privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் - 2 தோழர்களுக்கு சிறை

தஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் – 2 தோழர்களுக்கு சிறை

-

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி ஊராட்சி மண் வளம், மணல் வளம் நிறைந்தப் பகுதி. தங்க நகையை பார்த்தால் திருடன் கண் எப்படியாவது அதை கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்குமோ, அதைப்போல் இந்த மண்வளம் நிறைந்தப்பகுதி மணல் மாஃபியாக்களின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்துள்ளது.

அதோடு இன்னும் மூன்று ஆண்டுகளில் முடியப்போகும் அ.தி.மு.க. திருட்டு கும்பலின் ஆட்சியோ, ‘எரிகிற வீட்டில் பிடுங்குற வரைக்கும் ஆதாயம்’ என்கிற வகையில் ஒட்டுமொத்த தமிழகத்தையே மொட்டையடித்துவிட வேண்டும் என்ற ‘அம்மாவின் நல்லாட்சியை’ கொள்கை(ளை) பிடிப்புடன் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு எல்லா வழிகளிலும் தமது கொள்ளையை ‘போர்க்கால அடிப்படையில்’ நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள சவுடு மண், செம்மண், மணல் என தமிழகம் முழுக்க அனைத்து வளத்தையும் ஆக்கிரமித்துள்ளது, அதை எதிர்த்து தமிழகம் முழுக்க விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுக்க தொடரும் மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஏர்வாடி ஊராட்சியில் மக்கள் அதிகாரம் தோழர்களின் தலைமையில், ஒட்டுமொத்த மாஃபியாக்களின் வலைப்பின்னலையும் எதிர்த்து தொடர்ச்சியாக போராடி ஊருக்கு அரணாக இருந்து காத்துவருகின்றனர்.

இந்த போராட்டம் ஏர்வாடி கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார அனைத்துப்பகுதிகளிலும் மண் – மணல் குவாரி நடத்த முடியாத நிலைக்கு ஆளாகியிருந்தது. ஆகவே நேரிடையாக மோதி இவர்களை வீழ்த்த முடியாது என்று ஒட்டுமொத்த மாஃபியா கும்பலும் ஒன்றுதிரண்டு அனைத்து பலத்தையும், அனைத்து கிரிமினல் தனத்தையும் திரட்டி தனது சதிதனத்தை அரங்கேற்றி வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மக்களின் எதிர்ப்பை மீறி மண் குவாரி நடத்தும் பணியை சட்டவிரோதமாக தொடங்கியது. அதற்கு முன்பு மக்களுக்குள்ளே ஊடுறுவி தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சந்தித்து வீடு வாங்கி கொடுக்கிறேன், பணம் கொடுக்கிறேன், அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று ‘சசிகலா -தினகரன் பாஃர்முலாவை’ பயன்படுத்தி பிழைபுவாதிகளாக சிலரை மாற்றியும், சாராயம் வாங்கி கொடுத்து கைகூலிகள் சிலரையும், அரசு வேலை செய்பவர்களை மேல் அதிகாரிகள் மூலமாக வேலையை காலி செய்துவிடுவேன் என்று மிரட்டல் விட்டும், இதையும் மீறி நிற்பவர்களை கொலை மிரட்டல் விட்டும், போலீசை விட்டு பொய்வழக்கு தொடுத்தும் கைதேர்ந்த கிரிமினல் கும்பலுக்கே உகந்த வகையில் செயல்பட்டுள்ளனர்.

இவற்றையும் மீறி மக்கள் அதிகார தோழர்கள் எப்படியும் மணல் குவாரியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று 3 நாட்களாக தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து மணல் மாஃபியாக்களை அம்பலப்படுத்தினர். இதையறிந்து குணசேகரன் என்ற அ.தி.மு.க. உள்ளுர் கைகூலி மக்கள் அதிகாரத் தோழர் ராஜ்குமாரை அழைத்து கடைவைத்து தருகிறேன், மீன்வளத் துறையில் வேலை வாங்கி கொடுக்கிறேன், 1 லட்சம் ரூபாய் பணம் என்று விலைபேசி பார்த்தான், “மக்கள் போராளிகளான நாங்கள் மக்களுக்கு உயிரை கொடுப்போமே தவிர எந்த காலத்திலும் இப்படி கீழ்தரமான வேலையில் ஈடுபட மாட்டோம், இனியும் இப்படி பேசினால் செருப்பு பிஞ்சிடும்” என விரட்டியடித்தார்.  15.06.2017 அன்று காலை 11:00 மணிக்கு மக்கள் அதிகாரத் தோழர்களின் தலைமையில் குவாரியை முற்றுகையிடுவது என திட்டமிட்டு 200 -க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி போர்க்குணத்துடன் குவாரியை நோக்கி பேரணியாக சென்றனர்.

போலீசும், கிரிமினல் கும்பலும் கொலைவெறியோடு ஒடுக்க காத்திருந்ததையும் மீறி மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். ஜவுளி துறை அமைச்சார் மணியனின் பினாமி, அ.தி.மு.க. உள்ளுர் தலைவன் குணசேகரன், கைகூலிகளை தூண்டிவிட்டு போராடும் மக்களை கொலைவெறியோடு தாக்கினார். உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்கள் மீது இன்னொருபுறத்தில் இருந்து தாக்குதலை ஏவிவிட்டு தனது விசுவாசத்தை காட்டினார்.

போராடும் மக்களிடையே திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கி 11 பெண்கள் உட்பட 37 நபர்கள் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு. மண்டபத்திலும் உணவு உண்ண மாட்டோம், எந்த விவரங்களையும் தரமாட்டோம், குவாரியை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு மிரட்டி பார்த்தனர், தந்திரமாக பேசியும் பார்த்தனர் ஆனால் அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை மண்டபத்தின் உள்ளேயே போரக்குணமாக தொடர்ந்தனர்.

இறுதியில் முன்னணியாளர்களான மக்கள் அதிகாரத் தோழர்களான தெட்சிணாமூர்த்தி, ராஜ்குமார் ஆகிய இரண்டு தோழர்களையும் பொய்வழக்கு சோடித்து ரிமாண்ட் செய்தனர், மற்றவர்களை மட்டும் இரவு 10:00 மணிக்கு விடுவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தோழர்கள் இறுதிவரை போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தனர். தற்போது அடுத்த கட்ட போராட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

மணல் குவாரியை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க