privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !

சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !

-

டப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்துவரும் “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசு” ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சி குறித்த நமது மதிப்பீடை விவாதிப்பதற்கு முன்பாக, அ.தி.மு.க. அம்மா கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தமது சொந்த ஆட்சி குறித்து கொண்டிருக்கும் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.

“அம்மா இருந்தவரை அமைச்சர்கள் மற்றும் கார்டனுக்கான கமிசன் 11 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கெல்லாம் சேர்த்து டீலிங் மற்றும் காண்ட்ராக்டுகள் 30 சதவீதத்தில் முடியும். ஆனால், தற்போது அமைச்சரவை கமிசன் மட்டும் 15 சதவீதம் கேட்கிறார்கள். அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்களின் கமிசன் எல்லாம் கொடுத்தால், அது 40 சதவீதம் வரை போய்விடுகிறது. அதனால் யாரும் காண்ட்ராக்டு எடுப்பதற்கே துணிவதில்லை. எனவே, கமிசன் தொகையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பயன் பெறுவார்கள். கட்சியை நடத்த முடியும்” என்று 16.5.17 அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் நடந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது ஜூனியர் விகடன் (24.5.17, பக்.45)

நடப்பது தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சி என்பதைப் புரிந்துகொள்வதற்கு, “கமிசனைக் குறை” என்ற எம்.எல்.ஏ.க்களின் கூப்பாடே போதுமானது. இதற்கு அப்பாலும் சான்றுகள் வேண்டுமென்றாலும், அதற்கும் எந்தக் குறையுமில்லை.

தமிழகமெங்கும் தெருவிளக்குகளை மாற்றுவதில் 600 கோடி ரூபாய் அளவிற்கு கமிசன் அடித்ததாகக் கூறப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.

தமிழகம் முழுவதுமுள்ள தெருவிளக்குகளில் மெர்க்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி. பல்புகளைப் பொருத்துவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மட்டும் 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். இந்த டெண்டரில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக இந்திய ஊழல் எதிர்ப்புக் கூட்டமைப்பு வழக்குத் தொடர்ந்ததையடுத்து, இந்த டெண்டரை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழக மின்வாரியத்தில் 375 பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஒரு நியமனத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் வரை பேரம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.6 இலட்சம், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.4 இலட்சம், பிற பணிகளுக்கு ரூ.3 இலட்சம் என ரேட் நிர்ணயிக்கப்பட்டு, 60 பணியிடங்கள் விற்கப்பட்டிருப்பதாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறது, ஸ்காலர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு.

இது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் 40 கோடி ரூபாய் ஊழல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் ஊழல், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 64 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும் பல கோடி ரூபாய் ஊழல் எனத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை ஊழல் துறையாக நாறிப்போய் நிற்கிறது.

தமிழகத்தில் கார் தொழிற்சாலை தொடங்க தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்திவந்த தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டது. இந்நிறுவனம் தமிழகத்திலிருந்து தலைதெறிக்க ஓடியதற்குக் காரணம் அமைச்சர்கள் கேட்ட கமிசன்தான் எனக் கூறியிருக்கிறார், அந்நிறுவனத்தின் ஆலோசகர் கண்ணன் ராமசாமி. “கியா மோட்டார்ஸுக்கு ஒதுக்கவிருந்த 390 ஏக்கர் நிலத்தின் உண்மையான மதிப்பில் 50 சதவீதத் தொகையை இலஞ்சமாகக் கேட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அவர்.

45 இலட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்பம் விட முயன்ற கிரிமினல் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் (இடது). பணி நீட்டிப்பிற்காக முப்பது இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா.

