும்கூட வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் இறந்து போனதாக” உச்ச நீதிமன்றத்தில் பச்சையாகப் புளுகியிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதியில் நடந்துவரும் போராட்டத்தை உதாசீனப்படுத்திவிட்டு, விவசாய நிலங்களைத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகை அளிக்கும் நடைமுறைகளை மிக இரகசியமாகச் செய்துவருகிறது.

தஞ்சை-திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது எரிவாயுக் குழாய்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிப்பதற்காக, நூற்றுக்கணக்கான போலீசை இறக்கி அக்கிராமத்தை முற்றுகையிட்டு, அக்கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுச் சிறையில் அடைத்து, ஐந்தாம் படையாகச் செயல்பட்டிருக்கிறது.

”காவேரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” எனத் தமிழக விவசாயிகளும் மக்களும் கோரி வரும் வேளையில், அந்நெற்களஞ்சியத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றுவதற்கு மோடி அரசும் அ.தி.மு.க. அரசும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றன.

உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான். எனினும், போர்க்குணமிக்க போராட்டங்களும், கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளும் மட்டுமே தீர்வாக அமைந்துவிடாது.

சாண் ஏறினால் முழம் வழுக்கும் கதையாக, இடுபொருட்களின் விலை உயர்வும், விவசாய விளை பொருட்களின் விலை வீழ்ச்சியும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, விவசாயிகளைத் திரும்பத் திரும்பக் கடன் வலையில் சிக்க வைத்து, அவர்களைப் போண்டியாக்கிவருகின்றன. இவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், வர்த்தகச் சூதாடிகளின் கைகளில் இருந்துவரும்வரை, உழவர்களின் கடன் பிரச்சினை உள்ளிட்ட நெருக்கடிகள் தீர்ந்துவிடாது.

இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, உழவர்கள் அவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாற வேண்டும். உழவர்களின் போராட்டங்கள் இந்த நோக்கத்தை மையப்படுத்தி நடைபெறுவதோடு, இதற்கேற்ப நாடெங்கும் உழவர்களின் அதிகாரத்தைச் செயல்படுத்தக்கூடிய விவசாய சங்கங்களைக் கட்டியமைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இத்தகைய தலைகீழ் மாற்றம் மட்டுமே, விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக அமையும்.