சமூக நலத்துறையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராகப் பணியாற்றிவரும் ராஜ மீனாட்சி, தனது பணி நீட்டிப்பிற்கு அத்துறையின் அமைச்சர் சரோஜா முப்பது இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்டதோடு, இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் குமாரிடமிருந்து 45 இலட்ச ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்பம் விட முயற்சி செய்த உணவுத் துறை அமைச்சர் காமராஜின் மீது பண மோசடி குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக போலீசிற்கு உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

அம்மாவின் ஆவியாலும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ்., முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடிக்கு முன்பாக ஒட்டிக்கொண்டிருந்தபொழுது 808 கோடி ரூபாய் பெறுமான ஊழலுக்கு அச்சாரமிட்டுச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு தனியார் நிறுவனம், தனது பிரிமியம் தொகையை 437 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்துமாறு கோரித் தூண்டில் போட்டுவந்த நிலையில், சுகாதாரத் துறை செயலரின் எதிர்ப்பையும் மீறி, அந்நிறுவனத்தின் பிரிமியத் தொகையை 699 ரூபாயாக உயர்த்திக் கொடுத்திருக்கிறார், ஓ.பி.எஸ். இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 808 கோடி ரூபாய். ஓ.பி.எஸ். அடைந்த இலாபம், மோடிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

ஒரிஜினல் அம்மா ஆட்சியில், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் என்ற ஐவரணிதான் போயசு தோட்டத்தின் ஏஜெண்டுகளாக இருந்தனர். தற்பொழுது அ.தி.மு.க. அம்மா ஆட்சியில் அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் சுகாதராத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.

மருந்து, மாத்திரை வாங்குவது தொடங்கி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது வரை அனைத்திலும் கமிசன் பார்த்துவரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் (இடது) மற்றும் அவரது ஏஜெண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லெட்சுமி.

அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லெட்சுமி ஆகிய இருவரும் சுகாதாரத் துறையை முறைகேடுகளின் மூட்டையாக மாற்றி அமைத்திருக்கின்றனர். 30 சதவீத கமிசன் அடிப்படையில்தான் – அதாவது, ஒரு ரூபாய்க்கு முப்பது பைசா கமிசன் என்ற சதவீதக் கணக்கில்தான் தமிழகமெங்குமுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் வாங்குவதை விதியாகவே மாற்றியிருக்கிறது, இந்தக் கும்பல்.

மருத்துவப் பல்கலைக்கழக வட்டாரத்தில் கீதா லெட்சுமியின் பட்டப் பெயர் பட்டுப்புடவை லெட்சுமி. அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தமது ஆராய்ச்சிக் கட்டுரையைத் தேர்வுக்காகக் கொடுக்கும்போது, அதனுடன் சேர்த்து ஒரு பட்டுப்புடவையையும் தட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாம். நீட் தேர்வைக் காரணம் காட்டி, என்.ஆர்.ஐ. ஒதுக்கீடில் சேர்ந்த 169 மாணவர்களிடம் நடத்தப்பட்ட வசூல், பணி நியமனம், பதவி உயர்வு, இடம் மாறுதல் ஆகியவற்றுக்குத் தனித்தனி ரேட் எனத் துணை வேந்தர் கீதா லெட்சுமி வசூல் வேந்தராக அவதாரமெடுத்திருக்கிறார்.

இவற்றையெல்லாம்விட, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக அங்கீகாரம் அளிப்பதுதான் விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமி கூட்டணிக்கு இலஞ்சத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மூன்று மருத்துவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துபோகக் காரணமாக இருந்த எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்த பெருமைக்குரியவர்தான் கீதா லெட்சுமி.

மர்மமான முறையில் இறந்துபோன எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் (இடமிருந்து) மோனிஷா, பிரியங்கா, சரண்யா. (கோப்புப் படம்)

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகள், பாஸ்கர் கானுமுரி என்பவர் பங்குதாரராக இருக்கும் பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி அண்ட் பெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்திற்குத் தரப்பட்டிருக்கிறது. பாஸ்கர் கானுமுரியும் ரெய்டு புகழ் ராம மோகன ராவின் மகன் விவேக் பாபுவும் வியாபாரக் கூட்டாளிகள். தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் தந்திரம் மூலம் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் ராம மோகன ராவின் பினாமி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே இப்பணிகள் குறித்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள அறப்போர் இயக்கம், இதில் 520 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணை கோரியிருக்கிறது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி நிறுவனம் 8,672 தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கையில் பாதியளவே நியமித்துவிட்டு, மீதிமுள்ள தொழிலாளர்களுக்கான சம்பளம், கூலியனைத்தையும் நிறுவனமும் அதிகாரவர்க்கமும் பங்கு போட்டுக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது, அறப்போர் இயக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நடந்த மஸ்டர்ரோல் ஊழலுக்கு இணையான மோசடி இது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் என்ற கணக்கில், ஏறத்தாழ 200 கோடி ரூபாயை தினகரன் கும்பல் அள்ளிவிட்டதே, அந்தப் பணத்தில் பெரும்பகுதி விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமியின் வழியாகப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலா, போதைப் பாக்குகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விநியோகிக்கும் ஏஜெண்டுகளிடம் பெறப்பட்ட மாமூல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்துப் பெறப்பட்ட இலஞ்சம் – இவை மூலம்தான் அந்த 200 கோடியில் பெரும்பகுதி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெயா முதல்வராக இருந்த சமயத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறந்ததை அம்பலப்படுத்தி மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பால் வைக்கப்பட்ட பிரச்சாரத் தட்டி.

ஜெயா முதல்வராக இருந்த சமயத்திலேயே, போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குகளில் வருமான வரித் துறையால் நடத்தப்பட்ட சோதனையில், எந்தெந்த போலீசு அதிகாரிகளுக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் தரப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இப்பொழுது இன்னொரு டைரி கிடைத்திருக்கிறது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியிடமிருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில், 18 அமைச்சர்கள், 25 அதிகாரிகள் உள்ளிட்டு 68 பேருக்கு 300 கோடி ரூபாய் அளவிற்குக் கையூட்டுத் தரப்பட்ட விவரங்கள் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. அம்மா அரசின் அடித்தளமே இலஞ்சமும் கையூட்டும்தான். இந்த அரசை ஆதரிக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் பல கோடி ரூபாய் பணமும் தங்கக் கட்டிகளும் சன்மானமாகத் தரப்படும் என்ற கீழ்த்தரமான பேரத்தின் மூலம்தான் அ.தி.மு.க. அம்மா அணி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனவே, தமிழகத்தை மொட்டையடிக்காமல் இந்த அரசால் நீடித்திருக்க முடியாது.

சூடான வாணலியிலிருந்து தப்பித்துக் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்த கதை போல, ஜெயாவிடமிருந்து தப்பித்த தமிழகம், இப்பொழுது சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன், ஓ.பி.எஸ்., சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜய பாஸ்கர் – என நீளும் குற்றக் கும்பலிடம் சிக்கி மூச்சுத் திணறிவருகிறது. கிரிமினல் ஜெயாவையே டபாய்த்த கேடிகள் இவர்கள்.

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவ், எதுவுமே நடக்காதது போல மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், ராம மோகன ராவின் தலையை யாரும் துண்டித்துவிடப் போவதில்லை.

ஆற்று மணல் கொள்ளை பங்குதாரர்கள்: ஓ.பன்னீர்செல்வம், சேகர்ரெட்டி மற்றும் ராம மோகன ராவ்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயா, அதன்பிறகு இரண்டு முறை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை, அந்த வழக்கு விசாரணை தடுத்துவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அவ்வழக்கின் இறுதித் தீர்ப்பில், ஜெயா இறந்துபோனதைக் காட்டி, அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது, உச்சநீதி மன்றம். ஜெயா போன்ற அதிகார வர்க்க கிரிமினல்களைச் சட்டப்படி தண்டிக்க முயல்வது, வழுக்குப் பாறையில் ஏறுவதற்கு ஒப்பானது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டிய வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு.

எனவே, ஜெயா-சசியின் தயாரிப்பான இந்தக் குற்றக்கும்பலைச் சட்டம் நின்றாவது கொல்லும் என நம்பியிருக்கத் தேவையில்லை. மாறாக, தமிழக மக்களே இவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பிக்பாக்கெட் திருடர்களின் படத்தைப் போட்டு போலீசு எச்சரிப்பது போல, இந்தக் கொள்ளைக் கும்பலை அம்பலப்படுத்தி, அவமதிக்க வேண்டும். இந்தக் கும்பல் பதுக்கி வைத்துள்ள பணத்தையும் சொத்துக்களையும் தமிழக மக்கள் தாமே முன் வந்து பறிமுதல் செய்ய வேண்டும்.

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடையை அரசு இழுத்து மூடும் வரை காத்திருக்காமல், அந்தச் சனியனைப் பெண்கள் தாமே முன்வந்து அடித்து நொறுக்குவது எப்படி நியாயமானதோ, அது போல, தமிழச் சமூகத்தின் எதிரிகளாக நிற்கும் அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்தின் சொத்துக்களைப் பொதுமக்கள் தாமே முன்வந்து பறிமுதல் செய்வதுதான் நீதியானது!

-செல்வம்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2107

**********

பெட்டிச் செய்தி : கோவணத்தையும் உருவும் பஞ்சமா பாதகர்கள்!

சென்னை-ஆர்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எழில் நகர் 250 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்புப் பகுதி. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அக்குடும்பங்களைக் கூண்டோடு துரத்தியடித்துவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றுவருகிறார், அ.தி.மு.க.வின் உள்ளூர் எம்.எல்.ஏ. அவரின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள், எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி நசுக்கும் விதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் போலீசும் கைகோர்த்துக் கோண்டு, அச்சங்கத்தின் தலைவரும் 74 வயது முதியவருமான வேதக்கண் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது, போலீசு. இதனால் சந்தேகமடைந்த குற்றவியல் நீதிபதி, வேதக்கண் மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு குறித்து நேர்மையான போலீசு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக, வேதக்கண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கியிருக்கிறது.

ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசை மீண்டும் தூண்டிவிட்டு, அந்த முதியவர் மீது 25 இலட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, மீண்டும் வேதக்கண்ணைச் சிறையில் அடைத்துவிட்டார்.

1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி கும்பல் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கண்ணில் கண்ட இடங்களையும் வளைத்துப் போட்டு வந்தனர். அந்தக் கும்பலின் அடாவடித்தனமான நில அபகரிப்புக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் இரத்த சாட்சியாக உள்ளார்.

அந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை!  

**********

  1. இந்தியாவில் ஆங்கிலேய காலத்திலிருந்தே இந்த இரட்டை அதிகார ஆட்சிமுறை தொடர்கிறது. ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நிரந்தரமான அரசு அதிகார அமைப்பு. ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்தால் இந்த அரசு அதிகார அமைப்பின் பலம் கூடும்.இன்று தமிழ்நாட்டில் நடப்பது இரண்டாவது. யாரும் கேள்வி கேட்க வரைமுறை இல்லாத வகையில் இவர்கள் கை ஓங்கி உள்ளது. இது ஆக பெரும் அபாயம். இன்று திருமுருகன் காந்தி வரை நடப்பது இதுதான். இவரின் அரசியலை புரிந்து கொண்டு சிறைக்கு அனுப்பும் அளவிற்கு இந்த அண்ணா திமுகாவிற்கு அறிவில்லை! அவசியமும் இல்லை! அவர்களின் அவசரம் கேள்வி கேட்க சசிகலா இல்லாத நேரத்தில் பணம் குவிப்பது மட்டுமே. இந்த அதிகார வரம்பு மீறிய அரசு அதிகாரிகள் பக்கம் கவனம் செலுத்துவது அவசியம். அத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராம மோகன ராவால் மிக எளிதாக வேலைக்கு திரும்ப முடிகிறது. மக்கள் போராட்டங்கள் அதிகாரிகளின் முடிவில் விடப்படுகின்றன. நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்து மன்றகளாக மாறி இரண்டு பக்கங்களுக்கும் சமாதானம் செய்துவைக்கின்றன. இன்று நடப்பது நாம் எளிதில் புரிந்துகொள்ள முடிந்ததே.அதிகாரத்தில் உள்ள எல்லோருக்கும் காசு சம்பாரிக்கும் அவசரம், புடிக்காதவர்களை உள்ளே வைத்து பழி வாங்கும் அவசரம், அனைத்தையும் அனுபவிக்க அவசரம்..இந்த புரிதலுக்குள் பிரச்னையை அணுக வேண்டியது உள்ளது.

Leave a Reply to saran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க